Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

by Iyappan Krishnan
0 comments
This entry is part 48 of 48 in the series அசுரவதம்

“நில்… நில்… யாரடா நீ…”

இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன்.

மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம் தைரியமூட்டியது.

முன்னால், இருள் படிந்த மாபெரும் கரிய மலை ஒன்று உயிர் பெற்று எழுந்தது போல ஒரு பெண் நின்றிருந்தாள். அனுமன் அவளை நன்றாக உற்று கவனித்தான்.

அவளது கண்கள் எரியும் கொள்ளிகளைப் போலச் சிவந்து இருளைக் கிழித்தன. காலனைப் போல தன் கையில் ஒரு பெரும் சூலத்தை ஏந்தியிருந்தாள். அவள் மூச்சுக்காற்றில் தென்கடலின் அலைகள் திசைமாறிப் பாறைகளில் மோதிச் சிதறின. மகரமீன்கள் அவள் இருக்கும் திசை நோக்கி வரவர அச்சமுற்று கடலின் அடியில் சென்று மறைந்தன.

“என் அனுமதியின்றி ஒரு சிறு காற்று கூட இந்த லங்காபுரியின் உள்ளே நுழைய முடியாது. யார் நீ? எந்தத் தைரியத்தில் என் கோட்டையை நெருங்கினாய்?” என்று பேரரவம் எழுப்பினாள் லங்கிணி. அவளுக்கு ஒத்தூதுவது போல பொங்கி எழுந்து ஆராவாரம் செய்தன கடலலைகள்.

அனுமன் அவளை நிதானமாக அளவிட்டான். இதுவரை பார்த்த அரக்கிகளின் சாயல் உருவத்தில் இருந்தாலும், அவளின் தோற்றமும் இதுவரை யாரும் வீழ்த்த முடியாதவள் என்ற அகங்காரத்தின் எண்ணமே அவளிடம் அதிகமாக இருப்பதை அவனது கூர்மையான அறிவு உடனே உணர்ந்தது.

அவளிடம் அரக்கியின் தன்மை இருந்தாலும் அவள் அருகில் வரும் போது அனுமனுக்கு முதல் முதலாக சுரசை தன்னை அணுகியபோது உண்டான மெல்லிய தாய்மையின் உணர்வே அவனுக்கு இப்போதும் உண்டானது.

எனவே பணிவுடன் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

“தாயே, அடியேன் ராம தூதன். அன்னை சீதையைக் காண வந்துள்ளேன். தயைகூர்ந்து எனக்கு வழி விடவேண்டுகிறேன்” என்றான்.

“ராமனா? யாரவன்? மானிடனா? தேவனா? தேவர்களின், மானிடர்களின் பெயரைக் கேட்டு அஞ்சும் கோழையல்ல நான். உன்னை என் ஒரு கையால் நசுக்கி, அந்தத் தென்கடலில் வீசுகிறேன் பார்,” என்று வஞ்சகமாகச் சிரித்தபடி தன் சூலத்தை ஓங்கிக்கொண்டு அனுமனை நோக்கிப் பாய்ந்தாள் இலங்கிணி.

அனுமன் சிரித்துக்கொண்டே ஒதுங்கினான்.

“தாயே, மன்னிக்க வேண்டும். உங்களிடம் போரிட மனம் ஒப்பவில்லை. என் வேலையைச் செய்ய விடுங்கள்” என்று ஒதுங்கினான்.

அனுமன், அவளைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால் அவளது அனுமதி இல்லாமல் இலங்கைக்குள் நுழைவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தான்.

“மெச்சினேன் வானரமே மெச்சினேன். உன் சாதுரியமான பேச்சும், பணிவும் கொண்ட ஒருவனை இப்போதுதான் பார்க்கிறேன். இருப்பினும் என்னைத் தாண்டி நீ செல்வது இயலாது. இலங்கையின் காவல் தெய்வம் நான். என்னை வென்றாலன்றி உன் பயணம் தொடராது” என்றாள் தன் கை ஆயுதத்தை நீட்டி அவனை மறித்தபடி.

அனுமன் வணங்கியபடி கேட்டான்.

“நான் உங்களைத் தாண்டிச் செல்ல, வெல்ல வேண்டுமெனில் ஒரு விண்ணப்பம் உண்டு…” என்றான்.

“உன் விண்ணப்பம் அறிவேன். உன் உயிரைப் பிச்சை கேட்கிறாய், கொடுத்துவிட்டேன். என்னை அன்னை என அழைத்துவிட்டாய், மன்னிக்கிறேன். திரும்பிச்செல்.”

“அன்னையே, என் விண்ணப்பம் உங்களை வெல்வது. நான் ஓங்கி ஒரு குத்து குத்துவேன். அதைத் தாங்கி நீங்கள் நின்றால், நான் திரும்பிச் செல்கிறேன்” என்றான்.

“உன் மீது கோபத்தை விட ஆச்சரியமே பொங்குகிறது வானரமே… ம்ம்… உன் விண்ணப்பம் ஏற்கப்பட்டது” என்றாள் இலங்கிணி.

