Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13

0 comments
This entry is part 19 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா

வெண்ணிற எமபாசம்

ஒவ்வொரு நாளும் காலையிலேயே,
அவன் இரண்டு விரல்களுக்கிடையே
வாழ்க்கையைப் பற்றிக்கொண்டு
வாயில் வைத்துப் பற்றவைத்துக்கொள்வான்,
கரிந்துபோன வாழ்க்கையைக் காலடியில் போட்டு நசுக்கி எறிந்துவிட்டு
காலரைத் தூக்கிவிட்டு நகர்வான்…
காற்றில் புகையை வட்ட வட்ட வளையமாக ஊதி,
கடைசி தம்மு வரைக்கும் நிதானமாக இழுப்பதில்தான் அவனோட முழுக் கவனமும்,

நாலங்குல வெண்ணிற எமபாசத்தில்
அல்ப சந்தோஷத்தைத் தேடிக்கொண்டிருப்பான்…
அவனொரு அகம்பிடிச்சவனாக,
புகைவண்டி ஆசாமியாக,
அவனொரு அடிமையானவனாக,
பொறுப்பில்லாக் குடிமகனாக,
நித்தியம் மக்கள் வாயில் அசைபட்டுக்கொண்டிருப்பான்…
என்ன நடந்துச்சோ தெரியாது,
யார் மாற்றினார்களோ தெரியாது,
எத்தனை முறை எச்சரித்தாலும் கேக்காதவன்
ஒருநாள்,
ஆழ்கிணற்றைப் போன்ற கண்கள்,
வெளிரிப்போன முகம்,
கருத்துப்போன உதடுகளோடு பிரத்யக்ஷமாகி,
கருகிப்போன மூச்சுக்குழாயின் சாட்சியாகப்
புகையை விட்டுவிடுவதாகச் சொன்னான்.
அதற்கு மறுநாளே கண்களை மூடினான்.

வெள்ளைக் காகிதத்தில் சுருட்டப்பட்ட நிக்கோடின் (சிகரெட்) போலவே,
அவனை வெள்ளைத் துணியில் (கஃபன்) சுற்றி எடுத்துப்போகையில்,
புகை மூடிய அவனது உயிரற்ற தேகத்தைத் திகைத்துப்போய்
பார்த்தவாறே சுடுகாட்டைப் பார்த்து நகர்ந்தேன்,
அங்கு இன்னொருவன்,
இரண்டு விரல்களுக்கிடையே
தகனமாவதற்குத் தயாராக
நிறைந்த வாழ்க்கையோடு அருகில் வந்து நின்று,
“தீப்பெட்டி வேணும்”னான்,
தூரத்தில் எரிந்துகொண்டிருந்த பிணத்தை
கைகாட்டிவிட்டுத் திரும்பினேன் சலிப்பாக.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment