- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
சீதையைக் காப்பாற்றும் தந்திரங்களைக் குறித்துச் சூர்ப்பனகை யோசிக்கையில், கிஷ்கிந்தையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்தது. கிஷ்கிந்தைப் பள்ளத்தாக்கு ஒரு மாபெரும் வானரக் கடலென உருமாறியிருந்தது.
தாரையின் சொற்கள் பொய்க்கவில்லை. விந்திய மலை, மேரு சிகரம், கிழக்குக் கடற்கரை… எல்லாத் திசைகளில் இருந்தும் வந்து சேர்ந்தன கோடிக்கணக்கான வானரங்கள். அவற்றின் ஆரவாரம் பிரசிரவண மலையின் பாறைகளை அதிரச் செய்தது.
இராமன் முன் நின்றிருந்த சுக்ரீவன் இப்போது ஒரு உண்மையான பேரரசன். சிற்றின்ப மயக்கத்தை முழுமையாக உதறியிருந்தான். காலம் தனக்கு அளித்த பெரும் வாய்ப்பை, போதைக்காக வீணடித்ததை அவன் அகம் சுட்டது.
இராமனின் முன் தன் பிழைகளுக்காக மௌனமாகக் கண்ணீர் வடித்தான்.
இராமனின் கண்கள் கருணையால் நிறைந்திருந்தன. அவனது அன்பான தொடுதல் சுக்ரீவனுக்கு மன்னிப்பை வழங்கியது.
ஏதோ பேசத் தொடங்கியவன் நா தழுதழுத்தது, கைகள் நடுங்கின. சுக்ரீவனின் அந்த நிலையைக் கண்டு இராமன் சிறு புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டான். பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி, உண்மைதான்… சுக்ரீவன் மனதில் மிகப்பெரிய நிம்மதியை அந்த அணைப்பு உருவாக்கியது. அணைப்பில் இருந்து விடுபட்ட மறுகணமே படைகளைப் பிரிக்கும் பெரும் பொறுப்பைக் கையில் எடுத்தான் சுக்ரீவன்.
ஆரம்பத்தில் தென்திசை மட்டுமே தேடலின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அசுர மாயம் என்ன செய்திருக்கும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. எனவே எல்லாத் திசைகளிலும் தேடவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
வினதனின் தலைமையில் கிழக்கு, சுஷேணனின் தலைமையில் மேற்கு, சதபலனின் தலைமையில் வடக்கு எனப் படைகள் சீறிப் பாய்ந்தன. ஆனால், இராமனின் கண்கள் தென்திசை நோக்கிச் செல்லத் தயாராகி நின்ற படையின் மீதே நிலைத்திருந்தன. அங்குதான் இளவரசன் அங்கதன் நின்றிருந்தான். மூதறிஞர் சாம்பவான் நின்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அனுமனும் அங்கே நின்றிருந்தான்.
இராமன் அனுமனை மட்டும் தனியே அழைத்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. பல மாதங்களாகத் தன் நெஞ்சில் அடைக்கி வைத்திருந்த தவிப்பையெல்லாம் அந்த ஒரு பார்வையில் அனுமனிடம் கடத்தினான்.
அனுமன் தவித்துப் போனான். இராமனின் கண்கள் காட்டிய தவிப்பை அவனால் ஒரு துளியளவும் ஏற்கும் திறனற்றவனாக இருந்தான். அவன் கண்களில் நீர் வழிந்தது. அவன் இராமன் முன் மண்டியிட்டுக் கைகூப்பி நின்றான்.
இராமன் தன் விரலில் இருந்த இரகு வம்சத்தின் முத்திரை பொறிக்கப்பட்ட கணையாழியைக் கழற்றினான்.
“அனுமா, என் உயிர் அங்கே தென்திசையில் எங்கோ ஒரு மூலையில் தவித்துக் கொண்டிருக்கிறது. நீ அவளைக் காண்பாய் என்று என் உள்ளுணர்வு உறுதியாகச் சொல்கிறது. இதை அவளிடம் கொடு. நான் அவளைத் தேடி வருவேன் என்பதற்கான சாட்சி இது என்பதைச் சீதைக்கு உறுதிப்படுத்து,” என்று கூறி மோதிரத்தை நீட்டினான்.
அனுமன் அதை இரு கரங்களாலும் பெருமதிப்போடு வாங்கிக் கொண்டான். மாபெரும் பௌதீக உடலைக் கொண்டிருந்தாலும், அகங்காரம் சற்றும் இல்லாததால் அந்த அனுமன் அணுவை விடச் சிறியவனாகத் தோன்றினான்.
