தீதும் நன்றும்

உடலெங்கும் பெருகியோடும்
வியர்வை நதியின்
ஓயாத் தீண்டலை
ஒதுக்கி விடுமென
தேடித்தேடி நில்லா இடம் விட்டு
நிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்
கிளை பரப்பிக் கிடந்த
மரத்தின் கீழே
பாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டி
தன்னையே கரைத்துவிட்ட
யாசகனைப் போலவே
பலனைத் தேடாத பக்தனென
நின்றுவிட்ட நிலையில்
ஆடாமல் அசையாமல்
வேடிக்கை பார்க்கத் துவங்கியது
கிளைக் கண்ணிலிருந்து மரம்.
நின்றுவிட்ட இயக்கத்தின்
நீள் கதையைச் சொல்லிச் செல்லும்
முனைப்புடன்
காற்றின் தீண்டலற்றுக் கிடக்கும்
கிளையெங்கும் கதிரோனின் கையெழுத்துப் பிரதிகள்.
உள்வாங்கும் காற்றைத் தேடி
விரியத் துவங்கும் இலைத்துளையின் பாதைகளில்
எழுந்து நிற்கின்றன வெயிலின் விரிகதிர்கள்.
கூடிக்கூடி விரட்டினாலும்
ஓடிப்போகாத உள்ளன்பின்
வீரியத்தில்
புன்னகை விரிந்தே
புத்தனாகிவிட்ட மலர்களின்
இருப்பிலிருந்து
ஒரு பூவேனும் உதிரட்டுமென்றே
காத்திருக்கும் மண்ணோடு
நானும் மூச்சு விடுகிறேன்
நகரத்தில் நிற்கும்
ஒற்றை மரத்தைப் பார்த்து

Author

  • கி. சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர்  அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறப்பு  திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம். இருப்பு  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை,  ஏழைதாசன், தமிழ்ப் பல்லவி, தினத்தந்தி, தினபூமி, மனித நேயம், புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை, வானவில்,பொற்றாமரை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)
    2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)
    3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
    4.அன்பு மொழி(2024)
    5.மீன் சுமக்கும் கடல் (2025)
          என   ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
    கோவை மேன்மதி மன்றம் இவருக்கு "தாய்த் தமிழ் காவலர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவி பாடியுள்ளார். உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்

Related posts

தமிழகக்கல்விச்சூழல்: சவால்களும்தீர்வுகளும்

நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்

ஆரோக்கியமே உண்மையான அழகு