Home கவிதைவிசுவநாதபுரி – 6
This entry is part 6 of 6 in the series விசுவநாதபுரி

தன்மத்ரா மீண்டும் தனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்ட சிறு பறவையானாள். ஷைலு மிரண்ட மான் போல அத்தையை விட்டு நொடி நேரம் அசைந்தாளில்லை.

இருவரும் பசை போட்டு ஒட்டினாற் போல சேர்ந்தே அமர்ந்து, சேர்ந்தே எழுந்து, சேர்ந்தே உண்டு, சேர்ந்தே கண்ணயர்ந்து என்று இயங்கத் தொடங்கினர். ஆஷாவுக்கு இது கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றியது போலும்; அவள் அவர்களைப் பார்த்து ஏளனமாக நகைத்துக் கொண்டாள்.

ரிசார்ட் ஊழியர்களுக்குத் தேவையான சில உடைகள், இந்தப் பெண்கள் இருவரும் தங்களது ஓய்வறையில் அணிந்து கொள்ளத் தக்கதான உடைகளில் சில விலை மலிவாக மார்க்கெட்டில் கிடைக்கவே அவற்றிலும் தலா மூன்று செட்கள், எமர்ஜென்சி தேவைக்கென சில மென்ஸ்ட்ருவல் நாப்கின் பாக்கெட்டுகள், முதலுதவிப் பெட்டி, புது இடம் – பழக்கமற்ற சீதோஷ்ணம் நிலவும் இடமும் கூட என்பதால் அவசரத் தேவைக்கான சில அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் என சிலவற்றை வாங்கிய ஆஷா, “தேங்காய் எண்ணெய், சோப்பு, மாய்ஸ்சரைசிங் கிரீம்கள், ஷாம்பூ பாக்கெட்டுகள் எல்லாம் அங்கே ரிசார்ட்டில் கிடைக்கும். அதிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாள்.

முடிந்தது பர்சேஸ். பிறகு காரில் போட் ஹவுஸ் செல்லும்போது இவர்கள் இருவரும் ரிசார்ட்டில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தாள். “கவனமிருக்கட்டும், நீங்கள் எங்களுடைய விருந்தாளிகள் அல்ல. உங்களை இங்கே விடுமுறையைக் கழிக்கவோ அல்லது நட்பின் பேரிலோ அழைத்துக்கொண்டு வரவில்லை. பரம்பரைப் பெருமைக்கும் பாரம்பரியப் புகழுக்கும் பாத்திரமான பெயர் பெற்ற ராஜவாளைத் திருட முயன்ற திருட்டுக் கைதிகளாகத்தான் இங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறீர்கள். உங்களது தண்டனைக் காலம் குறித்தெல்லாம் பாஸ் எதுவும் முடிவு எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.

அவை சில மாதங்களாகவோ அல்லது ஓரிரு வருடங்களாகவோ கூட இருக்கலாம். இருவருமே வயது வந்த பெண்கள் என்பதால், நாளை உங்களது எதிர்காலம் குறித்தெல்லாம் நான்தான் கவலைப்படுகிறேனே தவிர, பாஸுக்கு அதில் எல்லாம் அக்கறை இருக்க வேண்டிய நியாயம் இல்லை. அதனால் கவனமாக நடந்துகொள்ள வேண்டியது உங்களது கடமையும் பொறுப்புமாகும்” என்று ஆஷா சொல்லி முடிப்பதற்குள் போட் ஹவுஸ் வந்துவிட்டது.

காரிலிருந்து இறங்கி போட் ஹவுஸில் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அவர்களது இருக்கைகளைத் தேடிச் சென்று அமருவதற்குள்ளாக, அட்வைஸ் என்ற பெயரில் ஆஷா தன் பாஸின் பி.ஏ.-வாக அவளது கடமையாகவும் அதிகாரமாகவும் எண்ணிக்கொண்டு எதையெதையோ அடுக்கிக்கொண்டேதான் வந்தாள்.

