Home கவிதைதொலைவிலிருந்து கேட்கும் பாடல்

தொலைவிலிருந்து கேட்கும் பாடல்

by Ramalakshmi Rajan
0 comments

வீடு பழகிக் கொண்டது
மெல்லிய சத்தங்களில் பேச-
ஒரு நாற்காலி நகர்வது,
தொண்டையைச் செருமும் கடிகாரம்.

மாலைகள் நிதானமாக வந்தடையும்
சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்
இன்றைய நடமாட்டத்தை விட
அதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்
அந்தச் சாலையைப் பார்த்தபடி.

சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,
ஆனால் அது இப்போது தெளிவற்றுக் கேட்கிறது,
வேறொரு தெருவிலிருந்து கேட்கும்
ஒரு பாடலைப் போல.

அவர் அஞ்சுவது இரவைக் கண்டு அல்ல,
காலத்தின் மெதுவான நகர்வைக் கண்டும் அல்ல.
மாறாக,
தன் நினைவுகள் கூட
கதவைத் தட்டுவதை நிறுத்திவிடக் கூடும்
அந்த ஒரு நாளை எண்ணி.

Author

  • Ramalakshmi Rajan

    ராமலக்ஷ்மி : எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment