அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்

This entry is part 40 of 40 in the series அசுரவதம்

அசோகவனம், உலக ரம்மியங்களை ஒன்று திரட்டிச் சுருக்கி வைத்தால் எத்தனை அழகாக இருக்குமோ அத்தனை அழகையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு வனச்சோலை.

இராவணனின் மாபெரும் ரசனைக்கு அதுவே சாட்சி. வசந்த காலம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் நந்தவனம் அது. பொன்னும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட நடைபாதைகள், சலசலத்தோடும் பளிங்கு நீர்ச்சுனைகள், தேன் சொட்டும் செண்பகமும் அசோகமும் மலர்ந்து குலுங்கும் மரங்கள் என அந்த வனத்தின் பகல் நேர அழகு தேவலோகத்தையும் தோற்கடிக்கக் கூடியது.

அங்கே இராமனைப் பிரிந்து வாடும் சீதைக்கு அந்தச் சொர்க்கம் ஒரு மாபெரும் சிறைச்சாலையாக மட்டுமே தெரிந்தது. அழகிய தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட பறவைக்கு அந்தக் கூண்டின் அழகு எப்படித் தெரியாதோ, அப்படியே சீதைக்கும் அந்த வனத்தின் எழில் எதுவும் கண்ணில் படவில்லை. அவள் கண்கள் போகும் திசையெல்லாம் இராமனைத் தேடியே சென்றன. ஏதும் சலசலக்கும் ஓசை கேட்டால், அது இராமன் வரும் ஓசையா! என கண்கள் அந்தத் திசை நோக்கி வாடின.

அவளுடைய அசோக வனத்தின் இரவு பயங்கரமானது. பகலில் அது மலர்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனமாகத் தோன்றினாலும், சூரியன் மறைந்த மறுகணமே அது ஒரு பாழ் குகையாக உருமாறிவிடும். அங்கு கவிழும் இருள், கட்டிகட்டியாக இருளை உருக்கி அதை அடித்து அடித்துத் தேர்ந்த கொல்லன் செய்த இரும்பைப் போல, தொட்டு நெற்றியில் பொட்டிடலாம் என்று எண்ணும் கருஞ்சாந்தைப் போல அடர்ந்து கிடக்கும். இருள் சூழ்ந்த அறையில் நெருப்பில்லாமல் புகைந்து மூச்சு முட்டச் செய்யும் ஒரு அடர்ந்த புகை போன்றது அது.

அந்த இருளில் மரக்கிளைகள் காற்றில் உரசும் ஓசையும், ஈட்டிமரத்தின் உலர்ந்த காய்கள் சலசலப்பதும் அரக்கர்கள் பற்களை நறநறவெனக் கடிப்பது போல் கேட்கும். அடர்ந்த மரங்களின் நடுவே ஊடுருவி வரும் நட்சத்திரங்களின் சிறு ஒளியில் அசையும் ஒவ்வொரு நிழலும், உயிரைக் குடிக்க வரும் பூதங்களாகவே தோன்றும். பூரண நிலவின் ஒளி கூட ஏதோ மங்கிய விளக்கு தன் இறுதி வெளிச்சத்தை முயன்று முயன்று கக்குவதைப் போல இருக்கும்.

அந்தக் காரிருளில், வானளாவ உயர்ந்திருந்த ஒரு மாபெரும் ஈட்டி மரத்தின் வேர்களைத் தன் மெல்லிய கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு, குளிரிலும் பயத்திலும் நடுங்கிக்கொண்டிருந்தாள் சீதை. பல நாட்களாக உணவை வெறுத்து, நீரை வெறுத்து உடல் மெலிந்திருந்தாள். அயோத்தியின் அரண்மனையில் நெய் விளக்குகளின் மென்மையான ஒளியிலும், பஞ்சவடியின் வெண்ணிலவொளியிலும் இராமனின் மார்பில் சாய்ந்து உறங்கிய அவளுக்கு, இந்த அரக்கர்களின் இருள் நரகத்தை விடக் கொடியதாக இருந்தது.

இராமனைப் பிரிந்த துயரம் ஒருபுறம் உயிரை அறுக்க, அரக்கியர்களின் அச்சுறுத்தல்கள் மறுபுறம் அவளைச் சித்திரவதை செய்தன. அவளைச் சுற்றிப் பயங்கரமான உருவங்கள் கொண்ட அரக்கியர்கள் கையில் ஆயுதங்களோடு காவல் காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த இருளுக்குள், ஒரு மரத்தின் பின்னால் நின்றிருந்தாள் சூர்ப்பனகை. அவளது கண்கள் சீதையை உற்று நோக்கின. ஒரு காலத்தில் இந்தப் பெண்ணின் அழகைக் கண்டு, தன் அழகுக்கும் மீறிய பேரழகி இவள் என்று பொறாமை கொண்டிருந்தாள். அவளுக்கு இன்று அந்த அழகின் ரகசியம் வெளிப்பட்டதும் பொறாமை நீங்கிப் புதுப் பாசம் பிறந்திருந்தது.

