Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 20

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 20

0 comments
This entry is part 25 of 25 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா

அழகின் பெயர்ச்சொல்

கண்ணாடியில் அச்சாகும் தன் அழகைப்
பார்க்கும்போதெல்லாம்
அவள் பட்டு இதழ்களில் மல்லிகைத் தோட்டங்கள்
மலர்ந்து விரியும்
சரமாகக் கோத்த நட்சத்திரங்களைக் கூந்தலில்
முடித்துக்கொள்ளும்போது
இருளை ஆக்கிரமித்துக்கொண்ட
கருங்கூந்தல் வானத்தில்
ஆயிரம் ஒளிகளைப் பரப்பும்

நெற்றி அலைகளின் தீரத்தில்
இளைப்பாறும் வகிடுப் படகு
கன்னத்தை முத்தாடிக்கொண்டு
நெளிந்து கொண்டிருக்கும் மச்சம்
அமுதம் பூசிய நுனிவிரல் தீண்டலுக்கு
நளினம் பொங்கும் கழுத்தின் வளைவு
முன்பல் வரிசையின் பிரகாசத்தை
எட்டிப் பார்க்கும் குறும்பு மூக்குத்தி
உண்மையில்
அவள் வழிதப்பி நம்மிடையே வலம் வருகிற
அழகுலகப் பிரதிநிதி

எப்போதும்
வானத்திடமிருந்து நிலம் மட்டுமே ஒளியைக்
களவாடுவதில்லை
அவள் அலங்கார முகத்திலிருந்து
வெண்ணிலா பொழியும்போதெல்லாம்
நிலத்தின் முன் கைகளை ஏந்தி
வானம் கூடப் பொலிவிற்காக இரங்கி நிற்கும்

அற்புதத்திற்கு மாற்றாக
அகராதியில் சேர்க்கப்பட வேண்டிய
புதுச்சொல் அவள்
உருக்கிய முத்துகளில் தூரிகையைத் தோய்த்து
எந்த ஓவியனோ மெதுவாக இறக்கிய
தேவதையின் ஓவியம் அவள்
கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் ஒவ்வொரு முறையும்
தேடிக்கொள்வாள் தன்னைத்தானே
கண்டுகொள்வாள் தன்னைத்தானே
அவள் யாரோ கிடையாது
ஆத்மவிசுவாசத்தின் மறுபெயர்
அழகின் பெயர்ச்சொல்.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 19

Author

  • திருவை மு.இரா, Thiruvai M.R.

    மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment