Home இதழ்கள்இதழ் 16உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்

உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்

0 comments

// இப்போது
அத்தர் பூசினாலும் மணமேது?
வியர்வையும் ரோஜாவாக மணத்த காலம்
காற்றாகிவிட்டது
//

// அப் இத்ர் பி மாலோ தோ தக்கல்லூஃப் கி பூ கஹான்
வோ தின் ஹவா ஹுவே ஜோ பசீனா குலாப் தா
//

மீர்ஸா காலிபின் சமகாலத்தவரான லாலா மாதவ்ராம் ஜவஹர், பகதூர் ஷா ஸஃபரின் கவிஞரவையில் முக்கியமான கவிஞராக இருந்தவர். பகதூர் ஷாவின் கவிஞரவையில் இஸ்லாமியர் நிறைந்திருக்க, அவர்களிடையே இந்துவாக அமர்ந்து அவையை அலங்கரித்தவர் என்னும் புகழ் லாலா மாதவ்ராமுக்கு உண்டு. புனைபெயர் சூட்டிக்கொள்ளும் மரபின் வழியில் தன்னுடைய இருபதாம் வயதில் மாணிக்கம் – ‘ஜவஹர்’ என்னும் புனைபெயரை ஏற்றார்.

லாலா மாதவ்ராம் ஜவஹர், ஃபரூக்காபாதில் (உத்தரப் பிரதேசம்) 1810-ஆம் ஆண்டு பிறந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தவர் எனக் குறிப்புகள் சொன்னாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானவை பதிவு செய்யப்படவில்லை. ஃபரூக்காபாதில் நடந்த கவியரங்கங்களால் ஈர்க்கப்பட்டு உருது மொழி பயின்று கவிதை இயற்றும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவர். தில்லி, ஆக்ரா, லக்னௌ நகரங்களுக்குச் சென்று சமகாலக் கவிஞர்களுடன் பழகி, அதன் வழியே உருதுக் கவிதை உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி, பகதூர் ஷா ஸஃபரின் கவிஞரவையில் இடம் பிடித்தார்.

1857, சிப்பாய்க் கலகம் என வெள்ளையரால் அழைக்கப்பட்டுப் பின்னர் முதல் விடுதலைப் போர் என இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களாலும் வரலாற்று ஆய்வாளர்களாலும் ‘இந்திய விடுதலைப் போர்’ என அழைக்கப்பட்ட அதன் பின்விளைவுகள் ஜவஹருக்கு பாதிப்பை உண்டாக்கின. முதல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜவஹர் எந்த அளவுக்கு நேரடியாகச் செயல்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் போரில் ஈடுபட்ட இந்தியர்களுக்கு அவர் ஆதரவு அளித்ததற்குப் பழிவாங்கும் முகமாக அவரது சொத்துகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்ததாக ‘பைமானா-ஏ-கஸல்‘ என்னும் நூல் பதிவு செய்துள்ளது.

முதல் இந்திய விடுதலைப் போர் இரண்டு கவிஞர்களின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறது. முதலாவதாக, ஜவஹரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஃபரூக்காபாதில் இருந்த அவருடைய பூர்வீக மாளிகையும் ஆங்கிலேய அரசால் கைப்பற்றப்பட்டது. மீர்ஸா காலிபின் வாழ்க்கையில் அது இன்னொரு வகையான மாற்றம். ஆட்சி மாற்றத்தால் காலிபின் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. அப்போது கடுமையான வறுமைச் சூழலில் காலிப் இருந்ததால் கல்கத்தாவுக்குச் சென்று ஆட்சியாளர்களிடம் உதவித்தொகை மறுபரிசீலனைக்கு விண்ணப்பித்தார். சமகாலக் கவிஞர்களாக மட்டும் பகதூர் ஷா ஸஃபரின் அவையில் இல்லாமல், ஆங்கிலேயரால் அலைக்கழிக்கப்பட்ட கவிஞர்களாகவும் மீர்ஸாவும் ஜவஹரும் இருந்தனர் என்பது வரலாறு.

// இரண்டே நாட்களில், அன்பே! அதிசயம் நிகழ்கிறது
நேற்று செதுக்கப்பட்ட சிலை, இன்று கடவுளாகிறது
//

// தோ ஹி தின்மே ஏ சனம் ஹோஷ்-ருபா ஹோத்தே ஹைன்
கல் கே தராஷே ஹுவே புத் ஆஜ் குதா ஹோத்தே ஹைன்
//

அரசவைக் குறிப்புகள், கலாசாரம், வரலாறு எனத் தனித்தனியாக ஜவஹர் எழுதிய கட்டுரை வடிவங்கள் பாரசீகத்திலும் 19-ஆம் நூற்றாண்டின் உருது வழக்கிலும் இருந்தன. அவை ‘இன்ஷா-ஏ-மாதோராம்‘ (மாதவ்ராம்) எனத் தொகுக்கப்பட்டு, 1845-ஆம் ஆண்டில் ஆவணமாக்கப்பட்டன. பின்னர் 1885-இல் அதிலிருந்து சில பக்கங்கள் பதிப்பிக்கப்பட்டன. உருதுவிலும் பாரசீகத்திலும் இருந்த குறிப்புகள் உருதுவில் மாற்றி எழுதப்பட்டுப் பதிப்பாயின. இருப்பினும் அன்றைய உருது வழக்கில் இருப்பதாலும், பின்னர் ஜவஹரின் கஜல்களிலும் கவிதைகளிலும் மொழி ஆர்வலர்கள் ஆர்வம் காட்டியதாலும், ‘இன்ஷா-ஏ-மாதோராம்’ பாதுகாக்கப்பட்ட ஆவணம் என்ற அளவில் பாட்னாவில் உள்ள குதா பக்ஷ் நூலகத்தில் இருக்கிறது. அதன் எண்ணிமப் பதிப்பினை (டிஜிட்டல் வடிவம்) இணையதளங்களில் பார்வையிடலாம்.

மத நல்லிணக்கத்தைப் பாடுவதில் காலிபைப் போலவே ஜவஹரும் இறைவன் ஒன்றெனும் நோக்கில் பாடியிருக்கிறார். பல இஸ்லாமியக் கவிஞர்களின் நோக்கம் அப்படித்தான் இருந்திருக்கிறது. கவிதையில் மார்க்க அறிஞர்களைக் கேள்வி கேட்கவும் அவர்கள் தவறியதில்லை. மதுச்சாலையும், மதுவருந்தும் நண்பனும், மதுக்கோப்பைகளும், மதுச்சாலை வீதியும் இடம்பெற்ற கவிதைகள் அனைத்தையும் சூஃபித்துவ நோக்கில் அணுகி, மதுவை மதுவென அணுகாமல் ‘தன்னிலை மறக்கும் தன்மை’யெனக் கொள்வதற்கில்லை. சில கவிதைகளில் மது, மதுவைத்தான் குறிக்கும். போலவே, அனைவருக்கும் இறைவன் ஒன்றெனும் நோக்கில் பாடப்பட்ட கவிதைகளும் உள்ளுறை ஏதுமின்றி அனைத்துச் சமயத்தைச் சேர்ந்தவர்க்கும் ஒரே இறைவன் என்னும் பொருளை மட்டுமே உரைக்கும்.

// இறையச்சம் என்னைத் தடுக்கிறது
இறையெதிர்ப்பு என்னை இழுக்கிறது
எனக்குப் பின்னால் பள்ளிவாசல்
எனக்கு முன்னால் தேவாலயம்
//

// ஈமான் முஜே ரோக்கே ஹை
ஜோ கீன்ச்சாஹை முஜே குஃப்ர்
க’அபா மேரே பீச்சே ஹை
கலீசா மேரே ஆகே
//

மீர்ஸாவின் இந்த ஷேர் அவருடைய ‘பஸீச்சா-ஏ-அத்ஃபால் ஹை’ என்னும் கஜலில் இடம்பெற்றுள்ளது. தன்னைச் சுற்றி நடப்பவை விளையாட்டைப் போலத் தனக்குத் தோன்றுவதைப் பாடுகின்ற கஜல். அதில் இறையச்சம், இறையெதிர்ப்பு இரண்டுக்கும் உள்ள முரணும் தன் முன்னே நடக்கும் ஒரு விளையாட்டெனும் பொருள்படும்படியாகப் பாடினார்.

காலிப் இறை நம்பிக்கையின் முரணைப் பாடினால், அதே முரணை ஒன்றென இணைத்துப் பாடுகிறார் அவருடைய சமகாலத்தவரான லாலா மாதவ்ராம் ஜவஹர்.

// க’அபாவிலும் அவனே இருக்கிறான்
சிவாலயத்திலும் அவனே
இரண்டும் அவன் இல்லங்களே
அவன் எங்கு இருந்தாலுமே
//

// க’அபே மேபி வஹீ ஹை
ஷிவாலே மேபி வஹி
தோனோன் மக்கான் உஸ்கே ஹைன்
சாஹே ஜிதர் ரஹே
//

விழாக்களைப் பாடும் கவிதைகளில் உருதுக் கவிஞர்கள் மதநல்லிணக்கத்தை இணைப்பது வழக்கம். ஹஸ்ரத் மோஹானியின் கிருஷ்ண ஜெயந்திக் கவிதையாகட்டும், அல்லாமா இக்பாலின் ‘இராமன்’ கவிதையாகட்டும் அவை மதநல்லிணக்கத்தைப் பாடும். அப்படித்தான் இருந்திருக்கிறது உருதுக் கவிதை உலகம். ஜவஹரும் தன்னுடைய ‘ஹோலி’ கவிதையில் மதநல்லிணக்கத்தைப் பாடுகிறார்.

// மெல்லிய முகத்திரை, ஒவ்வொரு குழலிலும் செந்தூர வண்ணம்
‘ஹோலி’யின் மாலையென்பது வசந்தத்தின் காலை
//

// மூன்ஹ்பர் நக்காப்-ஏ-ஸர்த் ஹர் ஏக் ஸுல்ஃப்பர் குலால்
ஹோலி கி ஷாம் ஹி தோ சஹர் ஹை பசந்த்கி
//

முகத்திரையை இஸ்லாமியரும் இந்துக்களும் வெவ்வேறு பெயரில் அழைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். ‘கூங்கட்‘ என்பது இந்துக்களின் வழக்கிலும், நக்காப் (அல்லது பர்தா) இஸ்லாமியர்களின் வழக்கிலும் முகத்திரையின் பெயர்கள். தன்னுடைய ஹோலி கவிதையில் ஜவஹர் குறிப்பிடும் ‘நக்காப்’ இஸ்லாமியப் பெண்கள் அணிகின்ற முகத்திரையைக் குறிக்கிறது. ‘ஸர்த்‘ என்றால் மெல்லிய. நக்காப்-ஏ-ஸர்த் என்றால் மெல்லிய முகத்திரை.

இஸ்லாமியப் பெண் என்ற நேரடியான சுட்டல் ஜவஹரின் கவிதையில் இல்லை. ஆனால், ஸுல்ஃப் – குழல் – கூந்தல் என்னும் உருதுச் சொல் பெண்ணின் கூந்தலோடு தொடர்புள்ளது. தமிழில் கார்குழல் என்றால் எந்த விளக்கமும் தேவையின்றி அது பெண்ணின் கூந்தலைச் சுட்டுவது போலவே, உருதுவில் ஸுல்ஃப் – குழல் பெண்ணின் கார்குழல்தான். இதன் வழியே செந்தூர வண்ணத்தில் இருக்கும் குழலுக்கு உரியவர் பெண் என்பது நிறுவப்படுகிறது. அடுத்து முகத்திரையைக் குறிக்கும் சொல் நக்காப். மேற்சொன்னபடி முகத்திரையை நக்காப் எனக் குறிப்பிடுவது இஸ்லாமியர் வழக்கம். நக்காப் அணிந்திருக்கும் பெண் – குறிப்பால் உணர்த்தப்படுவது இஸ்லாமியப் பெண்.

இன்றைக்கு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் குறும்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் ஹோலிப் பண்டிகையும் வண்ணத்தூவலும் காட்சியமைப்பில் வருவது வழக்கமாக இருக்கிறது. இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவில் தன்னுடைய கவிதையில் மெல்லிய முகத்திரை அணிந்திருக்கும் இஸ்லாமியப் பெண்ணின் குழல் முழுக்க செந்தூர வண்ணம் இருப்பதைக் காட்சிப்படுத்துகிறார்.

// ஹோலிப் பண்டிகையின் மாலை என்பது வசந்தத்தின் காலை //

சூஃபி மரபில் கவிதையில் இடம்பெறும் ஞானப்பாடல்களில் ‘காதற்பெண்’ என்னும் சொல்லின் பயன்பாடு பெண்ணைக் குறிப்பதல்ல; பக்தரின் மனதைக் கொள்ளை கொண்டவரைக் குறிக்கும். இந்த நோக்கில் ஜவஹரின் இக்கவிதையை அணுகிச் சிலர் மொழிபெயர்த்தாலும், முதலடி மட்டும்தான் பொருளில் வேறுபாடு கொள்ளுமேயன்றி, கவிதையின் பொருளான மதநல்லிணக்கத்தில் கருத்து வேறுபாடு இல்லை.

// எப்போதேனும் இந்நிலவைக் காண்போம்
மாதத்தில் முப்பது நாட்கள் உள்ளன
//

// இஸ் கமர் கோ கபி தோ தேக்கேங்கே
தீஸ் தின் ஹோத்தேன் ஹை மஹினேகே
//

ஹைக்கூவைப்போல் மயங்கி ஒலிக்கும் இக்கவிதையின் பொருளை வாசகன் தேடி அடைய வேண்டும். நிலவின் அழகை ரசிக்கும் மனநிலையில் கவிஞர் இல்லாதிருப்பதா? நிலவின் அழகை ரசித்துக் காணும் அளவுக்கு வாழ்க்கை சில நிமிடத்துளிகளையும் வழங்காதிருப்பதா? இயற்கையின் அழகைக் காணும் மெல்லுணர்வைக் கவிஞரிடமிருந்து வாழ்க்கை பிடுங்கிக்கொண்டதா? கவிதையின் வரிகளுக்கு இடையில் விடையில்லாத கேள்விகள் ஒளிந்திருக்கின்றன.

// துகளென நினைத்து
என்னை மண்ணோடு மண்ணாக்காதே வானமே
நானும் ஒருகாலத்தில் ஒளியாக இருந்தேன்
//

// ஸர்ரா சமஜ்கே யூன் நா மிலா முஜ்கோ காக்மேன்
ஏ ஆஸ்மான்! மைன்பி கபி அஃப்தாப்தா
//

முதுமையைப் பாடும் இந்த அடிகள் தொடக்கத்தில் சொல்லப்பட்ட ‘அத்தர் பூசினாலும் மணமேது?’ என்னும் கஜலின் அடிகள். முதுமை என்பது இங்கு குறியீடு மட்டுமே. எப்படி பகதூர் ஷா ஸஃபரின் கஜல்களில் இருக்கும் விரக்தியும் தனிமையும் அரசிழந்தவனின் குறியீடுகளோ, அதைப் போலவே ஜவஹரின் இந்த கஜலில் பாடப்படும் முதுமையும் வாழ்ந்து கெட்டவனின் குறியீடு.

அமீர் குஸ்ருவின் காலத்திலிருந்து இன்றைய கவிஞர்கள் வரையில் தங்கள் கவிதைகளில் மதபோதகர்களை நோக்கி ஒன்றிரண்டு வினாக்களை எழுப்பிவிடுகின்றனர். ‘வாயிஸ்’ – மதபோதகர் என நேரடியாக அவர்களை அழைத்தே கேள்விகளை முன்வைக்கின்றனர். ஜவஹரும் அந்த மரபுக்கு விதிவிலக்கு அல்லர். அவரும் கேள்வி எழுப்புகிறார்.

// மதுச்சாலை வீதிக்கு வாருங்கள் மதபோதகரே!
இரட்சிப்புக்கு நேர்வழியைக் காட்டுகிறேன்
//

// தஷ்ரீஃப் லாவோ கூச்சா-ஏ-ரிந்தான் மேன் வாயிஸோ!
சீதி சி ராஹ் தும்கோ பத்தாதேன் நஜாத் கி
//

செல்வச் செழிப்பில் பிறந்து, விருப்பத்தால் கவிஞராகி, மன்னனின் அவையிலுமிடம் பெற்று, முக்கியமான ஆவணங்களை எழுதி, காலிபின் சமகாலக் கவிஞன் என்னும் புகழுடன் உலவி, பின் முதல் இந்திய விடுதலைப் போரின் பின்விளைவுகளில் சிக்கிச் சொத்துகளை இழந்த லாலா மாதவ்ராம் ஜவஹர் 1890-இல் இயற்கை எய்தினார். அத்தர் பூசினாலும் மணமேது எனப் பாடிய கவிஞனின் கஜல்கள் உருதுக் கவிதை உலகில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும்.

(தொடரும்)

Author

You may also like

Leave a Comment