மண்டோதரியிடம் உதிர்த்த அந்த ரகசியம் அவளையே திருப்பி அடித்திருந்தது. சீதை இராவணனின் மகள் என்ற கதையைப் பரப்பி மண்டோதரியைத் தூண்டிவிடச் சென்றவள், இப்போது மண்டோதரியின் உண்மைக் கதையைக் கேட்டுத் தானே நிலைகுலைந்திருந்தாள்.

அரக்கர்கள் பிற உலகத்தைப் பகைத்தாலும், தங்களின் சொந்த ரத்தத்தை உயிருக்கும் மேலாகக் காப்பவர்கள். சீதை தன் அண்ணனின் மகள் என்ற உண்மையைச் சூர்ப்பனகையின் மனம் இப்போது முழுமையாக உள்வாங்கிவிட்டது. தன் சொந்த ரத்தத்தை, தன் அண்ணன் மகளைத் தன் சுயநலத்துக்காகப் பலிகடா ஆக்கிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி அவளது நெஞ்சைப் பிளந்தது.

சீதையை எப்படியாவது காக்க வேண்டும் என்ற வெறி இப்போது சூர்ப்பனகைக்குள் எழுந்தது. ஆனால் இராவணனை மீறி அவளால் என்ன செய்ய முடியும்? தன்னைத் தானே நொந்துகொண்டாள். தன் பழியுணர்ச்சி சீதையை, அவள் வாழ்வைப் புரட்டிப் போட்டிருப்பது சூர்ப்பனகைக்குப் பெரும் துயரம் அளித்தது.

சீதை பசியாலும் சோர்வாலும் மயங்கி விழும் நிலையில் இருந்தாள். அவள் கண்கள் சொருகின. அந்த நேரத்தில், அசோக வனத்தின் வானில் ஒரு மெல்லிய தெய்வீக ஒளி பரவியது. அரக்கியர்களின் கண்களுக்குத் தெரியாத ஒரு சூட்சும ஒளி அது. அந்த ஒளியின் நடுவே தேவன் ஒருவன் இறங்கி வந்தான்.

அவனுடன் ஒரு தெய்வீகப் பெண்ணும் இருந்தாள். அவர்களின் வருகையை உணர்ந்ததும் அவசர அவசரமாய்த் தன்னை அங்கிருந்து விடுவித்துக்கொண்டு தூரத்தில் இருந்த மரத்தின் பின் மறைந்தாள் சூர்ப்பனகை.

வந்திருந்தவன் இந்திரன். சூர்ப்பனகைக்குச் சட்டென பயம் தொற்றியது. இந்திரன் காம இச்சைக்குச் சீதையிடம் வந்திருக்கிறான் என்று நினைத்தாள். அப்படி ஏதும் அவன் தவறு செய்ய முனைந்தால் பெரும் குழப்பம் உருவாக்கி இராவணனை எச்சரிக்கவும் தயாராக இருந்தாள்.

ஆனால் இந்திரனின் செய்கை அவள் நினைத்தது போலில்லை. அவன் இறங்கும் போதே அவனுடன் வந்தப் பெண் மெல்லிய ஒளிப்படலம் போல் அங்கிருந்த அரக்கப் பெண்கள் மீது படர, அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார்கள்.

இந்திரன் பேச முயன்றான், சூர்ப்பனகை தன் செவியைக் கூர்மையாக்கினாள்.

“தேவி, சீதா,” என்றான் மிக மெல்லிய குரலில்.

அவனது கைகளில் ஒரு தங்கக் கிண்ணம் இருந்தது. அதில் அமுதம் நிரம்பியிருந்தது.

“ஜனகனின் மகளே, அஞ்ச வேண்டாம்,” என்றான் இந்திரன்.

அவனது குரல் கேட்டுச் சீதை துணுக்குற்றாள்.

“நான் தேவேந்திரன். இராவணனின் சிறையில் நீ பசியால் வாடக் கூடாது என்பதற்காக அடியேன் தேவர்கள் அருந்தும் இந்த ஹவிஷன்னம் என்னும் அமுதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இதை உண்டால் தங்களுக்கு இனி பசியோ தாகமோ வராது. உங்கள் உயிர் இராமன் வரும் வரை முழு ஆற்றலோடு இருக்கும்,” என்றான் இந்திரன்.