அவளது போதனைகள் தனுவையும் ஷைலுவையும் முழுமையாகச் சென்றடைந்ததா என்றால் ‘ஆம்’ என்றும் சொல்வதற்கில்லை, ‘இல்லை’ என்றும் மறுப்பதற்கில்லை. அவர்கள் இருவரும் நிர்பந்தக் கைதிகளாக வெற்றுப் பார்வைகளுடன் அந்தமான் தீவின் வெளிர்நீலக் கடலைக் கொஞ்சமும் சுவாரசியமற்றுப் போய் தேமேவென வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

முக்கால் மணிநேரத்தில் ஹேவ்லாக் பீச்சைச் சென்றடைந்தார்கள். அங்கே இவர்களுக்கெனத் தயாராக இரண்டு இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தன. அவரவர் பொருட்களைத் தனித்தனியாக அவரவருக்கான வாகனங்களில் ஏற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டு, வாகனங்களுக்கான சாவியை அளித்தாள் ஆஷா.

“தன்மத்ரா, இவை இணைய வசதி செய்யப்பட்ட வாகனங்கள். இதில் கூகுள் மேப் உண்டு. டெஸ்டினேஷனில் விஜய்நகர் ரிசார்ட்ஸ் என்று செட் செய்துகொண்டு இருவரும் அங்கே வந்து சேருங்கள். இதில் இருக்கும் ஜி.பி.எஸ் டிராக்கர் உங்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கும். அது எங்கள் அலுவலகத்தில் பாஸின் பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பில் இருக்கும். அவசியம் என்றால் நீங்கள் பின்தொடரப்படுவீர்கள். அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள். பெஸ்ட் ஆஃப் லக்!

இத்துடன் எனது பணி முடிந்தது. இனி அங்கே ஜான் மெக்கன்ஸி பாஸின் பி.ஏ.-வாக உங்களைத் தொடர்புகொள்வார்.”

சொல்லி முடித்துவிட்டு ஒரு நொடி தயங்கிய ஆஷா, வேறெதுவும் பேசாது அங்கிருந்து அப்படியே விரைந்து வெளியேறிச் சென்றுவிட்டாள்.

ஷைலுவுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற்போலத் தோன்றிவிட்டது.

“அத்தை, இதென்னது? இந்தப் பெண் நம்மை இப்படி நடுத்தீவில் இறக்கிவிட்டுவிட்டு ஓடுகிறாள். ஐயோ! எனக்கு இந்த வண்டியை ஓட்டத் தெரியாதே… நான் என்ன செய்யட்டும்? என் முட்டாள்தனத்துக்கு நாம் இருவருமாகச் சேர்ந்து இத்தனை விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோமே!” என்று ஒருபாட்டம் அழத் தொடங்கிவிட்டாள்.

நடப்பதையெல்லாம் தடுக்க முடியாத அவல நிலையில் தனக்குள்ளாக மறுகிக்கொண்டிருந்த தனுவுக்கு, ஷைலுவின் புலம்பலில் பொறி தட்டவே…

“உளறாதே ஷைலு, இதில் உன் முட்டாள்தனம் என்ன இருக்கிறது? சும்மா இரு” என்றாள்.

ஷைலுவுக்கு அவளது அத்தையின் ஆறுதல் உரைக்கவில்லை. உணர்ந்திருந்தால் சுதாரித்திருப்பாள். ஆனால், அவளுக்கு இப்படி மாட்டிக்கொண்டோமே, எப்படியும் சில காலத்திற்கு இதிலிருந்து மீளவே முடியாது போலிருக்கிறதே என்று ஒரே மன உளைச்சலாகிவிட்டது. அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தில்,

“அத்தை, நான் அன்றைக்கு அந்த மதுரா ஆண்ட்டியைப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு இந்தக் குறுவாளைத் தூக்கி உங்களது கைப்பையில் வைத்திருக்கவும் வேண்டாம்; பிறகு இப்போது இந்த வேதனைகளை அனுபவித்திருக்கவும் வேண்டாம். எல்லாம் நம் தலைவிதி… என்னைப் பிடித்த கர்மவினை!”

என்று புலம்பி முடித்தாளோ இல்லையோ…

அடுத்த நொடியில் வலது புறச் செவிப்பறை கிழிந்தாற்போலொரு அறை வாங்கித் தள்ளாடும் நிலைக்கு ஆளாகி, கன்னத்தைப் பிடித்துக்கொண்டு பொறி கலங்கி நின்றாள். தனு அளித்த இந்தத் திடீர் சிகிச்சையில் அவளது கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

பெற்றோரின் அருகாமையோ, அன்பான வழிகாட்டலோ இன்றி சதா ஹாஸ்டலிலும், சிற்சில விடுமுறைகளில் மட்டுமே தன்னுடனும் தங்கி குடும்பத்தை உணரும் சின்னஞ்சிறு குருத்து அவள். அவள் செய்துவிட்டது மிகப்பெரிய பிழையாகவே இருந்தபோதும், தான் அவளை அப்படி அறைந்திருக்கக் கூடாது என்று யோசனை ஓடியபோதும் தனு அசைந்தாளில்லை.

