வணக்கம்.. நான் ஆரு..
இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான்.
என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய் பிகென் டை தலையிலும், அழகான கவிதைகளை உள்ளத்திலும் கொண்டு இளமையைச் சுமந்து கொண்டிருப்பவன்.. ஊர் கருந்தாட்டாங்குடி.
வெய்ட், இது என் கதையில்லை; இருந்தாலும் என்னைப் பற்றி ஒரு குட்டி இண்ட்ரோ சொல்லியே ஆக வேண்டும்.
இங்கேயே பக்கத்துத் தஞ்சாவூரில் பேங்க் மானேஜராக இருந்து வி ஆர் எஸ் வாங்கி ரிட்டயர் ஆனவன்.. ஒரே ஒரு மனைவி. மிச்ச டீடெய்ல்ஸ் அப்புறம்.. ஏதோ பென்ஷன் அண்ட் சொந்தமாகக் கட்டிய இரண்டு வீடுகள் தஞ்சாவூரில் அண்ட் ஹெச் யூ எஃப் ப்ராபர்ட்டி எனச் சொல்லப்படும் இரண்டு வீடுகள் கருந்தட்டாங்குடியில் அண்ட் ஒரு ஏக்கர் நிலம்.. கொஞ்சம் விவசாயம் டல் என்பதால் ஏதோ கொஞ்சம் மகசூல்…
எனில் வாழ்க்கை ஓடும் நதியாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது..
எனக்கு அண்ணன் ஒருவன் ஸ்ரீனிவாச வரதன்.. முப்பது வருஷத்துக்கு முன்னாலேயே மஸ்கட் கவர்மெண்ட்டில் மினிஸ்ட்ரியில் ஒரு டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்து இன்று வரை குப்பை கொட்டுகிறான்..
அவனுக்கு ஒரே பையன் அனந்த நாராயணன் என்ற அனந்த்.. அவனை நான் அனு என்று கூப்பிடுவேன்.. ம்ம் அவனோட கதைதான் இதுன்னு வெச்சுக்கோங்களேன்..
எனில் என் ஒன்றுவிட்ட பிள்ளை அனந்த் எம்பிஏ சமர்த்தாய் துபாயில் முடித்துவிட்டு மஸ்கட் வந்து சேர்ந்த அந்த நாளுக்கு நாம் போகலாம்..
· * * ·
லிஃப்ட் முன்னால் ஒரு ஓமானியப் பெண் நின்று கொண்டிருந்தாள்.. முகம் உடல் முழுவதும் கறுப்பாடை அண்ட் தோள் பக்கம் வெள்ளையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பெரிய பெரிய பூக்கள்.. முகம் முழுக்க மூடி, கண்கள் சுற்றியிருந்த புருவத்தின் வெளிர் பிரதேசங்கள் மட்டும் தெரிந்து சிரித்தன.
அனந்த்தைப் பார்த்தவுடன் தயங்கினாள்..
கொஞ்சம் வளர்ந்து முதிர்ந்த ஆட்டுக்கு இருப்பது மாதிரியான குட்டித் தாடி. கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால்தான் தெரியும் தலை. அவ்ளோ உசரம்.. செவேல் என்ற நிறம்.. குட்டிக் கண்களை மறைக்கும் குட்டிக்குளிர் கண்ணாடி. லெவி ஜீன்ஸ் ப்ளூ, ஆலன் சாலி லைட் ப்ளூ டிஷர்ட், ஸ்கெட்சர்ஸ் காஷுவல் ஷூ.. அண்ட் குட்டிப்பூனையாய் அவன் கையின் பின் உருளும் ட்ராலி.
என்ன நினைத்தாளோ லிஃப்ட் திறக்க உள் சென்றாள்.. அவன் தயங்கினான்.. கண்களால் அழைப்பு “ப்ளீஸ் கம்..”
உள்ளே நுழைந்து லிஃப்ட் மூடினால் நாசியைத் தாக்கியது அதீதமான வாசனை.. அந்தப் பெண்ணின் ஸெண்ட்.. ம்ஹ்ம் ம்ஹ்ம் என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி அவளைப் பார்க்காமல் லிஃப்டின் நம்பர்கள் செல்வதைப் பார்ப்பதற்குள் மூன்று வர லிஃப்ட் நிற்க வெளியேறினான்..
