- உருதுக்கவிதை உலகு – 1
- உருதுக்கவிதை உலகு – 2
- உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்
- உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’
- உருதுக் கவிதை உலகு – 5 மீர் தாகி மீர்
- உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி
- உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி
- உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்
- உருதுக் கவிதை உலகு – 9: குல்ஸார்
- உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி
- உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி
- உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி
- உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்
- உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி
- உருதுக் கவிதை உலகு: 15 – இப்ராகீம் ஸவுக்
- உருதுக் கவிதை உலகு: 16 – அஹமத் ஃபராஸ்
- உருதுக் கவிதை உலகு: 17 – ஜான் நிசார் அக்தர்
- உருதுக் கவிதை உலகு: 17 – மீனா குமாரி நாஸ்
கவிஞர்களாகவும் இருக்கும் நடிகர்கள் அவ்வப்போது தங்கள் கவிஞர் முகத்தைக் காட்டினாலும், திரைத்துறையில் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் கவிதை படைப்பதற்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளியை நிரந்தரமாக்கின. கவிஞர்களின் பட்டியலில், தமிழ்த் திரையில் கமலஹாசன், பார்த்திபன் என இருவரைக் குறிப்பிடலாம். பார்த்திபனின் கவிதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது. கமலஹாசன் தன்னைக் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் சில நேரங்களில் முன்னிறுத்தினாலும் நமது மனதில் இந்தியத் திரையுலகின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவராகத்தான் முன்னிற்கிறார்.
இது இந்தியத் திரையுலகின் துன்பியல் அரசி என அழைக்கப்பட்ட மீனா குமாரிக்கும் பொருந்தும். மீனா குமாரியை அனைவருக்கும் தெரியும், ஆனால் ‘நாஸ்’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியவர், ‘மீனா குமாரி நாஸ்‘ என்பது உருதுக் கவிதைகளில் ஆர்வமுள்ளவருக்கு மட்டும் தெரியும்.
உருது மொழியில் புனைபெயர்கள் எழுத்தாளரின், கவிஞரின் இயற்பெயருடன் இணையும். பகதூர் ஷா என்பது கடைசி மொகலாய மன்னரின் பெயர், ஸஃபர் அவருடைய புனைபெயர். இரண்டையும் இணைத்து அவர் பகதூர் ஷா ஸஃபர் என அழைக்கப்படுகிறார். மீர்ஸா அசதுல்லா பேக் கான் என்பது காலிபின் இயற்பெயர், காலிப் புனைபெயர். இரண்டையும் கலந்து அவர் மீர்ஸா காலிப் என அழைக்கப்படைார். போலவே, மஹ்ஜபீன் பானு, திரையுலகிற்காக மீனா குமாரியாக ஆன பின் அவருடைய புனைபெயரான நாஸ் அவருடைய பெயருடன் இணைந்து, உருது இலக்கியத்தில் மீனா குமாரி நாஸ் என அழைக்கப்படுகிறார்.
// உனது வீதியில் பித்தனைப் போலச் சென்றேன்
என் தோள்களில் என்னைச் சுமந்து
என் கல்லறை சென்றது //
// யூன் தேரி ரஹ்குஸர்சே தீவானா-வார் குஸ்ரே
காந்தே பே அப்னே ரக்கே அப்னா மஸார் குஸ்ரே //
காதல் தோல்விக்குப் பின் நடைப்பிணமானதை ‘நகரும் கல்லறை’ எனச் சொன்னது கவித்துவம். இது ஒரு கஜலின் தொடக்க இரண்டடிகள். இந்த கஜல் முழுதும் மீனா குமாரி காதல் தோல்வியின் வலியைப் பாடியிருப்பார். தொடக்க இரண்டடிகள் கஜலில் ‘மத்லா‘ என அழைக்கப்படும். கடைசி இரண்டடிகள் ‘மக்தா‘ என அழைக்கப்படும். கஜல் முடியப்போகிறது என்னும் அறிவிப்பை ரசிகர்களுக்குச் சொல்ல, கஜல் பாடுபவர் இப்போது ‘மக்தா’ பாடப்போகிறேன் என அறிவித்துவிட்டுப் பாடுவதும் மரபு. கல்லறையில் தொடங்கிய கஜலின் ‘மக்தா’ உயிரிழப்பைச் சொல்லி முடிகிறது.
// நீயும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
நீ இதயத்தை இழந்து சென்றாய்; நான் உயிரை இழந்து சென்றேன் //
// துனேபி ஹம்கோ தேக்கா ஹம்னேபி துஜ்கோ தேக்கா
து தில்ஹி ஹார் குஸ்ரா ஹம் ஜான் ஹார் குஸ்ரே //
கஜல்களில் மட்டுமன்றி அவருடைய நீள்கவிதைகளில் உருதுவின் ஆழமும், தனிமையும் கனவும் துயரமும் சேர்ந்து ஒலிக்கும் சொற்களும், காவியத்தன்மையைக் கொடுத்தன.
// அகன்ற நிலைவாசலின் வழியே விடைபெற்றது விடியற்காலை
கதவைத் தட்டும் ஒலி கேட்டதா? என் நடுக்கமா?
மௌனம் முணுமுணுத்ததா? என் சந்தேகமா?
உறக்கத்தில் திடுக்கிட்டேனா? கனவின் காதலன் பிரிந்தானா? //
// சௌடே தர்வாஸேசே நிக்லி தி வோ மாசூம் சஹர்
ஏக் தஸ்தகத் சுனாயி தி யா தா மேரா வெஹம்
குன்குனாயி ஹுவி காமோஷி தி யா மேரா பரம்
நீந்த் சௌங்க்கி தி யா க்வாபோன் கே சனம் டூட்டே தே //

கவியரங்கில் கவிதை வாசிப்பது போல், மீனா குமாரியின் பழைய புகைப்படம் ஒன்று அவருடைய கவிதைத் தொகுப்பின் முதல் பக்கத்தில் காணக்கிடைக்கிறது. திரைக்கு வெளியே அவருடைய நீள்கவிதைகளும் கஜல்களும் அவராலேயே வாசிக்கப்பட்டும் பாடப்பட்டும் கய்யாமின் இசையில் இசைத்தட்டாக வெளிவந்தன. ‘எனது கவிதை, எனது மொழி’ (மேரி நஸ்மேன், மேரி ஸுபான்) என்பது அந்த இசைத்தட்டின் பெயர். ஆங்கிலத்தில், I write, I recite என அதற்குப் பெயரிடப்பட்ட அதில் அவருடைய பத்து கவிதைகள் இடம்பெற்றன.
தன்னுடைய கவிதைகளைத் தானே வாசித்தும் பாடியும் இசைத்தட்டாக வெளியிட்டு, திரைக்கு வெளியே தன் ஆளுமையைக் கவிஞராகவும் நிலைக்கவைத்த அவர், வெளியான ஒன்றிரண்டு கவிதைகளைத் தவிர, கவிதைத் தொகுப்பு என எதையும் தான் வாழும் வரையில் வெளியிடவில்லை. நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகியாகவும், உடையலங்காரக் கலைஞராகவும் திரைத்துறையில் அடையாளம் காணப்பட்ட மீனா குமாரி, அங்கு தன்னை ஒரு கவிஞராக வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.
