முன்பின் அறியாத இளம்பெண்கள் என்று யோசியாது எத்தனை கடுமையான வார்த்தைகளை வீசிவிட்டான். அவன் தங்களைப் பற்றி எத்தனை கேவலமாக எண்ணியிருந்தால் இப்படி அவமதிக்கத் தோன்றும்?!
எல்லாவற்றுக்கும் காரணம் அந்த வெள்ளி வாள் தானே? அதை ஏன் தான் எடுத்தேனோ! நடப்பதெல்லாம் பார்த்தால் அந்த முழு முட்டாள்தனமான செயல் தங்களை இன்னும் எங்கே கொண்டு நிறுத்துமோ தெரியவில்லையே? என்று அவளுக்குள் அழுகை குமுறிக் கொண்டு வந்தது.
இவனைப் பார்த்தால் பெண்களாயிற்றே என்று தங்களுக்காகக் கொஞ்சமும் இரங்கக் கூடியவனாகத் தெரியவில்லை. இவனிடம் தனது செயலை எப்படி நியாயப்படுத்தி… அத்தையையும் தன்னையும் எப்படி மீட்கப் போகிறோமோ என்று யோசிக்கையில் அவளுக்கு நட்ட நடுக்கடலில் மொட்டைப் பாறையில் முட்டிக் கொண்டு கவிழ்ந்த படகில் பயணிப்பதைப் போலிருந்தது.
ஏதேது… விமானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் நினைவெல்லாம் மூழ்கிப் போவதைப் பற்றியே இருக்கிறதே என்று எரிச்சலாக எண்ணியவள், அடுத்த நொடியில் திடீரென நடப்புலகுக்கு வந்தவளாக அருகில் ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்த அத்தையைப் பார்க்கத் திரும்பினாள்.
அவள் இன்னும் இந்தப்பக்கம் திரும்பினாளில்லை.
சொல்லப்போனால் அவள் வேறு ஒரு உலகத்தில் இருப்பதைப் போல எங்கோ வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். யோசனை மிகப்பலமாக இருந்தது.
ஷைலுவுக்கு அவளிடம் பேசவும் இப்போது பயமாக இருந்தது.
விமானியையும் சேர்த்து அப்போது அந்த விமானத்தில் இருந்தது 6 பேர். மூன்று பெண்கள். அதிலொருத்தி அவனது செயலாளராக இருக்கலாம். விமானிகள் இருவரோடு அவனையும் சேர்த்தால் மூன்று ஆண்கள். அதில் அவனருகே இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. பக்கவாட்டு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த போதும் இவர்களை அவனால் நன்கு பார்க்க முடியும். ஆனாலும் அவன் இவர்களது முகத்தை ஏறிட்டுப் பார்த்தானில்லை. இப்படி இரு ஜீவன்களைக் கட்டாயப்படுத்தி அந்தமானுக்கு அழைத்துச் செல்கிறோமே என்ற நினைப்பு கூட அவனுக்கு உண்டா? அல்லது பழைய காலத்தில் எல்லாம் ராஜாக்கள் தாங்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் ஏவல் பணி செய்ய அடிமைகளை அழைத்துச் செல்வார்களே, அம்மாதிரியாகத் தங்களை அடிமைகளாக எண்ணிக்கொண்டு சட்டை பண்ணாமலிருக்கிறானோ? என்று எரிச்சல் கலந்த அச்சத்துடன் மீண்டும் அவனை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள்.
சிம்மாசனம் போன்ற அந்த அகலமான இருக்கையில் தலையைப் பின்னுக்குத் தள்ளிச் சாய்ந்து கொண்டு கண்களில் வெளிச்சம் ஊடுருவாமல் இருக்க அணியக்கூடிய ஐ மாஸ்க் அணிந்திருந்தான். முகம் தணலாகக் கொதித்துப் போயிருந்ததை அதன் கன்றிப் போன ரத்தச் சிவப்பு நிறத்தை வைத்து ஷைலு உணர்ந்து கொண்டாள்.
பேசவோ அன்றி சிந்திக்கவோ இப்போது வேறு எதுவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.
இப்படி ஆளுக்கொரு விதமாக அந்த நேரத்தில் அந்த விமானத்தில் இருந்த அவர்கள் மூவர் மனநிலையும் கொதிநிலையில் இருந்ததை உணர்ந்தவளாகச் செயலாளர் பெண் மூவருக்குமாக கண்ணாடி தம்ளர்களில் பச்சை நிறத்தில் பழரசமொன்றைக் கொண்டு வந்து அளித்தாள்.