கொஞ்சம் நட நட என நடந்து கார்னரில் இருந்த ஃப்ளாட் பெல் அடித்தால் திறக்க நேரம் ஆனது..
ஏற்கெனவே பார்த்த போர்டுதான் கதவில்.
ஸ்ரீநிவாச வரதன் மினிஸ்ட்ரி ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி, மஸ்கட்
திறந்தால் “ராம ராம ராமே தி ரமே ராமே மனோரமே.. சகஸ்ர நாம தத்துல்யம் வாடா”
நெற்றியில் மூன்று நாமம். புருவ நரை. கருப்பு ஃப்ரேம் கண்ணாடி. ஸ்ரீனிவாச வரதன். அவனிடமிருந்து ட்ராலியை வாங்கிச் சகஸ்ர நாமத்துடன் உள் சென்றார்.
ஷூவைக் கழற்றி வைத்துவிட்டு கிச்சன் சென்றால் ப்ரெளன் லெக்கின்ஸ், லைட் ப்ரெளன் டாப்ஸ், நெற்றியில் ஒற்றை நாமம்… அவன் அம்மா அவள் செல்ஃபோனில் “பச்சைத் தீ நீயடா…”
“அம்மா”
“வாடா, பிரயாணம் செளகர்யமா….. இருந்ததா..? காஃபி போடறேன் முகமலம்பிண்டு வா…”
“ஆமாம்மா.. கூட வந்த ஓமானியப் பொண்ணோட ஸெண்ட் ஒரே கப்ப் தலைவலி.”
“யாரு, அந்த 10ம் நம்பர் வீடா இருக்கும்.. கண்ண மட்டும் காட்டியிருப்பாளே. பௌர்ணமி நிலா மேகத்துல கொஞ்சம் புதைஞ்சா மாதிரி இருந்திருக்கும், என்ன கொஞ்சம் குட்டை..”
”அதெல்லாம் பாக்கலைம்மா”
”ஏன்?”
”என்ன நீ சினிமா அம்மாக்கள் மாதிரி பேசறே.. இரு, பாத்ரூம் போய்ட்டு வந்துடறேன்.. ஸ்ட்ராங் காஃபி.. வித் நோ ஷுகர்”
”படுபாவி.. இந்த வயசுல சக்கரை சேத்துக்கலாம்டா..”
”வெய்ட் போடும் வரேன்”
முகமலம்பி அப்படியே குளித்து அம்மா கொடுத்த அற்புதக் காஃபியை டபரா டம்ளரிலெடுத்து ஹால் சென்றால் அப்பா.. சகஸ்ர நாமம் முடிந்து இப்போது வாயில் அடியோமோடும் நின்னோடும்.
”என்ன, எப்போ ரிசல்ட் வரும்..?”
”ரெண்டு மாசம்..”
”ம் சரி.. அப்படியே கொஞ்சம் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டுக் கிளம்பு”
”எங்கப்பா..?”
”குர்ரம்ல ஒரு கம்பெனி.. என் ஃப்ரெண்ட் கே.டி.சாரி இருக்கான்”
”கேடியா?”
”அவன் இனிஷியல். கே. திருவேங்கடமாச்சாரி. ஆனா அவன் கில்லாடி.. போ.. உனக்கு இண்ட்டர்வியூ அரேஞ்ச் பண்ணியிருக்கான், அட்டெண்ட் பண்ணு”
”அபபப..”
”கொஞ்சம் டீசண்ட்டா டிரஸ் போட்டுக்கோ. அதென்ன ஆட்டுத்தாடி ம்.. காலம்..”
”அபபப..”
”ரூவி ஹைஸ்ட்ரீட்லதான் டாக்ஸி இருக்கே.. நீ இங்க வந்துட்டுப் போறவன் தானே. குர்ரத்துல எங்கன்னாக்க” என அவர் அட்ரஸ் சொல்ல, “சரி” சொல்லிக் கிளம்பினான் அனந்த்..
· * * ·
எட்டுக் கிலோ மீட்டர் ரூவியிலிருந்து.. பத்து நிமிடத்தில் வந்துவிட, அந்தக் கட்டடம் கொஞ்சம் குனிந்து அவனை வரவேற்றது, அப்பா சொன்னது.
உள் சென்று நுழைந்தால் முன்னாலேயே ஒரு டேபிள், சேர், ஒரு பெண்.
மலையாளப் பெண் என்று முகத்திலேயே தெரிந்தது..