சீதை தயங்கினாள். இது அரக்கர்களின் மாயையாக இருக்குமோ என்று அவளுக்குள் சந்தேகம் எழுந்தது. அவளது தயக்கத்தைப் புரிந்துகொண்ட இந்திரன் புன்னகைத்தான். தன் கால்கள் தரையில் படாமல் நிற்பதையும், கண்களில் இமைகள் கொட்டாமல் இருப்பதையும் காட்டித் தான் தேவன் என்பதை நிரூபித்தான்.

இராமனின் நினைவாகச் சீதை அந்த அமுதத்தைக் கொஞ்சமாகப் பருகினாள். மறுகணமே அவளது சோர்வு முற்றிலும் நீங்கி, முகத்தில் ஒரு தெய்வீகப் பொலிவு வந்து சேர்ந்தது. இந்திரனும் நித்திராதேவியும் விடைபெற்று வானில் மறைந்தனர்.

ஒளி மறைந்து மீண்டும் இருள் சூழ்ந்தது. இப்போது சூர்ப்பனகை தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். சீதையை மெல்ல நெருங்கினாள். அவளின் இயல்பான காமவல்லியாகவே சென்றாள்.

காலடி ஓசை கேட்டுச் சீதை திடுக்கிட்டுத் திரும்பினாள். உறங்கும் அரக்கியர்களுக்கு நடுவே ஒரு புதிய பெண் நிற்பதைக் கண்டு சீதை சற்றுப் பின்வாங்கினாள். அவளின் அழகு தன் சாடையை ஒத்திருப்பதை கவனித்தாள். இது நிச்சயமாக அரக்கர்களின் சூழ்ச்சி என அஞ்சினாள்.

“அஞ்சாதே சீதே,” என்றாள் சூர்ப்பனகை.

அவளது குரலில் இப்போது எந்த வஞ்சகமும் இல்லை. ஒரு சகோதரியின், ஒரு தாயின் கனிவு மட்டுமே மிளிர்ந்தது.

“நீ யார்? இராவணன் அனுப்பினானா?” என்று சீதை கோபம் கலந்த அச்சத்துடன் கேட்டாள். அவளுக்கு அந்த முகத்தை எங்கோ பார்த்த நினைவு தோன்றினாலும் உடனடியாக யாரென அடையாளம் காண முடியவில்லை. ஒருவேளை தன் முகம்தானோ அது? நான் கனவில் என்னையே காண்கிறேனா என்று நினைத்துத் தன் முகத்தில் அறைந்தாள்.

வலித்தது.

“நான் யாராக இருந்தால் என்ன? உனக்கு ஒரு தீங்கு நேராமல் காக்கும் ஒரு ரகசிய நிழல் நான் என்று மட்டும் நினைத்துக் கொள்,” என்றாள் சூர்ப்பனகை.

அவள் குரல் தழுதழுத்தது.

“நீ இங்கிருந்து தப்பிச் செல்ல நான் உதவ வந்திருக்கிறேன்,” என்றாள் சூர்ப்பனகை.

“என்ன ஒரு பேடித்தனம் பெண்ணே, என் கணவன் இராமனின் புகழைக் குலைக்க வந்திருக்கிறாயா?” என்றாள் சினத்துடன் சீதை. பின் வாய்விட்டுச் சிரித்தாள். அதில் இராமனின் மீதான நம்பிக்கை ஒளிர்ந்தது.

“இருக்காது.. இருக்காது.. நெருப்பைப் பஞ்சிட்டு மூடி மறைப்பது போன்ற செயல் அல்லவா அது, அவரின் புகழைக் களங்கப்படுத்த யாரால் முடியும். ஆனால் நீ வந்த நோக்கம் தெரிந்தது,” என்றாள்.

“ஓ என்னவோ அது?”

“இராவணனுக்கு என் கணவரின், எங்கள் குலத்தின் வீரம் குறித்து யாரோ சொல்லியிருக்க வேண்டும். அதுதான் பயந்து என்னைத் தப்புவிக்க உன்னை அனுப்பி இருக்கிறான்,” என்றாள் சீதை.

சூர்ப்பனகை மெல்லியதாய்ச் சிரித்தாள்.

“போய்ச் சொல் அவனிடம், இந்த வனத்தில் இராமன் வந்து அழைத்துச் செல்லும் வரை நான் நகரப் போவதில்லை. என் உள்மனது சொல்கிறது. இன்னும் சில காலம்தான். இந்த நகரமே பூண்டோடு அழியும் காலம் வந்துவிட்டது,” என்றாள் சீதை.