ஷைலுவின் கண்ணீரை நிறுத்த இஷ்டப்படாதவள் போல அவளுக்கு முதுகு காட்டி நின்றவாறு:

“பார் ஷைலு, அழுது நேரத்தைக் கடத்தாதே. நான் முன்பே சந்தேகப்பட்டாலும் உன்னை நம்பினேன். என் அண்ணன் மகள் திருடவெல்லாம் வாய்ப்பில்லை என்று திடமாகவே நம்பினேன். அதற்கான பலனை அனுபவித்துவிட்டேன்… விட்டோம். இனி மருந்துக்கும் உன்னை நம்புவதற்கில்லை. இங்கே பார். வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்துக்கொண்டு நான் என்னவெல்லாம் செய்கிறேன் என்று கவனி. இது அப்படியொன்றும் அதிவிரைவில் செல்லக்கூடிய வாகனம் அல்ல; பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம்தான். அதனால் கீழே விழுந்துவிடுவோமே என்று பயந்து நடுங்காமல் கைகளை ஸ்டெடியாக வைத்துக்கொண்டு இதை இயக்கு. தினமும் சைக்கிளிங் செய்பவள் நீ. அதனால் ஹேண்டில்பார் ஸ்டெடி பற்றியெல்லாம் கவலைப்படாதே. நாம் இன்னும் 20 நிமிடங்களில் அங்கே செல்லாவிட்டால் நமக்காக அடுத்தொரு தண்டனை அங்கே காத்திருக்கலாம். அதனால் இனி பேசாதே! ஏறு இந்த வாகனத்தில்” – என்றாள்.

இனி அத்தையின் பரிவைச் சம்பாதிப்பது முடியாத காரியம், அவளது மன்னிப்புக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும் என்று உணர்ந்துகொண்ட ஷைலு, மனமின்றி வேண்டா வெறுப்பாக அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து அதை இயக்கவும் தொடங்கினாள்.

உயரம் குறைந்த அந்த பேட்டரி வாகனம் கிட்டத்தட்ட கியர் சைக்கிள் போலத்தான் இருந்தது. முதலில் கொஞ்சம் தட்டுத்தடுமாறினாலும், செல்லும் வழியில் அதேபோல வாகனங்களை ஓட்டிக்கொண்டு ஆண்களும் பெண்களுமாய் பலர் தாண்டிச் சென்றதில் இவளுக்கு அதன் மீதான பயமும் தயக்கமும் அகன்று, நல்லபடியாகவே மேப் காட்டிய வழியில் பயணித்து ரிசார்ட்டைச் சென்றடைந்தார்கள்.

வரவேற்பறையில் எதிர்கொண்ட ஜான் மெக்கன்ஸி, அர்னால்டு ஸ்வாஸ்னேகர் போலிருந்தான். அத்துடன் முதல் சந்திப்பிலேயே அவனுக்குச் சுத்தமாகச் சிரிக்கவே பிடிக்காது என்பது போல் நிரூபிக்க முயன்று கொண்டிருந்தான்.

இவர்களிடம் நல்லவிதமாக அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

“ஐ ம் ஜான் மெக்கன்ஸி… கேட்ச் யுவர் கார்ட்.” நீங்கள் இருவரும் இங்கிருக்கும் வரை இந்த குறிப்பிட்ட அறைதான் உங்களுக்கு என்றவாறு அக்சஸ் கார்டு ஒன்றை இவர்களை நோக்கி விட்டெறிந்தான். அவர்கள் அதை கேட்ச் பிடிக்க மறந்து மந்தமாக நின்றுகொண்டிருந்தனர். அதைக் கண்டு எரிச்சலுற்றவன் மிகக்கடுமையான முகபாவத்துடன், “தேர்டு ஃப்ளோர் ரூம் நம்பர் 303, அடுத்த உத்தரவு வரும் வரை அங்கு சென்று தாமதியுங்கள்” என்று கூறிவிட்டு, அவர்களது பதில்களை எதிர்பாராது அலட்சியத்துடன் திரும்பி நடந்து விரைவாக அங்கிருந்து மறைந்தான்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த ரிசப்ஷனிஸ்ட் இதைக் கண்டும் காணாதவள் போல அமர்ந்திருக்க, தனுவும் ஷைலுவும் தங்களது பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு லிஃப்ட் நோக்கி நகர்ந்தார்கள். பொதுவாக இது போன்ற ரிசார்ட்டுகளில் தங்குவது அவர்களுக்குப் புதிதில்லை. ஆனால் இந்த அவமானம் தான் முற்றிலும் புதிது, வெறுக்கத்தக்கதும் கூட.