தனது முதலாளியாகப்பட்டவன் கண்களில் மாஸ்க் அணிந்து நித்திரையில் ஆழ்ந்தவனைப் போலத் தோற்றமளித்த போதும் அந்தப் பெண் அவனை அப்படியே விட்டாளில்லை. அருகில் சென்று குனிந்து வாயருகே தம்ளரைக் கொண்டு வைத்து;
“பாஸ் ப்ளீஸ் ஹேவ் அ சிப்… நேற்று வாள் காணாமல் போன நிமிஷத்திலிருந்தே நீங்கள் எதுவும் சாப்பிடவே இல்லை. வெறுமே தண்ணீர் கூட அருந்தவில்லை. இட்ஸ் பெயினிங்” என்றாள், சற்றே கவலை தோய்ந்த குரலில்.
படியளக்கும் முதலாளி அல்லவா… அவன் குறித்த கவலை இருக்க வேண்டியதுதான் எனும்படியாக அந்த நிகழ்வை வெறுமே பார்த்துக் கொண்டிருந்த ஷைலுவுக்கு அந்தமான் கடலுக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த காட்சி கவனத்தை ஈர்க்கவே, ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதித்துக் கொண்டாள்.
ஆயிரம் கவலைகள் மனதை அரித்துக் கொண்டிருந்த போதும் அவள் இன்னும் சிறுமி தானே! அந்தமான் என்றதும் அவளுக்குள் பலவிதமான கற்பனைகள் பல்கிப் பெருகத் தொடங்கின.
இங்கே மொத்தம் எத்தனை தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன?
பாடப்புத்தகத்திலிருந்து அறிந்து கொண்ட வகையில் மொத்தம் 572 தீவுகளின் தொகுப்பான ஆர்ச்சிபெலாகோவாக அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டம் கருதப்படுகிறது. இதில் நிரந்தரமாக மக்கள் வசிப்பதென்னவோ 38 தீவுகளில் மட்டும்தான் என்கிறார்கள்.
அவற்றில் எந்தத் தீவில் இவனது வீடு இருக்கிறதோ? ஆளையும் பவிசையும் பார்த்தால் சாதாரணமான வீட்டில் வசிக்கக் கூடியவனைப் போலத் தெரியவில்லை. மாளிகையோ அல்லது அரண்மனையோ கூட இவனுக்குச் சொந்தமானதாக இங்கிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தனை செல்வாக்கான இவனிடமிருந்து படு முட்டாள்தனமாக அந்த வாளைத் திருடி விசுவநாதபுரியின் தெருக்களில் வீசியெறியத் துணிந்தோமே! அதற்கான தண்டனையாகவா இப்படி ஒரு நாடு கடத்தல்?! இவனது இந்த நடவடிக்கை தன்னையும், அத்தையையும் எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ? புரியாத மர்மக்கதையொன்றின் நடுப்பக்கத்தில் தொலைந்து போன தேடுவாரற்ற கதாபாத்திரங்கள் போலாக்கி விட்டதே எங்களது விதி?!
இங்கே தங்களுக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படவோ? ஆறுதல் சொல்லவோ? பாதுகாக்கவோ யார் இருக்கிறார்கள்?
தீவு… தீவு… தீவு… சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலக்கடல் மட்டுமே பரந்து விரிந்து கிடக்கிறது. நல்ல வேலை, அத்தைக்கும் தனக்கும் நீந்தத் தெரியும் என்பது மட்டுமே இதில் கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
இப்படி எண்ணிய அடுத்த நொடியே… அடப் பைத்தியக்கார ஷைலு… நீயும் உன் அத்தையும் என்ன நீச்சல் சாம்பியன்களா? இது கடல்… பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடாவை நீந்தியே கடந்து சென்னை அல்லது கொல்கத்தாவை அடைந்து விட முடியுமா உங்களால்? சும்மா அலட்டிக் கொள்ளாதேடீ… முடியாது… உங்களால் முடியவே முடியாது.
நன்றாக மாட்டிக் கொண்டீர்கள்.
இந்த இதயமற்ற, சக மனிதர்களிடம் கொஞ்சமேனும் கருணையோ, பச்சாதாபமோ சுத்தமாக இல்லாத இந்த கல்நெஞ்சுக்காரப் பணக்கார முரடனிடம் வகையாகச் சிக்கிக் கொண்டீர்கள்!
