சொல்லிவிட்டு ஸ்டைலாகத் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு நிமிர்ந்தவனை, இடுப்பில் கையூன்றி கண்கள் கோபக்கனல் கக்க முறைத்தவாறு எதிர்கொண்டவள் தனு அல்ல!
அறைக்குள் வர அனுமதி ஏதும் பெற வேண்டிய அவசியம் தனக்கில்லை என்பதாக அங்கே வெறுப்பும் அலட்சியமுமாக நின்றுகொண்டிருந்தவள் தாரா!
தாராவைக் கண்டதும் சேர்மனின் முகத்தில் மின்னற்பொழுதே என நொடி நேரம் கவலைக்கோடுகள் தோன்றி மறைந்தன. அந்தச் சுவடை அழிக்க முற்படுபவன் போல முகவாயைத் தேய்த்தபடி தொண்டையைச் செருமிக் கொண்டு, “வெல்கம் தாரா! ஆனால், நான் உன்னை இங்கே இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லையே. உட்கார்… பிறகு விஷயத்தைச் சொல்…” என்றான்.
அவனது அழுத்தம் அவளுக்குக் கோபமூட்டியது. உறவினனாக இருந்தபோதிலும் அதிகம் பேசிப் பழக்கம் இல்லாததால், தாராவுக்கு அவனிடம் பேச்சைத் தொடங்குவதில் நிறையவே தயக்கம் இருந்தது. ஆயினும் இப்போது பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ஒரு நெடுமூச்சுடன் அவள் கதவருகே நின்றிருந்த தன்மத்ராவை நோக்கிக் கையசைத்தாள்.
“வா தனு, இப்படி வந்து என் அருகில் உட்கார்” என்றாள் தாரா.
அவளது பேச்சு காதில் விழாதவன் போல, “பேச்சு அவளைப் பற்றித்தான் என்றால் என் நேரத்தை வீணடிக்க நான் தயாரில்லை. அவள் இங்கே என் கட்டுப்பாட்டில் இருப்பவள். அதனால் அவளைப் பற்றிய கவலை உனக்குத் தேவையில்லை தாரா! வேறு ஏதாவது விஷயம் இருந்தால் சொல், அல்லது நீ செல்லலாம். எனக்கு அவளிடம் விசாரணை இன்னும் மிச்சமிருக்கிறது” என்றான் சேர்மன் வெகு இறுக்கமான குரலில்.
அவனது அலட்சியமும் கர்வமுமான பேச்சில் வெகுண்டெழுந்தவளான தாரா, தன் இருக்கையை விட்டுச் சடாரென எழுந்து நின்றபோது அவளது முகம் செந்தணலாகக் கனன்றுகொண்டிருந்தது.
“மிஸ்டர் சேர்மன்! நீங்கள் உங்கள் கர்வத்தையும் தலைக்கனத்தையும் கொஞ்சம் அடக்கிக் கொள்வது நல்லது… ஹூம்!” என உறுமியவள், மேலும் நிறுத்தாமல் உச்சஸ்தாயியில் தொடர்ந்து பொறிந்து கொட்டத் தொடங்கினாள்:
“தன்மத்ரா என் பொறுப்பில் விசுவநாதபுரிக்கு வந்தவள்; என் உயிரினும் மேலான தோழி! இன்னும் சொல்லப்போனால் அவளுக்குத் தோழியாகும் தகுதி எனக்கு உள்ளதா என்று எனக்கு நானே பலமுறை யோசிக்கத் தூண்டிய அளவில் மிக நேர்மையான பெண் அவள். அவளைப் போய்த் திருட்டுப் பட்டம் சுமத்தி இங்கே அழைத்து வந்து சிறை வைத்திருக்கிறீர்கள்! எப்பேர்ப்பட்ட பெண்ணை என்னென்ன விதத்தில் எல்லாம் குற்றேவல் வேலைகளைச் செய்ய வைத்திருக்கிறீர்கள்! உங்கள் பொல்லாத ரிசார்ட்டில் தோட்டி வேலை செய்யத்தானா அவள் இங்கு வந்தாள்? எந்த தைரியத்தில் இதையெல்லாம் நீங்கள் நிகழ்த்தினீர்கள்?”
படபடவெனப் பொழிந்துவிட்டு சீற்றம் குறையாமல் அவனை உறுத்து விழித்தவள், அருகில் நின்றிருந்த தன்மத்ராவின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். “இப்போது நான் இவளை என்னோடு அழைத்துச் செல்கிறேன். உங்களால் ஆனதைப் பாருங்கள், எது வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்” என்றவாறு அவனைத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து விரைந்து வெளியேறினாள்.
தாராவின் இடையூறைத் தாங்கவொண்ணா எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருந்த சேர்மனின் முகத்தில் இந்நேரம் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க வேண்டுமே என்று அவனது முகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற தனுவுக்கு, அப்போது அவன் காட்டிய முகம் பெரும் குழப்பத்தையே மிஞ்சியது.
