உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி

This entry is part 11 of 11 in the series உருதுக்கவிதை உலகு

// கை முட்களால் காயப்பட்டது
ஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க
//

// ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மி
ஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே
//

உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ டர்னா கியா’ பாடலை எழுதியவர் ஷகீல் பதாயுனி, பதாயுனைச் சேர்ந்தவர். ஃபனி பதாயுனி, அசத் பதாயுனி, ஃபஹ்மி பதாயுனி, முல்லா அப்துல் காதர் பதாயுனி என சில கவிஞர்கள் பதாயுனின் புகழை ஓங்கச் செய்தவர்கள். அவர்களுள் ஒரு பெண் கவிஞரும் உண்டு, அதா பதாயுனி.

அஜீஸ் ஜஹான் என்னும் இயற்பெயர் உள்ள அதா ஜாஃப்ரி, முதன்முதலில் கவிதை எழுதுகையில் கொண்ட புனைபெயர் அதா பதாயுனி. பதாயுன் அவர் பிறந்த ஊர் என்பதால் உருதுக் கவிஞர்களின் மரபின்படி ‘அதா’ என்னும் புனைபெயருடன் பதாயுனி இணைந்தது. நவீன உருதுக் கவிதைகளில் முதல் பெண் குரலாகப் போற்றப்படும் அவர், ‘முதற்பெண்மணி’ (காத்தூன்-ஏ-அவ்வல்) என அழைக்கப்படுகிறார். பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, இந்தியப் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்குச் சென்ற அவரை இரண்டு நாடுகளும் கவிஞராகக் கொண்டாடுகின்றன.

அன்றைய காலகட்டங்களில் பொதுவாக ஒலித்த பெண் விடுதலைக் கருத்துகளாக மட்டும் அதாவின் கவிதைகள் ஒலிக்கவில்லை, மாறாக அவை பெண்ணின் மனவலிமை, பொறுமை, அகவயச் சிந்தனை, வெற்றி போன்ற கருத்துகளாக ஒலித்தன. பெண் தோற்பதற்குப் பிறந்தவள் அல்ல என்பது அவருடைய பார்வை.

மரபாக கஜலில் ஒலிக்கும் ஆழ்ந்த பொருளுடன் காதலும் கலந்த கஜல்கள் அவரால் எழுதப்பட்டன. சமகாலச் சிந்தனைகள் மட்டும் ஒலிக்கும் கஜல்களாக அவை நின்றுவிடவில்லை, மாறாக என்றைக்குப் படித்தாலும் புதிதாக இருக்கும் கவித்துவம் நிறைந்தவை. அவருக்குப் பிறகு வந்த முக்கியமான பெண் கவிஞர் பர்வீன் ஷாகிர், அதாவின் கவிதைகளைக் குறிப்பிடுகையில், ‘அதாவின் கவிதைகள் அல்லி மலரைப் போன்றவை. அனைத்துப் பருவகாலங்களிலும் அவை மணம் வீசிக்கொண்டிருக்கும்’ என்கிறார். பர்வீன் ஷாகிரின் கவிதைகளிலும் காதலும் பெண்ணியப் பார்வையும் தனித்துவமாக ஒலித்தன. அதாவைப் பர்வீனின் முன்னோடி என்றும் சொல்வதுண்டு.

தமிழில் நடந்தது போலவே புதுக்கவிதைப் புரட்சி உருதுவிலும் நடந்தது. கஜல்களை எழுதிய கவிஞர்கள் புதுக்கவிதை எழுதினர். புதுக்கவிதைகள் உருதுவில் ‘ஆஸாதி ஷாய்ரி‘ என அழைக்கப்பட்டன. ஆஸாதி என்றால் விடுதலை, ஆஸாதி ஷாய்ரி – தளைகளற்ற கவிதைகள். இந்த இயக்கத்தில் அதாவும் இணைந்து புதுக்கவிதைகள் எழுதினார். அதாவின் புதுக்கவிதைகளை மொழிபெயர்த்தால் அவற்றில் தமிழ்ப் புதுக்கவிதைகளின் வீச்சும், எள்ளலும் காணக் கிடைக்கின்றன.