அனுமனின் உதடுகள் தானாகவே “இராம இராம” என உச்சரிக்கத் தொடங்கியது. அவன் தன் உடலின் மொத்த விசையையும் வலது கரத்தில் குவித்து, அவளது வயிற்றில் ஒரு பலமான குத்து விட்டான்.

அந்த ஒற்றைக் குத்து, அண்டம் பிளக்கும் இடியென அவள் மீது இறங்கியது. இலங்கிணியின் பிரம்மாண்டமான உடல் காற்றில் தூக்கி வீசப்பட்டு, மாபெரும் கோட்டைச் சுவரில் மோதிச் சரிந்தது. அவளது வாயிலிருந்து உதிரம் பீறிட்டது. நரம்புகள் அறுபட்டு, எலும்புகள் நொறுங்கும் மரண வலி அவளைச் சுருட்டிப் போட்டது.

அந்த வலியின் உச்சத்தில், இலங்கிணியின் மனதில் பழைய ஞாபகம் மின்னலென வெட்டியது. பல யுகங்களுக்கு முன் பிரம்மா அவளுக்கு அளித்த வரம் அது.

“என்றைக்கு ஒரு வானரத்தின் கையால் நீ அடிபட்டு வீழ்கிறாயோ, அன்றோடு இலங்கையின் காவல் அழிகிறது என்று அர்த்தம். அரக்கர் குலத்தின் அழிவு அக்கணமே தொடங்கிவிடும்.”

குருதி வழியும் முகத்துடன் தள்ளாடி எழுந்து நின்ற லங்கிணி, தன் கைகளைக் கூப்பினாள். அவளது அகங்காரம் சுக்குநூறாக உடைந்திருந்தது.

“வானர வீரனே! நீ சாதாரணக் குரங்கல்ல. தர்மத்தின் வடிவம். பிரம்மனின் வாக்கு இன்று பலித்துவிட்டது. இலங்கையின் அழிவு தொடங்கிவிட்டது. என் காவல் முடிந்தது. நீ உள்ளே செல்லலாம்,” என்று கூறி மௌனமாக விலகி நின்றாள்.

“அன்னையே, உங்களின் முகத்தில் அசுரத் தன்மையை மீறிய தெய்வ ஒளி என்னால் காண முடிகிறது. தாங்கள் யார்?” என்று வினவினான் அனுமன்.

“மகனே, நான் முன்காலத்தில் பிரம்மனின் மாளிகைக் காவல் தெய்வம். அகங்காரம் கொண்டு நடந்ததால் என்னை பிரம்மன் சபித்து இலங்கைக் காவலில் வைத்துவிட்டார். நான் திருடர்களையும், அத்துமீறி இங்கே நுழைபவர்களையும் உணவாகக் கொள்ள வேண்டும் என்பது கட்டளை.”

அனுமன் சிரித்தான்.

“அப்படியானால், நீங்கள் எப்போதோ கடமை தவறிவிட்டீர்கள் அன்னையே” என்றான்.

“என் கடமையை நான் என்றும் சரிவரவே செய்தேன். வானரத்தின் கையால் அடிபடும் நாளில் என் விமோசனம்… அது நடந்துவிட்டது இன்று. கடமை தவறாதவள் நான்” என்றாள் பெருமை முகத்தில் ஒளிவீச. அவள் அரக்க உருவம் மறையத் தொடங்கி மெல்ல மெல்ல தேவப் பெண்ணாக மாறத் தொடங்கி இருந்தாள்.

“இல்லை அன்னையே, கள்வர்களை உணவாகக் கொள்பவள் நீ என்றால், எப்படி அன்னை சீதையைத் திருடிய இராவணன் தப்பித்தான்?” என்று வினவினான்.

“உன் வாக்கின் வன்மை என்னை வியக்க வைக்கிறது மகனே. உன் பயணம் வெற்றி அடையும். என் ஆசிகள்” என்று அவனை வாழ்த்தியபடி அவள் தேவப் பெண்ணாக வானுலகம் சென்றாள்.

புறவயமான இலங்கையின் முதல் அரண் தகர்க்கப்பட்டுவிட்டது. அனுமன் ராமநாமத்தை உச்சரித்தபடி, அந்த மாய நகரத்திற்குள் தன் அடியை எடுத்து வைத்தான்.

அதே நேரம், அரண்மனையின் உட்புறம், இராவணனின் தனி அறை.

உடலைக் குளிர்விக்கும் சந்திரகாந்தக் கற்களாலும், தங்கத்தாலும் இழைக்கப்பட்ட அந்த அறைக்குள் ஒரு பெரும் எரிமலை குமுறிக்கொண்டிருந்தது.

முக்காலத்தையும் வென்றவன், கயிலை மலையையே அசைத்துப் பார்த்த மாவீரன் இராவணன், இப்போது தன் சொந்த அகப்போராட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தான்.