இருந்துமென்ன, மானிடனான இராமனின் விரலுக்குப் பொருத்தமாக இருந்த அந்த மோதிரம், வானரனான அனுமனின் பெரிய விரல்களுக்குப் பொருந்தவில்லை. அதனைத் தன் மார்போடு ஒற்றி வணங்கிய அனுமன், அந்தப் புனிதமான கணையாழி எக்காரணம் கொண்டும் தவறிவிடக் கூடாது என்பதற்காக, அதனைத் தன் வாலின் நுனியில் மிகப் பத்திரமாகக் கட்டிக் கொண்டான்.
பின்பு அனுமன் இராமனை நிமிர்ந்து பார்த்தான். “ஐயனே, உங்கள் மோதிரம் உங்கள் அடையாளத்தை உணர்த்தும். ஆனால் நான் உருவத்தால் ஒரு வானரன். இராவணன் அரக்கர்களைப் பல மாய உருவங்களில் அனுப்புவான் என்பதை அன்னையும் அறிவார். ஒருவேளை என்னைப் பார்த்து அரக்கன் என்று அவர் அஞ்சினால், என் உண்மைத் தன்மையை நான் எப்படி மெய்ப்பிப்பது?” என்று கேட்டான்.
இராமன் சில கணங்கள் மௌனமாக நின்றான். பின், உலகத்தில் அவனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த அந்த மிக அந்தரங்கமான விவரங்களை அனுமனிடம் பகிர்ந்தான்.
“அனுமா, நான் காட்டை நோக்கி வரும்போது அயோத்தி எல்லை தாண்டியதும் ‘இதுதான் காடா?’ என்று மகிழ்ந்ததைச் சொல். மிக முக்கியமாக நாங்கள் சித்திரக்கூட மலையில் தனித்திருந்த காலத்தில் நடந்த நிகழ்வொன்று… அது இலக்குவனுக்கும் தெரியாத இரகசியம்.”
இராமனின் நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன. அந்த நிகழ்வு இதுதான்:
தேவேந்திரனின் மகனான ஜயந்தனுக்கு இராமன் மீது ஒரு பெரும் சந்தேகம் எழுந்தது. அகிலத்தையே காக்கும் பரம்பொருள் எப்படி ஒரு சாதாரண மானிடனைப் போல, மரவுரி தரித்து, காட்டில் வாழ முடியும்? இவன் நிஜமாகவே மாபெரும் ஆற்றல் கொண்டவன்தானா, அல்லது வெறும் சாதாரண மானிடனா? அவனைச் சோதித்துப் பார்க்க ஜயந்தன் முடிவு செய்தான். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அஞ்சியவன், ஒரு காகத்தின் உருவம் எடுத்து வந்தான்.
இராமனின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த சீதையின் மார்பில் தன் அலகால் கொத்தினான். தேவியின் இரத்தம் சிந்தியது. இராமன் பெருங்கோபம் கொண்டான். விரட்டியும் போகாத அந்தக் காகத்திற்கு எதிராக இராமன் அங்கே வில்லைக் கூட எடுக்கவில்லை. கீழே கிடந்த ஒரு சாதாரண தர்பைப் புல்லை எடுத்தான். அதைப் பிரம்மாஸ்திரமாக மாற்றி ஏவினான்.
ஒரு சிறு புல், மாபெரும் அழிவாயுதமாக மாறியது. மூவுலகிலும் அவனைத் துரத்தியது. எங்கும் அவனுக்கு அடைக்கலம் கிடைக்கவில்லை. முடிவில் தன் அகந்தை அழிந்து, தஞ்சம் என்று மீண்டும் இராமனின் காலடியிலேயே வந்து விழுந்தான் ஜயந்தன்.
சரணடைந்தவனைக் கொல்ல இராமனின் அறம் அனுமதிக்கவில்லை. அதனால் அந்த அஸ்திரம் அவனது ஒரு கண்ணை மட்டும் பறித்துக்கொண்டு அவனைத் தப்பவிட்டது.
இராமன் அந்த நிகழ்வை விரிவாகச் சொன்னான். “இந்த உண்மையைச் சீதை மட்டுமே அறிவாள். அவள் உன்னை முழுமையாக நம்புவாள்,” என்றான்.
அனுமன் இராமனின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். தென்திசை நோக்கித் தன் மாபெரும் பயணத்தைத் தொடங்கினான்.
நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் மாதங்களாயின. அங்கதன் தலைமையிலான தென்திசைப் படை விந்திய மலையின் தென்பகுதியை அடைந்தது. அது ஒரு சபிக்கப்பட்ட நிலம்.
