வரலாற்றில் போர்கள் நிலபரப்பை மற்றும் அது சார்ந்த அதிகாரத்தை கைபற்றவும் நடந்தவை. ஆனால் சில போர்கள் அந்தகாலத்தில் நிலவிய வணிக பொருளாதாரத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட போர்களில் மிக முக்கியமானது இரண்டாம் பியூனிக் போர்.
இரண்டாம் பியூனிக் போர் பற்றி பேசுவதற்கு முன் நாம் பொருளாதார இயற்பியல் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியமாகுகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறதென்றால் ஒவ்வொரு செயலுக்கும் ( அதற்குச் சமமான மற்றும் எதிர் திசையில் அமைந்த எதிர் செயல் ஒன்று கண்டிப்பாக நடக்கும் என சொல்கிறது.
முதலாம் பியூனிக் போரில் தோல்வி அடைந்த கார்த்தேஜ் ராஜ்ஜியம் இழந்தது வருவாய் வாய்ப்பு மட்டும் இல்லை கடல் சார்ந்த வணிகத்தின் மீது இருந்தது அதிகாரத்தையும் தான். இவை எல்லாம் சேர்ந்து அதிகார வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தை பாதித்தது. கஷ்ட படும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை எல்லா காலங்களிலும் அதிகார வர்க்கத்தினரால் பாதிப்படைந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் அது பெரும்பாலும் போர்களை ஆரம்பித்து வைக்கவில்லை. முதலாம் போரின் தோல்வி அவர்களது வலிமையை சோதித்து பார்த்தது.
அந்த தோல்வி அதுவரையில் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் வருமான ஆதாரங்களாக இருந்த சிசிலி, சார்டினியா போன்றவை எல்லாம் ரோம் ராஜ்ஜியத்திற்கு போனது. என்ன தான் ரோமில் குடியரசு ஆட்சி நடந்து கொண்டு இருந்தாலும் வணிக பொருளாதார வரலாற்றை பேசும் பொழுது அதனை ராஜ்ஜியமாக தான் கருதி பேச வேண்டும். இல்லாவிட்டால் பண்டைய ரோம் குடியரசு பற்றி எல்லாம் பேச வேண்டி இருக்கும். இனி வர போகும் அத்தியாயங்களில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்கு ரோம் ராஜ்ஜியத்தின் குடியரசு அமைப்பின் தாக்கம் இருந்தால் அதனை பற்றி பேசலாம்.
இரண்டாம் பியூனிக் போர் நடக்க முக்கிய காரணம் மத்தியதரைக் கடலின் வணிக ஆதிக்கம் ரோம் ராஜ்ஜியத்திடம் இருந்தது தான்.
கி.மு.264 முதல் கி.மு.241 வரையில் முதலாம் பியூனிக் போர் நடந்தது. அந்த போர் தந்த பாதிப்பில் இருந்து கார்த்தேஜ் ராஜ்ஜியம் மீண்டு வர 23 வருடங்களானது.
வரலாற்றை ஆராயும் பலர் ஏன் இந்த 23 வருட இடைவேளை என்ற கேட்பார்கள். குறைந்த வருவாய் கொண்டு போர் தந்த இழப்புகளில் இருந்து மீண்டு வரவும் அடுத்த போருக்காக ஆயத்தமாகவும் இந்த இடைவேளை ஆகிருக்கலாம்.
அப்படி ஆயுத்தமான பிறகு ரோம ராஜ்ஜியத்தின் மீது கார்த்தேஜ் ராஜ்ஜியம் போர் புரிய கிளம்பினார்கள்.
கி.மு.218. இரண்டாம் பியூனிக் போர் தொடங்கியது. இரண்டாம் பியூனிக் போர் ஒரு கார்த்தேஜ் வீரனை உலக சரித்திரத்திற்கு அறிமுகம் செய்கிறது.
ஹனிபால் பார்கா.
முதலாம் பியூனிக் போரின் பொழுது கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் சார்பில் போரிட்ட இராணுவ தளபதியான ஹமில்கார் பார்காவின் மகன் தான் இந்த ஹனிபால் பார்கா.
யார் இந்த ஹமில்கார் பார்கா?
ஹாமில்கார் பார்கா கி.மு. 275– கி.மு.228 காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த கார்த்தேஜ் ராஜ்ஜிய தளபதிகளில் ஒருவர்.
