Home இதழ்கள்இதழ் 18ஈற்றடிக்கோர் பாட்டு – 18

ஈற்றடிக்கோர் பாட்டு – 18

by Iyappan Krishnan
0 comments

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “பொன்னாகும் நெஞ்சே பொறு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

இன்னல் பலவந்தே இம்சைகள் செய்தாலும்
இன்னும் இயல்பை எழிலாக்கும்- தன்னாலே
மின்னும் ஒளியாய் மிளிர்ந்திட மென்மேலும்
பொன்னாகும் நெஞ்சே பொறு
.

சுபாஷிணி ரமணன்
இன்னல்கள் நீண்டாலும் இன்னிலை மாறாமல்
நன்றாற்றல் ஒன்றையே நாடுவாய் நன்நெஞ்சே
அன்பான வாழ்வில் அமைதியும் சூழ்ந்திட
பொன்னாகும் நெஞ்சே பொறு

மாலா மாதவன்
எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள்
அத்தனையை ஆண்டாய் அனுபவித்தாய் – சொத்ததுதான்
முன்நின்ற துன்பங்கள் முற்றாய் ஒழிந்துவிடும்
பொன்னாகும் நெஞ்சே பொறு

சின்னக்கண்ணன்
அல்லவை தான்தவிர்த்து ஆங்கே அழகாக
நல்ல செயல்களை நாள்தோறும் – மெல்லவே
நன்றாகச் செய்தாலும் நானிலம் எப்போதும்
பொன்னாகும் நெஞ்சே பொறு

ஹேமா செந்தில்
அற்றையத் திங்கள் வலிய மணந்தவன்
பற்றைத் துறந்து பறந்தோட -ஒற்றையாய்
துன்பம் அனைத்தும் சுமந்திட ஓர்நாளில்
பொன்னாகும் நெஞ்சே பொறு

மது ஸ்ரீதரன்
வாரிக் கொடுத்துவக்கும் வேந்தரின் வேள்வியிலும்
கீரி நிறம்மாறக் கண்டிலமே- பேரிடரின்
இன்னா சுமந்தாலும் இன்முகத்தில் ஈகைசெய்
பொன்னாகும் நெஞ்சே பொறு

இப்னு ஹம்துன்
பொறுமை மிகுந்தோர் புவியையும் ஆள்வார்
உறுதியில் கொள்கை உயர்வு – சிறுமைதரும்
இன்னலும் சோர்ந்து சிறப்பு வழிசேர்த்துப்
பொன்னாகும் நெஞ்சே பொறு!

சுந்தர ராசன்
கால்வைத்த கல்லையோர் காரிகையாய் ஆக்கியவம்
மால்வைப்பாய் உள்ளே மனனேநீ! மால்வைத்தால்
என்னாகும் நீகொண்ட எண்ணங்கள் என்பாயேல்
பொன்னாகும்! நெஞ்சே! பொறு!

பவளமணி பிரகாசம்
சின்னதும் பெரியதுமாய் சோதனைகள்
என்றும் ஓயாத கடலலைகள்
உன் கண் முன்னே உருக்கிய
பொன்னாகும் நெஞ்சே பொறு

நளினி சுந்தர்ராஜன்
புற்களில் டேன்டிலயன் பூக்கள் சிரிக்க
வசந்தகாலத்தில் கரம் பற்றிச் செய்த
மெய்க் காதல் வாக்கு நெஞ்சிலிருக்க
பருவங்கள் மெதுவாய் உருண்டோடும்!

நிறமாறிய இலைகள் முதுவேனில் காட்டிட
இறுதிச் செவ்விலை நிலம் வீழ்ந்திட
கண்ணைக் கட்டிய பிம்பங்கள் விலகிட
காதலன் வரும் தேதி காற்று மொழிந்திடும்!

விண்ணை எட்டும் பரவசம் பொங்கிட
பாடி மகிழ்ந்து பாரெல்லாம் சுற்றிட
மாயவன் அருகில் மயங்கும் காலம்
பொன்னாகும் நெஞ்சே பொறு!

ராமலக்ஷ்மி ராஜன்
வாழ்க்கை, கனவுகளை
அறியாத பாதைகளில்
சிதறடிக்கலாம்
நம்பிக்கை மலரும் தருணத்தில்
கதவுகளை மூடலாம்
நாளையின் வாசற்படியில்
விடையில்லாக் கேள்விகளை
விட்டுச் செல்லலாம்

சொல்லிவிட்டு வருவதில்லை
இன்னல்களும் சவால்களும்—
உணர்வுகளை வெளிக்காட்டாத
முகங்களுக்குப் பின்னாலும்,
சுமைகளின் கனத்தை
ஒருபோதும் புலப்படுத்தாத
சொற்களுக்குள்ளும்
ஓசையின்றிப் போராட்டங்கள்
ரகசியமாக நிகழ்கின்றன

சமயங்களில்
திடமான மரக்கிளையும்
வளைந்து போகிறது
தெளிந்த வானம் மேகமூட்டமாய்
சாம்பல் பூசிக் கொள்கிறது
முன்னோக்கி வைக்கும் அடி
முந்தைய அடியை விடவும்
பாரமாகித் தள்ளாடுகிறது

ஆயின்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
துணிவின் வேர்களை
ஆழமாக்குகிறது
ஒவ்வொரு ரணத்திலும்
ஞானத்திற்கான
சாளரம் திறக்கிறது
கடக்கும் ஒவ்வொரு புயலும்
உள்ளுறைந்த உறுதியை
உணர்த்துகிறது
எங்கோ ஒரு சிறு சுடர்
சரணடைய
எப்போதும் மறுக்கிறது

காலம் மௌனமாக
தன் ரசவாதத்தை
நிகழ்த்துகிறது
துயர் கனிந்து
வலிமையாகிறது
இடர் ஆன்மாவை
செதுக்குகிறது
சோதனைத் தழலில்
காயங்கள் யாவும்
புடமிட்ட
பொன்னாகும் நெஞ்சே பொறு

ருக்மணி வெங்கட்ராமன்
வாழ்க்கைப் பாதையில் தடைகள் வந்தாலும்
வழித் தவறிச் செல்லாதே மனமே
வசந்தம் வரும் என்று நம்பிக்கையோடு
வாழ்ந்திடுவாய் வாடாமல் தினமே

இருளுக்குப் பின்னால் ஒளி உண்டு
இன்னலுக்குப் பின்னால் இன்பம் உண்டு
இழப்புகள் எல்லாம் பாடங்கள் ஆகும்
இனிவரும் காலம் வளம் சேர்க்கும்
பொறுத்தார் பூமி ஆள்வார் மறக்காதே
பொன்னாகும் நெஞ்சே பொறு
கண்மணி பாண்டியன்
தேன் ஒழுகும் பேச்சு வாயிலே
வான் முட்டும் கள்ளம் செயலிலே
ஏன் இத்தனை வஞ்சம் புவியிலே
பொன்னான நெஞ்சே பொறு.

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

Leave a Comment