Home கவிதைஉமா ஷக்தி கவிதைகள்

உமா ஷக்தி கவிதைகள்

by Uma Shakthi
0 comments

உறைதல்

உள்ளங்கையில் ஏந்திய நீர்
கண்ணாடியாக மாறுகிறது
தரை மீது விழுந்து
உடையாத வார்த்தைகள்
நுனி வரை வந்து
பனியாக நின்றுவிட்டன
அசைவற்ற பகல் பொழுதின்
கனமான ஒளி
மௌனத்தின் விளிம்பை
உறையச் செய்கிறது.
அந்த மேசையில் வைத்த
தேநீர் கோப்பை
இனி சூடாகப் போவதில்லை

உயரப் பறத்தல்

நாம் ஒரே வானில் பறந்தோம்
ஒரே உயரத்தில் இல்லை.
உன்னிடம் இதைப்பற்றி
பேச முடியாமல் போகிறது
இன்று முழுவதும்
ஒரு சொல்லைத் தேடுகிறேன்
அது உன் கதவுக்குப்
பின்னால் ஒளிந்திருக்கிறது
உன் மௌனத்தின் நிழலை
பிரித்துப் பார்க்கிறேன்
கொடிகளாய் படர்ந்த நம் நாட்களை
அவை நினைவு படுத்துகிறது
பறத்தலில் நாம் சோர்வடைவதில்லை
நீ என்னிடம் கையளித்த
தானியங்களை தூர எறிந்துவிட்டேன்.

இரவின் நடுவில்

மழை நின்றுவிட்டது,
மண் வாசனை
வீட்டினுள் புகையாய் நுழைகிறது
சுவரில் ஆடுகின்ற கடிகாரம்
காலத்தின் நிழலை
பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் வாசிக்காத புத்தகம்
பாதி திறந்து கிடக்கிறது,
அதன் தீரா பக்கங்கள்
காற்றில் படபடக்கிறது
இப்போதெல்லாம்
எனக்கு சொல்ல ஒன்றுமில்லை,
கேட்கவும் ஒன்றுமில்லை
பழைய காற்று புதிய காற்றை
தொடும் இடத்தில் நான் குளிர்கிறேன்
**

காதல் என்பது நீயும் இல்லை,
நானும் இல்லை
நமக்கு இடையில் வீசும்
இந்த மென்காற்று.

**
இன்று காலை ஒரு
பட்டாம்பூச்சி என் கையில் அமர்ந்தது,
அது ஒன்றுமே சொல்லவில்லை,
எல்லாம் புரிந்தது.

Author

You may also like

Leave a Comment