துன்பியல் ராணியாக அறியப்பட்ட அவர் வாழ்க்கை துயரம் நிறைந்தது. திரைப்படம் அவருக்குப் புகழைக் கொடுத்தபோதும், வாழ்க்கை அவருக்குத் தோல்விகளையும் தனிமையையும் தந்தது. தன்னுடைய கடைசித் திரைப்படமான பாக்கீஸாவின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததும், அதனால் நடனக் காட்சிகள் சிலவற்றை ‘டூப்’ போட்டு எடுத்த தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. அத்திரைப்படத்தில் முதலில் இடம்பெறும் நடனக்காட்சிகளில் மீனா குமாரி நடனம் ஆடுவதும், கடைசி நடனக்காட்சியில் சில லாங் ஷாட்டிலும், சில முக்காடிட்டும் ஆடுவதுமாகப் படமாகியிருப்பதால் அந்தப் பதிவின் உண்மைத்தன்மையை விளங்கிக்கொள்ளலாம்.
தனிமை விரும்பியாக இருந்த அவருடைய கஜலிலும் தனிமை இருந்தது. இன்றைக்கும் புதிதாக இருக்கும் கஜல் அது.
// நிலவும் தனிமையில் வானும் தனிமையில்
எங்கே இதயம் இணைந்தது? எங்கே தனிமை? //
// சாந்த் தன்ஹாஹை ஆஸ்மான் தன்ஹா
தில் மிலாஹை கஹான் கஹான் தன்ஹா //
கஜலின் முதல் இரண்டடிகளைப் (மத்லா) படித்ததும் கண்ணதாசனின் திரைப்பாடல் // நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே – நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே // நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
சவாலே சமாளி திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் நாயகனும் நாயகியும் பிரிந்து இருப்பதை நிலவும் வானும் பிரிந்து இருப்பதற்கு ஒப்பிட்டார் கவிஞர். தன்னுடைய கஜலில் மீனா குமாரி, சேர்ந்தே இருப்பதாகத் தோன்றினாலும் நிலவும் வானும் சிந்தையில் ஒன்றாமல் இருப்பதாக எழுதினார்.
// இதைத்தானா வாழ்க்கை என்போம்?
உடலும் தனிமையில், உள்ளமும் தனிமையில் //
// ஸிந்தகி கியா இசிகோ கஹ்த்தேஹைன்?
ஜிஸ்ம் தன்ஹா ஹை அவுர் ஜான் தன்ஹா //
யாருக்காகவோ காத்திருப்பது அவருக்கு வழக்கமாகிப்போனது. வாழ்க்கை கொடுத்த பரிசு தனிமையென்றாலும், யாருடைய வருகையையோ அவர் எதிர்பார்த்தார். எதிர்பார்த்தவர் வராமலே இருந்ததில் அமைதியற்ற பொழுதுகள் அவரை ஆட்கொண்டன. அமைதியின்மையுடன் வாழப் பழகிவிட்டதால் அதுவே நிம்மதி என்பது அல்ல; அது ஓர் ஏற்பு நிலை, அவ்வளவுதான். பிரிவின், தனிமையின் துயர் சிலருக்குத் தொடர்கதை.
// ஒவ்வொரு மூச்சிலும் இதயம் உன் காலடியோசையைத் தேடுகிறது
ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு நடுக்கம் உண்டாகிவிடுகிறது //
// தேரே கத்மோன் கி ஆஹட்கோ ஏ தில் ஹை டூண்ட்தா ஹர் தம்
ஹர் ஏக் ஆவாஸ்பர் ஏக் தர்த்தராஹட் ஹோத்தி ஜாத்தி ஹை //
இந்தக் கவிதையைப் படிக்கையிலும் கவிஞரின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
// வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் //
பாடல்: எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை
சேர்ந்தே இருந்தாலும் பிரிந்திருக்கும் கணவனைப் பாடும் கண்ணதாசனின் வரிகளும், சேராமல் இருக்கும் துணையைப் பாடும் மீனா குமாரியின் வரிகளும் ஒன்றுபடும் இடம் ‘பிரிவு’. ஓரிடத்தில் உடனிருந்தும் பிரிவு, இன்னோர் இடத்தில் பிரிவும் தனிமையும். இந்தக் கவிதையுடன் நிலவு வானம் தனிமைக் கவிதையைத் தொடர்புபடுத்தினால் அனைத்திலும் மையச்சரடாகச் செல்வது தனிமை.
தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய கவிதைகளை ஒலிப்பதிவு செய்தவர், அதனைப் புத்தகமாக வெளியிடவில்லை. அவருடைய இறுதிக் காலத்தைப் பார்க்கையில் இன்னும் சில ஆண்டுகள் அவர் இருந்திருந்தால், அவர் வாழும் காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியாகியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
1971இல் தன்னுடைய நடிப்பின் உச்சமான பாக்கீஸாவை அவர் முடித்தபோதே உடல் நலக் குறைவு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டிருந்தது. அதே ஆண்டில் அவருடைய ‘I write, I recite’ இசைத்தட்டாகப் பதிவானது. 1972இல் இவ்வுலகைப் பிரிந்தார். அதற்கு முன் தன்னுடைய கவிதைகள் அனைத்தையும் பதிப்பிக்கும் உரிமையை கவிஞர் குல்ஸாருக்கு எழுதிவைத்திருக்கிறார். மீனா குமாரியின் மறைவுக்குப் பின் அவருடைய கவிதைகளைத் தொகுத்து குல்ஸார், ‘தன்ஹா சாந்த்‘ (தனிமை நிலவு) என்னும் பெயரில் வெளியிட்டார்.
// நான் இந்த ‘நான்’ தொடர்பாக அஞ்சுகிறேன். இவை மீனாஜீயின் கவிதைகள், இங்கு நான் யார்? நான் ஏன்? மீனாஜீயின் நண்பர் என்ற வகையில் அவருடைய கவிதைகளும் டயரிக் குறிப்புகளும் எனக்குக் கிடைத்தன. அவரே தந்ததால் அவற்றின் மீது நான் உரிமை கொண்டாட முடியுமா? அவரே நினைத்தாலும் அப்படி உரிமை கொண்டாட முடியாது. கவிதையை நினைக்கும் வரையில்தான் அதன் மீது கவிஞருக்கு உரிமை; உரைத்துவிட்டால் அதன் மீது உரிமை கொண்டாட முடியாது, அது பொதுவாகிவிடுகிறது. மீனாஜீயின் கவிதைகளின் மீது உண்மையான உரிமை அவரைக் கொண்டாடுபவர்களுக்கு உள்ளது. அதை அவர்களிடம் கொண்டு செல்லும் பணிக்குதான் எனக்கு உரிமை உள்ளது. அதன் முதல் முயற்சிதான் இந்த நூல். //
தொகுப்பாசிரியர் குறிப்பில் குல்ஸார் எழுதியிருப்பதைப் போல மஹ்ஜபீன் பானு என்னும் மீனா குமாரி என்னும் ‘நாஸ்’ எழுதிய கவிதைகள் அவருடைய வாசகர்கள் அனைவருக்கும் சொந்தம்.
// கால்களில் கொப்புளங்களுடன் இந்தப் பாலையில் யாராவது வந்திருப்பர்
இல்லையெனில் இந்தப் புயலில் யார் தீபமேற்றி வைத்திருப்பார்? //
// ஆப்லா-பா கோயி இஸ் தஷ்த் மேன் ஆயா ஹோகா
வர்னா ஆந்தி மென் தியா கிஸ்னே ஜலாயா ஹோகா //
மீனா குமாரி நடித்த ‘பாக்கீஸா‘ திரைப்படத்தின் ‘4K’ மீளுரு வடிவம், அக்டோபர் பதினெட்டு, 2026 அன்று லண்டனில் பி.எஃப்.ஐ. லண்டன் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. விரைவில் அது இந்தியாவில் திரையிடப்படலாம். மீனா குமாரி நாஸின் கவிதைகளும் என்றேனும் மறுபதிப்புச் செய்யப்படலாம்.
(தொடரும்)