Home இதழ்கள்இதழ் 16ஈற்றடிக்கோர் பாட்டு – 14

ஈற்றடிக்கோர் பாட்டு – 14

by Iyappan Krishnan
0 comments

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

தெள்ளிய நல்லறிவைத் தேடி அடைந்தபின்
உள்ளத்து மாசும் ஒழிந்திடும் – மெள்ளவே
தெள்ளமுதம் போலத் தெளிவு பெருகிட
உள்நிறைய எல்லாம் உவப்பு.

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.

இப்னு ஹம்துன்
கோபக் குணமிருக்கும் கூச்சல் மிகுந்திருக்கும்
ஆபத்தாம் பேச்சிலவர் ஆயினும் – சாபத்தில்
தள்ளாமல் சட்டென்று தந்தைமுகம் காட்டுவார்
உள்நிறைய எல்லாம் உவப்பு.

நளினி சுந்தர்ராஜன்
வண்ண மலர்கள் வாசம் வீச
ஏந்திய தென்றல் மெல்லத் தவழ
கவின்மிகு கண்ணாளன் வரும் சேதி
காற்றினில் தூதாய்க் கேட்டாளே…
சென்ற வழியில் விழி வைத்து
எண்ணி ஏங்கிய நாள் பார்த்து
கண்ணில் ஆவல் தேக்கி நின்று
நெஞ்சினில் ஆசை கொண்டாளே…
காரிருள் பிரிவு மறையும் நேரம்
கவலைகள் யாவும் பறந்து போகும்
கூடல் நினைவினில் நாணுமவள்
உள்நிறைய எல்லாம் உவப்பு.

சின்னக்கண்ணன்
பாடல் இனிமையில் பாவையும் தானாட
ஆடலும் அங்கே அழகுறக் கைகோர்க்க
அள்ளக் குறையாத அன்புடன் காட்சியெலாம்
உள்நிறைய எல்லாம் உவப்பு

மாலா மாதவன்
ஏழு மலையேறி எண்ணம் குவித்தொழுது
ஏழுமலை யானின் எழில்கண்டோம் – சூழிடத்துக்
கள்ளமிலா பக்தரிடை வெள்ளமென நாமவொலி
உள்நிறைய எல்லாம் உவப்பு

ருக்மணி வெங்கட்ராமன்
காலைத் தென்றல் தாலாட்ட
குயில் இனிதே கானம் பாடிட
மலர்கள் மலர்ந்து மணம் வீசிட
மனம் முழுவதும் அன்பில் நனைந்திட
பசுமை வயல்கள் கண்முன் விரிந்திட
பனித்துளி முத்தாய் பூவில் படிந்திட
உள்ளம் நெகிழ்ந்தது இயற்கை கண்டு
உள் நிறைய எல்லாம் உவப்பு

கண்மணி பாண்டியன்
மக்கட் செல்வம் இல்லம் நிறைக்க
சேமிப்பு அறையை மகசூல் நிறைக்க
நிறைந்த கல்வி சபை நிறைக்க
நட்பும் உறவும் உள்ளம் நிறைக்க
உள் நிறைய எல்லாம் உவப்பு

ராமலக்ஷ்மி ராஜன்
தோட்டத்தின் மற்றவையெல்லாம்
உறக்கத்தில் ஆழ்ந்திருக்க
வெளிறிய ஓர் அரும்பு
அமைதியான இருளுக்குள்
மெல்ல அவிழத் தொடங்கியது
ஒவ்வொரு இதழாக—
இரவு தானே ஒரு ரகசியத்தை
விரித்துக் காட்டுவது போல.
நள்ளிரவுக்குள்
மலர்ந்து நின்றது பிரம்மகமலம்
இருளுக்கு எதிரே வெண்மையாய்
மென்மையாய்
ஒளிரும் படிகமாய்
தோட்டமெங்கும் மணம் கமழ.
மலர்வைத் தெரிவிக்க
ஞாயிற்றின் ஒளியில்லை
வண்டுகளின் ரீங்காரமில்லை.
முழு நிலவும்
அசைவற்ற இலைகளும்
விழித்திருக்கும் பேறுபெற்ற
சில விழிகளும் மட்டுமே.
இத்தோட்டத்திற்கு அப்பால் எங்கோ
வேறொரு நள்ளிரவு வானின் கீழ்
வேறொரு வெண்கமலம்
விரிந்துகொண்டிருக்கலாம்—
தொலைதூர வீடொன்றில்
வேறொரு நகரத்தில்
உலகின் வேறொரு மூலையில்
ஒன்றையொன்று அறியாமல்
ஒரே இரவுக்குள் மலர்ந்து
உறங்கும் பூமியில்
தம் மணத்தைப் பொழிந்தபடி
நிலவே சாட்சியாக.
விலக மனமின்றி
என் மலரருகே நின்றிருந்தேன்
இன்னும் சற்று நேரம்,
வெண்ணிதழ்கள் நிலவொளியைத்
தாங்கி நிற்பதைப் பார்த்தபடி.
இருளோடு கலந்த நறுமணம்
உள்நிறைய எல்லாம் உவப்பு.

ஹேமா செந்தில்
எள்ளுடன் கொள்ளும் முகத்தில் வெடிக்க
உள்ளுக்குள் அன்பு இழையிட -கள்ளமிகு
கள்ளியவள் கள்ளச் சிரிப்புக் கவர்ந்திட
உள்நிறைய எல்லாம் உவப்பு.

உஷா கண்ணன்
கருவிலே ஈரைந்து மாதம் உறங்கி
மண்ணின் வாசம் உடலில் கலந்த
சிசுவின் முகத்தில் உதித்த முறுவல்
உள்நிறைய எல்லாம் உவப்பு.

வனஜா முத்துகிருஷ்ணன்
வெண்மை உள்ளத்தின் வெகுளி சிரிப்பு
கண்களில் மின்னும் காவிய சிரிப்பு
மனதை மயக்கிடும் மழலை சிரிப்பு
உள் நிறைய எல்லாம் உவப்பு.

விஜி சம்பத்
ஆடல், பாடல், நாடகமெனத்
தேடித்தேடி மாந்திய
முத்தமிழ்த் தேனின் சுவை
உள்நிறைய எல்லாம் உவப்பு!

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

Leave a Comment