அதை அந்தப் பெண்கள் இருவராலும் கொஞ்சமும் சகித்துக்கொள்ளவோ ஜீரணித்துக்கொள்ளவோ முடியவில்லை. இத்தனைக்கும் காரணம் ஷைலுவின் அசட்டுத்தனமான பொறுப்பின்மைதான் என்று அறிந்துகொண்டதிலிருந்து தனு அவளிடம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. இருக்கும் துன்பத்தில் இது வேறு தனியாக ஷைலுவை வாட்டத் தொடங்கியிருந்தது.

யாருமற்ற தனது தனிமை வாழ்வில் அத்தை என்ற ஒரு பந்தத்திடம் மட்டுமே அவள் மனம் திறந்து பழகக்கூடியவளாக இருந்தாளே தவிர, இவள் முன் அவளது பெற்றோரே கூட அவளுக்கு இரண்டாம் பட்சமே!

அப்படிப்பட்ட அத்தையின் அன்பைச் சிறுபிள்ளைத்தனத்தால் இப்படிக் குலைத்துப் போட்டுவிட்டோமே என்று அவளுக்கு மனம் ஆறவே இல்லை.

ஆனாலும், இப்படித் தங்களது சொந்த விசாரங்களில் மூழ்கிப்போக, அதன் பின்னர் அவர்களுக்கு அவகாசமே இல்லாது போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த ரிசார்ட்டில் அனுதினமும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதவில்லை என்றபோதும், தினசரிப் பணிகள் மென்னியை முறிக்கத்தான் செய்தன. இவர்கள் இருவருக்கும் கணக்கின்றி வேலைகள் அடுக்கடுக்காகத் தரப்பட்டன. அத்தனையும் சுத்தமாக வேறு வேலைகள் ஏதும் செய்யத் தகுதியற்ற படிப்பறிவற்ற ஆண்களும் பெண்களுமாகச் செய்து முடிக்கக்கூடிய வகையிலான வேலைகளாகவே அமைந்ததைத்தான் தனுவும் ஷைலுவும் மிகவும் வெறுத்தார்கள். தரப்பட்ட வேலைகளைச் செய்து முடிப்பதற்குள் பலமுறை கண்கள் தாரை தாரையாக நீர் சொரியத் தயார் நிலையில் இருந்தன. வயது முதிர்ச்சியினால் தனு தன்னிலை அறிந்து நடந்துகொள்ள முயற்சி செய்தாள் எனில், ஷைலு ஒவ்வொரு முறையும் தனக்குத் தரப்பட்ட வேலைகளைச் செய்து முடிக்க முடியாமல் பலமுறை மெமோ வாங்கினாள்.

ஒவ்வொரு முறையும் மெமோ வாங்கிக்கொண்டு, பிழையாகச் செய்த அதே வேலையைப் பிழையின்றிச் செய்து முடித்தாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது. ஒரு நாள் ரிசார்ட்டைச் சுற்றி இருந்த புல்வெளியில் களை வெட்டும் பணி தரப்பட்டது. “இதெல்லாம் நான் செய்யக்கூடிய வேலை இல்லை” என்று அவள் காட்டுக் கூச்சலிடத்தான் விரும்பினாள். ஆனால், அந்தந்த வேளைக்கான உணவு என்பது அன்று தரப்படும் வேலைகள் பூரணமானால்தான் வழங்கப்படும்… இல்லையேல் வேலை முடியும்வரையில் தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு கிடக்க வேண்டியதுதான்.

பெண்கள் இருவருக்குமே தாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம் என்ற கோபம் இருந்ததால், சில நேரங்களில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொருத்தமற்ற வேலைகளை ஏற்றுச் செய்யச் சுணங்கியதோடு பட்டினியும் கிடந்து பார்த்தார்கள். ஆனால், பார்த்த முதல் நொடியிலிருந்தே இவர்கள் மீது தகிக்கும் வெறுப்பில் ஆழ்ந்து கிடந்த அந்த ராஜகுடும்பத்து வாரிசு, இவர்களைக் கொஞ்சமும் நிம்மதியாக இருக்க விடுவதாக இல்லை என்பதைத் தங்களது மறுப்பைப் பதிவுசெய்த ஒவ்வொரு முறையும் இவர்கள் உணர வேண்டியதாயிற்று.

பட்டினி என்பதெல்லாம் சாதாரண தண்டனை என்றாகி, சில சமயங்களில் இரவு சோர்ந்து அயர்ந்து அறைக்குத் திரும்புகையில், அவர்களுக்கான படுக்கை வசதிகள் முற்றிலும் நீக்கப்பட்டு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டியதான தண்டனை வழங்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் முழுநாளும் மூன்று வேளை உணவாகச் சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே உண்ணத் தரப்படும். இம்மாதிரியான நூதனமான தண்டனைகள் அந்த அப்பாவிப் பெண்கள் இருவரையும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாக்கின.

நடுநடுவே தனுவுக்குத் தன் அம்மாவின் நினைவுகளோடு, விசுவநாதபுரியின் நூபுர கங்கை அமர்ந்த அம்பிகையின் பாதக் கொலுசுகளில் சிக்கிக்கொண்டு தவித்த மனச்சிக்கல்களும் கொடுந்தணலென வாட்டி எடுக்க, அந்தமானில் அவர்களது நாட்கள் மிக இறுக்கமானதொரு மூச்சுத்திணறலோடு நகர்ந்துகொண்டிருந்தன.

இதில் ஷைலுவின் நிலைதான் அந்தோ பரிதாபமாயிருந்தது!

வாள் திருடு போன விஷயத்தில் அவளது ஒப்புதல் உண்டாக்கிய மனக்காயம் தீராத நிலையில், தன்மத்ரா அவளிடம் முன்னைப் போல பேச விருப்பமின்றி ஒதுங்கவே, அந்தச் சிறுமி தன்னை ஒரு அனாதை போல உணரத் தொடங்கினாள்.

அவளிடம் பேச்சைத் தவிர்த்தபோதும், ஷைலுவின் வேலைகளில் பாதிக்கு மேல் ஏற்றுச் செய்ய தனு தயாராகவே இருந்தாள். ஆனால், சதா சர்க்யூட் கேமராவின் கண்காணிப்பில் இருந்த அவ்விருவராலும் தாங்கள் நினைத்தபடியெல்லாம் அங்கே இருக்க முடியவில்லை என்பதே நிஜம்.

மொத்தம் 40 அறைகள் இருந்தன அந்த ரிசார்ட்டில். அவற்றில் 10 அறைகள் வி.வி.ஐ.பி-க்களுக்கான ராயல் லக்ஸுரி சூட்கள்; 8 பிரீமியம் அறைகள் வி.ஐ.பி-க்களுக்குத் தகுந்த அளவில் ஆடம்பரமானவை; 15 அறைகள் எக்ஸிகியூட்டிவ் சூட் என்று சொல்லத்தக்க வசதியுடன் கூடிய கிளாஸிக் வகையிலானவை; மீதமுள்ள 7 அறைகள் சிங்கிள் காட் வசதியுடனான நார்மல் அறைகள். அங்கு எல்லா அறைகளுமே வசதியில் குறைந்தவை அல்ல; ஆனால் அறைகளின் தன்மைக்குத் தகுந்த அளவில் நிர்வாகத்தின் சேவைகள் அதிகரிக்கப்பட்டிருக்கும். விருந்தினர்கள் கேட்பவையெல்லாம் கிடைக்கக்கூடியவை ராயல் லக்ஸுரி சூட்கள். வி.ஐ.பி அறைகளும் கிட்டத்தட்ட அப்படிப்பட்டவை என்றாலும், அவற்றோடு ஒப்பிடும்போது அளவில் சற்றுச் சிறியவை. எக்ஸிகியூட்டிவ் அறைகள் பெரும்பாலும் குடும்பமாகத் தங்க வருகிற அப்பர் மிடில் கிளாஸ் விருந்தினர்களுக்கானது. சிங்கிள் அறைகள் நான்கு, ஐந்து பேர் கொண்ட குழுக்களாக ஊர் சுற்றும் சிங்கிள்ஸ்களுக்கானது.