பச்சை நிறமே இல்லை. எங்கும் வறண்ட பாறைகள். பிளந்து கிடந்த பூமி. வானரங்களின் நாக்கு வறண்டு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு மூச்சுக்காற்றும் நெருப்பாகச் சுட்டது. குடிக்க ஒரு சொட்டு நீர்கூட இல்லை. பசி குடலைக் கிள்ளியது. மாபெரும் வீரர்கள் சிறு குழந்தைகளைப் போலப் பாறைகளில் சுருண்டு விழுந்தனர். மரண பயம் அந்தக் கூட்டத்தை ஆட்கொண்டது. பசியும் தாகமும் உடலை வாட்டும்போது, மனித மாண்புகள் சிதைகின்றன. தாகம் தீர இரத்தத்தைக் கூடக் குடிக்கலாம் என்ற மிருகத்தனமான எண்ணம் மனதின் ஓரத்தில் எழத் தொடங்கியது. அந்த மரணத்தின் விளிம்பில்தான், தூரத்தில் ஒரு மாபெரும் இருண்ட குகையை அவர்கள் கண்டனர்.
குகைக்குள் இருந்து சில பறவைகள் சிறகுகளில் ஈரத்தோடு வெளியே பறந்து வந்தன. உள்ளே நீர்நிலை இருப்பதை அனுமன் உணர்ந்தான். அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்தப் பயங்கரமான இருட்டுக்குள் நுழைந்தான்.
அது ஒரு சாதாரண குகை இல்லை. உள்ளே செல்லச் செல்ல இருள் அவர்களை முழுமையாக விழுங்கியது. காரிருள் என்பது வெறும் ஒளியின்மை கிடையாது. அது மனித அகத்தின் அறியாமை. அந்த அறியாமைக்குள் கண்கள் இருந்தும் குருடர்களைப் போல அவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்தனர்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் அந்த அறியாமையின் இருள் சட்டென விலகியது. மலைக்க வைக்கும் ஒரு பொருட்செல்வத்தின் ஒளி அங்கே பரவியது.
வானரங்கள் தங்கள் கண்களையே நம்ப முடியாமல் திகைத்து நின்றனர். அங்கே பூமிக்கு அடியில் ஒரு பிரம்மாண்டமான பாதாள மாளிகை அமைந்திருந்தது. தங்கத்தால் ஆன மரங்கள், வைரங்களும் வைடூரியங்களும் பதிக்கப்பட்ட மாட மாளிகைகள், சுவையுடைய கனிகள், தெள்ளத்தெளிவான நீர்ச்சுனைகள்… மாபெரும் இருளுக்குப் பின் கிடைக்கும் அதீத சுகம் எப்போதுமே ஒரு மாய வலைதான் என்பதை அந்தப் பசியில் அவர்கள் உணரவில்லை.
அந்த மாளிகையின் நடுவே, ஒரு தவப்பெண் ஆழ்நிலையில் அமர்ந்திருந்தாள். அவளது மேனியில் இருந்து ஒரு தன்னுளொளி வீசிக்கொண்டிருந்தது. வானரங்களின் காலடி ஓசை கேட்டுத் தன் தவம் கலைந்து அவள் கண்களைத் திறந்தாள். அவள்தான் சுயம்பிரபை.
“பசியால் தவிக்கும் உயிர்களே, முதலில் இந்தக் கனிகளை உண்ணுங்கள், நீரைப் பருகுங்கள்,” என்று அவள் உபசரித்தாள். அவளது குரலில் நதியின் குளுமை இருந்தது. தாகம் தணிந்த பின் அனுமன் அவளை வணங்கினான்.
“அன்னையே, இது எந்த இடம்? மாபெரும் காரிருளுக்கு நடுவே இப்படி ஒரு ஒளி பொருந்திய உலகத்தை யார் உருவாக்கியது?” என்று கேட்டான்.
சுயம்பிரபையின் உதடுகளில் ஒரு மர்மப் புன்னகை தவழ்ந்தது. அவள் குரல் நிதானமாகவும், கவித்துவமாகவும் ஒலித்தது.
“ஒளியின்றி இருளில்லை; ஆசையின்றி இந்த மாயையில்லை,” என்றாள். “இது காலத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஒரு மாயச் சிறை. இதை உருவாக்கியவன் மயன். அரக்கர்களின் மாபெரும் சிற்பி; லங்கையை ஆளும் இராவணனின் மாமனார். ஒரு தேவதையின் மீதான மையலில் அவன் தன் வித்தைகள் அனைத்தையும் திரட்டி உருவாக்கிய பாதாள உலகம் இது.”
மண்டோதரியின் இணைப்பு எப்படியோ இராமனுக்கும் சீதைக்கும் நடுவில் இருந்துகொண்டே இருப்பது விதியின் விசித்திரங்களில் ஒன்று.