‘என்ன இவன்? கோபத்தில் ஏதாவது இடக்கு மடக்காக நடந்து கொள்வான் என்று பயந்து கொண்டிருந்தால், அவன் என்னவோ ஒன்றுமே நடவாத தோரணையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானே! இதை நம்புவதற்கில்லை. இவன் என்னவோ பெரிதாக எதிர்வினையாற்றப் போகிறான்’ என்று அஞ்சிக்கொண்டேதான் அவள் தாராவுடன் சென்றாள்.
அவர்கள் அந்த அறையை விட்டு முற்றிலுமாக வெளியேறிச் செல்லும் வரை மிஸ்டர் சேர்மனிடம் எந்தவித அசைவுமில்லை. அவன் அவர்களைச் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருப்பது ஸ்பஷ்டமாகக் கண்ணில் பட, தனுவுக்கு உள்ளுக்குள் குளிர்க்காய்ச்சல் வந்தாற்போலிருந்தது.
இவனது இயல்பில்லையே இது?! இன்னும் பிரச்சினை அப்படியேதானே இருக்கிறது? போதாக்குறைக்கு இந்த உக்ரைனியர்களின் பிரச்சினை வேறு! இந்த இரண்டிலுமே தான் சம்பந்தப்பட்டிருப்பதால் தன்னை அத்தனை எளிதாக அவன் விட்டுவிடக் கூடும் என தனு எதிர்பார்க்கவில்லை.
ஆயினும் தாரா அளித்த தைரியத்தில் மாபெரும் அழுத்தத்திலிருந்து விடுபட்ட உணர்வுடன் அவள் ஷைலாவை நாடிச் சென்றாள். ‘போதும், இனிமேலும் இவனுக்குப் பயந்துகொண்டு இங்கேயே இருக்க நேர்ந்தால் அந்தச் சிறுமியின் பள்ளி வாழ்க்கை என்னாவது? அவளது பெற்றோரை எப்படி எதிர்கொள்வது?’ – இப்படியெல்லாம் யோசித்தவளாக தனு தங்களது அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே அவளை எதிர்பார்த்துக் காத்திருந்த ஷைலா, “ஹை, அத்தை வந்தாச்சு!” என்று ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டாள். “அத்தை, கிரிஷ் அண்ணா நமக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிவிட்டாராம். இன்று மாலை 6 மணிக்கெல்லாம் நாம் இங்கிருந்து கிளம்பிவிடலாமாம். இதெல்லாம் நிஜமா அத்தை? எனக்கு நானே பலமுறை கிள்ளிப் பார்த்துவிட்டேன். இது நிஜம்தானே?” என்று தங்கள் விடுதலையை நம்ப முடியாதவளாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள்.
அந்தக் குழந்தையின் சந்தோஷத்தைக் கண்டு சற்றே ஆறுதலடைந்தவளாக, தனுவின் முகமும் நொடியில் புன்னகை பூசிக் கொண்டது. “நிஜம்தான் ஷைலா, இதோ தாராவிடம் கேளேன், அவளும் சொல்வாளே… இன்று நிச்சயமாக நாம் இங்கிருந்து செல்லத்தான் போகிறோம். சீக்கிரம் ஆகட்டும்… வா, வா! நம்முடைய பொருட்களை எல்லாம் பேக் செய்யலாம்” என்று பரபரப்புடன் அவளும் தங்களது பயணத்துக்கான ஏற்பாடுகளில் இறங்கினாள்.
விசுவநாதபுரியிலிருந்து குவகாத்திக்குக் கிளம்புகையில் அவர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு ஜம்போ சைஸ் டிராவல் சூட்கேஸ்கள் திறக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தன. இங்கு வந்த இரண்டாம் நாளே அவர்களுக்கென சீருடை (Uniform) தரப்பட்டிருந்தபடியால், பெரிதாக பேக்கிங் வேலைகள் எதுவுமின்றி எளிதாகத் தங்களது பொருட்களை அடுக்கி முடித்தார்கள்.
ரிசார்ட்டில் அளிக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகள், சீருடைகள், முதலுதவிப் பெட்டி போன்றவற்றுக்குப் பொறுப்பான நபரிடம் ஒப்படைத்த பின் நேரத்தைப் பார்த்தால் மதிய உணவுக்கான நேரம் கடந்திருந்தது. இங்கிருந்து விமான நிலையம் செல்வதற்குக் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகலாம். அதனால் மதிய உணவிற்கென நேரத்தை வீணடிக்காமல், கூடுமான வரையில் ரிசார்ட்டிலிருந்து கிளம்பி வெளியேறிச் சென்றுவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் மூன்று பெண்களும் பரபரப்புடன் செயல்பட்டார்கள்.
மூவருக்குமே சேர்மன் குறித்த அச்சம் உள்ளூர நெருடிக்கொண்டே இருந்ததை அவர்களது பதற்றம் காட்டிக்கொடுத்தது. ‘ஆம், எந்த நொடியிலும் அவனால் ஏதேனும் இடையூறு நிகழலாம்; அதை எப்படியும் எதிர்கொண்டு இங்கிருந்து வெளியேறியே தீர்வது’ எனும் முடிவுடன், சடுதியில் தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து குரூஸுக்குச் செல்லவெனத் தனியார் வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர்.
