அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்

This entry is part 44 of 44 in the series அசுரவதம்

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது.

விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே ஆனாலும், அவன் வகுத்த அந்த விதியின் வழியேதான் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் நடந்தேற வேண்டியிருக்கிறது.

அசோக வனத்தில் காலைச் சூரியனின் ஒளி அடர்ந்த மரங்களைத் தாண்டித் தரையைத் தொட அஞ்சும். இராவணன் கட்டளையை மீறித் தொடவிடமாட்டோம் என்பது போல எங்கும் கிளைகளை விரித்துப் பெருங்குடையைப் போல விரிந்திருக்கும் காட்டு மரங்களுக்கு நடுவே, மெல்லிய ஒளிக்கீற்றுப் போலச் சீதை அமர்ந்திருந்த சிம்சுபை மரத்தடிக்கு மட்டும் பகலவனின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. அது சூரியக் கதிரா அல்லது அன்னையின் கற்பின் ஆன்ம நெருப்பா என்று தெரியாத வண்ணம் அந்த இடம் மட்டும் வெளிச்சத்தில் நிறைந்திருந்தது.

அந்தப் பெருவனத்தின் கொஞ்சம் தள்ளியிருந்த பகுதியில், இருளின் ஒரு பகுதியாகவே ஒடுங்கி, மரத்தின் பின்னால் பதுங்கி நின்றிருந்த சூர்ப்பனகையின் உடல் திடீரென ஒரு பெரும் நடுக்கத்திற்கு உள்ளானது.

அவளுக்கு அந்தப் பயம் முன்பொருமுறை வந்தது. அது தன் கணவனை இராவணன் அழித்த நாள். மீண்டும் இப்போது அவளுக்கு அப்படி ஒரு பயம் உள்ளுக்குள் ஊற்றெடுத்து ஒவ்வொரு அணுக்களிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அப்படி வரும்போது ஏதோவொரு மாபெரும் இருட்சுழல் அவளை ஒரு மலைப்பாம்பைப் போல மெல்ல மெல்ல விழுங்குவது போலவும், தொண்டைக்குழிக்குள் மூச்சு உறைந்து போவது போலவும் ஒரு தவிப்பு உண்டாக்கும். சுயநிலைக்கு வந்ததும், அந்த நடுக்கத்தின்போது என்ன நடந்தது என்ற நினைவுகள் எதுவும் அவளிடம் தங்குவதுமில்லை. இப்போதும் அப்படித்தான் ஒரு மாபெரும் நடுக்கம் அவளைக் கடந்து சென்றிருந்தது.

அவள் தன் வியர்த்த முகத்தைத் துடைத்துக்கொண்டு, மரத்தின் மறைவில் இருந்து சீதையை நோக்கினாள். சீதை அங்கே மரத்தடியில் அமர்ந்திருந்தாள். பதற்றத்துடன் கூடவே திரிசடை நின்றிருந்தாள். சூர்ப்பனகை தன்னுள் புழுங்கினாள்.

“காதல் நிராகரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோபம் உலகையே எரித்துவிடும் என்பதே இதுவரை உலகம் கண்டது. பஞ்சவடியில் அவமானம் அடைந்தபோது, பழிவாங்கும் வெறியில் நான் மூட்டிய சிறு நெருப்பு இது. ஆனால் இன்று? அந்த நெருப்பு இராவணனுடன் ஒருவேளை, என் சொந்த குலத்தையே சுட்டெரிக்கப் போகிறதோ?.. பிரம்ம தேவா…” என்று உள்ளுக்குள் அரற்றினாள். கணவனை இழந்தவள், காதலால் பித்துப் பிடித்தவளாக அலைந்தவள் அவள்.

ஆனால் அந்த இழப்பின் வலி, இன்று சீதையை அணுவணுவாக நோக்கும்போது தான் பட்ட வலியை இவளும் படுகிறாள் என்ற எண்ணமும், இவள் மண்டோதரியின் மகள் என்ற உண்மையும் அவளுக்குள் தாய்மை உணர்வை வளர்த்துவிட்டது. தன்னைவிடச் சீதையின் கோபம் பிரபஞ்சத்தை அழிக்கும் வல்லமை கொண்டது என்பதை அவள் உணர்ந்தாள்.

“ஒருவனைப் பழி தீர்க்க, இந்தப் பாவி, என்ன காரியம் செய்துவிட்டேன்! எந்தப் பாவமும் அறியாத இந்தப் பெண் என்ன குற்றம் இழைத்தாள்?” என்ற குற்றவுணர்ச்சி அவளைச் சதா குதறியது.

இராவணனின் வாளுக்குச் சீதை இரையாகிவிடக் கூடாதே என்ற பதைபதைப்பு அவளை அசோக வனத்தைச் சுற்றியே சுழல விட்டது. திரிசடை சீதைக்குக் காவலுக்கு நிற்பதைப் போல, திரிசடைக்கே தெரியாமல் அந்த இருளில் சீதைக்குக் காவலுக்கு நின்றாள் சூர்ப்பனகை.

அப்போது வனத்தின் முகப்பிலிருந்து பேரிரைச்சலோடு ஒரு சலசலப்பு எழுந்தது. அது இராவணன் வரும் ஓசை. படை பரிவாரங்கள் என ஆர்ப்பரித்து வந்து கொண்டிருந்தவன், திடீரென அனைத்தையும் நிறுத்திவிட்டுத் தனியனாக உள்ளே நடந்து வருகிறான்.

அவனது ஒவ்வொரு காலடியும் பூமியில் விழும்போது, அது காமத்தின் மாபெரும் பாரத்தைச் சுமந்து வருவதைச் சூர்ப்பனகை உணர்ந்தாள். அப்படியானால் இப்போது அவன் வருவது சீதையைப் பயமுறுத்தவா? இல்லை, வேறு ஏதேனும் நோக்கமா? சந்தேகம் அவளின் நெஞ்சைக் கவ்வியது.

அந்த நேரம், சூர்ப்பனகைக்கே உரித்தான நுட்பமான உள்ளுணர்வு, காற்றில் ஒரு விசித்திரமான அதிர்வை உணர்ந்தது. அது அசோக வனத்தின் சலசலப்பாக இல்லாமல், பல்லாயிரம் காத தூரத்திற்கு அப்பால், கடற்கரையின் வடதிசையில் ஒரு மாபெரும் பிரளய அதிர்வுகளை அவளால் பிரித்தறிய முடிந்தது. அது சாதாரண ஓசையாகத் தோன்றவில்லை. அது விதியின் காலடிச் சத்தம். பிரபஞ்சத்தின் ஒரு மாபெரும் சக்தி அண்டத்தைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து வரும் அதிர்வு.

அந்தப் பேரதிர்வை உணர்ந்த திகைப்பிலிருந்து சூர்ப்பனகை மீள்வதற்குள், இராவணன் சீதையின் முன் வந்து நின்றான். முக்கண்ணனையே தன் இசையால் மயக்கியவன், மூவுலகையும் நடுங்கச் செய்யும் அந்தப் பத்துத் தலை கொண்ட மாமன்னன், இன்று ஒரு பெண்ணின் முன் தனியனாக நிற்கிறான்.

அவனது கண்களில் காமமும், அடைய முடியாத பொருளின் மீதான வெறியும், அகங்காரமும் கலந்துகட்டி எரிந்தன. அவன் தன் அதிகாரக் குரலில் சீதையை மிரட்டினான்.

“அற்ப மானிடனை எண்ணி இன்னும் காத்திருக்கிறாய் பெண்ணே.. நான் யார் தெரியுமா? அனைத்து உலகங்களையும் கட்டியாளும் இராவணேஸ்வரன்!”

என்று கர்வமாக முழங்கினான். ஆனால் சீதையோ, நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. தன் அருகே கிடந்த ஒரு சிறு காய்ந்த புல் துரும்பைக் கையில் எடுத்து, இராவணனுக்கும் தனக்கும் நடுவே தரையில் போட்டாள். அந்தத் துரும்பிடம் பேச ஆரம்பித்தாள்.

“துரும்பே கேள், அண்டங்களையும் அழிக்கும் சர்வ வல்லமை என் நாயகனுக்கு உண்டு. ஒரு சொல்லால் இந்த உலகத்தை அழிக்கும் வலிமை எனக்கும் உண்டு.”

இராவணன் திகைத்தான். பின் கர்ஜித்தான்.

“அந்த மானிடன் என் கால் தூசியைக் கூடத் தொட முடியாதவன்.”

சீதை தரையில் கிடந்த துரும்பிலிருந்து தன் கண்களை விலக்கவில்லை. சினத்துடன் நகைத்தாள். அதனிடமே தொடர்ந்து பேசினாள்.

“கேள் துரும்பே, வீரம் பேசும் பேடிகள் யாரும் என் நாயகன் இருக்கும் போது என் குடிலை நெருங்கவில்லை. என் மைந்தனுக்கு இணையான இலக்குவன் கனல் கொண்ட கண்ணைக் கண்டிருந்தாலே அந்த நிமிடம் அழிந்திருப்பார்கள்.”

இராவணன் விக்கித்து நின்றான். சீதை தொடர்ந்தாள்.

“யாரும் செய்யத் துணியாத செயல், பெண்ணை, அதுவும் அவன் நாயகனை வெல்லத் துணிவற்று, தனித்திருந்தவளைக் குடிலோடு தூக்கி வந்த கோழையை நீ அறிவாயாத் துரும்பே?”

இராவணனுக்குக் கோபம் உச்சியைத் தொட்டது. வேகமாகத் தன் வாளை உருவினான். அவன் உருவிய வேகத்தைக் கண்ட அரக்கர்களும், திரிசடையும், சூர்ப்பனகையும் சீதை வாழ்வு இன்றோடு முடிந்தது என்றே எண்ணினார்கள். வீலெனத் திரிசடை கத்திய வேகத்தில் சூர்ப்பனகையின் அலறல் யார் காதிலும் விழாமல் போனது.

இராவணன் வாளை உருவிய அதே வேகத்தில் மண்ணில் ஊன்றியும்தான் அவர்கள் மனம் ஆசுவாசமானது.

சீதை எந்தச் சலனமும் இன்றி அந்தத் துரும்பிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

“இன்னும் கேள் துரும்பே, ஒருவன் காகத்தின் வடிவம் கொண்டு என்னைத் துன்புறுத்தினான். என் ஐயன், உன்னைவிடச் சிறிய அற்பமான தர்பைப் புல்லை அஸ்திரமாக்கி அவன் கண்ணையே பிடுங்கினான். அவன் மட்டும் அன்று அடைக்கலம் என்று காலில் விழாதிருந்தால், அவன் வாழ்வு அன்றே முடிந்திருக்கும்.”

சூர்ப்பனகை வியந்தாள். இத்தனை திடமும் துணிவும் அதுவும் இந்தச் சூழலில் இவளுக்கு உண்டென்றால்.. அவளின் கற்பின் திண்மையும் காதலின் ஆழமும் எத்தகையது என்று விம்மினாள்.

சீதை தன்னை ஏறெடுத்துப் பார்க்காததும், அவளின் பார்வையில் இராவணன் அந்தத் துரும்புக்குச் சமம் என்பதையும் கண்ட இராவணன் ஒரு கணம் அவளைக் கொல்லும் எண்ணத்தோடு அவளை நோக்கினான்.

ஆனால் ஏதோ ஒரு மாயம் போலச் சூழல் மாறியது. அவன் அந்த வாளை எடுத்துத் தூர எறிந்தான். இராவணனின் அந்த அதிகாரக் குரல் இப்போது கெஞ்சத் தொடங்கியது.

