- உருதுக்கவிதை உலகு – 1
- உருதுக்கவிதை உலகு – 2
- உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்
- உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’
- உருதுக் கவிதை உலகு – 5 மீர் தாகி மீர்
- உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி
- உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி
- உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்
- உருதுக் கவிதை உலகு – 9: குல்ஸார்
- உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி
- உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி
- உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி
- உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்
- உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி
- உருதுக் கவிதை உலகு: 15 – இப்ராகீம் ஸவுக்
- உருதுக் கவிதை உலகு: 16 – அஹமத் ஃபராஸ்
- உருதுக் கவிதை உலகு: 17 – ஜான் நிசார் அக்தர்
இருபதாம் நூற்றாண்டின் இந்திய உருதுக் கவிஞர்களில் ஜான் நிசார் அக்தருக்கு முக்கியமான ஓர் இடம் உள்ளது.
இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை, இயற்கை வளங்களை, மத நல்லிணக்கத்தை, சமூகச் சிந்தனையை, பன்முகத்தை, பண்டிகைகளைப் பாடுகின்ற உருதுக் கவிதைகளை ஆவணப்படுத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைத்தார். அந்தப் பொறுப்பு ஜான் நிசார் அக்தருக்குத் தரப்பட்டது. முன்னூறு ஆண்டுகால உருதுக் கவிதை வரலாற்றிலிருந்து இந்தியாவைப் பாடும் கவிதைகளை ஜான் நிசார் தொகுத்தார்.
நேருவின் காலத்தில் தொடங்கப்பட்ட பணி, 1970இல் இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் முடிவடைந்து, ‘ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்னும் தலைப்பில் இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலாக அது வெளியிடப்பட்டது. இந்த முக்கியமான பணியை முன்னின்று செய்ததால் ஜான் நிசார் அக்தர் இந்திய உருதுக் கவிதை வரலாற்றில் முக்கியமான ஓர் இடத்தைப் பெற்றார்.
ஜான் நிசார், கவிஞர் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய கொள்ளுத் தாத்தா ஃபஸ்லே ஹக் கைராபாதி மொகலாயர் காலத்தில் மீர்ஸா காலிபுடன் தொடர்பில் இருந்தவர். அப்பா முஸ்தர் கைராபாதியும் கவிஞர். அரபி, பாரசீகம், உருது என மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். பெரியப்பா பிஸ்மில் கைராபாதியும் கவிஞர். முன்னோர்களின் தடத்தில் ஜான் நிசாரும் கவிஞரானார். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி உருதுக் கவிஞர்களுள் ஒருவரும் பாடலாசிரியருமான ஜாவீத் அக்தர், ஜான் நிசார் அக்தரின் மகன்.
ஜான் நிசார், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் இளங்கலையும் முதுகலையும் முடித்த பின்னர், போபாலுக்குத் திரும்பி அங்கே குவாலியரில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் திரைப்பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகளைத் தேடி மும்பைக்குச் சென்றார்.
1949இல் மும்பைக்குச் சென்றவருக்கு முற்போக்கு எழுத்தாளர் அமைப்பினருடன் தொடர்பு கிடைத்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்த கைஃபி ஆஸ்மி, முல்க் ராஜ் ஆனந்த், இஸ்மத் சுக்தாய் போன்ற கவிஞர்கள், எழுத்தாளர்களுடன் தொடர்பு கிடைத்தது. கைஃபி ஆஸ்மியும் இஸ்மத் சுக்தாயும் இந்தித் திரைத் துறையில் இயங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் திரைப்பாடலாசிரியராக அவருக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. வாய்ப்புக்காக அவர் மும்பையில் இருந்த நாள்களில், போபாலில் குடும்பப் பொறுப்புகளை ஏற்றவர் அவருடைய மனைவி சஃபியா அக்தர்.
சஃபியா அக்தர் ஓர் ஆசிரியை, மதரசாவில் உருது மொழி கற்பித்த அவர் எழுத்தாளராகவும், விமர்சகராகவும் செயல்பட்டார். அவரும் கவிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சஃபியாவின் அண்ணன் அஸ்ரார்-உல்-ஹக் மஜாஸ் ஒரு கவிஞர். மொழிப்புலமையும், எழுத்தார்வமும், பின்னணியும் இருந்தும் சஃபியா தொழில்முறை எழுத்தாளராகத் தொடரவில்லை. வாழ்க்கையில் அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் அவரை எழுத்துப் பணியிலிருந்து விலக்கியே வைத்திருந்தன.
இருப்பினும், அவர் மும்பையில் இருந்த தன் கணவருக்கு எழுதிய கடிதங்கள் உருது இலக்கியத்தில் ஓர் இடத்தைப் பிடித்தன. சஃபியா அக்தர் தன்னுடைய கணவர் ஜான் நிசார் அக்தருக்கு எழுதிய கடிதங்கள் இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. பெருத்த சோகம் என்னவெனில், சஃபியாவின் மறைவுக்குப் பின் இவை புத்தகங்களாக வெளியாயின.
