தாரை அந்தப் போர்க்களத்தின் நடுவே நின்றிருந்தாள். கிஷ்கிந்தையின் செம்மண் பூமி அன்று உண்மையாகவே ரத்தச் சிவப்பைக் குடித்து, அந்திச் சூரியனைப் போலச் சிவந்திருந்தது.
இடிபாடுகளுக்கிடையே ஆணிவேர் அறுபட்ட மாபெரும் ஆச்சா மரம் போல நிலத்தில் சாய்ந்து கிடந்தான் வாலி. அவனது அகன்ற மார்பைத் துளைத்திருந்தது இராமனின் அம்பு.
வாலியின் இறந்த உடலை, அழுது வற்றியக் கண்களோடு சுற்றிச் சுற்றி வந்தாள் தாரை. எது நடக்கக்கூடாது என அவள் வாலியைத் தடுத்தாளோ, அது நடந்து முடிந்துவிட்டது.
அருகில் நின்ற தன் மகன் அங்கதனைக் கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.
“பார் மகனே.. பார். இவர் தான் இராமன்.. தெரியுமா உனக்கு? மாபெரும் வீரன்.. எதிராளிக்குத் தன் முகத்தைக் காட்டவும் துணியாத மாபெரும் வீரன்,”
என்றாள் வஞ்சப்புகழ்ச்சியாக.
இராமனின் கண்கள் நிலம் தாழ்ந்திருந்தன. தன் வில்லைத் தரையில் ஊன்றி இரு கைகளால் இறுகப் பற்றியிருந்தான். அவன் உடல் லேசாக நடுங்கியது. அந்த நடுக்கம் வாலியைக் கொன்றதற்கான குற்ற உணர்வால் வந்ததல்ல, எதிர் நிற்கும் தாரையையும், தந்தையை இழந்த அங்கதனையும் நேருக்கு நேர் பார்க்க இயலாத தவிப்பால் வந்தது.
தாரை தொடர்ந்தாள்.
“மேலும் கேள் மகனே.. இருவரின் போரில் மறைந்து நின்று ஒருவனைக் கொன்ற உத்தமன் தான் இந்த இராமன். ஓ.. சொல்ல மறந்துவிட்டேன். கொடுத்த வாக்கிற்காக நாட்டைத் துறந்தாரே பேரரசர் தசரதர், அவரின் புதல்வன் இவர். இல்லை இல்லை.. அண்ணன் அரியணையைத் தான் ஏற்பது அறமில்லை என அண்ணனின் கால் செருப்பைக் கொண்டு ஆட்சிப் புரியும் பரதனின் அண்ணன்!” என்றாள்.
அந்தக் கடைசி வாக்கியத்தில் ஒலித்த இழிவும் இகழ்ச்சியும், ஒருபுறம் நின்றிருந்த சுக்ரீவனைக் கூனிக் குறுகச் செய்தன.
“அரசியாரே, அறம் இல்லாதச் செயலைச் செய்தவன் உன் கணவன் வாலி… அறம் காக்க…” என்று ஆரம்பித்த இராமனின் வார்த்தைகளை முடிக்க விடாமல், சீறும் நாகத்தின் சீற்றத்தோடு இடைமறித்தாள் தாரை.
தாரை இகழ்ச்சியாகச் சிரித்தாள். “அறமா? தர்மமா? என்ன தர்மம் இராமா? எங்கள் வானர குலத்தின் விதிகள் உங்கள் மானிட விதிகளிலிருந்து மாறுபட்டவை. நீங்கள் மானிட தர்மத்தின் தராசைக் கொண்டு என் கணவனை அளப்பது எப்படி நியாயமாகும்? அப்படியே அவன் தவறு செய்திருந்தாலும், அதை நேரில் நின்று சுட்டிக்காட்டிப் போரிட்டிருக்கலாமே! ஏன் மறைந்து நின்றாய்?”
அவளது சொற்கள் கூர்மையான அம்புகளாக இராமனைத் துளைத்தன.
“என் கணவன் பெற்றிருந்த வரத்தின் காரணமா? இல்லை உன் வில்லின் வலிமை தீர்ந்துப் போய்விட்டதா?”
இராமன் ஏதும் சொல்லாமல் மௌனமாக நின்றான்.
“உன்னால் அவனை வெல்ல முடியாது என்ற பயத்தால்தானே மரத்தின் பின்னால் ஒளிந்தாய்? ஒரு வீரனைப் பின்னாலிருந்து கொல்வது எந்த விதத்தில் அறமாகும்? உன் மனைவியைக் கடத்திச் சென்றவனைக் கண்டுபிடித்துப் போரிட வலிமை இல்லாமல், போகும் வழியில் காண்பவரை எல்லாம் கொன்று குவிப்பாயா? இது தான் இரகு வம்சத்தின் அறமா?” பெண் சிங்கமெனச் சீறி நின்றாள் தாரை.
இராமனிடம் சொல்லப் பதில்கள் இருந்தன. ஆனால் அவன் அதைச் சொல்ல முயலவில்லை. அவன் தாரையின் கையறு நிலையை உணர்ந்து அவளைப் பார்க்கவும் கூசினான்.
“அன்னையே, நாங்கள் சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டோம். எங்களிடம் சரணடைந்தவனைக் காப்பது அரச தர்மம்…” என்று இலக்குவன் பேச ஆரம்பிக்க, அவனையும் இடைமறித்தாள் தாரை.
“நிறுத்தும் இளையவரே, நிறுத்தும். எதைக் கொண்டு ஒளிந்து நின்று கொன்றதை நேர் செய்யப் போகிறீர்? ஒன்று சொல்லவா? இராமன் சுக்ரீவனுடன் இருக்கிறான் என்று தெரிந்ததும் என் கணவன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?”
இலக்குவன் மௌனமாக இருந்தான்.
“இரகு வம்சத்தினர் தர்மம் தவறமாட்டார்கள், அவர்கள் மாவீரர்கள் என்றான்.. பாவம்.. வாலிக்கு உங்களின் கோழைத்தனம் புரியாமல் போய்விட்டது,” என்றாள் தாரை.
“அன்னையே, வாலியும் சரண் என்று எங்கள் முன் நின்றிருந்தால், எங்கள் நிலை தர்மசங்கடமாயிருக்கும். ஆகவே மறைந்து நிற்க வேண்டியதாகிற்று,” என்றான் இலக்குவன்.
“அடடா என்ன கருணை, என்ன கருணை! ஆனால் உங்கள் கருணை ஆள் பார்த்தும், சுயநல நோக்கம் பார்த்தும் வருகிறதல்லவா.. ஒருவேளை அதுதான் அயோத்தியின் அறம் போல!” என்று மீண்டும் நகைத்தாள்.
அந்த நகைப்பு மெல்ல மெல்ல நின்றது. அவள் கண்களில் கண்ணீர் உறைந்தது. அங்கே ஒரு மாபெரும் உண்மை நிர்வாணமாக நின்றது. தாரை தன் கைகளை இராமனை நோக்கி உயர்த்தினாள். அவள் நின்ற தோரணையில் பேரரசியின் கம்பீரம் முழுமையாக நிறைந்திருந்தது.
“கேளும் இராமா… என் கணவனை நீ ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொன்றாய். இந்நிலை மறுபிறப்பிலும் உன்னைத் துரத்தும். மேலும் எந்த மனைவிக்காக என் கணவனைக் கொன்று என்னிடம் இருந்து பிரித்தாயோ, அந்த வினை இந்தப் பிறவியிலேயே உன்னைத் தொடரும். நீ சீதையைப் பிரிந்து, அவளை நினைத்து நினைத்துத் தனிமையில் கண்ணீர் வடிப்பாய். இது நான் படும் துயரத்தின் மீது சத்தியம்!” என்று சொல்லிவிட்டு, அந்த ஆவேசம் தாங்காமல் மயங்கி வாலியின் உடலின் மீது சரிந்தாள் தாரை.
இராமன் சிலையாக நின்றான். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவன் கண்களில் கோபமோ வருத்தமோ இல்லை. பிரபஞ்சத்தின் விதியை ஒரு பேரரசி தன்னுள் இருந்து எப்படிச் செயல்படுத்துகிறாள் என்பதை அவன் அமைதியாக உள்வாங்கினான். தாரையின் சாபத்தை அவன் மறுக்கவில்லை; தர்மத்தின் விலையாக அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டான். கர்மவினை எனும் மகாசக்கரம் சுழலத் தொடங்கிவிட்டது.
பின் குறிப்பு:
வட இந்திய ராமாயணச் சுவடிகளிலும், வங்காள மொழியில் எழுதப்பட்ட கிருத்திவாச ராமாயணம் மற்றும் ஒடிய மொழியில் எழுதப்பட்ட விலங்கா ராமாயணம் போன்ற வட்டார மொழி ராமாயணங்களிலும் தாரையின் இந்தச் சாப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய கற்பின் வலிமையால் தாரை ராமனைச் சபித்ததாகவும், அந்த வினைப்பயன் காரணமாகவே ராமன் பின்னாளில் சீதையைப் பிரிந்து தனிமையில் வாடினான் என்றும், அடுத்த பிறவியான கிருஷ்ண அவதாரத்தில் வாலியே ஒரு வேடனாகப் பிறந்து ராமனை அம்பெய்திக் கொன்றான் என்றும் பரவலான நாட்டுப்புறக் கதைகள் காலப்போக்கில் உருவாகி நிலைபெற்றுவிட்டன.
கர்மவினைச் சுழற்சியை ராமனுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற எளிய மக்களின் தத்துவத் தேடலே இத்தகைய நாட்டுப்புறக் கதைகளுக்கு அடிப்படை.
மேலும் ஜைன ராமாயணத்தின்படி (பவுமசரியம்), வாலி வானரமாக இல்லாமல் ‘வித்யாதரர்’ எனப்படும் மானுட சக்திகளையும் மீறி அதிக சக்தி கொண்ட குலத்தைச் சேர்ந்தவன். அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட இந்த நூலில் ராமன் வாலியைக் கொல்லவில்லை.
உலகியல் ஆசைகளின் நிலையாமையை உணர்ந்த வாலி, சுக்ரீவனுடன் போர் செய்வதைத் தவிர்த்துத் தன் சாம்ராஜ்யத்தை அவனிடமே ஒப்படைக்கிறான். பின்பு ஒரு ஜைன முனிவராக மாறி தவம் மேற்கொள்கிறான். அஷ்டபாத மலையில் தியானத்தில் இருந்தபோது, மலையைப் பெயர்க்க முயன்ற இராவணனைத் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்தி அவனது கர்வத்தை அடக்குகிறான். இறுதியாக, வாலி தனது கடுமையான தவத்தினால் கர்ம வினைகளிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறான்.
சுருக்கமாக, ஜைன ராமாயணத்தில் வாலி ராமனால் கொல்லப்படவில்லை; மாறாக, அதிகாரத்தைத் துறந்து ஆன்மீக விடுதலை அடைந்த மாபெரும் துறவியாகச் சித்திரிக்கப்படுகிறான்.