Home கட்டுரை‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்.’

இரா. முருகனின் எழுத்தில் நான் படித்த முதல் புத்தகம் அதுதான். சுண்டியிழுக்கிற இந்தத் தலைப்பில் தொடங்கி நூலுக்குள் இடம்பெற்றிருந்த (உண்மையான) வருங்காலத் தொழில்நுட்பங்கள், அவை விளக்கப்பட்டிருந்த எளிமை, பயன்படுத்தப்பட்டிருந்த எடுத்துக்காட்டுகள் என அனைத்தும் தமிழுக்குப் புதுமையானவை. படிக்கப் படிக்கக் கிறங்கிப்போனேன். உள்ளங்கை அளவே இருந்த அந்தப் புத்தகம் முடிந்துவிட்டதே என்று மிகவும் ஏக்கமாக இருந்தது. இவருடைய எழுத்தை இன்னும் இன்னும் படிக்கமாட்டோமா என்ற விருப்பம் உண்டானது.

பின்னர் அவருடைய ‘முதல் ஆட்டம்’, ‘ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்’, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ என்கிற மூன்று சிறுகதைத் தொகுதிகளைப் படித்தேன். இப்படியும் சிறுகதைகள் இருக்குமா என்கிற மலைப்பு ஏற்பட்டது.

ஏனெனில் நான் எளிய வார இதழ் வாசகனாகத்தான் படிக்கத் தொடங்கினேன். அதனால் எதையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிற கதைகள்தான் என்னுடைய விருப்பமாக இருந்தன. வாசகரும் கொஞ்சம் உழைத்தால்தான் புரியும் என்கிற வகைக் கதைகள் மீது எனக்கு ஒவ்வாமை இருந்தது. சில எழுத்தாளர்கள் தங்கள் அறிவைக் காட்டிப் பீற்றிக்கொள்வதற்காகத்தான் அப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்றுகூட நான் எண்ணியதுண்டு; ‘நான் ஏன் உழைக்க வேண்டும்? நீயே உடைத்துச் சொல்லமாட்டாயா?’ என்று வீம்பு பிடித்ததுண்டு.

முதன்முறையாக இரா. முருகன் அந்த வீம்பை உடைத்தார்: ‘இதோ பார், இவ்ளோதான் கதை! இந்தக் கதை நல்லா இருக்குல்ல? ஆனா இதுல இன்னும் என்னவோ இருக்கறமாதிரி தோணுதுல்ல? கொஞ்சம் பொறு, இந்த அடுக்கை விலக்கி உள்ளே பார்த்தா என்ன தெரியுது? அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே? இந்தப் புது நினைப்பு இந்தக் கதையைப் பத்தின உன்னோட கருத்தை மாத்திடுச்சா? இதைப் போல இன்னும் நிறைய அடுக்குகள் இருக்குமோ? அதையெல்லாம் ஒவ்வொண்ணா விலக்கி உள்ளே பார்க்கலாமா?’ என்று வாசகருடைய உழைப்பை ஒரு சுமையாக இல்லாமல், அவர்களே விரும்பிச் செய்கிற மகிழ்ச்சியான செயலாக ஆக்கினார்; என்னைப் போன்ற பலருடைய படிப்புத் திறனை மிக இயல்பாக உயர்த்தினார்.

இரா. முருகன் கதைகளில் வரும் ஒவ்வொரு களமும் கதைமாந்தரும் நம் மனத்தில் அழுத்தமாக உட்கார்வது போல் அவர் மிக விரிவாக விளக்குகிறார் என்று தோன்றினாலும், அதற்கு அவர் மிகச் சில சொற்களைத்தான் எடுத்துக்கொண்டிருப்பார். சில கோடுகளின் மூலம் ஒரு காட்சியைக் கண் முன்னால் கொண்டுவந்துவிடுகிற ஓவியரைப் போன்ற நுட்பம் அவருடையது. கூர்மையான வசனங்களைக் கொண்டும் நினைத்து நினைத்துச் சிரிக்கவைக்கிற நகைச்சுவையின் மூலமும் கதையை விறுவிறுவென்று நகர்த்திச் செல்கிற அவருடைய நேர்த்தியை நாம் வியந்துகொண்டிருக்கும்போதே கடைசி வரிகளில் அக்கதையை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிடுவார். நாம் பின்னால் சென்று கதையை இன்னொரு முறை படித்துப் பார்த்து, இந்த முறை முற்றிலும் புதிதாக உணர்ந்து சுவைப்போம்.

