Home கவிதைகட் ஆஃப் – விலகிச் செல்லும் அடிவானம்

கட் ஆஃப் – விலகிச் செல்லும் அடிவானம்

by Ramalakshmi Rajan
0 comments

தேர்வுக் காலம்
கிளம்புகிறார்கள் இளைஞர்கள்
கோப்புகளைச் சுமந்தபடி
அடையாள அட்டைகள் தொங்க
அனுமதிச் சீட்டுகளுடன்
சதவீதங்களை கணக்கிடத் தொடங்கிவிட்ட
மொட்டவிழாக் கனவுகளுடன்

வருடக்கணக்கில்
தங்கள் வாழ்க்கையை அளந்திருக்கிறார்கள்
பருவங்களால் நட்புகளால் அல்ல
தங்களை மாற்றிய புத்தகங்களால் அல்ல
ஜன்னல் வழியாக மழையைப் பார்த்த
மாலைப் பொழுதுகளால் அல்ல—
மதிப்பெண்களால் மாதிரித் தேர்வுகளால்
தரவரிசைகளால் வெட்டுப்புள்ளிகளால்
ஒரே ஒரு கவனக்குறைவான விடையை
கொண்டாட்டத்திற்கும் நிசப்தத்திற்கும்
இடையிலான வேறுபாடாக மாற்றக்கூடிய
அச்சமூட்டும் கணிதத்தால்

புயலைத் தடுத்து நிறுத்த முயலும்
பழைய மரங்களைப் போல்
பின்னால் நிற்கிறார்கள் பெற்றோர்
ஊக்கம் அளித்தபடி
சொந்த பயங்களையும் சுமந்தபடி

ஆசிரியர்கள் முயற்சியைப் பற்றி
பயிற்சியாளர்கள் தன்னம்பிக்கையைப் பற்றி
உறவினர்கள் தேர்வு முடிவுகளைப் பற்றி
விடாமல் பேசுகிறார்கள்
ஒரு இளம் உயிரானது
அச்சிடப்படக் காத்திருக்கும்
ஓர் அறிக்கைத்தாள் என்பதைப் போல

உலகமோ புதிய புதிய வாயில்களை
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது
ஒரு தேர்வு இன்னொன்றைத் திறக்கிறது
ஒரு தரவரிசை மற்றொன்றைக் கோருகிறது
இலக்கின் எல்லைக்கோட்டை
அடைந்துவிட்டதாக எண்ணும் போதெல்லாம்
அடிவானத்தைப் போல் அது
இன்னும் சற்று விலகிச் சென்றுவிடுகிறது

ஆகாயம் கூட தன் நிறங்களை
அழகழகாக மாற்றிக் கொள்வதை
உணரத் தவறியவர்களாய்
சூரியோதயங்களையும் அஸ்தமனங்களையும்
காண்பதையே நிறுத்தி விடுகிறார்கள் சிலர்

தோல்வியின் வலியைவிட
பிறருடைய எதிர்பார்ப்புகளை
பொய்யாக்கி விடுவோமோ எனும் வலி
அதிகமானது என்பதை
மெல்லப் புரிந்துகொள்கிறார்கள் சிலர்

முடிவுகள் வெளியாகையில்
உரக்கக் கொண்டாடுகிறார்கள் சிலர்
மென்மையான புன்னகைக்குள்
உணர்வுகளை மறைக்கிறார்கள் பலர்
எண்ணற்ற மற்றவர்கள்—
யாருமற்ற தனியறைக்குள்
மறைந்து விடுகிறார்கள்
தங்களது முழுச் சிறுபிராயமும்
வரையறுக்கப்படும் தருணத்தில்
ஒரு ஒற்றை எண்
எவ்வளவு கனமாக மாறுகிறது என்பதை
தமக்குள்ளேயே புதைத்தபடி.

Author

  • Ramalakshmi Rajan

    ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment