சீதை கடத்தியதால் சீராகத் தன்னுள்ளம்
பேதையாய் மாறிப் புலம்பிடுவான் – வாதையில்
மீனிடம் சோகமதை மென்மேலும் பேசிடுவான்
மானிடம் பெற்றபேறு மா
மாமனிதன் என்பதற்கு மாற்றுக் குறையாமல்
ராமன் இருந்தானே ரம்யமாய் – பூமனம்
கொண்டே அவனியைக் கொற்றக் குடையாலே
தொண்டென ஆண்டனன் தான்
தானவன் ஆயினும் தங்கமனம் கொண்டுதான்
வானவர் துன்பமதை வாகாக – ஆனபடி
தீர்த்தனன் தென்னிலங்கை வேந்தனாம் ராவணனைத்
தீர்த்தனன் நெஞ்செல்லாம் தேன்
தேனா யினித்திடும் தீர்க்கமாய் வாழ்வதுவும்
வானாய்; வளியாக; வண்ணநிறை மண்ணாக
நின்றருள் செய்திடும் நித்தியன் ராமனை
சென்றுளம் கொண்டுவிட்டால் சீர்
சீரிளம் பெண்ணான சீதை மணாளனவன்
பாரில் அனைவரையும் பற்றுபவன் – நீரில்
கலந்திருக்கும் மோரதுவும் பானகமும் காட்ட
நலம்பெருகும் நம்வாழ்வில் ஆம்
ஆமென்று சொல்லி அழகாய் இராமனையே
தாமென்று கேட்டால் தரணியையே – பூமென்மைப்
புன்னகையில் நன்றாய்ப் பொலிந்தே அருளிடுவான்
அன்பில் கடல்போல் அவன்
அவன்நாமம் சொல்ல அனுமனும் தாவி
உவந்தே இடத்தில் உலாவருவான் கூடவே
ஏற்றமுடன் ராமனென இங்கங்கும் ஆடியே
தேற்றுவான் நம்மை தெளிவு
தெளிவாய் இருந்தங்கே சீதையுடன் சென்று
களிப்புடன் காட்டினில் தங்கி – வளிபோல
நல்மனமாய் நல்லறத்தை வாழ்ந்த இராமனுக்கே
அல்வந்து சூழ்ந்ததே அங்கு
அங்கடர் காட்டினில் ஆரணங்கு கேட்டிட
பொங்கியே மான்பின்னால் போயினன் – மங்காத
பொன்னை இழந்தனன்; போரிட்டு ராவணன்
மன்னுயிர் கொண்டரா மன்
ராமன் பெயரினையே ராப்பகலாய் உச்சரித்தால்
பூமனம் கொண்டிடுவீர் பூவுலகில் – நாமணத்து
நல்லிதயம் நல்வாழ்க்கை நல்லபல எல்லாமே
பல்விதமாய்ப் பெருகிடும் பார்.