Home கட்டுரைமூன்றெழுத்து அதிசயம் :- என் அப்பா

என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து, எனக்கு இந்த உலகத்தை முகவுரை செய்த என் தந்தையை, இந்த உலகிற்கு நான் எங்கனம் அறிமுகம் செய்வேன்..?

“அப்பா”

இந்த மூன்றெழுத்துச் சொல்லுக்குள் அடங்கியிருக்கும் என் பிரபஞ்சம் மிகப் பெரியது. வார்த்தைகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத மனிதரை, வெறும் எழுத்துகளால் மட்டும் விவரித்துவிட முடியுமா என்ன?. ஆனாலும் ஒரு முகமன்.. என் உள்ளம் நிறைந்த அந்த உன்னத மனிதரைப் பற்றி.

கண்ணாடியும் அவரே.. கண் கண்ணாடியும் அவரே:

பொறுப்பிலும், பொறுமையிலும், இவ்வுலகின் ஆகச்சிறந்த ஆண்மகன் அவர். ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்ற தத்துவத்தை தன் அன்றாட வாழ்க்கையில், தன் குடும்பத்தில் வாழ்ந்து காண்பித்த தீர்க்கதரிசி.

என் விரல் பிடித்து நடை பழக்கி, என் சிந்தனையைச் செதுக்கி, என்னை இன்று ஒரு முழுமையான மனிசியாக உருவாக்கிய என் தந்தையின் வாழ்வும், அவரோடான என் நினைவுகளும் காலத்தால் அழியாத, என் இதயத்தில் நான் சேமித்த பொக்கிஷம்.

அப்பா கண்டிப்பு காட்டும் அதிகாரியாக இருந்ததை விட.. எனக்குத் தெரியாத இந்த உலகத்தைத் தெளிவாய்க் காட்டும் என் கண் கண்ணாடியாய் இருந்த நாட்களே அதிகம். ‘உருவத்திலும் சரி.. குணத்திலும் சரி.. அப்பாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீ’ என்பார் அம்மா. அப்போதெல்லாம், பெருமை சிறு புன்னகையாய் என் உதட்டில் ஒட்டிக்கொள்ளும்.

புத்தக உலகின் நண்பர்

அவர் எனக்கு அறிமுகம் செய்த புத்தக உலகம் தான் எனக்குப் பறக்கக் கற்றுத்தந்தது. நிலா காட்டி சோறூட்டுவதைப் போல.. என் பிஞ்சுக்கரங்களில் ‘அம்புலிமாமா’, ‘கோகுலம்’ கதைப் புத்தகங்களைக் கொடுத்து, வாசிப்பின் சுவையை ஊட்டினார். அதுவே நாளடைவில் சாண்டில்யனின் வரலாற்று நாவல்கள் வரை என்னைக் கூட்டிச் சென்றது.

புத்தகங்களை வெறும் வாசிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், கதைகளின் பாத்திரங்களைப் பற்றியும், அதன் வரலாற்றுப் பின்னணிகளைப் பற்றியும் என்னோடு அமர்ந்து விவாதிக்கும் ஒரு சிறந்த நண்பராகத் திகழ்ந்தார்.

வீட்டிலும் செழித்தோங்கிய ஜனநாயகம்

எங்கள் வீட்டில் ஜனநாயகம் எப்போதும் தழைத்தோங்கியிருந்தது. பிள்ளைகள் என்ற காரணத்திற்காக எங்கள் மீது எந்த முடிவும் திணிக்கப்பட்டதில்லை. எங்களுக்கு யோசித்து முடிவெடுக்க முழுமையான சுதந்திரத்தையும் தந்தார். குடும்பத்தின் எந்தவொரு முக்கியமான முடிவாக இருந்தாலும், எங்களையும் சமமாக அமர வைத்து, எங்கள் கருத்துக்களைக் கேட்டு, அவர் தன் கருத்துக்களைச் சொல்லி.. கலந்தாலோசித்து தான் முடிவெடுப்பார். அப்பாவின் இச்செயல், இயல்பாக வீட்டின் பொறுப்புகளையும், எங்கள் கடமைகளையும் எளிதாக மனதில் விதைத்தன.

