மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை ‘ஸ்ட்ரோக்‘ என்று அழைக்கிறோம்.
இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது.
எப்படி இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை “ஹார்ட் அட்டாக்” (இதய ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கிறோமோ, அதைப்போல இந்த ஸ்ட்ரோக்கை “ப்ரைன் அட்டாக்” (மூளை ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கலாம்.
“மூளை” என்பது நமது தலைமைச் செயலகம் என்பதை அனைவரும் அறிவோம்.
நமது இச்சைச் செயல்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் மூளைதான். நமது எண்ணங்கள், செயல்பாடுகள் அனைத்திற்கும் மூலக் காரணம் மூளை. மூளைக்குத்தான் நமது ரத்த ஓட்டத்தின் பெரும்பங்கு செல்கிறது.
இப்படிப்பட்ட மூளையையும் முடக்கும் விதமாக ரத்த ஓட்டச் சுணக்கம் இரண்டு வகைகளில் நடக்கும்:
முதல் வகை:
ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு (ISCHAEMIC STROKE). இதுதான் அரிதி பெரும்பான்மை பேருக்கு ஏற்படும்.
இரண்டாவது வகை:
ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவு (HAEMORRHAGIC STROKE). மேற்சொன்ன இரண்டில் இதுதான் அதிக ஆபத்தானது.
இந்த அடைப்பு, மூளைக்குள் உள்ள ரத்தக் குழாய்களில் மெல்ல மெல்ல அடைப்பு ஏற்படுவதால் இருக்கலாம். இதை THROMBOTIC STROKE என்று அழைக்கிறோம்.
அல்லது
வேறெங்கோ ரத்தக்கட்டி ஏற்பட்டு அது உடைந்து மூளைக்கான ரத்த நாளங்களுக்குள் வந்து அடைப்பு ஏற்படுத்துவது. இதை EMBOLIC STROKE என்று அழைக்கிறோம்.
மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது என்பதற்கான அறிகுறிகள் யாது????
இதைச் சுருக்கமாக BE FAST என்று கூறுவோம்.
- B – Balance: நடையில் தள்ளாட்டம், சரியாக நேர்க்கோட்டில் நடக்க இயலாமல் போவது.
- E – Eye sight: திடீரென ஒரு அல்லது இரு கண்ணிலும் பார்வை பறிபோவது அல்லது பார்வைக் குறைபாடு ஏற்படுவது.
- F – Facial palsy: ஒரு பக்க முகம் தொங்கிப்போவது, வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது.
- A – Arm down: ஒரு பக்க கை அல்லது ஒரு பக்க கை மற்றும் கால் இயங்காமல் தொங்கி விடுவது.
- S – Speech: நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர் பேச்சு குளறுவது அல்லது பேச இயலாமல் போவது.
- T – Time: இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் உடனே குறித்த நேரத்தில் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்.
எவ்வளவு நேரத்தில் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்???
ஒருவருக்கு மூளை ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதும், அந்த குறிப்பிட்ட இடத்தைச்சுற்றி உள்ள அளவில் குறைவான மூளையின் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு அங்கிருக்கும் செல்கள் முற்றிலும் இறந்துவிடும். இதை CORE AREA என்று கூறுகிறோம். இது ஐந்தே நிமிடங்களில் நிகழ்ந்துவிடும்.
ஆனால் அடைப்பு ஏற்பட்ட அந்த மையப்பகுதியைச் சுற்றி இருக்கும் பெரும்பான்மை பகுதிகளுக்கு இன்னும் ரத்த ஓட்டம் முழுமையாகத் தடைபட்டிருக்காது. மிகக் குறைவான ரத்த ஓட்டத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பகுதியின் மூளைச் செல்கள் காத்திருக்கும். அந்தப் பெரும்பகுதியை ISCHAEMIC PENUMBRA என்று அழைக்கிறோம்.
இந்தக் காத்திருப்பு காலம்தான் GOLDEN PERIOD FOR STROKE என்று அழைக்கப்படுகின்றது.
