Home கட்டுரைஇரா. முருகன் காபி கிளப்

தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் தனித்துவமான மொழி நடையாலும், வாழ்வியல் சார்ந்த மெல்லிய அங்கதத்தாலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் எழுத்தாளர் இரா. முருகன். மரபான கதைசொல்லல் முறைக்கும், நவீனத் தொழில்நுட்ப யுகத்தின் எழுத்துப் போக்குக்கும் இடையே பாலமாக விளங்கிய வெகு சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர். அச்சு இதழ்களில் ஆழமான நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்த அதே வேளையில், தமிழ் இணையத்தின் தொடக்க காலத்தில் யாஹூ குழுமங்கள் வழியாக வாசகர்களோடு நேரடியாக உரையாடிய அவரது பங்களிப்பு தமிழ் இணைய வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும்.

இன்று முகநூல், எக்ஸ் தளம், வாட்ஸ்அப் எனப் பல சமூக ஊடகங்கள் விரல் நுனியில் இருக்கின்றன. ஆனால், தொண்ணூறுகளின் பிற்பகுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் இணையத் தமிழர்களின் இலக்கியத் திண்ணையாக விளங்கியவை யாஹூ குழுமங்களும் மின்னஞ்சல் குழுக்களும்தான். தமிழ் எழுத்துருக்களே முழுமையாகத் தரப்படுத்தப்படாத அந்தக் காலகட்டத்தில், உலகின் பல்வேறு மூலைகளில் வசித்த தமிழர்களையும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய இளைஞர்களையும் தமிழ் இலக்கியம், இசை, சினிமா, வரலாறு ஆகியவற்றின் வழியே ஒன்றிணைத்தவை இந்தக் குழுமங்கள். அப்போது அச்சு உலகில் இயங்கிக் கொண்டிருந்த பல மூத்த எழுத்தாளர்கள் இணையத்தைச் சற்றுத் தயக்கத்தோடு அணுகிய நிலையில், தானே மென்பொருள் துறையில் பணியாற்றியவர் என்பதால் இரா. முருகன் இணையத் தமிழை மிக இயல்பாக அரவணைத்துக் கொண்டார்.

தமிழ் இணைய வரலாற்றில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த ‘ராயர் காபி கிளப்’ (ராகாகி) குழுமத்தில் இரா. முருகனின் பதிவுகள் எப்போதும் தனி முத்திரை பதித்தன. வெறும் தீவிர இலக்கிய விவாதங்களை மட்டும் முன்வைக்காமல், நகைச்சுவை, அன்றாட வாழ்வியல், இசை, பழைய தமிழ் சினிமா எனப் பல தளங்களில் கலகலப்பான உரையாடல்கள் அங்கு நிகழ்ந்தன. ஆடம்பரமற்ற, ஆனால் கூர்மையான அவரது நகைச்சுவை உணர்வும், அலுவலகச் சூழலின் அபத்தங்களையும் மத்தியதர வர்க்கத்தின் மனவோட்டங்களையும் அவர் எழுத்தில் கொண்டுவந்த விதமும் வாசகர்களுக்குத் தம் நண்பரோடு அமர்ந்து காபி குடித்துக்கொண்டே பேசுவது போன்ற நெருக்கத்தைத் தந்தன.

அந்தக் குழுமத்தில் யாரும் எழுதலாம், யாரும் யாரையும் விமர்சிக்கலாம்; அந்த உரிமை எல்லோருக்கும் இருந்தது. அந்தக் குழுமத்தில் அவர் எழுதியவை வெறும் அன்றைய பொழுதுபோக்கு உரையாடல்களாகக் காற்றோடு கரைந்துவிடாமல், அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘ராயர் காபி கிளப்’ என்ற பெயரிலேயே தனிப் புத்தகமாகவும் வெளிவந்தன.

ராயர் காபி கிளப் மட்டுமல்லாது, அக்காலகட்டத்தில் இயங்கிய ‘மரத்தடி’ உள்ளிட்ட பிற யாஹூ குழுமங்களிலும் அவர் தொடர்ந்து பங்களித்தார். என்னைப் போன்று அப்போதுதான் எழுதத் தொடங்கிய பல இளம் படைப்பாளிகளின் கதைகளையும் கவிதைகளையும் பொறுமையாக வாசித்து ஊக்குவித்ததோடு, காரசாரமான விவாதங்கள் எல்லை மீறும்போது தனது நிதானமான மொழியால் சூழலைச் சமநிலைக்குக் கொண்டுவரும் பக்குவத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

இணைய எழுத்து என்பது மேலோட்டமானது என்ற அன்றைய பொதுக்கருத்தை உடைத்து, கணினித் திரையிலும் ஆழமான தமிழ் இலக்கியத்தை உரையாட முடியும் என்பதை நிரூபித்த முன்னோடிகளில் அவருக்குப் பெரும் பங்குண்டு.