குறைந்த படை பலத்துடன் முதல் பியூனிக் போரின் இறுதியில் ரோம ராஜ்ஜியத்தை எதிர்கொண்டு போரிட்டவர்.
கார்த்தேஜ் ராஜ்ஜியம் தோல்வியடைந்த பிறகும் தனது திறமையால் ஸ்பெயின் பகுதிகளில் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் ஆட்சியை பரவ செய்து பியூனிக் முதலாம் போர்களால் இழந்த வருவாய் வாய்ப்பை ஈடு செய்யும் விதத்தில் கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்காக புதிய வணிக மையங்களை உருவாக்கி கார்த்தேஜ் ராஜ்ஜியம் பொருளாதார ரீதியாக நஷ்டமடையாமல் பாதுகாத்தார்.
எல்லா மகன்களுக்கும் அவர்களது தந்தை தான் அவர்களது உலகத்தில் முக்கிய கதாநாயகர்கள். வீரமிக்க ஹனிபால் பார்கா உருவாக்க காரணம் ஹமில்கார் பார்கா ஹனிபால் பார்காவிடம் ரோம் ராஜ்ஜியத்துடன் எந்த காலத்திலும் நட்பு பாராட்ட கூடாது, எப்பொழுதும் அவர்கள் உனக்கு எதிரிகளாக தான் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி இருந்தார். ஹனிபால் சிறுவனாக இருந்த பொழுது வாங்கப்பட்ட சத்தியம், அவன் வளர வளர ரோம் ராஜ்ஜியத்தின் மீதான வளர்ந்து கொண்டே போனது.
கடல் வணிகம் சார்ந்து நடக்கும் போர்களில் பெரும்பாலான நேரங்களில் அரசர்கள் எதிரி நாட்டை தாக்க வேகத்தை தரும் கடல் வழியைத்தான் தேர்வு செய்வார்கள் ஏனென்றால் அது அவர்களது ஆற்றலை இன்னும் அதிக படுத்தும். இதனை தான் கார்த்தேஜ் ராஜ்ஜியம் செய்யும் என ரோம் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஹனிபால் வேறு மாதிரி யோசித்தார். ரோம் ராஜ்ஜியம் சற்றும் எதிர்பார்காத வழியான ஆல்பஸ் மலைத்தொடர் வழியாக ஆயிரக்கணக்கான வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் ஒரு படையாக திரட்டி கொண்டு கடந்தார். இந்த படையை திரட்ட ஹமில்கார் பார்கா கைபற்றிய ஸ்பெயின் பகுதியில் இருந்த பொருளாதார மையங்களில் இருந்து கிடைத்த நிதியை பயன்படுத்தி கொண்டார். அந்த நிதி மட்டும் கிடைக்கவில்லை என்றால் ஆல்பஸ் மலைப்பகுதியை அவ்வளவு பெரிய படையுடன் கடப்பது சாத்தியமாகி இருக்காது.
ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் மக்களையோ அல்லது அதன் ஆட்சியாளர்களையோ கொல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்த நாட்டுக்கு வருமானத்தை தரும் பொருளாதார மையங்களை அழித்தாலே போதும் என்பதை ஹனிபால் பார்கா உலகத்திற்கு செய்து காட்டினார்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த சம்பவங்கள் நடந்து ஆயிரம் வருடம் கழித்து கலிங்கத்தின் மீது படையெடுத்து போன முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் அவரது படைகள் இதனையே தான் செய்தார்கள். கலிங்கத்தின் வருமான ஆதாரங்களான விவசாய நிலங்கள், நீர்நிலைகள், பொருளாதார மையங்கள் என அழித்தார்கள் என்பதை ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.அந்த படையெடுப்பின் நோக்கம் எதிர்காலத்தில் சீக்கிரம் கலிங்கம் அதில் இருந்து மீண்டும் வந்துவிட கூடாது மேலும் பக்கத்து ராஜ்ஜியங்களுக்கு எல்லாம் சோழர்கள் மீது பயம் வர வேண்டும் என்று தான்.
இந்த யுத்தியை தான் ஹனிபால் பார்கா கையாண்டார். ரோம் நகரம் என்ன தான் செல்வசெழிப்புடன் இருந்தாலும், அந்த செல்வம் எல்லாம் ரோம் நகரத்தை நோக்கி வந்த வணிக சாலைகளில் தான் உருவானது. எனவே அந்த வணிக சாலைகளை தான் முதலில் ஹனிபால் பார்கா தாக்க ஆரம்பித்தார்.