இந்த அறைகளில் விருந்தினர்களைக் கவனிக்க என்று முறையாக கேட்டரிங் படித்த சர்வீஸ் ஆட்கள் இருந்தனர். சமையலுக்குத் தலைசிறந்த செஃப் முதல் லோக்கலாக சமைக்க ஊர்ப்புறத்துச் சிறந்த தவசுப்பிள்ளை வரை குழு ஒன்று தனியாக உண்டு.

இத்தனை வசதிகள் இருந்தபோதும், அவற்றில் எதையும் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை எதுவுமே இந்தப் பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

அந்தமானுக்கு அழைத்து வரப்பட்டு நாட்கள் 10 கடந்த நிலையில், ஒருநாள் இரவு 11.30 மணிக்கு மேல் ஒருவழியாகத் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு இரு பெண்களுமே அறைக்குத் திரும்பியிருந்தனர்.

ஷைலு ஓய்ந்துபோயிருந்தாள். இதற்கு மேல் தாங்காது என்பது போல வெடிக்கத் தயாரான நிலையில் ஒரு பிரஷர் குக்கர் போல திணறிக்கொண்டிருந்தாள்.

தனுவுக்கும் அவள் மீதான கோபம் வடிந்து, அவள் மீதான ஆதூரம் பெருகிக்கொண்டிருந்தது. ‘தன் கஷ்டம் தன்னோடு போகட்டுமே… பரம்பரை வாள் கண்டெடுக்கப்பட்டது என்னவோ தன்னுடைய கைப்பையில்தானே! அப்படியென்றால் இவளையும் இந்தச் சிறையில் வாடி வதங்க விட்டுக்கொண்டே இருப்பானேன்?! நாளை எப்படியாவது இவர்களது பாஸைச் சந்திக்க முயற்சி எடுக்க வேண்டும். அவன் தங்களை எவ்வளவு தூரம் அவமானப்படுத்தினாலும் சரி, பிடிவாதமாக ஷைலுவை இந்தக் கொடுமையான சிறையிலிருந்து விடுவித்தே ஆக வேண்டும். அவளுக்குப் பள்ளி திறக்கும் நாள் வேறு நெருங்கிக்கொண்டிருக்கிறது’ என்று பலவிதமான யோசனைகளில் ஆழ்ந்திருந்தாள் அவள்.

அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தியதுதான் தாமதம், அன்றைய இரவு உணவுக்கென கையோடு எடுத்து வந்திருந்த ரெடிமேட் சப்பாத்தி, பட்டர் மற்றும் ஜாம், சலுகையெனத் தோன்றும் படியான இரண்டு ஆரஞ்சுப் பழங்கள் இவை அனைத்தும் அடங்கிய பேப்பர் பையைத் தரையில் கோபத்துடன் விசிறியடித்துவிட்டுப் படுக்கையில் குப்புற விழுந்து கதறத் தொடங்கிவிட்டாள் ஷைலு.

தாங்க முடியாத அளவில் உடற்சோர்வு, மனச்சோர்வு இருந்தபடியால், தனுவால் அவளை அந்த நேரத்தில் ஆறுதல்படுத்த இயலாத நிலை. அவளுக்கோ கொலைப்பசியையும் மீறிக்கொண்டு தூக்கம் கண்களைச் சுழற்றியது. இனி இந்தச் சப்பாத்திகளைச் சூடு பண்ணி ஹாட் பாக்சில் வைத்துவிட்டு, ஹீட்டருக்குப் பதிலாகத் தங்களுக்குத் தரப்பட்டிருந்த இம்மர்ஷன் ராட் ஹீட்டரை வாளியில் பொருத்தி நீரைச் சூடாக்கி உடம்பில் ஊற்றிக்கொண்டு, பிறகு இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கைக்குச் செல்லும் முன் நள்ளிரவு தாண்டி மறுநாளே தொடங்கிவிடுமே என்று மிக மிகச் சலிப்பாக இருந்தது.