”யெஸ்”
”மிஸ்டர் சாரி..”
ஃபோனை எடுத்து, ”மிஸ்டர் சாரி, உங்களை யாரோ காண வந்திருக்காணு.. நிங்கள்ட பெயர்?”
”அனந்த நாராயணன்.. அனந்த்..”
”உட்காருங்க..” எனக் கை நீட்டினாள். கொஞ்சம் சிற்றலையைப் போல.. தெரிந்த கரத்தில் சிகப்பு ரூபி வளையல் சிரித்தது..
உட்கார்ந்தால் சற்று நேரத்தில் வந்த சாரி கொஞ்சம் பூசினாற்போல குண்டாயிருந்தார். கண்ணாடி, ஃபார்மல் பேண்ட், ஷர்ட்… தொப்பையை உரசியபடி வளைந்திருக்கும் டை. பளபள கருப்பு ஷூ.. காதோர நரை.. மேலே கொஞ்சூண்டு வழுக்கை முன் தலையில்.
“யாரு, சீனு புள்ளையா? அனந்தனா, வா வா வா!” .. வரவேற்றார் சாரி..
எழுந்தான்.. “சரி வா, நம்ம ரூமுக்குப் போகலாம்”
போய் அமர வைத்து ஃபோனை எடுத்து… “யெஸ்.. நான் சொன்ன பையன்.. எம்பிஏ.. எஸ்.. ஓகே அனுப்பறேன்..”
“வாசல்ல பார்த்தியோன்னோ, அவ ஆயுஷி.. என்னோட அஸிஸ்டெண்ட்.. அவகிட்ட போய்ச் சொல்லு, அவ ஜெனரல் மேனேஜர்கிட்ட இட்டுக்கிட்டுப் போவா…”
“ஜெனரல் மேனேஜர் எந்த ஊர்க்காரர்..?”
“ஊர்க்காரரா.?” சாரி சிரித்தார்.. “போய்ப் பார்.. தெரியும்”
ஆயுஷியிடம் சென்று பின் ஜி எம் அறைக்குச் சென்றவன் சற்றே அதிர்ந்தான்…
வெள்ளை வாழைத்தண்டுக்கு மிடி டாப்ஸ் போட்ட மாதிரி ஒரு வெள்ளைக்காரப் பெண்.. கறுப்பு நிற மிடி, பிங்க் டாப்ஸ்.. வெளிர் மர நிற முடிகள் கொண்ட நெளிநெளிக் கூந்தல்… வலக்கையை நீட்டிய போது அதில் தெரிந்த வெளிர் மஞ்சள் ப்ரேஸ்லெட்..
”ஹாய், ஐயாம் ஆஷா அலெக்ஸாண்டர்.”
”ஐயாம் அனந்த்..”
”ஸிட்.. சாரி உங்களைப் பற்றிச் சொன்னார்..”
உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது.
”காஃபி?”
என்ன சொல்வதெனத் தெரியாமல்… ”நோ தாங்க்ஸ்”
”சரி வாங்க.. மேலே போகலாம்”
அறையை விட்டு வெளியே வந்து சற்று நடந்து உள்பக்கமாகவே மேல் செல்லும் படிகளில் ஏறி ஒரு கதவைத் திறந்தால் மொட்டை மாடி. கொஞ்சூண்டு ஷேட் இருக்க, வெய்யில் கொஞ்சம் கம்மிதான்.
”யெஸ் அனந்த்.. டெல் மீ அபெளட் யுவர் செல்ஃப்”
அவன் சொல்ல அவள் கேட்க.. பின்,
”சரி, நமது கம்பெனியில் இருப்பது லக்ஸரி ப்ராடக்ட்ஸ்.. ஜெர்மனி, மெய்ன் மற்றும் பல நாடுகள். பாரிஸிலிருந்து பர்ஃப்யூம். வீ ஆர் ஹேவிங் ஃபைவ் அவுட்லெட்ஸ் இன் மால்ஸ்.. உங்கள் চিন্তা என்ன மார்க்கெட்டிங்கிற்கு? டூ யூ ஸ்மோக்?”
”நோ தாங்க்ஸ்”..
ஆஷா அவளைப் போலவே வெள்ளையான குச்சி போன்ற டேவிடாஃப்பைப் பற்ற வைத்துக்கொண்டாள்.
”சொல்”
”சோஷியல் மீடியா அட்வர்டைஸ்மெண்ட்ஸ்” என அனந்த் சரளமான ஆங்கிலத்தில் பேச, அவளும் பேச, அரைமணியும் அவளது மூன்று சிகரெட்டுகளும் முடிந்திருந்தன..
”ஓகே, வி வில் கோ டவுன்..” எனச் சென்று, ”மிஸ்டர் சாரி, பையன் பிடிச்சிருக்கு.. காட் செலக்டட்.. காண்ட்ராக்ட் கொடுங்க.. அண்ட் ஆஸ்க் அவர் பி ஆர் ஓ டு டூ த நீட்ஃபுல் ஃபார் விசா…”
ஹூர்ரே என மனதுக்குள் மகிழ்ச்சி..
சாரி அறைக்கு வந்தால்.. ”தங்கம்டா பையா.. கங்க்ராட்ஸ்! அவ கொஞ்சம் முரடு.. நீ சாது, ஒத்துக்குமோன்னு சந்தேகப்பட்டேன்..”
”முரடா? நன்னாத்தான் பேசினாங்க..”
”சரி, இன்னிலேர்ந்தே கண்டின்யூ பண்ணு..” என ஒரு டேபிள் காட்ட, கொய்ங்க் என்றது வாட்ஸ்அப்.
”சார், யூஸ் பண்ணலாமா..?”
”பண்ணு, காண்ட்ராக்ட் ப்ரிண்ட் பண்ணனும்”
பார்த்தால் சித்தப்பா ஆரு..
”என்னடா என்ன ஆச்சு வேலை? எனக்கும் சாரியத் தெரியும்.. அய்யம்பேட்டைக்காரன் தான்.. அவன் வொய்ஃபா நன்னாவே தெரியும், பேசட்டா..?”
”சித்தப்பா, ஐ காட் த ஜாப்”
”குட்..”
”ஜி எம் தான் வெள்ளைக்காரி, டானிஷ்னு சொன்னார் சாரி..”
”ஓ பாத்தவொடனே மனசுல என்ன பாட்டு வந்தது?”
”கொக்கு பறபற.. அவ கொஞ்சம் நீளம்..”
”நீளம் இல்லடா, சிரிப்பு ஐகான் போட்டுக்கோ…. உசரம்னு சொல்லு.. உன்னை விடவா.. ம் போடா.. ருக்மணியே பற பற பற வர வேண்டாமோ.. வேற பொண்ணு இருக்கா ஆஃபீஸ்ல?”
”இருக்கா, ஆயுஷியோ என்னமோ பேரு, மலையாளம், சாரியோட அஸிஸ்டெண்ட்டா..”
”அப்படிச் சொல்லு மலையாளமா! பார்த்தாலே தெரிஞ்சுருக்குமே. ம் அப்புறம் ஒண்ணு.. கணக்குப் போடுற பொண்ணெல்லாம் ஈஸியா கணக்குப் போட முடியாது தெரியுமா.. தவிர கல்யாணம்னு பண்ணிண்டன்னா ரெகுலரா செக் பண்ணுவா கஷ்டம்”.
”சித்தப்பா இப்பதான் ஜாய்னே பண்ணப்போறேன்.. அப்புறம் பண்றேன்..”
வாட்ஸ்அப் மூடி, காண்ட்ராக்ட் சைன் பண்ணி, அப்பாவிடம் தகவல் சொல்லி… கொஞ்சம் வேலை என முதல் நாள் முடிந்தது.
தொடர்ந்த நாட்களில் ஆஷா முதல் நாள் பேசினாற்போல் தன்மையாகவெல்லாம் பேசவில்லை.. முரடுதான்..
ஆயுஷியும் அவனைப் பார்த்து அவ்வப்போது முறுவல் செய்து பேசிக்கொண்டிருந்தாள்.. பேசத்தான் வேண்டும், காரணம் அவள் அக்கௌண்ட்ஸ் என்பதால்.
ஒன்றரை மாதத்தில் விசா, தென் கார் ட்ரைவிங் லைசென்ஸ் எனக் கிடைத்துவிட, சில மாதங்கள் சென்றபின் ஒரு நாள் மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிய போது அவனுக்கு மெஸேஜ் வந்திருந்தது ஆயுஷியிடமிருந்து..
ஐ திங்க் ஐ லவ்யூ.
(தொடரும்)