மனிதர்களின் மகத்துவம்

“சேர்ந்துண்ணவும் பகிர்ந்துண்ணவும்” பழக வேண்டும் என்பது அவரின் தாரக மந்திரம். வீட்டில் சமைக்கப்படும் உணவு எதுவாக இருந்தாலும், அதைச் சுற்றத்தாரோடு பகிர்ந்து உண்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி என்று புரிய வைத்தார்.

பணத்தின் அருமையை உணர்த்தி, சிக்கனத்தின் அவசியத்தை எங்களுக்குக் கற்றுத் தந்த அதேவேளையில், கஞ்சத்தனத்தை அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. மனிதர்களை விட, உறவுகளை விடப் பணம் ஒருபோதும் பெரியதில்லை என்ற உயரிய தத்துவத்தை அவர் வார்த்தைகளால் சொல்லாமல், தன் செயல்களால் எங்கள் மனதில் பதிய வைத்தார்.

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை; சுற்றமின்றி சுயநலமாய் வாழ்தலை விடப் பெருங்குற்றம் எதுவுமில்லை.” என்ற கொள்கை உடையவர். உறவுகளோடு இணங்கி வாழ்வதும், மற்றவர்களின் தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்வதுமே வாழ்க்கையின் அழகு என்று அடிக்கடி சொல்வார். அதனால்தான், சுற்றங்கள் சூழ ஒரு சுகமான, பாதுகாப்பான குழந்தைப்பருவம் எங்களுக்குப் பரிசாகக் கிடைத்தது.

சிறகைத் தந்த பயணங்கள்

பறவைகளுக்குச் சிறகுகள் எவ்வளவு முக்கியமோ, மனிதர்களுக்குப் பயணங்கள் அவ்வளவு முக்கியம் என்று அடிக்கடி கூறுவார் அப்பா. பொருளாதாரரீதியாகப் பல ஏழ்மையான சூழல்களைக் கடந்த போதிலும், எங்களை ஒரு கூட்டுப் புழுவாக அவர் வளர்க்கவில்லை. புதுப்புது இடங்களுக்கு எங்களைக் கூட்டிச்சென்று, உலகை உற்றுநோக்கும் பார்வையை விசாலமாக்கினார்.

தித்திக்கும் பக்தி

சாலை விதிகளைத் தீவிரமாகப் பின்பற்றும் என் அப்பா, கோவில்களைத் தாண்டும் சில நொடிகள் மட்டும், சாலையையே மறந்து, கண்மூடி பிரார்த்திக்கும் பக்திமான் ஆகி பயமுறுத்துவார்.

பக்தியை தேன்மிட்டாயாக தித்திக்க வைத்தவர்.. எந்த நம்பிக்கையையும் எங்கள் மீது திணித்ததில்லை; காய்ச்சலுக்கு அல்லா கோவிலில் மந்திரிப்பார்.. கருப்பசாமி கோவிலில் திடுக்கு தண்ணி தெளிப்பார். கிறிஸ்துமஸுக்கு யேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் சொல்வோம். எல்லா கோவிலும் எல்லா சாமியும் அப்பாவால் ஒன்றாகத் தெரிந்தார்கள். மதத்தைக் கடந்து மனிதர்களும் ஒன்றாய்த் தெரிந்தார்கள்.

புத்தாடை

எப்பாடுபட்டேனும், எங்களுக்குப் பிறந்தநாள், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்குப் புத்தாடை வாங்கித் தருவார். எங்களுக்கு உடுத்திப் பார்ப்பதில் தான் அவருக்கு அத்தனை ஆனந்தம். ஆனால், அவருக்கென்று வரும்போது, உடுத்தியிருக்கும் ஆடை கிழியும் வரை தனக்கென ஒரு புதிய துணியைக் கூட எடுக்க மாட்டார்.