இதில் கதறி அழும் ஷைலுவைப் பார்த்து அந்த நேரத்தில் அவளுக்கு அலுப்பும் சலிப்புமாக முதலில் கோபமே அதிகரித்தது. ஆயினும் கடுமையாக எதையும் பேசி அவளை மேலும் இடிந்து போகச் செய்ய விருப்பமின்றி, மிகப்பலவீனமான நிலையிலும் தன் அண்ணன் மகளை அணுகி, மெல்ல அவளை எழுப்பித் தன் மடியில் படுக்க வைத்து ஆறுதலாகத் தலையை வருடிவிட்டு,

“ஷைலும்மா, அழாதே ப்ளீஸ்! யெஸ், இட்ஸ் பெயினிங்டா. ஐ அண்டர்ஸ்டுட். நாம் இப்போது ஒரு மோசமான கனவில் இருப்பதாக நினைத்துக்கொள். சீக்கிரமே விடியும். விடிந்ததும் நிச்சயம் நமக்கான காலம் வரும். அப்போது நம் மீது சுமத்தப்பட்ட இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்கு இவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எழுந்து வா… சாப்பிடலாம்” – என்றாள்.

அத்தையின் ஆறுதல் மருமகளின் ஆற்றாமையைச் சற்று குறைத்தபோதும், உடனடியாக அவளது அழுகை நின்றபாடில்லை. கதறலிலிருந்து மெல்ல விக்கத் தொடங்கியவள், பின்னர் தானே சமாதானமானவளாக எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து அமர மேலும் சில நிமிடங்கள் ஆயின.

சில நாட்களாகப் பேச்சைத் தவிர்த்திருந்த அத்தையின் அரவணைப்பு அந்தச் சிறுமிக்கு மிகவும் தேவையாக இருந்தது. அவளது தோழமையான அன்பிருந்தால் போதும், தற்போது அனுபவிக்கும் கஷ்டத்தைக் கூட அவள் தாங்கிக்கொள்ளத் தயாராகவே இருந்தாள்.

இப்படியாக அவர்களுக்குள் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த பனிப்போர், வெயிலில் உருகிய பனித்துளியாக முடிவுக்கு வந்தது.

மறுநாளிலிருந்து இருவரும் இணைந்து வேலை செய்யும் நேரத்தில் கொஞ்சம் சிரிப்பும் கேலியுமாகக் கூட பேசிக்கொள்ள முடிந்தது ஷைலுவுக்கு மிகப்பெரிய விடுபடலாக அமைந்தது. அன்றைய இரவில் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

அன்றைய இரவுக்கென ரவையும், சிறிது வெங்காயம், பச்சை மிளகாய், சிறிய ஊறுகாய் பாக்கெட் ஒன்று, கொஞ்சம் சர்க்கரை, இரண்டு சிறிய வாழைப்பழங்கள் மட்டுமே அவர்களுக்கான பேப்பர் பையில் வைக்கப்பட்டிருந்தன.

இது ரவா உப்புமா கிளறிக்கொள்ளத் தேவையான பொருட்கள் என்று அறிந்ததுமே ஷைலுவுக்கு ஆத்திரம் கிளர்ந்தது. அந்தப் பையை எடுத்துக்கொண்டு தன் அத்தை தடுக்கத் தடுக்க வேகவேகமாக ஜான் மெக்கன்ஸியின் அறைக்கு விரைந்தாள் அவள்.

அறைக்கான அழைப்பு மணியை வெறிகொண்டு அழுத்திவிட்டுக் காத்திருக்கும் பொறுமை சிறிதும் இன்றி, படபடவெனக் கைகளாலும் தட்டத் தொடங்கினாள்.

“ஹூ இஸ் திஸ் அரோகண்ட்?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கோபமாகக் கதவைத் திறந்த மெக்கன்ஸி… அங்கே அவள் நின்றிருந்த கோலம் கண்டு என்ன நினைத்தானோ, மெலிதான புன்னகையோடு விழிகளில் சுவாரசியம் தேங்கி நிற்க அவளைக் கேள்வியாகப் பார்த்துக்கொண்டு நின்றான்.

காரணம், பையைத் தூக்கிக்கொண்டு ஆத்திரத்துடன் ஓடிவந்த ஷைலு நினைத்தது வேறு; ஆனால், அங்கே நடந்தது வேறாகிவிட்டது. மெக்கன்ஸியின் முகத்தில் எறிவதற்காக இவள் தனது கையில் உயர்த்திப் பிடித்திருந்த பேப்பர் பை இவளது ஆங்காரமான உடலசைவில் கிழிந்து, ரவையெல்லாம் தலையில் கொட்டிக் கவிழ்ந்து, வெங்காயத் தோல் பறக்க, பறந்த வேகத்தில் உடனிருந்த பச்சை மிளகாய் தோடு போல காதில் மாட்டிக்கொண்டு ஆட, அவள் நின்ற கோலம் பார்க்கும் எவருக்குமே வேடிக்கையாகத்தான் இருந்திருக்கக்கூடும். மெக்கன்ஸியும் மனிதன்தானே! அவனுக்குள்ளும் கொஞ்சம் ஹாசிய உணர்வு இருந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ முசுட்டுப் பூனையான அவனும் கூட அவளது கோமாளித்தனமான தோற்றத்தைப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தவன்… சட்டென இந்தப் புன்னகை போதும் என முடிவெடுத்து,

“இனஃப் ஷைலா. க்ளியர் திஸ் பிளேஸ் சூன். பாஸ் வில் கம் ஃபார் அ செக் எனி டைம்” என்றுவிட்டு, கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டான்.

ஷைலுவுக்கு அவமானமாக இருந்தாலும், மெக்கன்ஸியின் சிரிப்பு அவனுக்குள் இருக்கும் தோழமை உணர்வை வெளிக்காட்டுகிறதோ என்ற சஞ்சலத்துடன் முகம் சொத்தென்றாகி அறைக்குத் திரும்பினாள்.

அவளது கோபத்தால் என்னவெல்லாம் எதிர்விளைவுகள் நேரப்போகிறதோ என்று அவசர அவசரமாக அவளைத் தொடர்ந்து ஓடிவந்துகொண்டிருக்கும்போது, அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த சிறு மர ஸ்டாண்ட் தடுக்கியதில் விழுந்து எழுந்து சற்றுத் தடுமாறியவாறு எதிரில் வந்துகொண்டிருந்த தனுவுக்கும் ஷைலுவின் தோற்றம் சிரிப்பு மூட்டினாலும்… அவளை மேலும் வருத்த வேண்டாமே என்று மிகச் சிரமப்பட்டுச் சிரிப்பை அடக்கிக்கொண்டாள் அவள்.

ஒருவாறு அறைக்குள் வந்த பிறகுதான் உறைத்தது; அட… இருந்த ரவையையும் இப்படிச் சிதறிக் கொட்டியாயிற்று, இப்போது எதைத் தின்பதாம்? பசியில் உயிரே போய்விடுமே! அதையெல்லாம் யோசிக்காமல் சிறுபிள்ளைத்தனமாய் அத்தனையையும் வீணாக்கிவிட்டோமே என்றாகிவிட்டது ஷைலுவுக்கு. வெறுமே இரண்டு வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? என்று இரவுச் சாப்பாடு குறித்தான அச்சம் இருவரையும் பாடாய்படுத்தவே, ஒருவரை மற்றவர் பார்த்தவாறு செய்வதறியாது திகைத்து நின்றவர்களை அழைப்பு மணியோசை கலைத்தது.

இந்த நேரத்தில் யார் என்ற யோசனையுடன் ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தால், அந்தப் பக்கம் ரூம் சர்வீஸ் பிரிவைச் சேர்ந்த ஜாக்குலின் நின்றுகொண்டிருந்தாள். அவள் கையில் குட்டியாய் ஒரு கேசரோலும், சின்ன பிளாஸ்க்கும் இருந்தன.

“மிஸ். தன்மத்ரா, மெக்கன்ஸி அனுப்பினார். இதில் சூடான பிரெட் டோஸ்டும், பனங்கற்கண்டு இட்ட பாலும் இருக்கின்றன. இன்று ஒரு நாள் மட்டுமே இச்சலுகை. இன்றைப்போல இனி எப்போதும் உணவை வீணாக்கும் விளையாட்டு வேண்டாம். தொடர்ந்தீர்கள் என்றால் பிறகு பட்டினிதான். இதை நான் சொல்லவில்லை, அவரே சொன்னார்” – என்று கூறியவள் தனு அவற்றை வாங்கிக்கொண்டதும் நகர்ந்தாள்.

போன உயிர் திரும்ப வந்தாற்போலிருந்தது இருவருக்கும்.

(தொடரும்)

Series Navigation<< விசுவநாதபுரி – 5

Author

You may also like

Leave a Comment