அவர்களை ஃப்ளைட்டில் அனுப்பிவிட்டு பெருத்த நிம்மதி உணர்வுடன் திரும்பிய தாரா தன்னுடன் நின்றிருந்த கிரீஷிடம், “நன்றி கிரீஷ், உன்னைப் போன்ற நண்பன் இருந்ததால் மட்டுமே இந்த வேலை இத்தனை எளிதாக முடிந்தது. இல்லாவிட்டால் பிரபாவிடம் இருந்து இவர்களை இத்தனை சீக்கிரத்தில் மீட்டிருக்க முடியும் என்று நான் நம்பியிருக்க மாட்டேன்…” என்றவாறு தோழமை கலந்த அயர்ச்சியுடன் ஒருமுறை அவனது கைகளை இறுகப்பற்றி விடுவித்தாள்.
‘இட்ஸ் ஆல்ரைட் தாரா, தனு இஸ் மை சைல்ட்ஹூட் ஃப்ரெண்ட். அவளுக்காக எதைச் செய்யவும் நான் தயங்க மாட்டேன். இதற்காக நீ நன்றி சொல்லத் தேவையே இல்லை. எனிவே நான் வந்த வேலை எனக்காகக் காத்திருக்கிறது. நான் கிளம்ப வேண்டும். நீ என்ன செய்வதாக இருக்கிறாய்? மீண்டும் ரிசார்ட்டுக்குச் செல்கிறாயா? அல்லது விசுவநாதபுரிக்கா?!’
கிரீஷின் கேள்வி தாராவை ஒரு நொடி திகைக்க வைத்தது.
’ரிசார்ட்டில் இனி எனக்கென்ன வேலை கிரீஷ்? எனக்கு நாளைக் காலையில்தான் டெல்லி ஃப்ளைட். அதுவரை இங்கேயே பக்கத்தில் ஏதாவது ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்க வேண்டியதுதான். வாய்ப்பிருந்தால் மீண்டும் சந்திக்கலாம் பை… பை’ என்று புன்னகைத்தாள்.
கிரீஷுக்கு தாராவை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாதபோதும் அவளுக்கு வேறு எந்த வகையில் தான் உதவக்கூடும் என்று தெரியாமல் சில நொடிகளை யோசனையில் நழுவவிட்டான். பிறகு எதற்கும் இருக்கட்டும் என்று தன்னுடைய விசிட்டிங் கார்டை அவளிடம் அளித்து “எனி டைம், எனி ஹெல்ப் ப்ளீஸ் கால் மீ தாரா. நீயும் எனக்கு தன்மத்ராவைப் போலத்தான்” என்று புன்னகைத்தான்.
அவன் சொன்னது ஆறுதலாக இருக்கவே, ’ஹே, அதை நீ சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில்லை கிரீஷ். ஐ ஃபீல் இட்… உதவி தேவை என்றால் நிச்சயமாக இனி உன் நினைவுதான் எனக்கு முதலில் வரும்’ என்றவள் அவனிடமிருந்து விடைபெற்று நகர்ந்தாள்.
அவள் அங்கிருந்து வெளியேறும் வரை அவள் செல்வதையே கண்ணெடுக்காது பார்த்துக்கொண்டிருந்த கிரீஷ், பின்னர் அங்கிருந்தவாறே அலைபேசியில் யாரையோ அழைத்தான். அடுத்த 10 நிமிடங்களில் ஒரு ஜீப் வந்து நின்றது. முன் சீட்டில் அவன் ஏறி அமர்ந்ததும் அது அங்கிருந்து நகர்ந்து ரிசார்ட் செல்லும் திசையில் விரைந்தது.
செல்லும் வழியெங்கும் கிரீஷுக்கு மிஸ்டர். சேர்மன் (தாராவின் பிரபா) குறித்த யோசனையே மிகுந்திருந்தது. அவன் வந்த வேலைக்கும் இதற்கும் தொடர்பே இல்லாதபோதும், தான் அனாவசியமாக அதைப்பற்றியே மேலும் மேலும் யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றவே அவன் தன் கவனத்தை திசைதிருப்ப முயன்று அலைபேசியில் 80-களின் இந்திப் பாடல்களைக் கேட்கத் தொடங்கினான். அந்த முயற்சி பலனளித்தது.
இரவு 9 மணியளவில் கிரீஷ் மீண்டும் ரிசார்ட்டுக்குள் நுழைகையில் அங்கே அசாதாரண அமைதி நிலவிக்கொண்டிருந்தது. வந்தவன் நேரே கீழ்த்தளத்தில் இருந்த ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்து இரண்டு பட்டர் நாண் வித் முர்க் மசாலாவுடன் இரவு உணவை முடித்தான்.
இப்படித் தனியாக இங்கே வந்து உண்பதைக் காட்டிலும் தாராவுடன் அங்கே ஏர்போர்ட் அருகில் ஏதாவது உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு அவளை அவளது அறையில் பாதுகாப்பாகக் கொண்டுவிட்டு வந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று தோன்றவுமே, “மறுபடியும் இதென்ன யோசனை” என்று அந்த நினைப்பைத் தலையை உலுக்கி விரட்டியவனாக ஒரு பீங்கான் கோப்பை நிறைய மசாலா டீயை நிரப்பிக்கொண்டு உணவகத்தின் வெளியே புல்வெளியில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான்.
பின்னணியில் ரொமாண்டிக்கான தமிழ்ப்பாடல் ஒன்று மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. தமிழ்ப்பாடலைக் கேட்கக் கேட்க தாராவின் நினைவும் வந்தது. அவளை நினைத்ததுமே மேலும் சிறிது நேரம் அவளுடன் செலவிட்டிருக்கலாமோ என்று அபத்தமாக யோசித்துவிட்டு, ச்சே… ச்சே அவளும் தனு போல தனக்கொரு நல்ல தோழி மட்டுமே என்றெண்ணி வேண்டாத நினைவுகளை ஒதுக்க முயன்றான். ஆனாலும், அவன் கேட்டுக்கொண்டிருந்த பாடலில் மேலோங்கி நின்ற ரொமான்ஸ் அவனது முயற்சியை அபாரமாகத் தோற்கடித்தது.
தமிழ்ப்பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும் அந்தப் பாடலும் அதன் இசையும் அவனுக்குள் முகிழ்த்தெழச் செய்த உணர்வு மனதுக்கு வெகு நெருக்கமானதாக இருக்கவே, இஷ்டப்பட்டு அதில் கரையத் தொடங்கியவன் பிறகு எப்போது, எப்படி எழுந்து அறைக்குச் சென்றான், எப்போது உறங்கத் தொடங்கினான் என்பது புரியாத புதிர். அதைப் பற்றித் தனக்குத்தானே கேள்வி எழுப்பக்கூடப் பிறகு எப்போதுமே அவனுக்குச் சற்று வெட்கமும் தயக்கமுமாகத்தான் இருந்தது.
காலையில் அவன் விழித்தெழுந்ததே இடைவிடாத தொலைபேசி அழைப்பு ஒலியில்தான். ரிசீவரை எடுத்துக்காதில் வைத்தவன் மணி பார்த்தான்; நேரம் அதிகாலை 4.30 எனக் காட்டியது கடிகார முட்கள்.
இத்தனை அதிகாலையில் தன்னை அழைப்பது யார்?
எதிர்முனையில் அழைத்த குரல் அவசரத்தில் இருந்தது. ’மிஸ்டர் கிரீஷ், உடனடியாக எலிஃபெண்ட் பீச் பக்கத்தில் இருக்கும் தென்னந்தோப்புக்கு வாருங்கள். அர்ஜென்ட்’ என்று ரிசீவரை வைத்துவிட்டார்கள்.
வந்த அழைப்பின் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் எழுந்து அமர்ந்த கிரீஷுக்குள் அனிச்சையாக அச்ச உணர்வு ஊற்றெடுத்தது. ஒருவேளை தனுவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதோ? இந்நேரம் அவள் குவஹாத்தி சென்றடைந்திருக்க வேண்டுமே! என்று யோசனையுடன் தனது அலைபேசியின் வாட்ஸ்அப் பக்கத்தை ஆராய்ந்தான்.
‘Safely Reached, it’s 12 here… call u later – Thanu’
என்றிருந்த தகவலைப் பார்த்துவிட்டு ஃபோனை அணைத்து சோஃபாவில் போட்டுவிட்டு ரிசப்ஷனைத் தொடர்பு கொண்டான்.
இணைப்பில் வந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் சற்றுமுன் தனக்கு வந்த அழைப்பு யாரிடமிருந்து என்று விசாரித்தான்.
அது மிஸ்டர் சேர்மனிடமிருந்து என்று அறிந்ததும், பிரபாகர் தன்னை ஏன் இந்த நேரத்தில் அழைக்க வேண்டும்? தாராவுக்குத்தான் ஏதாவது துன்பம் நேர்ந்துவிட்டதோ? என்று தோன்றிய நொடியில் அவனுக்குத் தன்னுயிர் தன்னிடத்தில் இல்லை எனும்படியாகிவிட்டது. அப்படியோர் பரிதவிப்பு.
உடனடியாக தாராவின் தொடர்பு எண்களைத் தன் அலைபேசியில் தேடத் தொடங்கினான். அப்போதுதான் உறைத்தது; நேற்று முதன்முறையாக சந்தித்ததில் தொடங்கி அவளது நினைப்பாகவே இருந்தபோதிலும், அவளது தொடர்பு எண்களைத் தான் பெற்றுக்கொள்ளவே இல்லை என்பது. ‘பெரிய பரோபகாரி போல விசிட்டிங் கார்டு கொடுத்தாயேடா மடையா? ஏதேனும் ஆபத்து அல்லது உதவி தேவை எனில் இப்போதுதான் அறிமுகமான உன்னை அவள் தொடர்பு கொள்வாளா? அல்லது நெடுங்காலமாக உறவினனாக இருக்கும் மிஸ்டர் சேர்மன் பிரபாகரைத் தொடர்பு கொள்வாளா?!’
என்ற ஐயம் வலுக்கவே, சற்றும் நேரம் கடத்தாது அவன் ரிசப்ஷனில் கேட்டு பிரபாகரின் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டு அவனை அழைத்தான்.
எதிர்முனையில் இரண்டு முறை அழைப்பைத் துண்டித்தான் பிரபாகர்; பின்னர் அவனிடமிருந்து ‘Do what I said immediately’ என்ற தகவல் உடனடியாக வந்தது.
‘ஹூம், இவனும் இவனது ஆணவம் பிடித்த அணுகுமுறையும்’ என்று கோபம் தலைக்கேறியபோதும், அதற்கான தருணமல்ல இது என்றுணர்ந்து உடனடியாக ஜீப்பை வரவழைத்து ஏறிக்கொண்டு எலிஃபெண்ட் பீச்சுக்கு விரைந்தான் கிரீஷ்.
அவன் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடியில் தாரா வந்த கார் ரிசார்ட்டினுள் நுழைந்தது.
ரிசப்ஷனில் பிரபாகரின் அறைச்சாவியைக் கேட்டு வாங்கிய தாரா, அங்கு சென்று அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
ரிசப்ஷனிஸ்ட் மேரி, தாராவின் வருகை கண்டு தன்னருகில் அமர்ந்திருந்த சக ரிசப்ஷனிஸ்ட் ஷாலினியிடம் ஒற்றைப் புருவம் உயர்த்தி “என்ன இது?” என்று வினவ… அவளோ… “எதிர்கால எஜமானியம்மாள் இவர்தான். அதனால் அடக்கி வாசி உன் ஆராய்ச்சிப் படலத்தை” என்று மென்குரலில் கிசுகிசுக்க… அவள் அத்துடன் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டாள்.
அங்கே எலிஃபெண்ட் பீச்சில் கிரீஷின் ஜீப் உள்ளே நுழைந்தது.
இன்னும் இருள் பிரியாத அதிகாலை 5.30 மணிப்பொழுது. அங்கு எவரும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.
ஜீப்பை விட்டிறங்கிச் சற்று தூரம் நடந்து மேட்டுப்பகுதியொன்றைக் கடந்து யாருமிருக்கிறார்களா என்று ஆராய்ந்தான் கிரீஷ். அப்போது வெகு அருகில் பிரபாகரின் குரல் வந்தது.
’இப்படி வாருங்கள் கிரீஷ். இதோ இங்கே’ என்றான்.
குரல் வந்த திக்கில் அடர்த்தியான புதர்கள் தென்பட்டன. இருட்டுக்குக் கண்கள் பழகியதும் அங்கே பிரபாகரும், மெக்கன்ஸியும், உடன் ஒரு பெண்ணும் தவிர மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. கிரீஷ் விரைந்து அவர்களை நோக்கிச் சென்றான்.
அந்தப் பெண் வேறு யாரும் அல்ல. அவள் நேற்று காணாமல் போன அந்த உக்ரைனியனின் மனைவிதான். அவள் அழுதுகொண்டிருந்தாள். கீழே குப்புறக் கிடந்தவாக்கில் யாரோ விழுந்துகிடந்தார்கள். போலீஸ்காரர்கள் விழுந்துகிடந்த மனிதனின் அருகில் அப்பெண்ணை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தார்கள். குப்புறக் கிடந்த அவனைப் பார்த்து மிசஸ்.ஆண்ட்ரூ அழுதுகொண்டிருந்தாள்.
பிரபாகர், கிரீஷை அணுகி:
‘மிஸ்டர் ஆஃபீஸர், நீங்கள் வந்த வேலைக்கும் இந்த மனிதனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தோன்றியதால்தான் நான் உங்களைத் தொடர்பு கொண்டேன். இந்த மனிதன்தான் நேற்று தன்மத்ராவுடன் அபெர்தீன் பஜார் சென்றவன். அங்கிருந்து இவனைக் காணவில்லை எனும் புகாருடன் அவள் உங்களுடன் ரிசார்ட் திரும்பிவிட்டாள். நாங்கள் இவனைத் தேடிக்கொண்டிருந்தோம். இப்போது கிடைத்துவிட்டான். ஆனால், சடலமாகக் கிடைத்திருக்கிறான். இவன் மனைவி தன்மத்ராவைச் சந்தேகிக்கிறாள். ஆனால், எனக்கோ இவர்கள் இருவர் மீதுதான் சந்தேகமே! இவர்களைப் பார்த்தால் நிஜமான தம்பதி போலத் தோன்றவில்லை. நீங்கள் ’ரா’ சார்பாகத் தேடிக்கொண்டு வந்தது இவர்களைத்தான் என்பது எனது அனுமானம். நீங்கள் எதற்காக இவர்களைத் தேடிக்கொண்டிருந்தீர்கள் என்பது குறித்தெல்லாம் நான் ஆராய விரும்பவில்லை. இது கொலையா, தற்கொலையா? அதற்கான காரணங்கள் இத்யாதி, இத்யாதி குறித்த விசாரணைகளில் எனது மற்றும் எனது ஊழியர்களது முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. இப்பகுதி காவல்துறையினரும் எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். இதைத் தெரிவிக்கவே இந்த நேரத்தில் உங்களை அழைத்தேன். என் பொறுப்பு முடிந்தது. இப்போது நான் கிளம்புகிறேன்.’
– என்று முடித்தான்.
கிரீஷால் பிரபாகரைப் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.
‘மிஸ்டர். சேர்மன் பணத்திமிர் பிடித்தவன் மட்டுமில்லை; அவனுக்குள் ஒரு பொறுப்பான புத்திசாலியும், சாமர்த்தியசாலியுமான மனிதன் இருக்கிறானே’ என்றெண்ணிக்கொண்டான்.
பிரபாகரிடம் சன்னமான தலையசைப்புடன் விடை கொடுத்த கிரீஷ், மிசஸ். ஆண்ட்ரூவிடம் திரும்பி, கண்டிப்பான குரலில்:
‘ஷட் அப் லேடி. இவன் உன் கணவனில்லை என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் போதுமான அளவுக்கு உண்டு. அத்துடன் நீங்கள் தனுவை அழைத்துச் சென்றதே உங்கள் சதித்திட்டத்தின் ஒரு பாகமாகத்தான் என்பதையும் நான் அறிவேன். வீணாக மனைவி வேஷம் போட்டு உன் கண்ணீரை வீணாக்காதே’ என்றான்.
குட்டு உடைந்துவிட்டதே என்று வருந்தாது அவள் மிகத் திமிராக:
’நான் அவனது மனைவியா? இல்லையா? என்பதா இப்போது முக்கியம்? நாங்கள் வந்த வேலை இன்னும் முடியாத நிலையில் இவன் அரைகுறையாக எம்மை விட்டுச் சென்றுவிட்டானே?! என்று கூட நான் அழலாமில்லையா? பிளடி இண்டியன்ஸ்… உங்களுக்கு எல்லாமே ஒரே ஒரு காரணத்தைக் கொண்டதாகத்தான் இருந்தாக வேண்டுமோ? பிரச்சினையோ, பிரதிபலனோ எல்லாவற்றுக்குமே பல பரிமாணங்கள் உண்டு. இதை நீங்கள் எப்போதடா அறிந்துகொள்ளப் போகிறீர்கள்?’ என்றாள் தெனாவெட்டாக.
அவள் சொன்னதைக் கேட்டு அவளது குரல்வளையை நெரிக்கும் அளவுக்கு ஆத்திரம் எழுந்தபோதும் கஷ்டப்பட்டு அதை அடக்கிக்கொண்ட கிரீஷ்:
‘இண்டியன்ஸ் ஆர் நாட் பிளடி. உன்னைப் போன்ற குதர்க்கம் பிடித்த அயல்நாட்டுக்காரர்களை ‘அதிதி தேவோ பவ’ என்று கொண்டாடத் துடிக்கிறோமே, அந்த ஒரே காரணத்தால் இன்று நீ தப்பினாய். அதற்காக ரொம்பவும் சந்தோஷப்பட்டுவிடாதே. உன் மீதும், இதோ பிணமாகிக் கிடக்கிறானே இவன் மீதுமான குற்றம் நிரூபணமான அடுத்த நொடியில் இங்கு அதற்கான தண்டனை உனது உயிருமாகக் கூட இருக்கலாம். கொடுப்பதற்குத் தயாராக இரு.’
– என்று மிரட்டலாகச் சொல்லி அவளை அங்கிருந்த போலீஸார் வசம் ஒப்படைத்தான்.
அங்கிருந்து மீண்டும் ரிசார்ட் திரும்பும் வழியில் அவனது நினைவுகள் மொத்தமும் தாராவிடமே இருந்தன.
அவளிடமிருந்து நினைவுகளை மீட்டு நடப்புப் பிரச்சினைகளில் புத்தியை நிலைநிறுத்த அவன் மிகவும் மெனக்கெட வேண்டியதாயிருந்தது.
தன்மத்ராவை மீட்டு குவஹாத்திக்கு அனுப்பியாயிற்று. தான் தேடி வந்த இன்டர்நேஷனல் குற்றவாளியான அந்த உக்ரைனியன் இங்கு கொலையுண்டு கிடக்கிறான். அது குறித்த வழக்கு மிச்சமிருந்தாலும் அதன் போக்கில் எந்தத் தொய்வும் இருக்கப்போவதில்லை. அந்த வழக்கில் குற்றச்செயல்களுக்கான மாஸ்டர் பிரைன் யார் என்று கண்டறிந்தால் மட்டுமே வழக்கு ஒரு முடிவுக்கு வரக்கூடும்.
தற்போதைக்கு மிஸ்டர்.சேர்மன் குறித்த மர்மம் தீர்ந்துவிட்டது. அவன் தன்மத்ராவின் மீது கோபமாயிருந்ததற்கான காரணம் அவனது ராஜ குடும்பத்தைச் சார்ந்த பாரம்பரியப் பெருமை மிக்க வாள் திருடப்பட்டதால் மட்டுமே என்பது நிரூபணமாகிவிட்டது. ஆனால் அதை ஏன் ஷைலா எடுத்து தனுவின் கைப்பையில் போட வேண்டும்? ஷைலா எதனால் தூண்டப்பட்டாள்? அந்தக் கேள்விக்கான விடை இன்னும் மிச்சமிருக்கிறது.
