“ஓய், அந்தம்மாவோட என்னை ஒப்பிட்டிருக்கீங்களே, அப்படி என்னங்காணும் ஒற்றுமை?” கேட்டது சின்ன வாத்தியார் இரா. முருகன்.
எந்தம்மா? எனச் சொல்வதற்கு முன் இரா. முருகன் எழுத்து எனக்கு அறிமுகமானதைச் சொல்ல வேண்டும்.
1987 இருக்கும்; சென்றிருந்தது புதுடெல்லி. ஓல்ட் ராஜிந்தர் நகர் ஃப்ளாட். முதல் மாடி. அக்கா வீடு. வந்திருந்தது எக்ஸாம் எழுத. முடித்து விட்டாகிவிட்டது. டிசம்பர் மாதம். காலை.
ஏழு மணி. திறந்திருந்த பால்கனி வழியாக ‘சொத்’. ஹாலில் இருந்த குறுக்குக் கண்ணாடி மீது மோதி விழுந்தது அது.
எது? வழக்கமாய்ப் பனிக்காலமாகையால் பேப்பர், பிளாஸ்டிக் பேப்பரில் அந்தக் கால மசால் தோசைப் பொட்டலம் போல நீளவாக்கில் சுருட்டப்பட்டுத் தொப்பென விழும். அன்று போனஸாகப் பேப்பருடன் இன்னொரு பொட்டலம். ‘கல்கி’.
திறந்து புரட்டிய போழ்து ஈர்த்தது அந்தக் கதை. பாங்க்கிற்குக் கணினித் தொடர்பு கொடுக்க வந்த ஒரு நபர் பாதாள அறையில் மாட்டிக்கொண்டு, இருந்த ஒரே தொலைபேசியில் எண்களைச் சுழற்ற, கிடைத்த உதவியில் வெளிவந்தது. கிடைத்த உதவி எப்படிப்பட்டது என முடிவில் தெரிகையில் நெகிழ்ச்சி. ‘ரட்சகன்’ கதை. எழுதியது இரா. மு. எழுத்து நடை, கதை என மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டுவிட்டார்.
அப்புறம் துபாயில் வேலை கிடைத்து அவரது கதைகளை விரும்பிப் படித்து வந்தேன். விகடனில் ‘உலகே உலகே உடனே வா’ கட்டுரைகள். விடுமுறையில் இந்தியா வந்து திரும்பும்போது கண்டிப்பாக அவரது புத்தகங்கள் வாங்கிவிடுவேன்.
ஊழ்வினையில் அமெரிக்காவில் சில காலம் வேலை பார்க்க நேர்ந்ததில் ஃபாரம் ஹப் டாட் காமில் (ForumHub.com) ‘கவிதைகள்’ என்ற இழையில் குட்டிக் குட்டியாய்க் கவிதை போல எழுத அவரது அறிமுகம் கிடைத்தது. அதுவும் கே. ஆர். ஐயங்கார் என்ற பெயரில் எழுதி வந்திருந்தேன். சில கவிதைகளுக்கு “அமர்க்களம் போங்கோ ஐயங்கார்வாள்” எனப் பாராட்டி இருந்தார். மனமாரப் பாராட்டத் தயங்காதவர்.
அப்போது அவர் ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அதில் உள்ள சில கவிதைகள் ஓஹோ. ‘பயம்’, ‘யானை’ கவிதை எல்லாம் மறக்க முடியாது. தொலைந்துவிட்ட பாம்பைத் தேடும் பிடாரனின் தவிப்பு ‘பய’த்தில் வரும். ‘பிடாரன் போகிறான் பயத்தைப் பிடித்து’ வரி மறக்க முடியாது.
சென்னை வந்தபோது எழுத்தாளர் என். சொக்கனுடன் (அப்போது அவர் பெயர் லாவண்யா) அவரைச் சந்தித்தேன். “ஐயங்கார்” என உற்சாக வரவேற்பு. “அமருங்கள்” என நெகிழி நாற்காலியைக் காட்ட, அது என்னைப் பார்த்துப் பயந்து சோகமாய் முறுவலிக்க, அதன் மீது அமர… கொஞ்சம் சத்தமாகவே முனகி கால்கள் அகட்டிக்கொள்ளத் தொப்பெனக் கீழே விழுந்தேன். சொக்கன் கை தூக்கிவிட உள்ளிருந்து பதற்ற இரா. மு. “ஒண்ணும் ஆகல்லியே” எனக் கரிசனம். வலியெல்லாம் போயே போச்.
அப்போது ‘மூன்று விரல்’ எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். பாதியில் நிறுத்தி எங்களுடன் பேச்சு. சில மாதங்கள் கழித்து லீவில் வந்தபோது வாங்கிப் படித்தேன். ஆஸம் நாவல்.
நிறையப் பேசிக் கிளம்புகையில் ‘ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்’ கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதில் எழுதியிருந்தது: விழ வைத்த அன்புடன், இரா. மு.
என். சொக்கன் அப்போது ‘தினம் ஒரு கவிதை’ மின்னஞ்சல் குழு நடத்தி வந்தார். இரா. மு-வும் ‘ராயர் காப்பி கிளப்’ மின்னஞ்சல் குழு. இரண்டிலும் எழுதி வந்தேனாக்கும். ராயர் காப்பி கிளப்பில் சிறுகதைப் போட்டி வைக்க, அதற்கு எனக்கு முதற்பரிசு இகாரஸ் பிரகாஷ் நடுவராய் இருந்து செலக்ட் செய்திருந்தார். எனக்கு மிகப் பெருமையாக இருந்தது.
2001 மே மாதத்தில் எனக்குப் பிடித்த நடிகை தேவிகா மரிக்க, இப்படி எழுதியிருந்தேன் ராயர் காப்பி கிளப்பில்: “ஆறில் சாகலாம் அறியாத வயது, அறுபதில் சாகலாம் அனுபவித்த வயது, நடுவில் சாகக் கூடாது என்று தேவிகா ‘நீலவான’த்தில் பேசுவார். என்னதான் வாழ்ந்து மரித்தாலும் அவர் இறப்பு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.” உடன் இரா. முருகனின் மின்னஞ்சல்: “இங்கிட்டு வாருங்கள் ஐயங்கார், ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவோம்.” எனக்குச் சிரிப்பு வந்தது.
காலப்போக்கில் மஸ்கட்டில் வேலை கிடைத்து மாறிவிட, லீவில் வரும்போதெல்லாம் கூடியவரை சந்தித்துப் பேசுவேன் – அப்போதெல்லாம் சுப்ரபாதம் அபார்ட்மெண்ட்ஸில் இருந்தார் அவர். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் சில நாவல்கள் கொடுக்காமல் இருந்ததில்லை. அவருடையது என்றில்லை; அனுத்தமா, ஆர். சூடாமணி எனத் தந்தார்.
பின் மரத்தடிக் குழு எனத் தொடர்புகள்; அவர் எழுத்துகள் என்னைத் தொடர்ந்து வந்தன.
மஸ்கட்டில் ஸ்டார் சினிமா. புதுப் படம். பெரிய நடிகர். அவருக்கெல்லாம் யாரும் கைதட்டவில்லை. திரைக்கதையில் இவர் பெயர் வந்ததும் நான் கைதட்டினேன். சிலர் திரும்பிப் பார்த்தார்கள். படம் ‘உன்னைப் போல் ஒருவன்’.
சிறுகதைகள் – மேஜிக்கல் ரியலிஸம் தவிர மற்றவை அபாரமானவை. எனக்கு மேஜிக்கல் ரியலிஸம் அவ்வளவாகப் புரியாது. ‘சேது’, ‘முதல் ஆட்டம்’, ‘வெறுங்காவல்’, ‘கொக்கு’, ‘உலா’, ‘நண்டு மரம்’, ‘எழுத்துக்கார்’, ‘இரை’, ‘பசி’ மறக்க முடியாத சில சிறுகதைகள்.
‘1975’ நாவல் ஹிலாரியஸ். இடையிடையில் குபீர் எனச் சிரிப்பதை மஸ்கட்டில் வந்த பக்கத்து வீட்டு மாமி கொஞ்சம் சந்தேகமாக என்னைப் பார்த்தார்.
‘டியூப்ளே வீதி’யும் அப்படியே. அந்த மேகலா அவரிடம் வந்து கொஞ்சுவது, கெஞ்சுவது, முறைப்பது என ஆரம்ப அத்தியாயங்களில் தொடர் சிரிப்பு. ‘நம்பர் 21 ரெட்டைத் தெரு’வும் வெகு அழகாக இருக்கும். நுணுக்கமான நகைச்சுவை இவருடையது. நகைச்சுவையிலும் சரி, எழுத்து உரைநடையிலும் சரி இரா. முருகன் எனது முதன்மை குருஜி ஆவார்.
‘அரசூர் வம்சம்’ ட்ரைலாஜி நல்ல தமிழ். கட்டுரைத் தொகுப்புகளில் மிளிர்ந்து கொண்டிருக்கும் நகைச்சுவை வித்தியாசமானவை. ‘ராயர் காப்பி கிளப்’, ‘வேம்பநாட்டுக் காயல்’, ‘லண்டன் டயரி’.
எவ்வளவு புகழ் வந்தாலும் நான் முதன்முறை பார்த்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார் இரா. மு. பணிவு, பாசம், அடக்கம், மெல்லிய நகைச்சுவை.
‘தினம் ஒரு கவிதை’யில் ‘கொஞ்சம் கதைக்கலாம் வாங்க’ எனப் படித்த நாவல்கள், சிறுகதைகள் பற்றி கே. ஆர். ஐயங்கார் என்ற பெயரில் எழுதிக்கொண்டு வந்திருந்தேன். அதில் இரா. மு-வின் ‘சேது’ கதை பற்றிச் சொல்லும் முன்… ‘இரா. முருகனுக்கும் நடிகை குஷ்பூவிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அது அடுத்த வாரம்’ என எழுதியிருந்தேன்.
அதுதான் அவர் ஆரம்பத்தில் கேட்ட கேள்வி. தொலைபேசியில் பேசியபோது என நினைக்கிறேன். பின் சிரித்தபடியே சொன்னேன், “இருவருக்குமே சிரிக்கின்ற கண்கள்” என்று. ரசித்தார்.
நிறைய எண்ணங்கள் முட்டி மோதுகின்றன. சென்னை வந்து சில வருடங்கள் ஆன பிறகும் அவரைச் சந்திக்க முடியவில்லை. பின் நண்பர் அபுல் கலாம் ஆசாத்திடம் சொல்ல, இந்த வருடம் 02.01.26 அன்று நண்பர்கள் அபுல் கலாம் ஆசாத், சாபாத்தாவுடன் சந்தித்தேன். உடல் தளர்ந்திருந்தாலும் கண்களின் சிரிப்பு மாறவில்லை. என்னை அடையாளம் கண்டுகொண்டார். எனது குறுநாவல் தொகுப்பு கொடுத்தேன். வாங்கிக்கொண்டார். அவரது ‘யாதும் ஊரே’யும் ‘வேம்பநாட்டுக் காயலும்’ கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஆகஸ்ட் மின்னஞ்சலில் இன்ப அதிர்ச்சி. என் குறுநாவல்கள் படித்து நன்றாக இருப்பதாக எழுதியிருந்தார். அன்றே அவரிடம் பேசினேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல். வெகு அழகாக இருந்தது. இலக்கியம் முதல் தான் எழுதி முடித்த ‘நாராய் நாராய்’ பற்றிப் பேசினார். சில ஆங்கில நாவல்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன் என்றேன். சந்தோஷப்பட்டார். இன்னும் நான் மொழிபெயர்த்து எழுத சில பெயர்களையும் பரிந்துரை செய்தார். ஹப்பா, எவ்வளவு பேசினார். இப்போது நினைத்தாலும் பிரமிப்பாய் இருக்கிறது.
அப்படியே ஒருவிதமாய் மிதந்து கொண்டிருந்தேன். மறுபடி தொலைபேசித்துப் பேச வேண்டும் என எண்ணி நாட்களைத் தள்ளிப் போட்டது இப்போதும் வருத்தமாக இருக்கிறது.
அப்போது பேசியதே கடைசியாக இருக்கும் என நான் நினைத்தும் பார்க்கவில்லை.
இனி அந்த வாஞ்சையான குரல், சிரிக்கும் கண்களை எங்கு பார்க்கப் போகிறேன்..