Home கட்டுரைஎண்ணத்தை எழுதுகிறேன் – 1

புறமென்னும் பாவப் பிழைப்பு.

என்னுடைய ஒரு கவிதை கீழே..

யாருடைய கண்களாலோ
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
யாருடைய சொற்களாலோ
உன்னை விவரித்துக்கொண்டிருந்தேன்
சூழலின் கரங்கள் அசைவதற்கேற்ப
உன்னை வரைந்துகொண்டிருந்தேன்
இதன் பிறகும்..
நீதான் இதுவென்று
நிரூபிக்கத் துடிக்கிறேன்
நானும் வரைந்திராத
உன் சுயமுமில்லாத
ஒரு சித்திரத்தை கைக் கொண்டு

உறவினர்கள்தாம். நண்பர்கள்தாம். எனினும் ஒரு காலக் கட்டத்தில் அவர்களின் நடுவே அன்பின் நன்னீரில் படரும் பார்த்தீனியப் பாசியைப் போல வெறுப்பு படரத் தொடங்குகிறது. கொடுக்கல் வாங்கலில் குறையின்றி இருந்தாலும் எப்போதோ எங்கேயோ யாரிடமோ சொன்ன ஒரு சொல் அந்தக் கசப்பின் வித்தாக இருப்பதை ஆய்ந்தால் உணரலாம்.

மனிதர்கள் எங்கேயும் எப்போதும் யாரைப் பற்றியேனும் புறம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் விதிவிலக்கு மிகமிக அரிது அல்லது யாருமில்லை. உண்மையில் இந்தப் புறம் தான் தனிமனிதர்களுக்கிடைப்பட்ட பல நட்பு/உறவு முறிவுக்குக் காரணமாக இருக்கிறது. ஒரு மனிதரைப் பற்றி, அவர் விரும்பாத, அவரைப் பற்றிய செய்தியை அவரில்லாத போது பிறரிடம் பேசுவது தான் புறம்பேசுவது ஆகும். நட்புறவுகள், குடும்ப உறவுகள் என்று பலவும் இதனால் பெரும் பாதிப்படைகின்றன. புறம் பேசுவதன் வாயிலாக ஒருவரைப் பற்றி வரையப்படும் சித்திரங்கள் உண்மைக்கு அப்பால் மிகையாகவோ, குறையாகவோ இருக்கும்.

ஒருவரிடம் இருக்கும் குணம் அல்லது செயல் நல்லதாக இல்லாத போது, அதைப் பற்றி இன்னொருவரிடம் வலிந்து சொல்லத் தேவையில்லை. ஏனெனில் பேசினால் நல்லதைப் பேசுவோம்; இல்லையேல் வாய் மூடி மெளனமாக இருப்போம் என்பதே நல்லோர் நிலை. ஆயினும், அந்தத் தீய இயல்பு அல்லது செயல், சமூகத்தையோ அல்லது பிறரையோ பாதிப்பதாக அமையும் பட்சத்தில் அது பற்றி உரியவர்களிடம் சொல்லத் தான் வேண்டும்.

காட்டாக, ஒருவர் குடிபோதையில் வீதியில் ‘ஆட்டம்’ போடுகிறார் என்றால், அதனால் பிறருக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அந்தச் சிக்கலைத் தீர்க்கும் வாய்ப்புள்ள அதிகாரிகள் அல்லது அதற்கு நடவடிக்கை எடுக்கும் வலிமையுள்ளோரிடம் சொல்வது புறம் ஆகாது. சமூகக் கேட்டைத் தடுக்கும் நற்செயலே ஆகும். போலவே, அந்தக் குடிகாரர் வீதியில் ஆடாமல் வீட்டுக்குள் அடங்கினாலும் கூட, அவருக்கு மணம் பேச வருபவர்கள் வந்து விசாரிக்கும் போது, அவர் குடிகாரர் என்ற உண்மையைச் சொல்வது புறம் ஆகாது. ஆனால் தொடர்பில்லாத பிறரிடம் சொல்வது புறம் ஆகி விடும்.

பலருக்கும் புறம் பேசுவது அவ்வளவு உருசியானது. வீட்டுக்கு வீடு திண்ணைகள் இருந்த காலம் மாறி மின்னணுத் திண்ணைகள் (சமூக ஊடகங்கள் செயலிகள்) மலிந்திருக்கும் இந்தக் காலத்திலும் யாரையேனும் ஒருவரைப் பற்றி பேசுவதில் இன்பம் காண்கிறோம். இதில் அரசியல் தலைவர்களைப் பற்றி, அவர்கள் பொது சமூகத்திற்கும், மக்களுக்கும் கடமைப் பட்டிருக்கிற பொறுப்பில் ஏற்படும் / செய்யும் தப்புத் தவறுகளைப் பேசுவதோ விமர்சிப்பதோ புறம் ஆகாது எனினும் மக்களைப் பாதிக்காத அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுவது புறம் ஆகிவிடும்.

இணையத்தில் அறிமுகமான அந்த அன்பர் தனது ஆவேசப் பதிவுகளால் கவனம் ஈர்ப்பவர். ஒருமுறை, அவர் சார்ந்த சமுதாயப் பெண்மணி ஒருவர் தனது திரைமோகத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தியதைப் பார்த்து, அன்பருக்கு அடக்க இயலாத ஆத்திரம். தனது பதிவொன்றில் அப்பெண்ணின் படத்துடன், அச்செயலைக் கடுமையாக விமர்சித்துக் குத்திக் கிழித்துவிட்டார். எனக்குப் புரிந்தது, அவர் தன் சமுதாயத்தார் மீது அதீத உரிமை எடுத்துக்கொள்கிறார் என்பதுதான்.

அவரிடம் கேட்டேன் : “தனிப்பட்ட ஒருவரின் செயலை, அது உங்களுக்கோ உங்கள் நெறிக்கோ உகந்ததாக இல்லாவிட்டாலும் கூட, அது பொது சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இல்லாத போது, அவர் பற்றிய நிந்தனைப் பதிவுகளை இட உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? – இது எலெக்ட்ரானிக் புறம் இல்லையா?

“அவர் என் சமுதாய சகோதரி அல்லவா; அவர் செய்ததைத் தானே சுட்டினேன். அதுவும் அவரைத் திருத்தும் நோக்கில் தான் பதிவிட்டேன்” என்றார் அவர்

“ஒருவர் செய்த குற்றத்தைப் பிறரிடம் சொல்வது தான் புறம். (செய்யாததைச் சொன்னால் அது அவதூறு, இன்னும் மோசம்), அதிருக்கட்டும், ஒருவேளை, உண்மையிலேயே உங்கள் சகோதரியாக இருந்தால் இப்படித்தான் பொதுவெளியில் அம்பலமாக்கிப் பதிவிடுவீர்களா?” என்று கேட்டேன்

” என் சகோதரி அப்படி இல்லை; அப்படி இருந்தாலும் உடனே பெற்றோரிடம் சொல்லித் திருத்தியிருப்பேன்” என்றார் அவர்.

“இங்கேயும் அதைத் தானே செய்ய வேண்டும்; அவரைத் திருத்தும் உரிமை உடையவர்களிடம் தானே சொல்ல வேண்டும். அது தவறாகவே இருந்தாலும் அந்தப் பெண்ணின் தவறை எடுத்துப் பொதுவெளியில் பந்தி வைப்பது இன்னும் பெரிய தவறு அல்லவா? உங்கள் கண்டிப்பும் கூட, திருத்தும் வகையில் அல்லாமல் இன்னும் அவருக்கு வீம்பு உண்டாகும் வகையில் அல்லவா இருக்கிறது” என்று தனித் தொடர்பில் சுட்டினேன். ஏற்றுக்கொண்டார்.

இன்னொன்றும் சொன்னேன்: “ஒருவரைப் பற்றி அனுமதியின்றி மோசமாக எழுதினால், அதை எதிர்த்து மானநட்ட வழக்கு தொடுக்கும் உரிமையும் அவருக்கு உண்டு”

அதன் பிறகு அம்மாதிரியான அவரின் பதிவுகள் கண்ணில் படுவதில்லை. திருந்தினாரா? அல்லது என்னிடமிருந்து தன்பதிவுகளைத்(Block) தடுத்துத் திருப்பிக் கொண்டாரா என்பது தெரியவில்லை.

உண்மையில் குறிப்பிட்ட அச்செயலுக்கு (திரை மோகத்திற்கு) எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணுவதில் தவறில்லை. ஆனால் எவரின் பெயரோ படமோ குறிக்காமல் பொதுவாக எழுத வேண்டும். பொதுவாக, அதிக விருப்பக் குறிகள் பெறும் நோக்கிலேயே இத்தகைய பதிவுகள் எழுதப்படுகின்றன.

புறங்கூறலின் இழிவை எல்லா நெறிகளும் சுட்டிக் காட்டுகின்றன.

‘புறங் கூறல் தீய கர்மா; ஆன்மிக ஆற்றலைக் குறைத்துவிடும்’ என்கிறது ஹிந்துமதம்.

புறம் பேசுவது பெரும்பெரும் பாவங்களில் ஒன்று என்கிறது இஸ்லாம். “இறந்த சகோதரனின் இறைச்சியை உண்ணுவதைப் போன்று மிகவும் வெறுப்புக்குரியது”.

புறங்கூறல் கொலை கொள்ளை அவதூறுக்கு நிகரான பாவம் என்கிறது கிறிஸ்தவம்.

ஒருவன் அறத்தைச் சொல்லாதவனாக, அறமல்லாதவற்றையே செய்தாலும் புறங்கூறாதவனாக இருப்பது அவனுக்கு நல்லது என்கிறது திருக்குறள்.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றால் இனிது. (குறள் 181)

இன்னும் சொன்னால்…

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கந் தரும் (குறள் 183)

பொருள்: ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிப் புறங்கூறி, பொய்யாக நடந்து உயிர் வாழ்வதை விட இறந்துவிடுவது அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும். ஆம்.

(தொடரும்)

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

Leave a Comment