இறப்புக்குப் பின் தாமதமாகக் கிடைத்த அங்கீகாரம் என்றாலும், கடைசியில் தங்களுடைய தாயும் தனது அடையாளமும் உருது இலக்கியத்தில் கடிதங்களாக ஆவணமானதை நெகிழ்ச்சியுடன் அவருடைய மகன் சல்மான் அக்தர் குறிப்பிட்டிருக்கிறார். காதல் காவியங்களைப் போல ஜான் நிசார் – சஃபியா வாழ்க்கையும் எழுத்தும் கவிதையுமாகத் தொடர்ந்திருக்கிறது.
சஃபியாவின் மறைவுக்கு இரண்டு நாள்களுக்குப் பின்னர்தான் ஜான் நிசார் தன்னுடைய ஊருக்குச் செல்ல முடிகிறது. கல்லறையில் சஃபியா அடக்கம் செய்யப்பட்டதை,
// என் காதல் மட்டும் தனியாகக் கல்லறையில் இல்லை
என் துணையும் இம்மண்ணுக்குக் கீழ்தான் உறங்குகிறாள் //
// ஏ மேரே ப்யார் கா மத்ஃபான் ஹி நஹீன் ஹை தன்ஹா
ஏக் சாத்திபி தாஹ்-ஏ-காக் ஹயான் சோத்தி ஹை //
எனக் கவிதையாக எழுதினார்.
இது எழுபத்தாறு அடிகளைக் கொண்ட நெடுங்கவிதை. சஃபியாவின் இறப்புக்காக மும்பையிலிருந்து செல்லும்போது இதனை எழுதியிருக்கிறார்.
இந்தக் கவிதையின் தலைப்பு ‘காக்-ஏ-தில்’. இதனை ‘விருப்பத்தின் மிச்சங்கள்’ என்று கவிதையை உள்வாங்கியும், ‘இதயத்தின் சாம்பல்’ எனச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தும் புரிந்துகொள்ளலாம். அவருடைய கவிதைத் தொகுப்பு ஒன்றில் இக்கவிதை இடம்பெற்றது. அந்தக் கவிதைத் தொகுப்புக்கு ‘காக்-ஏ-தில்‘ என்றே பெயரிட்டார். இந்தத் தொகுப்புக்காக, ஆண்டு 1976இல் அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
சஃபியாவின் மறைவுக்குப் பின்னர் அவருடைய கடிதங்கள் புத்தகங்களாக வெளிவந்து அவருக்கு உருது இலக்கியத்தில் ஓர் இடத்தைத் தந்தன. ஜான் நிசாருக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்படுவதற்குச் சில நாள்கள் முன்னதாக, ஆகஸ்ட் 1976இல் ஜான் நிசார் அக்தரை மரணம் தழுவிக்கொண்டது. போலவே, அவருடைய மறைவுக்குப் பின்னர் அவருக்கு ஃபிலிம்ஃபேரின் சிறந்த பாடலாசிரியர் விருது பரிந்துரைக்கப்பட்டது. ‘நூரி’ திரைப்படத்திற்கு எழுதிய ‘ஆஜாரே ஓ மேரி தில்பர்’ பாடலுக்கு 1980இல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
கணவன் மனைவி இருவருக்கும் மறைவுக்குப் பின்பே அங்கீகாரம் கிடைத்தது; அது மகிழ்ச்சியும் வலியும் கலந்த ஒன்று.
ஜான் நிசார் அக்தருக்கு வாழ்க்கை தந்த வலிகள் அவருடைய கவிதைகளில் காதலும் சோகமுமாக வெளிப்பட்டன.
// இதயத்திலிருந்து
அனைத்து வலிகளையுமா துடைத்தெறிவது?
சில வலிகள்
இதயத்தில் அணிந்துகொள்வதற்காக //
// அப் ஏ பி நஹீன் டீக் கி ஹர் தர்த் மிட்டாதேன்
குச் தர்த் கலேஜேசே லகானே கேலியே //
// இந்த சஞ்சிகைகள்
இந்தப் புத்தகங்கள்
இப்படி அறிவை வாங்குவது
அனைத்தும்
ஒரு முகத்தை மறப்பதற்குதான் //
// ஏ இல்ம் கா சௌதா ஏ ரிசாலே ஏ கிதாபேன்
ஏக் ஷக்ஸ்கி யாதோன் கோ புஹ்லானே கேலியே //
தன்னுடைய வலிகள் அனைத்தையும் மறந்துவிட்டுப் புதிய நினைவுகளில் ஈடுபடுவதை அவர் விரும்பியதில்லை. வாழ்க்கையின் அனைத்து வலிகளையும் முற்றிலும் மறக்கக்கூடாது என்னும் பார்வை அவருக்கு இருந்தது. அவருடைய மகன் ஜாவீத் அக்தரின் பேட்டியின்படி ஜான் நிசார் கவிதைகளுக்காகவே வாழ்ந்திருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. எந்நேரமும் கவிதையில் மூழ்கியிருப்பதும், தன்னை மறந்த நிலையிலும் சொற்களுக்குள் தன்னைத் தொலைப்பதுமாக அவர் இருந்ததை ஜாவீத் உறுதிப்படுத்துகிறார்.