ட்ரெபியா, டிராசிமீன், கன்னே என ரோம் ராஜ்ஜியத்தின் பொருளாதார மையங்களாக இருந்தவற்றை எல்லாம் ஹனிபால் பார்கா தலைமையிலான படை கைபற்றிக் கொண்டு இருந்தார்கள்.
எண்ணிக்கையில் குறைவாக இருந்த கார்த்தேஜ் ராஜ்ஜிய படை பல போர் தந்திரங்களை பயன்படுத்தி மிகப்பெரிய ரோம் ராஜ்ஜியத்தின் படையையே வெற்றி கண்டார்கள். ரோம் ராஜ்ஜியத்தின் வரலாற்றிலேயே இப்படியான தோல்வியை அவர்கள் சந்தித்தது இல்லை.
மேலும் இந்த தோல்வி வெறும் தோல்வியாக மட்டும் இருக்கவில்லை ரோம் ராஜ்ஜியத்திற்கு, வணிகர்களின் நம்பிக்கையை இழந்து கொண்டு இருந்தார்கள். இந்த தோல்வி ரோம் நகரத்து வணிகர்களின் மத்தியில் தங்களது வணிகத்தின் பாதுகாப்பை பற்றி கவலைகளை உருவாக்கியது.
இந்த காலம் வரைக்கும் வணிகர்களின் நம்பிக்கையை இழந்த எந்த நாடும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை.
வரி வசூலில் நிலைபற்ற தன்மை, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்திலும் தடங்கல் நிலவியது, அப்படி நிலவியதின் மூலம் வியாபாரத்திற்காக கடல் கடன் கொடுத்தவர்களும் பாதிக்கபட்டனர்.
நிலை இப்படியாக இருந்தும் ரோம் ராஜ்ஜியம் முடங்கி போகவில்லை. ஏனென்றால் போரில் ஹனிபால் பார்கா செய்த பெரிய தவறு தான் காரணம்.
அதென்ன தவறு ?
போர் புரிய, படை நடத்த, ஆயுத்தம் பயன்படுத்த என போர் சார்ந்து பலவற்றை கற்று இருந்த ஹனிபால் பார்கா வணிகத்தையும் அது சார்ந்த பொருளாதாரத்தையும் கற்றுகொண்டு இருக்கவில்லை.
போரில் தோற்றாலும் வணிகம் சார்ந்து நிலையற்ற தன்மை இருந்தாலும் வணிகத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் நகரங்களை பொருளாதார மையங்களை கைபற்றிய ஹனிபால் பார்கா அவற்றை கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் வணிக மையங்களாக மாற்றவில்லை.
அதன் பலனாய் வணிகத்தின் அளவு குறைந்தாலும் அவை தொடர்ந்து ரோம் ராஜ்ஜியத்தின் துறைமுகங்களாக இயங்கின. அப்படி இயங்கியதின் மூலம் ரோம் ராஜ்ஜியதின் ஆட்சி தடைப்பட்டாலும் ரோம் அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்கின. அதனால் புதிய வரிகளை விதித்து மீண்டும் படைகளை உருவாக்கினர்.
ஒரு நாடு தனது வணிகத்தை காப்பாற்றிக் கொண்டால் அந்த வணிக அமைப்பில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு எவ்வளவு பெரிய தோல்வியிலிருந்தும் மீண்டு வந்து இழந்த ராஜ்ஜியத்தை காப்பாற்றி கொள்ள முடியும் என்பதை ரோம் ராஜ்ஜியம் செய்து காட்டியது.
இதன் மூலம் உலக ராஜ்ஜியங்களுக்கெல்லாம் இரண்டாம் பியூனிக் போர் ஒன்றை சொல்லி கொடுத்தது. அது என்னவென்றால் ஒரு நாட்டை போரில் வென்று ஆட்சி செய்ய வேண்டுமென்றால் அந்த நாட்டின் இராணுவ படையை பற்றி மட்டும் இல்லை அதனுடைய வருவாய் அமைப்பையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் போரில் வென்றும் நாட்டை இழக்க வேண்டி இருக்கும்.
இதனை கற்று கொண்ட ரோம் ராஜ்ஜியம் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தை முழுமையாக அழிக்க திட்டமிட்டது. அந்த திட்டம் தான் மூன்றாம் பியூனிக் போருக்கான அடித்தளமாக அமைந்தது.
தொடரும்…