கல்விக்கண் கொடுத்த என் காமராஜர்

‘கல்விக்கு’ என உதவி யார் கேட்டாலும் மறுக்காமல் உதவி செய்வார். தன் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, எங்களுக்கு நல்ல கல்வியைப் பரிசாய்த் தந்தார்.

என் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை நான் முதுநிலைப் பட்டத்திற்காகக் கல்லூரியில் சேர்ந்த தருணம். தரமான கல்விக்காக.. எட்டு அண்ணன் தம்பிகள் கொண்ட என் தந்தையின் குடும்பத்தில், முதன்முதலாக ஆண் பெண் சேர்ந்து பயிலும் ஒரு இருபாலர் கல்லூரியில் என்னைச் சேர்த்து விட்டார்.

அதைக் கண்ட அப்பாவின் அண்ணன் (பெரியப்பா), “கல்யாணத்த முடிக்கிற வயசுல.. பொம்பளப்புள்ளைக்கு இதெல்லாம் அவசியமா? ஆம்பளப் பசங்கள நம்ப முடியாது. எதுக்கு வம்பு?” என்று அறிவுரை சொன்னார்.

“அண்ணே… எனக்கு எம்மவளத் தெரியும்ல… அதுபோதும்!” என்று எனக்காக வக்காலத்து வாங்கினார். அந்த ஒரு வார்த்தை தான் எனக்கு தங்கப்பதக்கம் வெல்லும் உத்வேகத்தைத் தந்தது. என் தங்கைகளுக்கும் இருபாலர் கல்லூரிகளின் கதவைத் திறந்தது.

சிவாஜி ரசிகன்

ஊருக்கே உபதேசம் செய்யும் கம்பீரமான மனிதர்; சிவாஜியின் படங்கள் என்றால் மட்டும், திருவிழாவில் தொலைந்த குழந்தை போல.. கண்கள் சிவந்து விம்மி விம்மி அழுவார். சிவாஜியின் படங்களைப் பார்த்ததை விட.. அதைப் பார்த்த அப்பாவைப் பார்த்து ரசித்த நாட்களே அதிகம்.

அப்பாவின் அடையாளம்

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், நான் எப்போதுமே அப்பாவைப் பார்த்தது வேட்டியில்தான். நாங்களெல்லாம் கட்டாயப்படுத்தி, நீண்ட கால்சட்டைகளை அணியச்சொல்லி, அவரை ரசித்திருக்கிறோம் என்றாலும், இப்போதும் என் மனக்கண்ணில் அப்பாவை உருவகப்படுத்தினால், அவர் வேட்டியோடு தான் காட்சி தருவார். மகாபாரதக் கர்ணனுக்குக் கவசகுண்டலம் எப்படியோ, அப்படி என் அப்பாவுக்கு இந்த வேட்டி!

காலையில் துவைத்து மடித்த வெள்ளை வேட்டியை அணிந்து கொண்டு அவர் வேலைக்குச் செல்வார். நாள் முழுக்கக் கடினமாக உழைத்துவிட்டு, இரவு அவர் வீடு திரும்பும்போது, அந்த வேட்டி இருட்டிலும் அடையாளம் காண முடியாத அளவிற்குப் பழுப்பு நிறத்திலும், கருப்பு நிறத்திலும் மாறியிருக்கும்.

அவரது அந்த உழைப்பின் பாரத்தை, வேலைப்பழுவை நாங்கள் அறிந்து வைத்திருந்தாலும், அந்த அழுக்கு வேட்டியைப் பார்த்து நாங்கள் கிண்டல் செய்வோம். அப்போதெல்லாம் அவர் கோபப்படாமல், ஏதோ ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்தது போல அத்தனை வெள்ளந்தியாகச் சிரிப்பார்.