அவன் கண்ட வெற்றிகள், அவனின் பேராண்மை, இலங்கையின் மாபெரும் செல்வங்கள், அரசியின் மகுடம் எல்லாம் ஆசை காட்டிப் பார்த்தான். ‘என்னைத் திரும்பிப் பார் சீதே’ என்று யாசகம் கேட்டான். சீதை அப்போதும் பேசவில்லை. அந்தப் புல் துரும்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது அந்த அமைதி, இராவணனைப் பைத்தியமாக்கியது. அவளின் மௌனமும் அவனது காமமும் அவனது கர்வத்தை, பல்லுலகாண்ட தீரத்தை, அவனின் அத்தனை பிரதாபத்தை எல்லாம் முழுமையாகச் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருந்தது.

அடுத்த கணம், உலகமே அதிர்ந்து போகும் ஒரு மாபெரும் வீழ்ச்சி அங்கே அரங்கேறியது.

தேவேந்திரனும் அஷ்டதிக்குப் பாலகர்களும் அஞ்சி நடுங்கும் அந்த இலங்கை வேந்தன், தன் பத்துத் தலைகளிலும் உள்ள கிரீடங்கள் தரையில் உரச, அந்தச் சாதாரணக் காய்ந்த புல் துரும்பிற்கு முன், சீதையின் காலடியில் தடாலென விழுந்தான்.

அவனது மாபெரும் கரங்கள் சீதை காலடி பட்ட மண்ணைப் பற்றிக்கொண்டன. ஒரு சிறு குழந்தையைப் போலப் புலம்பத் தொடங்கிய அந்த மாவீரனைக் கண்ட சூர்ப்பனகை தன் வாயைக் கைகளால் இறுகப் பொத்திக்கொண்டாள்.

“பெண்ணே… உனக்குத் தெரியுமா நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று?”

“கயிலைநாதனின் மலையையே தன் இரு கைகளால் அசைத்த இந்த இராவணனை, உன் ஒற்றை மௌனத்தால் வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறாய்.”

“அண்ட சராசரங்களும் அஞ்சி நடுங்கும் இராவணேஸ்வரன் நான். ஆனால் இன்று… என் பத்துத் தலைகளின் அகங்காரமும் உன் பாதத்தூசியில் புரள்கிறது.”

“மூவுலகையும் வென்றவனை அவனது சொந்த இச்சையே ஒரு சிறு புழுவாக மாற்றி நெளியச் செய்வதை மனம் புழுங்கி நான் ஆற்றாமையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“பெண்ணே, என்னை ஏற்றுக்கொள். இல்லையேல் உன்னை அடைய முடியாத இந்த வெறியே, இராவணன் என்னும் அசுரனை அணுஅணுவாக அறுத்துத் தின்றுவிடும். கருணையோடு என்னைப் பார்.. என்னைக் காப்பாற்று!”

இராவணனின் புலம்பல் கேட்டுத் தன் இரு காதுகளையும் இறுக மூடிக்கொண்ட சீதை, தன் தலை நிமிராமல் அந்தத் துரும்பைக் கண்டு ஏளனமாகச் சிரித்தாள். அதில் நெருப்பின் கனல் தெரிந்தது.

சூர்ப்பனகைக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. காமம் எத்தனை கொடியது! அகங்காரத்தின் அத்தனை கிரீடங்களையும் அது ஒற்றை நொடியில் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு மனிதனைப் புழுவைப் போலத் தரையில் நெளியச் செய்துவிடுகிறது.

இராவணனை அவள் பழிவாங்க நினைத்தது உண்மைதான், ஆனால் தன் அண்ணன் இப்படி ஒரு பெண்ணின் காலடியில் தன் ஒட்டுமொத்தப் பிரதாபங்களையும் இழந்து துடிப்பதைப் பார்க்க அவள் மனம் சகிக்கவில்லை. பழைய சகோதர பாசம் மெல்ல எட்டிப் பார்க்க முனைந்தது.