‘மாந்திரீக எதார்த்தம்’ என்ற சொல்லையும் அவ்வழியை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய கதைகளையும் அவரிடமிருந்துதான் நான் தெரிந்துகொண்டேன். பல சிறுகதைகளில் அதைப் பயன்படுத்தி வலைப் பயிற்சி எடுத்துக்கொண்டவர் ‘அரசூர் வம்சம்’ முதலான நாவல்களில் அதை ஒரு மிக இயல்பான, தனித்துவமான வெளிப்பாட்டு வகையாகவே ஆக்கிக்கொண்டுவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. அதற்குள் அவரைப் படித்துப் பழகியிருந்த வாசகர்களும் இதுதான் இரா. முருகனின் உலகம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டு எதிர்பாராததை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இரா. முருகனின் நூல்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘மூன்று விரல்’தான். அது நான் சார்ந்திருக்கிற தகவல் தொழில்நுட்பத் துறையைப் பற்றிய நாவல் என்பதால் அந்தப் பின்னணியையும் பல நிகழ்வுகளையும் என்னால் உடனடியாகப் புரிந்துகொள்ள இயன்றது. ஆனால், அந்த மனிதர்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் குழப்பங்களையும் செயல்களையும் அவர் சொல்லும்போது உலகை ஒரு புதுக் கண்ணாடி கொண்டு பார்ப்பது போல் உணர்ந்தேன்; ஆழ்ந்த சிந்தனைக்கு இடமளிக்காத (அல்லது நேரமில்லாத) ஒற்றைத்தன்மை உலகம் என்று நம்பப்படுகிற பெருநிறுவன வாழ்க்கைகூட இரா. முருகனின் எழுத்தில் வெளிப்படும்போது உண்மை மனிதர்களின் கதையாக ஒலிப்பதை வியந்து ரசித்தேன்.

கல்லூரி நாள்களிலிருந்து எங்கே, எப்போது இரா. முருகனின் பெயரைப் பார்த்தாலும் உடனடியாகப் படிக்கத் தொடங்கிவிடுவேன். சிறுகதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல், வெண்பா, பயணக் குறிப்பு என வடிவம் எதுவானாலும் அதில் இரா. முருகனின் தனித்துவமான முத்திரை இருக்கும்; அது ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு மேலேதான் இருக்கும். பெயரைப் பார்த்ததும் நம்பிப் படிக்கலாம் என்கிற உத்தரவாதத்தை எனக்குள் உண்டாக்கியிருந்த மிகச் சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.

பின்னாளில் இரா. முருகன் என்னுடைய உலக விரி வலை (World Wide Web) நண்பரானார்; பெரிய எழுத்தாளர் என்கிற பந்தாவெல்லாம் இல்லாமல் அன்பாகப் பழகினார்; அவருடைய படைப்பாக்கங்களில் பார்த்த அதே குறும்பான நகைச்சுவை முகத்தை இரண்டு வரி மின்னஞ்சல்களிலும் காட்டி இன்னும் வியக்கவைத்தார்; சின்னப் பொடியனான (நான் பிறப்பதற்கு முன்பாகவே அவருடைய முதல் கவிதை வெளியாகிவிட்டது) என் எழுத்தையும் படித்து, கருத்துரைத்து, திருத்தங்கள் சொல்லி ஊக்குவித்தார். அப்போதெல்லாம் நான் ஒரு பெரிய நட்சத்திரத்தை நேரில் பார்த்த விசிலடி ரசிகனைப் போன்ற மனநிலையில் திளைத்திருந்தேன்.