அந்த வேட்டியின் நிறமும், வீட்டிற்கு வந்த உடனே படுத்த நொடியில் அசதியில் அவர் உறங்கும் அந்த உறக்கமும், அவரது உழைப்பின் கதையை எங்களுக்குச் சொல்லாமல் சொல்லும்; அவரோ ஒருபோதும் அதை வார்த்தைகளாய் உதிர்த்ததில்லை.

துணி துவைக்கும் கலை

அம்மா எவ்வளவு சொன்னாலும், அப்பாவுக்கு தன் துணிகளைத் தானே துவைப்பதுதான் பிடிக்கும். அழுக்குப் போகக் கல்லில் அடித்துத் துவைத்தாலும், துணி கிழியாமல் துவைக்கும் அந்த அரிய கலையை, தன் எட்டுப் பிள்ளைகளுடன் சேர்த்து, அப்பாவுக்கும் அவரது தாய் (என் அய்யம்மை) அழகாகப் பால்யத்திலேயே கற்றுக் கொடுத்துவிட்டாராம். வீட்டில் சலதாரிக் கல்லில் அவர் ‘சளக்சளக்’ என்று அடித்துத் துவைக்கும்போது, அதிலிருந்து தெறிக்கும் சோப்பு நீரில் நானும் என் தம்பியும் புகுந்து விளையாடிய அந்தப் பால்ய கால நினைவுகள், இப்போதும் என் நெஞ்சில் அவ்வப்போது அழகான பூக்களாய் அரும்பும்.

எங்கள் வீட்டு ராஜ்கிரண் – அப்பா

நடிகர் ராஜ்கிரண் திரைப்படங்களில் வேட்டி கட்டுவதைப் போல, என் அப்பா வேட்டி கட்டுவதும் ஒரு தனி அழகு, தனிச் சிறப்பு வாய்ந்தது. இடுப்புக்கச்சைப் போல வேட்டியை இழுத்துச் சொருகி, ஒரு முடிச்சிட்டு, உள்ளிருக்கும் அருணாக்கயிறை மேலிழுத்து விட்டுக்கொள்ளும் அந்தச் சாயலில், இந்த உலகில் வேறு எவராலும் வேட்டி கட்ட முடியாது.

விசேஷ தினங்களுக்கு மட்டும் அவர் மங்காத தூய வெள்ளை வேட்டியைக் கட்டினாலும், என் திருமணத்தின் போது, அவர் தன் சொந்தத் திருமணத்திற்கு உடுத்தியிருந்த அந்தப் பழைய பாரம்பரியப் பட்டு வேட்டியைப் பத்திரமாக எடுத்து, அழகாய் அணிந்து வந்திருந்தார். ஈரச் சேற்றில் பதியும் ஆழமான கால்தடம் போல, என் திருமண மேடையில் அவர் பட்டு வேட்டியோடு நின்ற அந்தக் காட்சி என் மனதில் அழியாத முத்திரையாய் பதிந்திருக்கிறது.

என் தந்தை எனக்குப் பணத்தையோ, சொத்துக்களையோ சேர்த்து வைக்கவில்லை; ஆனால், இந்தச் சமூகம் மதிக்கத்தக்க உன்னதமான ஒழுக்கத்தையும், எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும், வாசிப்பு எனும் பேரறிவையும் சொத்தாகத் தந்திருக்கிறார். ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும், அவளுக்கான சுதந்திரத்தைப்படிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு என் தந்தையே இவ்வுலகிற்கு ஆகச்சிறந்த உதாரணம். என் அடையாளம், என் முகவரி, என் பெருமை எல்லாமே என் அப்பாதான். அந்த வேட்டி கட்டிய பேரன்பின் நிழலில் வளர்ந்த நான், எந்நாளும் அவரது கொள்கைச் சிறகுகளோடு இவ்வுலகில் பறந்து கொண்டிருப்பேன்!

Author

You may also like

Leave a Comment