தன் ரத்த உறவு என்ற உண்மையை உடைத்தால் சீதை ஏற்க மாட்டாள் என்பதைச் சூர்ப்பனகை அறிவாள். எனவே, தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், அருகில் சீதையின் தலைமுடியை லேசாக வருடி விட்டு, அங்கிருந்து இருளில் கலந்தாள்.

தூரத்தில் கடலின் அலைகள் வேகவேகமாகக் கரையைக் கடக்க முயன்று சீதைக்கு ஏதோ செய்தியைச் சொல்ல விரும்பியது போல மோதின. பின் இராவணனுக்குத் தெரிந்தால் என்னாகுமோ என்று பயந்து பின்வாங்கிக் கடலுக்குள் சென்றன.

சீதை, தென்திசை நோக்கி இராமன் வரவிற்காகத் தன் விழிகளை விரித்துக் காத்திருந்தாள். அங்கே கடலின் மறுகோடியில் பெரும் பிரளயமே உருவாகக் காத்திருப்பதை அவள் எப்படி அறிவாள்? யார் வந்து சொல்வார்கள்?

“வணக்கம் தாயே,” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் சீதை. அவள் முன் ஒரு அரக்கி வினோதமாக நின்றிருந்தாள். அவளின் தலை விசித்திரமாக மூன்று சடையுடன் இருந்தது.

பி.கு: வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில், இராவணன் சீதையைச் சிறைபிடித்த தொடக்கக் காலத்திலேயே பிரம்மனின் கட்டளைப்படி இந்திரன் வருகிறான். நித்திராதேவியின் உதவியால் காவலாளிகளை உறங்கச் செய்துவிட்டு, சீதைக்குப் பசி தாகம் ஏற்படாமல் இருக்க ‘ஹவிஷன்னம்’ என்னும் தெய்வீகப் பாயசத்தை இந்திரன் அளிப்பது மூலக் கதையில் உள்ள மிக முக்கியமான ஆன்மீகத் தரவாகும். இது அப்படியே இக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூர்ப்பனகைக்குச் சீதையின் மீது பாசம் வருவதற்கும், அவளை அரக்கியர்களிடம் இருந்து காப்பதற்கும் வலுவான இலக்கிய மற்றும் நாட்டுப்புற ஆதாரங்கள் உள்ளன. சமண ராமாயணங்களான ‘வாசுதேவ ஹிந்தி’ மற்றும் ‘உத்தர புராணம்’ ஆகியவற்றின்படி சீதை இராவணனின் மகள். அந்த ரத்த உறவின் அடிப்படையிலேயே சூர்ப்பனகை தன் அண்ணன் மகளைக் காக்கத் துடிக்கிறாள் என்பது இப்புதினத்தின் மைய முடிச்சாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பகுதிகளில் பாடப்படும் ‘ஸ்திரீல ராமாயணபு பாடலு’ எனப்படும் பெண்களின் நாட்டுப்புற ராமாயணப் பாடல்களில், அரக்கியர்கள் சீதையை வதைப்பவர்களாக மட்டும் காட்டப்படுவதில்லை. மாறாக, அவர்கள் சீதையின் நிலையைக் கண்டு ரகசியமாகப் பரிதாபப்படுவதாகவும், இராவணனுக்குத் தெரியாமல் அவளுக்கு ஆறுதல் சொல்வதாகவும் பாடப்படுகிறது. இந்த நாட்டுப்புற மரபையே அடிப்படையாகக் கொண்டு, சூர்ப்பனகையின் மாயத்தால் அரக்கியர்கள் சீதையைத் துன்புறுத்தாமல் ஒதுங்கி இருப்பதான காட்சி இங்கே வடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே சொல்லப்படும் சிம்சுபா மரம், தமிழில் ஈட்டி மரம் என்றும் இருபூலை மரம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாகச் சீதை அசோக மரத்தடியில் இருந்ததாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். காரணம் அவள் இருந்த இடத்தின் பெயர் அசோக வனம். ஆகவே அசோகமரம் என்ற பெயர் மனதில் தானாக வந்துவிட்டது. உண்மையில் சீதை அமர்ந்திருந்தது இந்த ஈட்டி மரத்தின் கீழ் என்றுதான் வால்மீகி ராமாயணம் சொல்கிறது.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்

Author

Related posts

வரலாற்றில் பொருளாதாரம் – 32

தமிழே அமிழ்தே – 18

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி