வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இல்லா இடையை இகழ்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.
உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:
எல்லாம் இருந்தும் எனதருமை ராமாவுன்
இல்லாளாம் சீதைக்கு என்றும் குறையுண்டு
பொல்லாதப் பேரழகைப் போற்றும் அவளுடைய
இல்லா இடையை இகழ்
இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்..
ஜெயந்தி நாராயணன்
பொல்லா இலக்குவன் பொங்கும் சினத்துடன்
இல்லாது செய்தானென் நாசியை . உன்னுடை
இல்லாள் அழகியென்று எண்ணா(து) அவளுடைய
இல்லா இடையை இகழ்
மாலா மாதவன்
நில்லங்கே ராமா நிகர்யார் எனக்கிங்கு
மெல்லியளாள் சீதை மெலிவைப்பார் – வல்லபெரும்
சொல்லால் வடிக்கும் கவிதைக் கணிசேர
இல்லா இடையை இகழ்
சின்னக்கண்ணன்
பேதை உளம்கொண்ட பேரரசா என் ராமா
சீதை பெயர்கேட்டுத் தேம்புவையோ – மாதைத்தான்
வில்புருவம் மென்னுதடு இன்னபிற சொன்னாலும்
இல்லா இடையை இகழ்
நளினி சுந்தர்ராஜன்
காதல் தனை மறந்து நீயும்
காரியத்தில் கண்ணாய் நிற்கிறாய்
பொங்கி எழும் கோபத்தாலே
புன்னகையை இறுக்கி வைக்கிறேன்!
ஊடலென்னும் கனலை மூட்டி
உன்னை வேகச் செய்வேன் நான்
கூடல் வேண்டி என்னிடம் நீயும்
ஏங்கி நிற்பதைக் காண வேண்டும்!
பேசவில்லை தானெனினும்
பாடும் நெஞ்சம் உன் பேர் சொல்லும்
மாசில்லா இப் பூவையின் அன்பை
மறந்து நீயும் இருக்கலாமோ?
ஆசைத் தீயை மூட்டிவிட்டு
பேதை என்னை வாட்டினால்
நெஞ்சில் இல்லை காதல் என்று
இல்லாத ஒன்றை இகழ்!
கண்மணி பாண்டியன்
கனிந்து சிவந்த இதழ்
சிரித்து பேசும் தமிழ்
பொங்கும் வனப்பை புகழ்
இல்லாத இடையை இகழ்
பவளமணி பிரகாசம்
வாய்த்த வரங்களை எண்ணி மகிழ்
வானுயர வளர வேண்டும் புகழ்
வாசத்துடன் விரியுது பூவின் இதழ்
விருப்பம் இல்லா ஒன்றை இகழ்
ஹேமா செந்தில்
உடலைப் பேண
கடலாய்ப் புழுங்கி
கருத்துடன் பயிற்சி செய்தும்
பெருத்த இடை மெலிய மறுக்கின்
பொறாமையில் புழுங்கும் மனம்
சிறுத்த மெல்லிடையாளைக் காணின்
இல்லா இடையை இகழ்.
உஷா கண்ணன்
கற்சிலை வடிக்க கேட்டேன் உளியை
பொற்சிலை வடிக்க உலோகம் தந்தாய்
உருக்கிய உலோகத்தில் வடித்த சிலையில்.
இல்லா இடையை இகழ்
ருக்மணி வெங்கட்ராமன்
மெல்லியளாய் மேனி அழகுடன் திகழ்ந்தவள்
மென்மையான அடிகள் நோக நடந்தவள்
காலம் தந்தது அவளுக்குத்
தாய்பட்டம்
காதலுடன் உருகி உடல் மாறியவள்
இன்று கண்டவர் இயம்பினர்
இல்லா இடையை இகழ்.
சுபாஷிணி ரமணன்
பல்லெல்லாம் மௌவலின் பூத்த அழகுதான்
சொல்லும் பிழிந்தநற் செங்கரும்பின் இன்சுவைதான்
வெல்லும் விழியாக வேல்கொண்ட மங்கையின்
இல்லா இடையை இகழ்
ஜாய் சத்தியா
மெல்லியள் மேனி
மிகயெழில் என்றுபல
சொல்லியுன் காதலியைத்
தூக்காதே–நல்லபடி
இல்லாத ஒன்றைநான்
இப்பொழுது கூறுகிறேன்
இல்லா இடையை இகழ்
ரேவதி வெங்கட்
எல்லா வுணர்வும் எழுந்த மகிழ்வதோ
அல்லா திழந்து அழிக்கும் துயரமோ
பொல்லா நிலையில் பொருந்துவர் கண்டவர்
இல்லா இடையை இகழ்
விஜி சம்பத்
மண்ணகழ்ந்தபோது ஜனகனின் பாசமிகு
பெண்ணாகினாள்!
கண்ணோடு கண்ணோக்க
ராமனின் நேசமிகு மனைவியானாள்!
வில்லாளன் இலக்குவனுக்கோ அன்பான அன்னையுமானாள்-
ஒல்லும் வகையெல்லாம் காருண்யம் காட்டும் மெல்லியளாளிடம்
இல்லாத ஒன்றை இகழ்.
வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.