அப்போது ஒரு முறை ஏதோ வேலையாகச் சென்னை வந்திருந்தேன்; ‘உங்களைப் பார்க்க வரலாமா?’ என்று இரா. முருகனுக்குத் தயக்கத்துடன் மின்னஞ்சல் அனுப்பினேன். ‘இதென்ன கேள்வி? கிளம்பி வாங்க’ என்று பதிலனுப்பினார் அவர்.

நான் இரா. முருகனைப் புகைப்படத்தில் பார்த்துள்ளேன்; ஆனால் அவர் என்னைப் பார்த்ததில்லை. அதனால் எங்களுடைய அந்த முதல் சந்திப்பு ஒரு கலகலப்பான நகைச்சுவைக் காட்சியைப் போல் அமைந்துவிட்டது.

அப்போது இரா. முருகன் தியாகராய நகர் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு அருகில் ஒரு வீட்டில் வசித்தார். அவர் சொன்ன நேரத்துக்குச் சரியாகச் சென்றுவிட்டேன். அவருடைய மனைவி என்னை வரவேற்று, ‘சார் வெளிய போயிருக்கார். உட்காருங்க. வந்துடுவார்’ என்றார்.

சிறிது நேரத்தில் இரா. முருகன் வந்துவிட்டார்; என்னைப் பார்த்ததும் சிரித்தபடி கை குலுக்கினார்; ஓரிரு சொற்கள் பேசினார்; பின்னர் எழுந்து உள்ளே சென்று கணினியின் முன் அமர்ந்துவிட்டார்.

நான் திகைத்துப்போனேன். புகழ் பெற்றவர்களை அவ்வளவாக நெருங்காமல் இருப்பதே நல்லது என்று ஆங்காங்கு படித்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. சத்தமில்லாமல் கிளம்பிச் சென்றுவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது இரா. முருகன் பரபரப்பாக வெளியில் வந்தார்; ‘நீங்க என். சொக்கனா?’ என்றார். நான் தலையாட்டியதும், ‘அடடா, ரொம்ப சாரி. நீங்க வர்றதாச் சொன்னதை நான் மறந்துட்டேன். அதனால நீங்க யாரா இருக்கும்ன்னு யோசிச்சுக்கிட்டே ஏதேதோ பேசிக்கிட்டிருந்தேன்’ என்று வாய்விட்டுச் சிரித்தார். அதன்பிறகுதான் எங்களுடைய உண்மையான உரையாடல் தொடங்கியது.

அதன்பிறகு நாங்கள் ஓரிரு முறை சந்தித்திருப்போம்; ஆனால் சுமார் கால் நூற்றாண்டு கால மின்னஞ்சல் நட்பு. அவர் தொடங்கிப் பங்களித்த ‘ராயர் காப்பி கிளப்’ என்ற மின்னஞ்சல் குழுவில் என்னுடைய சிறு பங்களிப்பும் இருந்தது. நான் நடத்திக்கொண்டிருந்த ‘தினம் ஒரு கவிதை’யில் இரா. முருகன் ஒரு தொடர் எழுதினார்; என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை வழங்கினார். இப்படி அவரை என் நண்பராகக் கருதுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தபோதும், இப்போதும் இரா. முருகன் என்றதும் எனக்கு அந்தக் ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ புத்தகமும், அதன் வழவழப்பான அட்டையும், அதற்குள்ளிருந்த ஒவ்வொரு கட்டுரையும் என்னை உலுக்கி மகிழச் செய்ததும்தான் நினைவுக்கு வருகின்றன. அவருடைய வாசகன் என்பதை விடப் பெருமைக்குரிய அடையாளம் வேறென்ன இருக்க முடியும்.

Author

  • நா. சொக்கன், N. Chokkan

    சேலம், ஆத்தூரில் பிறந்து வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் என். சொக்கன் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்காகவும் அதிகம் எழுதிவருகிறார், இவரது சில நூல்கள் ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, சீன மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

You may also like

Leave a Comment