அவளுக்கு இப்போது ஒன்று தெளிவாகப் புரிந்தது. இலங்கையின் அழிவு வெளியிலிருந்து வரப்போவதில்லை, அது தன் அண்ணனின் காலடியில், அவனது இந்தச் சரணாகதியில்தான் முழுமையாகத் தொடங்கிவிட்டது என்பதைச் சூர்ப்பனகை உணர்ந்தாள்.

அவள் காதுகளில் யாரோ “அன்னையே, சீதே இதோ வருகிறேன்” என்று சொல்லுவது போலப் பிரமையாக இருந்தது. அவள் திகைப்பின் பிடியில் வீழ்ந்தாள். அச்சம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது.

பி.கு: நாட்டுப்புற மற்றும் இலக்கியப் பதிவுகள்

தெலுங்கு எழுத்தாளர் முப்பால ரங்கநாயகம்மா 1974-ல் எழுதிய “ராமாயண விஷவிருட்சம்” என்னும் நூலில் இராவணன் சீதையின் காலடியில் விழுந்து கெஞ்சும் காட்சியை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பார்.

​”மூவுலகையும் நடுங்கச் செய்யும் மாபெரும் அரக்கன் என்று வால்மீகி இராவணனைச் சொல்கிறார். ஆனால், அதே வால்மீகிதான் அசோக வனத்தில் இராவணன் சீதையின் காலில் விழுந்து, ‘நான் உன் அடிமை, என்னைக் காப்பாற்று’ என்று அழுது கெஞ்சுவதாகவும் எழுதுகிறார். ஒரு மாபெரும் வீரன், ஒரு பெண்ணின் முன் இப்படிப் புழுவாக நெளிவானா? இராவணனை வேண்டுமென்றே கோழையாகக் காட்ட வால்மீகி செய்த முரண்பாடு இது” என்கிறார்.

கேரளா / கர்நாடக யக்ஷகானம் & கதகளி: இராவணன் சீதையின் முன் மண்டியிடும், புலம்பும் காட்சிகள் நாடகமாக நிகழ்த்தப்படும்.

ஜைன ராமாயணங்களான விமலசூரியின் ‘பவுமசரியு’ மற்றும் பல தொன்மையான நாட்டார் மரபுகளில் இராவணன் முற்றிலும் ஒரு கொடிய அரக்கனாக மட்டும் சித்திரிக்கப்படுவதில்லை. அவன் மாபெரும் வீரன், சிறந்த சிவபக்தன், ஆனால் காமம் என்னும் ஒற்றைச் சபலத்தால் தன் ஒட்டுமொத்தப் பெருமைகளையும் இழந்து தவிக்கும் ஒரு துன்பியல் நாயகனாகவே காட்டப்படுகிறான். சீதையின் காலடியில் அவன் மண்டியிடும் காட்சி, அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவனையும் அகங்காரம் எப்படித் தரைமட்டமாக்கும் என்பதற்கான உளவியல் குறியீடாகப் பல பழங்குடிக் கதைகளில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

அதேபோல, சூர்ப்பனகையின் பாத்திரம் வெறும் வஞ்சம் தீர்க்கும் அரக்கியாக இல்லாமல், காதலனை இழந்த பெண்ணின் உளவியல் சிக்கல்களோடும், தன் குலத்தின் அழிவை முன்கூட்டியே உணரும் ஒரு சாட்சியாகவும் பல பிராந்திய ராமாயணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டத்தில் இந்தச் சம்பவம் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், சர்க்கம் 20, ஸ்லோகம் 35-36:

“ப்ரணமேயம் து தே பாதௌ சிரஸா ஸப்ரஸாதயே | தாஸோऽஹம் தே வராரோஹே…”

பொருள்: “ஓ அழகியே! என் தலையை உன் பாதங்களில் வைத்து வணங்கிக் கெஞ்சுகிறேன். என்னை ஏற்றுக்கொள். நான் உனக்கு அடிமையாக இருக்கிறேன்” என்பதாகும்.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..

Author

Related posts

குரலால் உலகை அரவணைத்தவள் – அஞ்சலி

பாகோஸ் என்கிற நபும்சகன் – 1

ஞான நூல்கள் – 4 & 5