Home நாவல்வரலாற்றில் பொருளாதாரம் – 36

வரலாற்றில் பொருளாதாரம் – 36

by Viswanaath Thyagaraajan
0 comments

உலக அளவில் நடந்த பல போர்களுக்கும், பேரரசுகளின் எழுச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு என அந்தக்கால வணிகத்தில் முக்கியப் பங்காய் இருந்த பதினான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் வணிகப்பாதை தான் காரணமாக இருந்தது.

அதென்ன பாதை?

ஜிப்ரால்டர் நீரிணை.

அது உலக வரைபடத்தில் பார்த்தால் ஒரு விரல் அளவிற்குத் தான் தெரியும். ஆனால் சரித்திரத்தில் அதனைச் சுற்றித் தான் அந்தக்கால மொத்த அரசியல், வணிகம் ஆகியவை நடந்திருக்கின்றனவெனச் சொன்னால் நம்புவதற்குச் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் அதுதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

அந்தக்காலத்தில் பல வணிகச் சமூகங்கள் எல்லாம் மத்தியதரைக் கடலைச் சுற்றித் தான் உருவாகியது.

எகிப்து, கிரேக்கம், ஃபீனீசியா, கார்த்தேஜ், ரோம் ஆகிய நாடுகளுக்கு அந்தக்கடல் பாதை தான் தேசிய நெடுஞ்சாலை போல. இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது தான் ஜிப்ரால்டர்.

ஜிப்ரால்டரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய கடல் சார்ந்த நிலப்பரப்பில் வாழ்ந்த ஃபீனீசியர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

யார் இந்த ஃபீனீசியர்கள்?

இன்றைய லெபனானில் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் அன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் பல பொருளாதார மையங்களில் வணிகம் செய்தவர்கள். அந்த நிலப்பகுதி மக்கள் தான் அன்றைய காலகட்டத்தில் பல நிலப்பரப்புகளில் இருந்த வணிக மையங்களில் வணிகம் செய்து பெரிய அளவில் லாபமடைந்தவர்கள்.

அவர்கள் கடல் சார்ந்த வணிகத்திற்குத் தேவையான கப்பல்களை உருவாக்குவதில் மட்டும் தங்களை நிபுணத்துவம் பெற்றவர்களாக உருவாக்கிக் கொள்ளவில்லை; பதிலாகக் கடல் சார்ந்த வணிகப் பாதைகளின் மூலம் பல நாட்டுச் சந்தைகளிலிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து அதற்குத் தேவை அதிகம் இருந்த மேற்கத்திய நிலப்பரப்புச் சந்தைகளுக்கு அவற்றைக்கொண்டு சென்றனர். அப்படிக் கொண்டு சென்றதின் மூலம் அதிக லாபம் வைத்து விற்று, கிழக்கத்திய நிலப்பரப்புச் சந்தைகளில் அதிக தேவையானதை வாங்கி வந்தனர். கிழக்கத்திய நாடுகளுக்கு இவர்களே நேரடியாகப் போய் விற்றனர் அல்லது அங்கு இருந்து வந்த இடைத்தரகர்களிடம் விற்றனர்.

இந்த வணிகப் பரிவர்த்தனை தான் அவர்களுக்கு அதிக லாபத்தைத் தந்தது. ஆனால் இந்த லாபத்தை அடைய அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

அதென்னவென்றால்?

மத்தியதரைக் கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்குச் செல்லும் அந்தக் குறுகிய இடைவெளியைக் கடந்து செல்ல வேண்டும். அதாவது ஜிப்ரால்டரைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஜிப்ரால்டருக்கு பண்டைய கிரேக்கர்கள் ஹெர்கூலீஸ் தூண்கள் எனப் பெயர் வைத்திருந்தார்கள்.

நாம் பல அத்தியாயங்களுக்கு முன்பு கடல் பாதையை மற்றும் தூரத்தில் இருந்த வணிக நிலப்பரப்புகள் பற்றி அரேபிய வணிகர்கள் வணிக லாபங்களுக்காகப் பரப்பி விட்டு இருந்த கற்பனைக் கதைகள் பற்றிப் பார்த்திருந்தோம். அதே போன்ற கதை தான் ஜிப்ரால்டரைக் கடந்துவிட்டால் உலகம் முடிந்துவிடும் என்கிற கதையும்.

இந்தக் கதையைப் பண்டைய காலத்தில் பெரும்பாலான மாலுமிகள் நம்பினர். அதற்குப் பின்னர் முடிவில்லாத கடல் இருப்பதாக அவர்கள் நினைத்துப் பயத்துடன் இருந்தனர். பயம் இருந்த இடத்தில் போட்டி குறையும். போட்டி குறைந்தால் லாபம் அதிகரிக்கும். இந்த மனநிலையை ஃபீனீசியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

அதேன் அக்கால வணிகர்கள் இத்தனை ரகசியமாகக் கடற்பாதைகளை வைத்திருந்தார்கள்?

இன்று ஒரு நிறுவனத்தின் மிகப் பெரிய சொத்து அதன் தொழில்நுட்பம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வணிகரின் மிகப் பெரிய சொத்து அவருக்கே தெரிந்த கடற்பாதை. அந்தப் பாதையை மற்றவர்கள் அறிந்துகொண்டுவிட்டால், லாபத்தின் சதவீதம் குறைந்துவிடும்.

அதனால்தான் ஃபீனீசியர்கள் தங்கள் பயணங்களைப் பற்றி அதிகமாக எழுதவில்லை. எழுதியிருந்தாலும் அதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி வைத்திருந்தார்கள். பொருளாதாரத்தில் தகவலே ஒரு செல்வம் என்பதை மனிதகுலம் அப்போதே புரிந்துகொண்டிருந்தது.

ஆனால் வரலாறு இந்தத் தகவல்களை ஒரு மனிதனுக்காகவோ அல்லது ஒரு நாட்டுக்காகவோ ரகசியமாக வைத்திருக்கவில்லை.

கார்த்தேஜ் என்பது ஃபீனீசியர்களின் குடியேற உருவாக்கிய ஒரு நகரம். அது காலப்போக்கில் அவர்களது தாய்நாட்டைவிட வலிமையானதாக உருப்பெற்றது.

இன்றைய துனிசியாவில் உருவான அந்த நகரம் சில நூற்றாண்டுகளிலேயே மத்தியதரைக் கடலின் மிக முக்கியமான வணிகப் பொருளாதார மையமாக மாறியது. அந்தக்கடல் பாதையைப் பயன்படுத்திக் கொண்டு செல்லப்படும் எல்லாப் பொருட்களிலும், எல்லாக்கப்பலிலும், எல்லாத் துறைமுகத்திலும் வணிகத்தின் நிழல் விழத் தொடங்கியது.

இந்த நேரத்தில் கார்த்தேஜ் மட்டும் ஏன் இவ்வளவு வேகமாக வளர்ந்தது?

அந்த நிலப்பரப்பில் கார்த்தேஜ் அரசர்கள் கடைப்பிடித்த வரி கணக்கிடும் முறையும் அதனை வசூலிக்கும் முறையும் தான் காரணம்.

கார்த்தேஜ் அரசர்கள் முதலில் துறைமுகங்களைப் பிடித்தார்கள். பிறகு அந்தந்தத் துறைமுகங்களைச் சார்ந்த சந்தைகளைப் பிடித்தார்கள். அதன் பின்னர் தான் அந்தச் சந்தைகள் சார்ந்த நிலப்பரப்பினைப் பிடித்தார்கள்.

அவர்கள் நன்றாகப் புரிந்திருந்த ஒரு உண்மை இருந்தது.

நிலத்தில் அங்கு வசிப்பவர்கள் மட்டுமே வரி செலுத்துவார்கள். ஆனால் துறைமுகங்களைத் தங்களது ஆட்சியில் வைத்திருந்தால் வணிகத்தை நம்பி இருக்கும் எல்லா நாடுகளும் வணிகம் செய்யும் எல்லா வணிகர்களும் வரி செலுத்துவார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள்.

ஜிப்ரால்டர் நீரிணை வணிகத்தின் உயிர்நாடியாக இருந்தபடியால் ஆட்சியாளர்களுக்கும் அது உயிர்நாடியாக இருந்தது.

அந்த வழியாகத்தான் ஸ்பெயினின் வெள்ளிச் சுரங்கங்களிலிருந்து செல்வம், அட்லாண்டிக் கடலில் கிடைத்த மீன்கள், தகரமும் ஈயமும் வந்தன. முக்கியமாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த வழியாகத்தான் கார்த்தேஜின் செல்வம் வந்தது.

அதே காலகட்டத்தில் மிகப்பெரிய வணிகச் சக்தியாக வளர்த்துக்கொண்டு இருந்த மற்றொரு சமூகத்து வணிகர்களும் ஆட்சியாளர்களும் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்தச் சக்தி ரோம்.

ரோமானியர்கள் முதலில் கார்த்தேஜை ஒரு வணிகப் போட்டியாளராகவே கருதினார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர்கள் வெறும் வணிகர்கள் இல்லை, இது ஒன்றும் வணிகப் போட்டியும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள் அல்லவா?

அவர்கள் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களை எதிரிகளாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அங்கிருந்து தான் வரலாற்றின் மிகப் பெரிய போர்களில் ஒன்றான பியூனிக் போர்களுக்கான விதை விதைக்கப்பட்டது…

(தொடரும்)

Author

You may also like

Leave a Comment