விமானநிலையத்திலேயே தெரிந்து விட்டதே அவனது பலமும் செல்வாக்கும் என்னவென்று?
கொஞ்சமேனும் புத்தி இருந்திருந்தால் அங்கிருந்தே தப்பிக்க முயன்றிருக்க வேண்டும்.
அங்கே கோட்டை விட்டுவிட்டு இங்கே நடுக்கடலில் அந்தரத்தில் பறந்துகொண்டு இப்படி ஒவ்வொன்றாக யோசித்து பயந்துகொண்டிருப்பதில் ஏதேனும் பயன் இருக்கக் கூடுமா?
இப்படிப்பட்ட சுயசாடல், சுயபச்சாதாப எண்ணங்கள் மீண்டும் பலம்பெறவே, துளி அசைந்தாலும் கண்டுகொண்டு பார்வையாலும், நாகரிகமற்ற சாடல்களாலும் சுட்டெரிக்கத் தயாராக இருக்கும் இவனது முன்னிலையில் அத்தையிடம் எதுவும் பேச முடியாமலான ஷைலுவுக்கு நீலக்கடலின் மீதிருந்த பிரமிப்பு சலித்துப் போய் அழுகை முட்டிக்கொண்டு வரப்பார்த்தது. ஏதும் செய்வதற்கு இயலாதவளாக அவள் தனது இருக்கையில் பின்னோக்கிச் சாய்ந்து அமர்ந்தவளாகக் கண்களை இறுக மூடிக் கொண்டாள். முதலில் வலிந்தே கண்களை மூடினாள் என்றபோதும் அன்றைய நாளின் தொடக்கம் முதலே அவள் சந்திக்க நேர்ந்த பலவிதமான சங்கடங்களின், அபாயங்களினால் உண்டாகிவிட்ட மன அழுத்தத்தில் விரைவிலேயே மூளை சோர்வுற்று அவளைத் தூக்கத்திற்கு இட்டுச் சென்றது.
தன்மத்ராவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கக் கூடும். ஆனால், அவளால் தூங்க மட்டும் இயலாது. ஏனெனில் அவளொன்றும் ஷைலா அல்லவே!
அதனால், எல்லையற்ற சோர்வு கண்களிலும் முகத்திலும் அப்பிக் கிடந்தபோதும் அதனோடே அவள் விழிப்புடன் இருக்க முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.
அவள் தூக்கத்துக்கும் விழிப்புக்குமாய் அல்லாடிக் கொண்டிருந்த அந்த 5 மணிநேரங்களுக்குள் ஃப்ளைட் போர்ட் பிளேர் ஏர்போர்ட்டில் இறங்கத் தொடங்கியிருந்தது.
வார விடுமுறை நாட்களாக இல்லாது அது ஒரு செவ்வாய்க்கிழமையாக அமைந்துவிட்டதால் ஏர்போர்ட்டில் பெரிதாக டூரிஸ்ட் நடமாட்டம் இல்லை.
விமானத்திலிருந்து பறித்துப் போட்ட வாடி வதங்கிய கொடிகளைப் போன்று அந்த இரு பெண்களும் இறங்கி நடக்கத் தொடங்கியது அவன் கண்ணில் படாமல் இல்லை.
வெகு அலட்சியமாக அவர்களிடம் பார்வையைச் செலுத்தியவன், மறுநொடியே தனது பி ஏ விடம் திரும்பி, ‘ஆஷா, செண்ட் தெம் டு அவர் ஹேவ்லாக் ஐலாண்ட் பீச் ரிசார்ட்ஸ்… பிஃபோர் தெட் கலெக்ட் தெயர் ஆதார், டிரைவிங் லைசென்ஸ், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட் அண்ட் வாட் எவெர் ஐடெண்டி கார்ட்ஸ் தே ஹேவ்’ என உத்தரவிட்டான்.
உத்தரவிட்ட பின் அவன் அங்கே நின்றானில்லை.
வந்து நின்ற அடர் சாக்லெட் நிற அமெரிக்கையான லக்ஸுரி கார் ஒன்றில் ஸ்டைலாக ஏறி அமர்ந்தவன், இவர்களை ஏறெடுத்தும் பாராது செல்ஃப் டிரைவிங்கில் காரைச் செலுத்திக்கொண்டு பறந்துவிட்டான்.
