Home கட்டுரைமருத்துவர் பக்கம் – 36: பல வண்ண அபாய அப்பளம்

மருத்துவர் பக்கம் – 36: பல வண்ண அபாய அப்பளம்

by Farooq Abdullah
0 comments

பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.

பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (MSME) தயார் செய்யப்படுபவை ஆகும்.

உணவுகளில் நிறம் சேர்க்கப்படும்போதும் சுவை சேர்க்கப்படும்போதும் அந்த உணவுப் பொருள் எளிதாகவும் வேகமாகவும் அதிகமான அளவிலும் சந்தையில் விற்பனை ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.

உணவுப் பொருளின் நிறம் மற்றும் சுவையை இயற்கையான பொருட்களைக் கொண்டும் கூட்டலாம்.

அரசின் வரம்புமுறைக்குட்பட்டு செயற்கை நிறமூட்டிகள்/சுவைகூட்டிகள் கொண்டும் உணவின் நிறத்தையும் சுவையையும் கூட்ட முடியும்.

இந்த நிலையில், கலர் அப்பளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிதமிஞ்சிய அளவுகளில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இத்தகைய நிறமூட்டிகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது:

  • வயிற்று உபாதைகள்
  • இரைப்பை புண்
  • செரிமானக் கோளாறுகள்
  • குடல் அழற்சி நோய்
  • மலம் வெளியேறுவதில் கோளாறு

என்று ஏற்படுகிறது.

தொடர்ந்து இது போன்ற நிறமூட்டிகளில் பாதகம் உண்டாக்கும் உலோகங்கள் அளவுக்கு மீறி இருந்து, அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதனால் நாளடைவில் சிறுநீரகக் கோளாறும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

செயற்கை நிறமூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்து அவற்றை அதிகமாக சாப்பிடும்போது நாளடைவில் அது புற்றுநோய்க்கு காரணியாக அமையும் வாய்ப்பும் அரிதாக உள்ளது.

முக்கியமாகக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

காரணம்: குழந்தைகள் எப்போதும் வண்ணமயமான உணவை விரும்பி சாப்பிடுவார்கள். கூடவே நல்ல இனிப்பு சுவை கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பார்கள். எனவே, குழந்தைகளிடம் சந்தைப்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் வண்ணமயமாகவும் சுவை கூட்டப்பட்டும் விற்பனை ஆகின்றன.

பொதுவாக இந்திய உணவுப் பாதுகாப்புத் துறையால் உணவுகளில் அனுமதிக்கப்பட்ட நிறமூட்டிகள் பின்வருமாறு:

இயற்கை நிறமூட்டிகள்

  • பீட்டா கரோட்டின் (கேரட்)
  • குர்குமின் (மஞ்சள்)
  • குளோரோபில் (பச்சையம்)
  • அனாட்டோ

செயற்கை நிறமூட்டிகள்

  • டார்ட்ராசின்
  • அலூரா ரெட்
  • பிரில்லியன்ட் ப்ளூ
  • சன்செட் எல்லோ

மேற்கூறியவை ஒரு கிலோகிராம் உணவுப் பொருளில் அதிகபட்சம் 100 மில்லிகிராம் என்ற அளவுக்குள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.

மேலும் இந்த நிறமூட்டிகளில்:

  • ஈயம் – 10 பிபிஎம்முக்குள்
  • அர்செனிக் – 3 பிபிஎம்முக்குள்
  • மொத்த கன உலோகங்கள் < 40 பிபிஎம்முக்குள்
  • துத்தநாகம் மற்றும் காப்பர் – ஜிஎம்பி வரையறைக்குள்

என்ற அளவிலேயே இருக்க வேண்டும்.

மேலும் உணவுப் பொருளில் நிறமூட்டிகள் மற்றும் சுவைகூட்டிகள் சேர்ந்திருந்தால் கட்டாயம் அந்த உணவுப் பொருளின் மடிப்புக் காகிதத்தில்:

“அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன / Contains permitted natural colours”

“அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன / Contains permitted artificial colours”

“அனுமதிக்கப்பட்ட இயற்கை & செயற்கை நிறமூட்டிகள் & சுவைகூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன / Contains permitted natural & synthetic colours & flavouring agents”

என்ற குறிப்புடன் கூடவே அவற்றின் INS எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நிறமூட்டிகள் விவரம் வருமாறு:

  • சூடான் டை (I முதல் IV)
  • ரோடமின் பி
  • மெட்டானில் எல்லோ
  • கூமாரின்
  • டை ஹைட்ரோ கூமாரின்
  • பீட்டா அசரோன்
  • சஃப்ரோல்
  • ஐசோ சஃப்ரோல்
  • துஜோன்

ஆகியவை உணவில் கட்டாயம் சேர்க்கப்படக் கூடாது என்று சட்டம் உள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த நிறுவனங்களின் உணவுப் பொருட்களைத் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

எனினும், உணவு உற்பத்தியாளர்களும் தனிக்கவனம் எடுத்து சரியான, அனுமதிக்கப்பட்ட அளவில் நிறமூட்டிகள் மற்றும் சுவைகூட்டிகளை உபயோகிக்கவும், உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும்.

நுகர்வோரும் தாங்கள் உண்ணும் உணவின் தரத்தையும், தாங்கள் சாப்பிடும் உணவை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தரத்தையும், அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் மற்றும் சுவைகூட்டிகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது சிறந்தது.

Author

You may also like

Leave a Comment