நல்லாச்சி – 43

This entry is part 42 of 42 in the series நல்லாச்சி

பன்னாட்களாய்ப் பராமரிப்பின்றி
கட்டாந்தரையாய்க்கிடக்கிறது வீட்டுத்தோட்டம்
ஆடி, தையென எல்லாப்பட்டங்களையும்
பறக்க விட்டு
சாரலையும் தூறலையும் கண்டுகொள்ளாது
வயல்களும் தோப்புகளுமே சரணமென்றிருந்தவர்களிடம்
கடுப்புற்று
உலோபியின் நெஞ்சென இறுகிக்கிடக்கிறது நிலம்
யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் நல்லாச்சி
செலவிடாத தாத்தாவை வழிக்குக்கொண்டுவரும்
வகையறியாமல்.

கண்ணீர் ததும்ப ஓடிவருகிறாள் பேத்தி
கனத்த கட்டிக்கொலுசு
நவமணி பதித்த தங்கக்கொலுசு
தோட்டத்து எலிப்பொந்தில் விழுந்துவிட்டதாம்
அலறியடித்து விரைகிறார் தாத்தா
மடமடவென உத்தரவுகள் பறக்க
பரபரவென களையப்படுகின்றன களைச்செடிகள்
எத்திக்கில் விழுந்ததென்றறியா கொலுசைத்தேடி
கடப்பாரைகளும் மண்வெட்டிகளும்
பயணிக்கின்றன பூமிக்குள்
வெளிவந்து சுவாசிக்கிறது உள்மண்

போதுமென்றுணர்ந்ததொரு நொடியில்
பதுக்கிய கொலுசைக்கொணர்கிறாள் பேத்தி
நிம்மதிப்பெருமூச்சில் தூசுபறக்கிறது தோட்டம்
“ஆனது ஆச்சு, கிளறித்தாரேன்
கரம்பைமண் கொட்டுங்க பொன்னா விளையும்”
ஜேசிபியால் உழவோட்டுகிறார்
தூரத்துச்சித்தப்பா ஒருத்தர்
ஏருழவும் காருழவும் டிராக்டர் உழவும்
பார்த்த மக்கள் இதையும் ரசிக்கின்றனர்
“தெனாலி ராமனுக்கு நன்றி” என்றபடி
ரகசியமாய்க் கண்சிமிட்டுகிறாள் பேத்தி
கதைகளின் விளைவெனப்
புரிந்த நல்லாச்சி சிரிப்பையடக்குகிறாள்
புரியாத தாத்தா
விதைக்கணக்குப் போடவாரம்பிக்கிறார்.

நல்லாச்சி

நல்லாச்சி – 41

Author

Related posts

உருதுக் கவிதை உலகு: 14 – இப்ராகீம் ஸவுக்

அறிவெழுச்சி: 15

மருத்துவர் பக்கம் – 44: பக்கவாதமும் சிகிச்சையும்