அந்தமான் ஏர்போர்ட்டில் அம்போவென விட்டுவிட்டுச் செல்லும் அவன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தபோதும் ஏதும் செய்வதற்கு இயலாத நிலையில் நின்றார்கள் தன்மத்ராவும் ஷைலாவும்.
அப்படி நின்றபோதும் அவர்களது மூளையில் அலாரம் அடிக்கத்தான் செய்தது. காதுகள் நன்றாகவே வேலை செய்துகொண்டிருக்கின்றனவே. போகும்போது என்ன சொல்லிச் சென்றான்?
கலெக்ட் தெயர் ஐடெண்டி கார்ட்ஸா… அவற்றை எப்படித் தர முடியும்?!
பைத்தியமா பிடித்திருக்கிறது? அந்நிய மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த விருந்தினர்கள்… தலைவிதியோ, கெட்ட நேரமோ ஏதோ ஒரு ஏடாகூட விபரீதப் பொழுதில் இவனிடம் திருட்டுப்பட்டம் பெற வேண்டிய நிலைக்கு ஆளாக நேர்ந்துவிட்டது. அதுவே எப்படி நிகழ்ந்தது என்று புரியாத அவலத்தில்… இவன் மேலும் மேலுமென நோகடிக்கிறானே?!
விசுவநாதபுரி ஏர்போர்ட்டின் கஸ்டம்ஸ் விசாரணை அறையில் வைத்து இவனிடம் தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று விளக்கி விவாதித்து நிரூபிக்க எந்தவொரு அவகாசமுமே தரவில்லையே இவன்?
யாரோ செய்த குற்றத்திற்கு எதிரே எங்கள் பெயர் முத்திரை குத்தப்பட்டது எப்படி? இது மதுரா ஆண்ட்டியின் பழிவாங்கலா? அவருக்கு ஷைலுவின் மீது நல்லபிப்ராயம் இல்லை. அதற்காக வயது வந்த பெண்களின் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் செயலையெல்லாம் செய்ய மாட்டார் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனமோ?
அந்தம்மாள் தங்களிடமிருந்து தாராவின் நட்பைத் துண்டிக்க இப்படி ஒரு வில்லத்தனமான செயலில் ஈடுபட்டிருப்பாரா? அப்படியும் இருக்குமோ? என்று குழம்பிக்கொண்டிருக்கையில் இதேது புது அஸ்திரம்? ஐடெண்டி கார்டுகளை எல்லாம் அபகரிக்கப் பார்க்கிறான்..
முடியாது. அப்படியெல்லாம் அத்துமீற விட்டுவிட முடியாது.
அவனது பி ஏ ஆஷா தங்களை அணுகி வாயைத் திறக்கும் முன்னரே;
தத்தமது கைப்பைகளை இறுகப் பற்றிக்கொண்டு அவளது செயலுக்கு உடன்படாதவர்களாக இரு பெண்களும் கூட்டணி அமைத்து நின்றுகொண்டனர்.
அவளா அசறுவாள்? குண்டுக்கட்டாய் ஷைலுவை நகர்த்திக்கொண்டு ஃப்ளைட்டில் ஏற்றியவளாயிற்றே?
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாதவளாக… தனது டியூலிப் நிறத்து லிப் கிளாஸ் உதடுகளை அசால்ட்டாகக் குவித்து உச்சுக் கொட்டி பரிதாபம் போலக் காட்டிக்கொண்டு;
“ஷைலஜா, நீதான் இன்னும் சிறுமி… ஆனால், உன் அத்தைக்கு என்ன வந்தது? அவளுக்கு நிதர்சனம் புரியாதா? அந்தமானுக்கு நீங்கள் விருந்தினர்களாக அழைத்து வரப்படவில்லை. என் பாஸின் கைதிகளாகத்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய கடமையும் நிர்பந்தமும் உங்களுக்கு உண்டு. அதற்கெல்லாம் உடன்பட விரும்பாவிட்டால் விசுவநாதபுரியின் சென்ட்ரல் ஜெயிலில் கம்பி எண்ண வைக்கலாம் என்று உத்தேசம். எப்படி வசதி?” என்றாள்.
ஷைலுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ’எதற்காக ஜெயிலில் கம்பி எண்ண வேண்டும்? ஒரு சாதாரணக் குறுவாள். அதைக் களவாடி நாங்கள் கோடி ரூபாய் விலைபேசி விட்டோமோ? எப்படியோ அது எங்கள் கைப்பையில் இருந்ததற்காக தண்டனைக்கு மேல் தண்டனை தந்துகொண்டே இருப்பீர்களா? ரொம்பத்தான் மிரட்டுகிறாயே நீ?’ என்றாள் ஆவேசமாக…
‘ரீட் பிட்வீன் தி லைன்ஸ்’ என்பார்களே? அதுபோல ஷைலு உதிர்த்த கோப முத்துக்களில் மற்றவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு, கோடி ரூபாய் விலை விஷயத்தை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டாள் ஆஷா.
“நான்சென்ஸ்ஸ்ஸ்ஸ்…” முகம் அக்னிப் பிழம்பாக ஜொலிக்க அவள் உச்சரித்த அந்த ‘நான்சென்ஸ்’ஸில் எக்ஸ்ட்ராவாகத் தொனித்த அத்தனை ‘ஸ்ஸ்ஸ்’களும் ஆஷாவின் உச்சபட்ச கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்தவே என்பதை அந்த நிலையிலும் தனு உணர்ந்து கொண்டாள்.
ஆனால்…. இவளுக்கு இவளது பாஸ் மீது இத்தனை விசுவாசமா? என்றிருந்தது ஷைலுவுக்கு.
இருவரும் ஆஷாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க அவள் முன்னிலும் ஆவேசமிக்கவளாகி;
’என்ன? அதைக் கோடி ரூபாய்க்கு விலை பேசுவாயா நீ? சின்னப் பெண்ணாயிற்றே என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் அப்படியெல்லாம் எண்ணத் துணிந்த உன்னை நொடியில் கழுத்தைத் திருகிப் போட்டு விடுவேன் இப்போதே. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள். போதும்… இனியும் எதையாவது உளறி என் பொறுமையைச் சோதிக்காமல் டூ வாட் ஐ சே’ என்று கிட்டத்தட்ட உறுமினாள்.
ஆஷாவின் ஆவேசம் கண்டு தனு மிரண்டு போனாள். அவளுக்கே அப்படி என்றால் ஷைலுவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவள் இன்னும் சிறுமியாகி அத்தையின் முதுகோடு ஒட்டி நின்றவளாக தலையைக் குனிந்துகொண்டாள்.
ஆஷா இரைக்காகக் குறிவைத்துக்காத்திருக்கும் புலியாகி அவர்களை நெருங்கியவள், அவர்கள் எதிர்பாராத ஒரு நொடியில் அவர்கள் இருவரதுமான கைப்பைகளை பலம் கொண்ட மட்டும் பற்றி இழுத்துத் தன்னிடத்தில் கையகப்படுத்திக் கொண்டாள்.
அதற்குள் இவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கே ஒரு சாக்லெட் நிற வோக்ஸ்வேகன் ஜெட்டா வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய டிரைவர் ஆஷாவைப் பார்த்ததும் சல்யூட் அடித்து பின்புறக் கதவைத் திறந்தான்.
இன்னமும் கோபம் குறையாதவளாக இவர்களை நோக்கித் திரும்பியவள், “வெற்றிலை, பாக்கு வைத்து மரியாதையாக அழைத்தால் தான் காரில் ஏறுவதாக உத்தேசமா? இதுவே அதிகம் உங்களுக்கு. ஹேவ்லாக்கில் பாஸுக்குச் சொந்தமான விஜய்நகர் ரிசார்ட்ஸ் இருக்கிறது. அங்கே தான் உங்களுக்கு இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன் உங்களுக்கு கொஞ்சம் பாடம் எடுக்க வேண்டியிருப்பதால் முதலில் இங்கிருக்கும் கெஸ்ட் ஹவுஸுக்கு காரில் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல் போட் எடுத்துக்கொண்டு ஹேவ்லாக் சென்றால் சரியாக இருக்கும். லெட்ஸ் கோ. கமான், க்விக்” என்று முடுக்கினாள்.
முற்றிலும் சூழ்நிலைக் கைதிகளாகிவிட்ட நிலையில் எதிர்த்துப் பதிலாட ஏதுமிருப்பதாகத் தோன்றாததால், விதி தங்களை எந்தப் பாதையில் அழைத்துச் செல்கிறதோ அதன் வழியே சென்றுதான் பார்ப்போமே என்று தோன்றிவிட, இரு பெண்களுமே வாய்மூடி மெளனிகளாக அந்தக் காரின் பின் சீட்டை நிரப்பினர்.
கார் சடுதியில் கிளம்பியது.
(தொடரும்)