Home கவிதைர.பா.இந்துமதி கவிதைகள்

1.பெண் எனும் பேனா
இறுகப் பிடித்திருந்த
முள் பேனாவின் முனையிலிருந்து
வழியும் ரத்தத்துளிகள் மையாக மாற
தனது வாழ்க்கைப் புத்தகத்தின்
அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்
தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை.

2.காதல் பூக்கள்
மொட்டாக முகையாக இருக்கும் போதே
அவசரம் கொள்ளாதீர்கள்.
வீயாகிச் செம்மையாகும் வரையிலும்
காத்திருக்கத் தேவையில்லை.
அலராக மலராக இருக்கும்போது
பறித்துக்கொள்ளுங்கள்;
கைகளுக்கு மட்டும் அல்ல
மனதிற்கும் அதனால் அழகு சேரும்.

3.பயன்பாடு
மலிவான கைக்கடிகாரமும்
விலை உயர்ந்த கைக்கடிகாரமும்
ஒரே போலவே பிரதிபலித்தது
காலம் என்னும் கண்ணாடியில்

4.கோவில்
தகரத்திலும் இருக்கின்றன
தங்கத்திலும் இருக்கின்றன
கோவில்கள்
கடவுளின் ஆசீர்வாதங்களும்
இதே போல் மாறக்கூடுமோ?

Author

  • ர.பா.இந்துமதி தென்காசியைச் சேர்ந்தவர். தற்போது கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்து வருகிறார். நவீனத் தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருகிறார்.

You may also like

Leave a Comment