விளக்கங்களுக்கு அப்பாற்பட்டு தன்மத்ராவைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதிவலைகளில் அனேகமானவை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போதைக்கு அவள் பிரபாகரிடமிருந்து தப்பிவிட்டாளே தவிர, அவளைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாமல் நீண்டிருக்கும் அபாயக்கரங்களிலிருந்து அவள் முழுவதுமாகத் தப்பிவிட்டாள் என்று சொல்வதற்கில்லை. இனிமேல்தான் தனது பாதுகாப்பு வலை அவளுக்கு மிகவும் தேவைப்படலாம்.
இந்நிலையில் அவளைப் பற்றி யோசிக்காமல் சுயநலமாக தான் மட்டும் திடீர் திடீரென தாராவின் நினைவுகளில் அமிழ்ந்து போவது சரிதானா? அந்தப் பெண்ணைச் சந்தித்து முழுதாக இன்னும் 24 மணி நேரமாகவில்லை. அதற்குள் தனக்குள்ளே இத்தனை தடுமாற்றமா? அவள் மீதான தனது நேசத்திற்கு எதிர்காலம் உண்டா?
சொல்லப்போனால் தான் மட்டுமே இப்படியான உணர்வுகளில் சிக்கித் தவிக்கிறோமோ… அவள் என்னவோ தோழியைக் காப்பாற்றி வழியனுப்பி வைத்துவிட்ட சந்தோஷத்தில் ஹோட்டல் அறையில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பாளோ?!
என்றெல்லாம் பலவிதமான குருட்டு யோசனைகள் அவனைப் பந்தாடிக்கொண்டிருந்தன.
தனது நிலைமை குறித்து ஐயோவென்றிருந்தது அவனுக்கு!
இதுதான் காதலா?
ரிசார்ட் நெருங்க நெருங்க எதைப்பற்றியும் உருப்படியான எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் சிந்தனையில் ஆழ்ந்தவனாக அவன் தன் பாட்டில் இறங்கி ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தான்.
நேரம் காலை 6 மணியாகியிருந்தது.
இந்நேரம் அங்கே என்ன கிடைக்கக்கூடும்?
எதுவுமே கிடைக்காதபோதும்… ஏதோ ஒரு தமிழ்ப்பாடல் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்க, இருள் விலகாத புல்வெளியில் பிரப்பங்கூடைச் சேரில் சாய்ந்துகிடந்தபடி தன் நினைவுகளின் போக்கில் ஆழ்ந்திருப்பது இப்போதைக்குப் போதுமெனத் தோன்றியதால், இலக்கின்றி வெறித்துக்கொண்டு அங்கிருந்த சேர் ஒன்றில் ஓய்ந்துபோய் சரிந்து அமர்ந்தான்.
எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தானோ தெரியாது, திடீரென புலர்காலையின் பொன்னொளிர் கிரணங்கள் புறப்பட்ட முதல் நொடியின் பூரணத்துவமே போல, பொன்னிறக் கரமொன்று மசாலா டீ மணத்துடன் அவன் முன் நீண்டது.
தேயிலையின் நறுமணத்துடன் இணைந்த பச்சைப் புல் வாசமும், காலடியில் குறுகுறுத்த பனித்துளிகளின் இதமும் மனதை என்னவோ செய்ய, எதையோ எதிர்பார்த்து அவன் தன் முன் நீண்ட கரங்களை நோக்கி நிமிர்ந்து அமர்ந்தபோது…
பளிச் என்ற புன்னகையுடன் அங்கு நின்றிருந்த தாரா “ஹே, குட்மார்னிங் டியூட்” என்றாள்.
மனதுக்குள் ‘ஹே… ஹை… யா… ஹூ’ என்று கத்திக் குதிக்கும் அளவுக்கு உற்சாகம் பொங்கிப் பெருகி அகத்தில் பரவியபோதும், நிஜத்தில் அவன் அப்படி எதுவும் செய்துவிடவில்லை.
அவளது புன்னகை இவனையும் தொற்றிக்கொண்டது என்பது போல் மலர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தான்.
(தொடரும்)