அசோகவனத்தில், அந்த ஆதரவற்றப் பெண்ணின் காலடியில் தன் அகங்காரம் அழிந்து, ஒரு கணம் தான் மண்டியிட்ட அந்த நினைவு அவனைச் சுட்டெரித்தது.

அவனது வீரம், அவனது தவம், அவனது சிவபக்தி அனைத்தும் சீதையின் அந்த ஒற்றைப் பார்வையின் முன் தூசியெனப் பறந்துவிட்டதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. மதுக்கோப்பைகளை அடுத்தடுத்துக் காலி செய்தாலும், அவனது உள்ளத்தின் தாகமும், அவமானத்தின் தீயும் அடங்கவில்லை.

அறையின் கதவுகள் மெல்லத் திறந்தன.

“யாரது… என் அனுமதியின்றி உள்ளே நுழைய என்ன துணிச்சல்?” என இரைந்தான்.

மண்டோதரி உள்ளே நுழைந்தாள். எப்போதுமில்லாத ஒரு தீர்க்கம் அவளது கண்களில் இருந்தது. பல நாள் தயக்கங்களை, பல யுகங்களாகப் பூட்டி வைத்திருந்த ரகசியத்தை இன்று உடைத்தே தீருவது என்ற உறுதியுடன் அவள் அடியெடுத்து வைத்தாள்.

“சுவாமி…” என்றாள் மெல்லிய, ஆனால் நடுக்கமில்லாத குரலில்.

“ஓ நீயா? என்ன வேண்டும் மண்டோதரி? தனிமையில் இருக்கிறேன் என்று உனக்குத் தெரியாதா?” இராவணனின் குரலில் எரிச்சல் ததும்பியது. மதுவின் போதையை விட அவமானமும் அதனால் உண்டான குற்றவுணர்ச்சியின் போதையுமே அவனை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது.

“இது தனிமை இல்லை சுவாமி… நடந்ததை நான் அறிவேன்” என்றாள் தலை குனிந்தபடி.

“என்ன அறிவாய்… என்ன நடந்தது?” என்றான் அவன் கண்களில் நெருப்பு துளிர்க்க.

“அடியேன் மன்றாடுகிறேன், நீங்கள் தர்மத்திலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டீர்கள். அந்தப் பெண்ணை விட்டுவிடுங்கள். அவளை மீண்டும் அவள் கணவனிடம் திருப்பி அனுப்பிவிடுங்கள். அதுவே இலங்கைக்கு நலம்,” என்றாள் மண்டோதரி.

இராவணன் கோபத்துடன் வெடித்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அந்த அறை முழுவதும் இருளென எதிரொலித்தது.

“யார் காட்டில் திரியும் அந்தச் சாதாரண மனிதனைக் கண்டா நான் அஞ்ச வேண்டும்? அவனது அம்புகளுக்கு இராவணனின் மார்பைப் பிளக்கும் வல்லமை உண்டு என நினைக்கிறாயா?”

மண்டோதரி தொடர்ந்தாள்.

“நான் அவன் வில்லைக் கண்டு அஞ்சவில்லை. நீங்கள் கொண்டு வந்து வைத்திருக்கும் பெண்ணின் கற்பைக் கண்டு அஞ்சுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் செய்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் பாவத்தைக் கண்டு அஞ்சுகிறேன்,” என்றாள் மண்டோதரி.

அவளது வார்த்தைகளில் இருந்த கூர்மை இராவணனை ஒரு கணம் நிதானிக்கச் செய்தது.

“என்ன உளறுகிறாய்?”

“நான் உளறவில்லை. உலகத்தின் பார்வையில் மறைக்கப்பட்ட உண்மையைச் சொல்கிறேன். அந்தப் பெண்… அசோகவனத்தில் நீங்கள் சிறைவைத்திருக்கும் அந்தச் சீதை… அவள் யார் தெரியுமா?”

தொண்டையை அடைத்த மாபெரும் துயரத்தை முழுப் பலத்துடன் விழுங்கிவிட்டு, கண்களில் நீர் வழிய மண்டோதரி சொன்னாள்.

“யார் அவள்… சொல்” என்றான் கோபத்துடன்.

அவள் பதில் சொன்ன அடுத்த கணம் அந்த அறையே இடிந்து விழும்படி கத்தினான் இராவணன்:

“மண்டோதரீ….”

“ஆம், அவள் என் மகள்! நம் ரத்தம்! என் கருவறையில் உதித்த குழந்தை!”

அறைக்குள் ஒரு மயான அமைதி நிலவியது. காற்றில் அசைந்த தீபங்கள் கூட ஒரு கணம் உறைந்து நின்றன. இராவணன் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், அவனது பத்துத் தலைகளுக்குள்ளும் மூளை நரம்புகள் அறுந்து ரத்தம் கசிவது போல் ஒரு மாபெரும் பேரதிர்ச்சி நிகழ்ந்துகொண்டிருந்தது.

அவன் கை உடைவாளைப் பற்றியிருந்தது.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.

Author

You may also like

Leave a Comment