“வா வா புள்ள.. ஏன் லேட்டு.. வரலையேன்னு காத்துக்கிட்டிருந்தேன்.
ம்.. அதெல்லாம் ஒரு காலம் புள்ள, நானும் உன்ன மாதிரி இளந்தாரியாத் திரிஞ்சவதான்.. கூட்டம் கூட்டமாத் தான் இருப்பேன்..
நான் பொறந்தப்பயே என் வீட்டுல திருவிழாக் கூட்டம் தான்.. என் அப்பாக்கு எட்டு பேர் உடன்பிறப்பு. அம்புட்டும் ஆம்பளைங்க.. எங்க அப்பா தான் லாஸ்ட்டு. என் அம்மாக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு தம்பி.. ஈவனான குடும்பம் தான் போயேன்..
எல்லாரும் என்னைக் கொஞ்சிக் கொஞ்சியே வளர்த்தாங்க.. என் கண்ணப் பார்த்தே ‘கயல்’னு அப்பா பேர் வச்சாரு..
ம்ம் வளர வளர கஸின்ஸ் கூடத் தான் வளர்ந்தேன்.. எங்க போனாலும் சேர்ந்து தான் போவோம், கலகலப்பாத் தான் இருக்கும் பார்த்துக்கயேன்..
ஏன் அங்கிட்டு மரத்தாண்ட போற.. வா.. வந்து இங்க உக்காரு.. சமர்த்து..
எதுல விட்டேன்.. அப்படியே காலேஜ் சேர்ந்தனா.. காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கறச்சே என் கண்ணுலயும் ஒருத்தன் விழுந்துட்டான்.. என்ன பளபளன்னு கண்ணைக் கொட்டி நீ பார்க்கறது நல்லா இருக்கு..
ம் அவன் பேரு ஜோசப்.. அவன் நெஞ்சுலயும் நான் விழுந்துட்டேன்னு நினைக்கறேன்.. அப்புறம் என்ன ‘டு மேக் இட் ஷார்ட்’.. நாங்க இப்படி ஒருத்தர் மனசுல ஒருத்தர் விழுந்துட்டோம்கறது ஊருக்குத் தெரிஞ்சுடுச்சு.. ஊர் மீன்ஸ்.. எங்க / அவன் வீட்டுக்குத் தான்..
பின் என்ன, பழிச் சண்டை தான்.. இதுல ஜோ வந்து பொண்ணு கேக்க வந்துச்சே கோபம் எங்க சித்தப்பா, பெரியப்பாக்களுக்கு.. அதுவும் வீட்டுக்கே வந்துட்டானா..
என்ன போரடிக்கிறேனா.. ஏன் காலை மாத்தி மாத்தி வச்சுக்கிட்டு தவிக்கற.. பழைய தமிழ் சினிமா கதை மாதிரி இருக்கா.. ம் என்ன பண்ண.. சமயத்துல வாழ்க்கை தானே சினிமாவா ஆவுது..
வெளிய வந்து ஒரு சித்தப்பா ‘டாய்’னு கைல அரிவாளோட ஜோசப் சட்டையப் பிடிச்சுட்டார்.. ரெண்டு பேரும் கட்டிப் புரள, பார்த்துக்கிட்டுருந்த நான் தடுக்கலாம்னு குறுக்கால போக, பட்னு வெட்டு என் மேல விழுந்துடுச்சு..
ஏய்.. எங்க போற? கம்னு உக்காரு.. நான் என்ன நெதக்குமா உங்கிட்ட சொல்றேன்.. கொஞ்ச நாளா நீ வர்றே.. உன் கூட பேசறேன்.. நீ இல்லைன்னா வேற புள்ள வரும் பேசுவேன்.. ஆனா பத்து வருஷமா என்கிட்ட தெனமும் வந்து ஜோ பேசும் தெரியுமா.. ஆனா நான் பேசமாட்டேன்.. ம்ம் அதோ வந்தாச்சே.. நீ எங்க பறக்கற.. வெய்ட் வெய்ட் வெய்ட்….”*
கொஞ்சம் வேகமாய் அடித்த காற்றில் கீழேயிருந்த சருகுகள் அந்தக் கல்லறை மீது மோதின