இது வெறும் நான்கரை மணிநேரங்கள் மட்டுமே.
எனவே ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிமிடத்தில் இருந்து 180 நிமிடங்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைந்தால், அவருக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து கொடுக்கப்பட்டு மீண்டும் மூளையின் பெரும்பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்ச்சப்பட்டு காப்பாற்றப்படும்.
ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி, முக்கியமான இந்தச் சில மணிநேரங்களை வீட்டிலேயோ அல்லது பயணத்திலோ கழித்துவிட்டுத் தாமதமாகக் கொண்டு செல்லும்போது, ரத்தக்கட்டி நன்றாக உறைந்து கரைக்கும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது.
அதற்குப் பிறகும் ரத்தக்கட்டியைக் கரைக்கும் த்ராம்பெக்டமி சிகிச்சை முயன்று பார்க்கப்பட்டாலும், முதல் நான்கரை மணிநேரங்களுக்குள் செல்பவர்களுக்குக் கிட்டத்தட்ட முழுமையாக வாதம் சரியாகும் விந்தையைக் காண முடியும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், இதற்கென பிரத்யேகமான தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகின்றன.
60 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு பெண்களை விட அதிக ரிஸ்க் உண்டு.
தெற்காசியாவைச் சேர்ந்த நமக்கு ஸ்ட்ரோக் ரிஸ்க் அதிகம்.
உயர் ரத்த அழுத்தம், போதிய உறக்கமின்மை, புகைப் பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பின்மை போன்றவை இதற்கான வேறு சில சரிசெய்யக்கூடிய காரணங்கள் ஆகும்.
தற்போது பல இளைஞர்களுக்கும் பக்கவாதம் வருவதைக் காண முடிகின்றது.
மன அமைதியுடன், ரத்த அழுத்தத்தை முறையான சிகிச்சை மூலம் பேணி, புகைப் பழக்கத்தை விட்டொழித்து, உடல் பருமன் குறைத்து, உடலை வளைத்து உழைப்பு செய்து வாழ்ந்தால் இந்த பக்கவாதம் வருவதைத் தடுக்க இயலும்.
பக்கவாதம் வந்தவர்களுக்கு முறையான பேச்சுப் பயிற்சி, இயன்முறை மருத்துவம், சுய வேலைகளுக்கான பயிற்சி போன்றவற்றைச் சரியான நேரத்தில் கொடுத்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
பக்கவாதம் வந்த முதியோர்களைக் கவனிக்கும்போது தண்ணீர் மெத்தையில் வைத்துப் பராமரிக்க வேண்டும்; அல்லது அவர்களை இருபக்கவாட்டிலும் திரும்பித் திரும்பி அரை மணிநேரத்திற்கு ஒருமுறை படுக்கச்செய்ய வேண்டும். முதுகில் அழுத்தம் தராத துணிகளைப் போடவேண்டும். அவர்களால் அசைய முடியாமல் போவதால், முதுகுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு பெரிய புண்கள் ஏற்பட்டுச் சீழ் பிடித்து பெரும் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உண்டு.
பக்கவாதம் குறித்த விழிப்புணர்வையும், GOLDEN HOUR நான்கரை மணிநேரம் குறித்த விழிப்புணர்வையும் நாமும் பெற்றுப் பிறர்க்கும் எடுத்துக்கூறுங்கள்.
தயவு செய்து பக்கவாதம் ஏற்பட்ட ஒருவரை வீட்டிலேயே வைத்து அல்லது அதை சிகிச்சை தருவதற்குத் தகுதி குறைந்த மருத்துவமனையில் வைத்து நேரத்தைக் கடத்துவதை விடுத்து, உடனடியாக அதற்குண்டான பிரத்யேக மருத்துவமனைக்குச் சில மணிநேரங்களுக்குள் அழைத்துச் சென்றால் பக்கவாதத்தைப் பக்காவாகச் சரி செய்ய இயலும் என்பது திண்ணம்.
பிறருக்கும் இந்தச் செய்தியை எடுத்துக்கூறுங்கள்.