1998-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘அரசூர் வம்சம்’ நாவல், நவீன தமிழ் இலக்கிய உலகில் இன்றும் பலரால் கொண்டாடப்படுகிறது. கற்பனைப் பின்னணியில் பல தலைமுறைகள் கடந்து விரியும் இந்த நாவல், வரலாறு, குடும்பப் பரம்பரைக் கதைகள், வட்டார வழக்கு, நாட்டார் நம்பிக்கைகள், மனிதர்களின் விசித்திரங்கள் ஆகியவற்றை மாய யதார்த்தவாதக் கலைநுட்பத்தோடு பின்னிப் பிணைக்கிறது. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் வாழ்வியலை வெறும் யதார்த்தப் பதிவாக மட்டும் சுருக்காமல், கதைக்குள் கதையாக விரியும் மரபான கதைசொல்லல் முறையையும் நவீனப் புனைவுக் கட்டமைப்பையும் இணைத்த விதம் வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் புதிய வாசிப்பனுபவத்தைத் தந்தது.

மனித வாழ்வின் அபத்தங்களையும் துயரங்களையும் ஒருசேரக் கடத்தும் அவரது மொழிநடை இந்த நாவலுக்குத் தனித்துவமான அழகியலைச் சேர்த்தது.

ஆனாலும் இந்த நாவல் அன்று சிலரின் எதிர்விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. ‘அரசூர் வம்சம்’ நாவலில் அவர் கையாண்ட மொழிநடை புரியவில்லை என்றும், அதில் வரும் சில காட்சிகள் அருவருப்பூட்டுவதாகவும் விமர்சனம் செய்திருந்தனர்.

ஆனால், அதற்காக அவர் தனது மாய யதார்த்த எழுத்துப் போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து வெளிவந்த ‘சைக்கிள் முனி’ என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கமான நேர்க்கோட்டுக் கதைகளை மட்டுமே எதிர்பார்க்கும் வாசகர்களுக்குக் கதையில் வரும் மாய யதார்த்தக் கூறுகள் சற்றுப் புதிராகத் தோன்றி இருக்கும். ஆனால், மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் வாழ்க்கையின் நுட்பமான முடிச்சுகளையும் மிக எளிமையான, ஆழமான மொழியில் வாசகர்கள் ரசிக்கும்படியாக எழுதியிருப்பதே இத்தொகுப்பின் பலமாகப் பார்க்கப்பட்டது. அவருடைய சாத்தியமற்ற காலப் பரிமாணம், தேர்ந்த சொல்லாட்சி என இரா. முருகனின் கதைகளில் சிக்கும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை முடிச்சுகளும் பிசிறுகளும்கூட ரசிப்புக்குரிய அம்சங்களாகவே அமைந்திருந்தன.

அவருடைய ‘மூன்று விரல்’ நாவல் சிலிகான் வேலி மோகம், டாலர் கனவுகள் மற்றும் அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மன அழுத்தங்களை எள்ளலும் யதார்த்தமும் கலந்து பேசும் மிக முக்கியமான படைப்பாக இன்றும் இருக்கிறது. கதை நெடுகிலும் வரும் நகைச்சுவையான உவமைகளும், கார்ப்பரேட் உலகின் போலித்தனங்களைக் கேலி செய்யும் தொனியும் இந்நாவலின் பெரிய பலம். எத்தனை சிறந்த எழுத்தாளர்களாக இருந்தால் என்ன, காலம் அவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடத்தான் செய்கிறது.

2024-ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியிலிருந்தே தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையும், அதனால் மடிக்கணினியில் தொடர்ந்து பத்து நிமிடங்கள்கூடத் தட்டச்சு செய்ய முடியாமல் எழுத்துத் தடங்கல் ஏற்பட்டதையும் இரா. முருகன் தனது இணையதளத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார். நீண்ட நாட்களாகப் பார்க்கின்ஸன் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், கைப்பட எழுதுவதன் மூலமும், தனக்கு ஏற்பட்ட மறதி நோய் சார்ந்த அனுபவங்களைத் தனது புதிய படைப்புகளில் பதிவு செய்வதன் மூலமும் அவர் இறுதிவரை இலக்கியத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்.

நான் அவருடன் நேரடியான தொடர்பில் இருந்தது இல்லை. ஆனால் என்னைப் போலப் பலரும் மரத்தடி, ராகாகி குழுமக் காலம் தொட்டு அவரின் எழுத்துடன் பயணித்திருக்கிறோம். என்னிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை அவரிடம் நேரடியாகப் பேசுவதைத் தவிர்க்க வைத்திருந்தது. எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத் அண்ணனின் மகள் திருமணத்திற்கு அவர் வந்திருந்தார். அப்போது அவர் நினைவுகளுடனான போராட்டத்தின் மத்திம கட்டத்தில் இருந்திருக்க வேண்டும். முதலில் பெயர் சொன்னபோது, “யார், யார்?” என்றார். பின்பு கொஞ்ச நேரம் கழித்து, “ராகாகில கதை, கவிதையெல்லாம் எழுதினீங்களா?” என்பதுபோலக் கேட்டார்.

ம்ம்… காலம்…

இறையுடன் அவர் என்றும் கலந்து இன்புற்றிருப்பார்.

Author

You may also like

Leave a Comment