சுயம்பிரபை தொடர்ந்தாள். “காமத்தாலும் பொருளாசையாலும் பின்னப்பட்ட வலை இது. இதில் நுழைந்தவர்கள் மீண்டும் வெளியேறியதில்லை. பறவைகளுக்கும் இங்கு பாதையில்லை. இது ஒரு மருட்கை உலகம்.”
அங்கதனும் மற்ற வானரங்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். சீதையைத் தேடி வந்த இடத்தில், இப்படி ஒரு நிரந்தரச் சிறையில் சிக்கிவிட்டோமே என்று அவர்கள் மனம் இருண்டது.
சுயம்பிரபை அவர்களை அமைதிப்படுத்தினாள். “பதறாதீர்கள்,” என்றாள் அந்தத் தவப்பெண். “அறத்தின் வழியில் நடப்பவர்களை இந்த ஆசை வலை கட்டிப் போட முடியாது. இருளைப் பார்க்கப் பழகிய உங்கள் கண்களால் உண்மையான ஒளியைக் காண முடியாது. மாயையை உற்றுப் பார்க்கும் உங்கள் ஊனக் கண்களை மூடுங்கள். அகம் திறக்கட்டும். கண்களை மூடிக்கொள்ளுங்கள்.”
வானரங்கள் அனைவரும் அவளது கட்டளைப்படி தங்களின் கண்களை இறுக மூடிக்கொண்டனர். புறவுலகின் பொன்னும் மணியும் இருளில் மறைந்தன. மறுகணம் கண்களைத் திறந்து பார்த்தபோது, அவர்கள் அந்த மாயக் குகையிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தனர். விந்திய மலையின் தென்கோடியில் சேர்ந்திருந்தார்கள்.
மாயை விலகியது. தேடலின் மாபெரும் எல்லை இப்போது அவர்கள் கண்முன் பிரம்மாண்டமாக விரிந்து கிடந்தது. பௌதீகக் கண்களை மூடியதால் அகக்கண் திறந்து, இலக்கை நோக்கிய அவர்களது பயணம் இப்போது இறுதி எல்லையை வந்தடைந்திருந்தது.
அவர்கள் கண்முன்னே, உலகையே விழுங்குவதற்குத் தயாரான நிலையில் பேரலைகளோடு பெருங்கடல் காத்து நின்றது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் நீரின்றி வேறில்லை. அனுமனும் படைகளும் திகைத்து நின்றார்கள். அச்சம் அந்தக் கூட்டத்தில் மீண்டும் நிரம்பி அலையடித்தது.
பி.கு: நாட்டுப்புற மற்றும் இலக்கியக் குறிப்புகள்
இந்திரனின் மகனான ஜயந்தன் காகமாக வந்து சீதையைத் தீண்டிய நிகழ்வை, வால்மீகி முனிவர் அரக்கச் செயலாகப் பதிவு செய்திருந்தாலும், துளசிதாசரின் ‘ராமசரித மானஸ்’ மற்றும் பல தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகளில் இது இராமனின் இறைத்தன்மையைச் சோதிக்க நடந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. சாதாரண மானிடனாகக் காட்டில் வாழும் இராமன் நிஜமாகவே பரம்பொருள்தானா என்று சோதிக்க வந்த ஜயந்தனின் அகந்தையை, வில்லைக் கூட எடுக்காமல் ஒரு சிறு தர்பைப் புல்லைக் கொண்டே இராமன் அடக்கியதாக நாட்டார் மரபுகள் இந்தத் தத்துவத்தை விளக்குகின்றன.
விந்திய மலையில் வானரங்கள் சிக்கிக்கொண்ட ‘ரிக்ஷபிலம்’ என்னும் அந்த மாயக் குகையை உருவாக்கிய அசுரச் சிற்பியான மயன், இலங்கையை ஆளும் இராவணனின் மாமனாரும் மண்டோதரியின் தந்தையும் ஆவார் என்பது வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் உள்ள உறுதியான தரவாகும்.
மாயக் குகையிலிருந்து வெளியேறச் சுயம்பிரபை வானரங்களைக் கண்களை மூடிக்கொள்ளச் சொல்வது, பல நாட்டுப்புற ஆன்மீக மரபுகளில் ஒரு மாபெரும் தத்துவக் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. மயக்கும் பொருட்செல்வங்களைக் காணும் புறக்கண்களை மூடினால் மட்டுமே, அகக்கண் திறந்து உலக மாயையிலிருந்து விடுபட்டு எல்லையற்ற பெருங்கடலான பரம்பொருளை நாம் அடைய முடியும் என்பதே நாட்டார் வழக்காறுகள் உணர்த்தும் மெய்ப்பொருள்.
(தொடரும்)