// மனம் காட்டும் தனிமையில் உலவினால்
தொலைந்துவிடுவாய்
வீதிகளின்
ஒளியையும் பரபரப்பையும் விலக்கி
மேலே செல்லாதே
//

// தில்கே விரானேமே கூம்தோ பட்டக் ஜாவோகே
ரௌனக்-ஏ-கூச்சா-ஓ-பாஸார்சே ஆகே நா படாவ்
//

இக்கவிதை அறிவுரை சொல்வதைப் போன்ற தோற்றத்தில் இருப்பினும், அது உணர்த்தும் கருத்து கவிதையின் தோற்றத்தில் இருப்பதற்கு மாறானது. வீதிகளின் ஒளியிலும் பரபரப்பிலும் உலவிக் கொண்டிருக்கும் வரையில் மனம் விரும்பும் தனிமை கிடைக்கப் போவதில்லை. மனதளவில் இவ்வுலகின் பரபரப்பிலிருந்து விலகித் தொலைந்து தனிமையைத் தேடும்போதுதான் பார்வை விரிகின்றது. வீதியை எல்லையாகக் கொள்ளாமல், அதிலிருந்து வெளியேறி மனம் தனிமையில் தொலைந்து போகும் பொழுதுகள் மட்டுமே கவிஞருக்கு உவப்பானவை.

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து ஜப்பானியக் கவிதைகள் உருதுவில் மொழிமாற்றம் பெறத் தொடங்கின. 1922இல் பாரிஸ்டர் சையத் ஹசன் ஆபித் ஜாஃப்ரி, ஜப்பானியக் கவிதைகள், ஹைக்கூக்கள் தொடர்பாக ‘நிகார்‘ என்னும் உருதுப் பத்திரிகையில் எழுதினார். 1936இல் தில்லியிலிருந்து வெளியான ‘சாகி’ ஜப்பானிய கவிதை வடிவங்களைப் பேசியது. இந்திய விடுதலைக்கும் அதன் பின்னும் தொடர்ந்து ஜப்பானியக் கவிதைகள் தொடர்பான உரையாடல் உருதுவில் நடந்ததாகக் குறிப்புகள் சொல்கின்றன. அது தொடர்ந்து, ஹைக்கூக்கள் தமிழில் பரவலாகப் பேசப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமானின் சமகாலத்தில் உருதுவிலும் ஹைக்கூ முயற்சிகள் உருவாயின. 1970-80 காலகட்டத்தில் ஹைக்கூக்களும் உருதுவில் முயற்சி செய்யப்பட்டன.

// பூக்களில் கண்ணீர்
என்ன பருவகாலம் இது?
முட்களில் பனித்துளி
//

// ஆன்சூ ஃப்ஹூலோன்பர்
கைசா மௌசம் ஆயாஹை
ஷப்னம் காட்டோன் பர்
//

(இது அதா ஜாஃப்ரியின் ஹைக்கூ அல்ல)

1983இல் கராச்சியில் ஹைக்கூவுக்கென ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அதில், ஜப்பானியக் கவிதைகளின் மொழிமாற்றங்களும், உருது ஹைக்கூக்களும் வாசிக்கப்பட்டன. அன்று கவிதை வாசித்தவர்களின் பெயர்ப் பட்டியலில் அதா ஜாஃப்ரியின் பெயரும் உள்ளது. அதிலிருந்து, அவர் ஹைக்கூ வடிவிலும் கவிதை எழுதியிருக்கக்கூடும் என அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆதாரத்துடன் சொல்லக்கூடியபடி அதாவின் ஹைக்கூக்கள் ஆவணமாகப் பதிவு செய்யப்படவில்லை.

அவருடைய ‘சாஸ்-ஏ-சுகான் பஹானா ஹை’ (1982) (இசையொலி – ஒரு வீண் நியாயம்) கவிதைத் தொகுப்பில் புதுக்கவிதைகள் பதிவாகியிருக்கின்றன.

// உயிரே!
உனக்குத் தகவல் இல்லை
என் கதைத் திருப்பம்
இருண்ட தெருக்களை நோக்கிச் செல்வதல்ல
என
மனிதர்கள் தவறாக நினைக்கின்றனர்
//

// ஜான்!
தும்கோ கபர் நஹீன்
லோக் அக்சர் புரா மான்தேன் ஹைன்
கே மேரி கஹானி கிசி மோடு பர் பி
அந்தேரி கலிசே குஸர்த்தி நஹீன்
…//

‘கேள்’ எனும் தலைப்பில் இந்தக் கவிதை ‘சாஸ்-ஏ-சுகான் பஹானா ஹை’யில் பதிவாகியிருக்கிறது.

சாஸ் என்னும் சொல் இசையைக் குறிக்கும், இசைக்கருவியிலிருந்து ஒலிக்கும் ஏதோ ஒரு இசைத்துண்டு எனச் சொல்லலாம். ‘பஹானா’ என்பது சாக்குபோக்குச் சொல்வதைக் குறிக்கும். ‘இசையொலி – ஒரு சாக்குபோக்கு’ என வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றமின்றி, அவர் சொல்லவரும் ‘பஹானா’ சாக்குப்போக்கைக் கவிதைக்கேற்ப மொழிமாற்றி, கருத்துக்கு ஏற்ப ‘இசையொலி – ஒரு வீண் நியாயம்’ எனத் தலைப்பை மொழிபெயர்க்கலாம்.

1950இல் அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘இசையொலியைத் தேடுகிறேன்’ (மை சாஸ் டூண்ட்தீ ஹூன்) வெளியானது. அதிலும் ‘இசையொலி’ (சாஸ்) இருந்தது. பல வெளியீடுகளுக்குப் பின், 1982இல் அவருடைய மேற்சொன்ன கவிதைத் தொகுப்பின் பெயரிலும் இசையொலி (சாஸ்) இருந்தது. முப்பத்திரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு ‘இசையொலி’ அவர் கவிதைத் தொகுப்பின் பெயரில் இடம்பெற்றது.

மனித வாழ்வின் நிலையாமையை சமகால எள்ளலாகவும் கஜல்களில் அமைத்திருக்கிறார்.

இறப்புச் செய்திகள் அனைத்துச் சமுதாயங்களிலும் உள்ளவை. வாய்வழித் தகவல்களில், அன்றைய தந்திகளில், அன்றைய “நோட்டீசு”களில், இன்றைய சுவரொட்டிகளில், ஃப்ளெக்ஸ்களில், செய்தித்தாள்களில், நலச்சங்கத்துக்குள் சுற்றறிக்கைகளில், குழுமத்துக்குள், இனக்குழுவுக்குள், பறையடித்து, தகவல் சொல்லி, ஒப்பாரியிட்டு, பந்தலிட்டு என வகைவகையாக மனிதன் என்றாவது ஒரு நாள் செய்தியாகிறான். அந்த நிலையாமையைத் தன்னுடைய கஜலுக்குள் சொல்கிறார்.

அது ‘ஆகிவிடுதல்’ என்னும் சொல்லை இயைபாகக் கொண்ட கஜல். ஒவ்வொன்றும் இன்னொன்றாக ஆகிவிடுவதைத் தவிர்க்க இயலாத வாழ்க்கையை அது பாடும். அதன் எல்லா அடிகளும் ‘ஆகுதல்’ என முடியும்.

