Home இதழ்கள்இதழ் 13தமிழே அமிழ்தே – 16
This entry is part 16 of 16 in the series தமிழே அமிழ்தே

பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்
வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்
பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்
நீருக்குள் தலைமுங்கு நிலை.

மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

வெண்பா அமைப்பில் ஈற்றடி அமைந்திருக்கும். ஆயினும் கலித்தளையானும் (காய்ச்சீர் முன் நிரை கொண்டு துள்ளலோசை), வெண்டளை மற்றும் ஆசிரியத் தளை விரவியும் வருவது வெண்கலிப்பா வகையாகும். (இதில் வெண்டளை மட்டுமே கொண்டு அமைவது கலிவெண்பா என்றாகிவிடும் – அது வேறு வகை).

கலிவெண்பா எழுதப்படும் அளவுக்குக் கூட வெண்கலிப்பா அதிகமும் எழுதப்படுவதில்லை. அப்படியே எழுதினாலும் பிழையாக எழுதப்படும் வெண்பா என்பது போல எண்ணிக் கொள்கிறார்கள்.

வெண்பாவுக்குரிய வெண்டளை விரவி வரலாம் எனினும் மாச்சீர்களும் நிரைநடுவஞ்சிச் சீரும் வரலாகா என்கிறது இதற்கான இலக்கணக் கட்டு.

கலித்தளையும் வெண்டளையும் விரவி வெண்பா போலவே முதற்சீர் மூன்றாம் சீர்களில் மோனையும் இரண்டு அடிகளுக்கு எதுகையும், இறுதி அடி மூன்று சீர்கள் மட்டுமே கொண்டும், இறுதியில் நாள் மலர் காசு பிறப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றுடனும் அமைந்தால் வெண்கலிப்பா ஆகிவிடும்.

இப்போது மேற்கண்ட பாடலை மீண்டும் வாசித்துப் பாருங்கள். துள்ளலோசை அமைந்துள்ளதா? வெண்கலிப்பா இது தான்.

இன்னுமொரு சான்றுப் பாடல்..

மனிதமனம் மலைகளையும் மடுவாக்கும்; மலைகளுக்கும்
தனித்துவத்தைத் தரமறுக்கும் தவறுகளை இழைத்துவிடும்
எண்ணத்தில் சரியென்ப எல்லாமும் இயல்பாகா
உண்மையினை உணர்வதுவே உயர்வு.

ஆக, ஒரு செய்தியை வெண்பாவில் முயன்றும் காய்ச்சீரை அடுத்து இயல்பாக நிரை வந்துவிட்டால், தளைப் பிறழ்வு என்று தவிக்காமல் தொடர்ந்து முன்னேறி வெண்கலிப்பாவாக மாற்றிக் கொள்ளலாம் தானே..

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 15

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

Leave a Comment