அவர்கள் வெளியே வரவும் மெக்கன்ஸியும், கிரீஸும் காரிடரில் காத்திருப்பது தெரிந்தது.
மெக்கன்ஸி, தனுவை நெருங்கி முத்திரையிடப்பட்ட (Sealed) சற்றுக் கனமான வெள்ளை நிற உறை ஒன்றைத் தந்து, “இது உங்களுக்கு எங்கள் சேர்மனின் முக்கியமான செய்தி. இப்போது பிரிக்கக் கூடாது என உத்தரவு. உங்களது இருப்பிடம் சென்ற பிறகு தனிமையில் இதைப் படித்துவிட்டு, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது உங்களுக்கு விருப்பமிருப்பின் அலைபேசி வாயிலாகவோ அவரைத் தொடர்பு கொள்ளவேண்டுமெனக் கட்டளை” என்றான்.
மெக்கன்ஸியின் வார்த்தைப் பிரயோகங்களில் தென்பட்ட உத்தரவு, கட்டளை போன்றவை தந்த அதிருப்தியை அப்பட்டமாக முகத்தில் தேக்கிக் கொண்ட தாரா, தனுவை முந்திக் கொண்டு அக்கடித உறையை அவனிடமிருந்து பறித்து சட்டெனத் தரையில் விசிறியடித்துவிட்டு, தனுவின் கைபற்றி இழுத்துக்கொண்டு வரவேற்பறையை (Reception) நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
இந்த உதாசீனத்தில் தானொன்றும் பாதிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்ளாத மெக்கன்ஸி, இயல்பாக நடந்து குனிந்து மூலையில் கிடந்த அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டவாறு தனுவை நிமிர்ந்து பார்த்தான். ‘நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், அப்புறம் உன் விருப்பம்!’ எனும் தொனி இருந்தது அவன் பார்வையில்.
தனுவுக்குப் பயத்தில் உள்ளூரக் குளிர் பரவினாலும், மேலும் அங்கேயே நேரம் கடத்தினால் எங்கே அந்த சேர்மன் வந்து தங்களது பயணத்தைத் தடுத்து நிறுத்திவிடுவானோ என்ற அவசரத்தில், தாராவுடன் நடந்துகொண்டே மெக்கன்ஸியிடமிருந்த பார்வையைக் கவனத்துடன் நீக்கிக் கொண்டவளாக நகர்ந்து சென்றாள்.
ஷைலாவுக்கு ஏனோ மெக்கன்ஸியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இங்கு வந்த முதல் வாரத்தில் அவனால் பட்ட கஷ்டங்கள் அனேகம்… அவையெல்லாம் நினைவை அழுத்த, தன் அத்தையைத் தொடர்ந்து அவளும் விரைந்து வெளியேறத் தொடங்கினாள்.
அதுவரை நடப்பவற்றை வேடிக்கை பார்த்தவாறு நின்றுகொண்டிருந்த கிரீஸ், மெக்கன்ஸியின் தோளைத் தட்டி, ”போதும் மிஸ்டர்! உங்கள் அதிகாரமெல்லாம் இந்த ரிசார்ட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கட்டும். அவர்களை விட்டுவிடுங்கள், இல்லாவிட்டால் அதிகம் கஷ்டப்படுவீர்கள். இதை எச்சரிக்கையாகவோ அல்லது மிரட்டலாகவோ கூட எடுத்துக் கொண்டாலும் சரிதான்” என்று நிறுத்தி நிதானமாக மொழிந்துவிட்டு அவர்களுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான்.
அங்கே தொடங்கி வேறு எங்குமே இடையில் நிற்கவில்லை அவர்கள்.
ஒருவழியாக குவகாத்தி செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்ததும்தான் பதற்றம் தணிந்து சற்றே ஆசுவாசமடைந்தாள் தன்மத்ரா.
எல்லையற்ற விடுதலை உணர்வில், ஷைலா விமானத்தில் ஏறி அமர்ந்த அடுத்த நொடியே தன் அத்தையின் கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டாள். “என்னால் நம்பவே முடியவில்லை அத்தை! இந்த நிமிடம் வரை இது நிஜமா, நிஜமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன். எப்படிப்பட்டதொரு நரகத்திலிருந்து விடுபட்டிருக்கிறோம்! ஏன் அத்தை? நாம் ஏன் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டோம்? என் விளையாட்டுத்தனத்தினால் உங்களைப் பெரியதொரு சிக்கலில் மாட்டி வைத்துவிட்டேனே! அதனால் உண்டான பலன் என் வாழ்நாள் முழுமைக்குமான பாடம். இனியொரு முறை இப்படியெல்லாம் கனவில் கூட நிகழ்ந்துவிடக் கூடாது. ப்ளீஸ் என்னை மன்னியுங்கள் அத்தை!” என்று விடாமல் அரற்றிக்கொண்டே வந்தாள்.
(தொடரும்)