// காற்று வழித்துணையாக இணைந்தது
என் புரிதல்
என் வீதியில் காற்றுக்குச் சுவராகிப்போவது
//

// ஹவாதோ ஹம்ஸஃபர் டெஹ்ரி சம்ஜ்மேன் கிச் தராஹ் ஆயே
ஹவாவோன்கா ஹமாரி ராஹ்மேன் தீவார் ஹோஜானா
//

இப்படியாகக் கண்ணிகள் அமைந்த கஜலின் இறுதிக் கண்ணியாக மேற்சொன்ன ‘செய்தியாகுதல்’ வருகிறது.

// என் நகரத்து மக்களின் இப்போதைய நிகழ்வு
என்னவெனில்
எப்போதாவது செய்தி வாசிப்பது
எப்போதாவது செய்தி ஆகிவிடுவது
//

// ஹமாரே ஷஹர்கா லோகோன்கா அப் அஹ்வல் இத்னா ஹை
கபி அக்பார் பட்லேனா கபி அக்பார் ஹோஜானா
//

செய்தியாகுதல் என்பது ‘மரண அறிவிப்பு’.

ஒரு கஜலின் அடிகளில் முரண்களை இணைத்து, ஒரு பக்கத்தைக் காட்டி இன்னொரு பக்கத்துக்கு என்ன தெரியும் எனும் கேள்விகளாக முடித்திருப்பார். எட்டு சிறிய கண்ணிகளைக் கொண்ட கஜல் அது.

// விரல் பிடித்து நடப்போர்க்கு
நகரின் பாதை எப்படித் தெரியும்
? //

// உங்க்லி தாம்கே சல்னே வாலா
நக்ரி கா ரஸ்தா கியா ஜானே?
//

// எத்தனை திருப்பம் உள்ளதென
நீயறிவாய், உன் நிழலுக்கு எப்படித் தெரியும்?
//

// கித்னே மோடு அபி பாக்கி ஹைன்
தும் ஜானோ சாயா கியா ஜானே
//

சின்ன அடிகளில் சின்னக் கேள்விகளாகப் பொருள் பொதிந்த கஜலை அளித்ததால்தான் அவர் போற்றப்படுகிறார்.

பே-நகாப் என்னும் வார்த்தை உருதுக் கவிதைகளில் ‘முகத்திரை விலக்கல்‘ என்னும் பொருளைத் தாங்கி நிற்கும். நகாப் – முகத்திரை, பே-நகாப் – முகத்திரையற்ற. முகம் மறைப்பது உருது கலாசாரத்தின் ஓர் அங்கமாக இருப்பதால், முகத்தின் அழகுடன் தொடர்புபடுத்தி பே-நகாப் கவிதைகளில் கையாளப்படுகிறது. அதா ஜாஃப்ரியின் கவிதையிலும் பே-நகாப் இடம்பெறுகிறது.

அவளுடைய நினைவுகள் அவனைப் பைத்தியக்காரனாக மாற்றியிருக்கின்றன. அவன் தன் நினைவில் இல்லை. அப்போது அவள், அவன் முன்னே முகத்திரையின்றி வந்தாலும் அது வீண், அவனுக்குத் தன்னுணர்வு பெற நேரம் இல்லை என்னும் பொருள்கொண்ட கவிதை அது.

// முகத்திரையின்றி வந்தாலும்
இப்போது என்ன?
பித்துப்பிடித்தவனுக்கு
தன்னுணர்வு பெற
ஏது நேரம்?
//

கஜல்கள், நக்ம் எனப்படும் செய்யுள்கள், புதுக்கவிதைகள், ஹைக்கூக்கள், தன்னுடைய வாழ்க்கை வரலாறு எனப் பல நூல்களை வெளியிட்டு, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உருது ஆர்வலர்களின் பேசுபொருளாக இருப்பவர் அதா ஜாஃப்ரி. உருது ஆர்வலர் சிலர் அவரை, காலிப், இக்பால், ஜிகர் போன்ற மகாகவிகளின் வரிசையில் வைத்துப் பார்க்கின்றனர்.

(தொடரும்)

Series Navigation<< உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி

Author

Related posts

ஞான நூல்கள் – 6 & 7

அறிவெழுச்சி: 4

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)