- கவிதை வாசிப்புகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- சிரிக்கும் இதயம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- நரிகளுக்காக – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- மாபெரும் தப்பிப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- அதற்கு வழியில்லை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் 3
- அழகிய கண்களைக் கொண்ட மனிதன் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- இரண்டு ஈக்கள் — சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- நெருக்கடி — சார்லஸ் புக்கோவ்ஸ்கி
மிக அதிகம்
மிகக் குறைவு
மிகப் பருமன்
மிக மெலிவு
அல்லது யாருமே இல்லை
சிரிப்பு அல்லது
கண்ணீர்
வெறுப்பவர்கள்
நேசிப்பவர்கள்
வரைபட ஊசிகளின்
பின்புறம் போன்ற
முகங்களைக் கொண்ட அந்நியர்கள்
இரத்தம் தோய்ந்த தெருக்களில்
ஓடிக் கொண்டிருக்கும் ராணுவங்கள்
மதுபுட்டிகளை அசைத்தபடி
கன்னியரை
துப்பாக்கிமுனைக் கத்தியால் குத்தி
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியபடி
அல்லது மலிவான அறையொன்றில்
எம். மன்றோவின் புகைப்படத்துடன்
ஒரு கிழவன்
இந்த உலகத்தில் இருக்கும் தனிமை
அவ்வளவு பெரியது
கடிகார முட்களின்
மெதுவான நகர்விலேயே
அதை உங்களால் காண முடியும்
மனிதர்கள் மிகவும்
களைத்துப் போயிருக்கிறார்கள்
சிதைக்கப்பட்டிருக்கிறார்கள்
காதலினாலோ அல்லது
காதலின்மையாலோ
மனிதர்கள் ஒருவருக்கொருவர்
நல்லவர்களாக
இருப்பதே இல்லை
பணக்காரர்கள்
பணக்காரர்களுக்கு
நல்லவர்களாக இல்லை
ஏழைகள்
ஏழைகளுக்கு
நல்லவர்களாக இல்லை
நாம் பயந்திருக்கிறோம்
நம்முடைய கல்வி முறை
நமக்குச் சொல்கிறது
நாம் அனைவருமே
பெரிய கொம்பர்களாக
ஆக முடியும் என்று
ஆனால்
சாக்கடைகளைப் பற்றியோ
தற்கொலைகளைப் பற்றியோ
அது நமக்குச் சொல்லவில்லை
அல்லது
ஒரே இடத்தில்
தனிமையில்
தீண்டப்படாமல்
யாரும் பேசாமல்
உள்ளுக்குள் வலியுடன்
தவிக்கும் ஒருவரின்
பேரச்சத்தைப் பற்றியும்
சொல்லித் தரவில்லை
அவர்
ஒரு செடிக்குத் தண்ணீர்
ஊற்றிக் கொண்டிருக்கிறார்
மனிதர்கள் ஒருவருக்கொருவர்
நல்லவர்களாக இருப்பதில்லை
மனிதர்கள் ஒருவருக்கொருவர்
நல்லவர்களாக இருப்பதில்லை
மனிதர்கள் ஒருவருக்கொருவர்
நல்லவர்களாக இருப்பதில்லை
அவர்கள் ஒருபோதும்
அப்படி இருக்கப் போவதில்லை
என்று நினைக்கிறேன்
அப்படி இருக்குமாறு
நான் அவர்களைக் கேட்கவுமில்லை
ஆனால் சில சமயங்களில்
அதைப் பற்றிச் சிந்திக்கிறேன்
சரமணிகள் ஊசலாடும்
மேகங்கள் மேகமூட்டமாகும்
கொலையாளி
குழந்தையின் தலையை
துண்டிப்பான்
ஒரு ஐஸ்கிரீம் கோனை
கடிப்பது போல
மிக அதிகம்
மிகக் குறைவு
மிகப் பருமன்
மிக மெலிவு
அல்லது யாருமே இல்லை
நேசிப்பவர்களை விட
வெறுப்பவர்களே அதிகம்
மனிதர்கள் ஒருவருக்கொருவர்
நல்லவர்களாக இருப்பதில்லை
ஒருவேளை அவர்கள்
அப்படி இருந்திருந்தால்
நமது மரணங்கள்
இத்தனை துயரமானவையாக
இருந்திருக்காது
இதற்கிடையில் நான்
இளம் பெண்களைப் பார்க்கிறேன்
தண்டுகள்
வாய்ப்புடைய மலர்கள்
ஒரு வழி இருக்க வேண்டும்
நிச்சயமாக நாம் இன்னும்
சிந்திக்காத ஒரு வழி
இருக்க வேண்டும்
இந்த மூளையை
எனக்குள் வைத்தது யார்?
அது அழுகிறது
கோருகிறது
ஒரு வாய்ப்பு இருக்கிறதென்று
சொல்கிறது
அது சொல்லாது
“இல்லை” என்று
*
மூலம்: “The crunch” By Charles Bukowski
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994):
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.
*