// கவிதையென்றால் என்னவென்று என்னிடம் கேள்
சொற்களில் தீயை மறைத்து வைப்பது கவிதை //
// ஹம்சே பூச்சோ கி கஜல் கியா கஜல் கி ஃபன் கியா
சந்த் லஃப்ஸோன் மேன் கோயி ஆக் சுப்பாத்தி ஜாயே //
முற்போக்காளர்கள் காதல் கவிதைகளிலும் தங்கள் இருப்பைப் பதிவு செய்திருக்கின்றனர். கைஃபி ஆஸ்மியின் காதல் கவிதைகள் அதனை உறுதிப்படுத்தும். ஜான் நிசாரும் நினைவில் நிரந்தர இடத்தைப் பிடிக்கும் காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார்.
// எனது கவிதைகள் உலகிற்குத்தான்
இருப்பினும்
இடையில் சில வரிகள்
அவள் வாசிக்க //
// அஷார் மேரே யூன்தோ ஸமானேகேலியே ஹைன்
குச் ஷேற் ஃபகத் உன்கோ சுனானேகேலியே ஹைன் //
சுறுசுறுப்பாக இயங்கும் மனிதனால் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. சூழலின் அழுத்தம், விருப்பத் தேர்வு, சாதிக்கும் கனவு என அதற்குப் பல காரணிகளைச் சொன்னாலும், முடிவு ஒன்றுதான்: அவர் பல பணிகளைச் செய்து முடித்தார்.
முன்னூறு ஆண்டு கால உருதுக் கவிதைகளைத் தொகுக்கும் பணி, மீனா குமாரி போன்ற முன்னணி நடிகையை வைத்துச் சொந்தமாகத் திரைப்படம் தயாரித்த பணி, தன்னுடைய முப்பத்தைந்து ஆண்டு காலக் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட பணி என முக்கியமான இம்மூன்று பணிகளையும் ஜான் நிசார் அக்தர் குறிப்பிட்ட காலகட்டத்தில் செய்து முடித்தார்.
இம்மூன்று பணிகளும் சாகித்திய அகாடமி விருதாக, திரைப்படத் தயாரிப்பாளராக, உருது மொழிக்கு ஓர் இலக்கிய வரலாற்று ஆவணத்தைத் தந்தவராக அவருக்கு நிலைத்த பெருமையைத் தந்தன.
// மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி // – கண்ணதாசன்
இந்தப் பாடலைப் போலவே ஜான் நிசார் ரஸியா சுல்தான் திரைப்படத்துக்கு ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அமைதியான இரவில் பாக்கியலட்சுமி திரைப்படத்தின் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடல் உருவாக்கக்கூடிய உணர்வுகளை ரஸியா சுல்தானின் ‘க்வாப் பன் கர் கோயி ஆயேகா தோ நீந்த் ஆயேகி’ பாடலும் உருவாக்கும்.
// கனவாக அவன் வந்தால் உறக்கம் வரும்
அவன் வந்து தாலாட்டினால் உறக்கம் வரும்
கனவாக அவன் வந்தால் //
// க்வாப் பன்கர் கோயி ஆயேகா தோ நீந்த் ஆயேகி
அப் வஹி ஆக்கே சுலாயேகா தோ நீந்த் ஆயேகி
க்வாப்பன் கர் கோயி ஆயேகா //
1979இல் நூரி என்னும் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. நடிகை பூனம் தில்லானுக்கும் நடிகர் ஃபரூக் ஷேக்கிற்கும் திருப்புமுனையாக அமைந்த நூரி, பாடகர் நித்தின் முகேஷுக்கும் நிலைத்த வெற்றியைத் தந்தது.
// ஆஜாரே ஓ மேரி தில்பர் ஆஜா
தில்கி ப்யாஸ் புஜாரே //
// வந்துவிடு என் காதலே! வா!
இதயத்தின் தாகம் தணித்துவிடு //
என்னும் பாடலின் இசையும் வரிகளும் சூழலும் குரலும் கலந்த விதம் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனதின் மெல்லுணர்வுகளைத் தூண்டிச் சில நிமிடங்கள் கனவில் ஆழ்த்தும். இதனை எழுதியவர் ஜான் நிசார் அக்தர். அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான ஃபிலிம்ஃபேர் விருது ஜான் நிசார் அக்தருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது.
நூரியின் ‘ஆஜாரே ஓ மேரி தில்பர் ஆஜா‘ பாடலைக் கேட்கும்போதெல்லாம், ஜான் நிசார் அக்தரின் காதல் வாழ்க்கையும், மறைவுக்குப் பின் அவர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் நினைவுக்கு வரும்.
(தொடரும்)