வெற்றி
எத்தனை ஒப்பந்தங்களை
நாங்கள் செய்தோமோ,
அவற்றை நாங்கள்
காத்து நின்றோம்.
இப்போது
காலத்தின் வேட்டை நாய்கள்
எங்களை நெருங்குகையில்,
எங்களிடமிருந்து
எதையும்
பறித்துவிட முடியாது—
எங்கள்
உயிர்களைத் தவிர.
*
ஆமாம்
தனியாக இருப்பதை விட
மோசமானவை இருக்கின்றன
ஆனால் அதை உணர
பல தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன
பெரும்பாலும்
அதை உணரும்போது
மிகவும் தாமதமாகி விடுகிறது
‘மிகவும் தாமதமாகி விட்டது’
என்பதை விட
மோசமானது
வேறொன்றுமில்லை.
*
அதற்கு வழியில்லை
இதயத்தில் ஒரு இடம் இருக்கிறது
என்றைக்கும் நிரம்பாத இடம்
ஒரு வெற்றிடம்
மிகச் சிறந்த தருணங்களிலும்
மிக உயர்ந்த காலங்களிலும்
நாம் அதை அறிவோம்
நாம் அதை அறிவோம்
முன் எப்போதையும் விட
அதிகமாக
இதயத்தில் ஒரு இடம் இருக்கிறது
என்றைக்கும் நிரம்பாத இடம்
நாம் காத்திருப்போம்
காத்துக்கொண்டேயிருப்போம்
அந்த வெற்றிடத்தில்.
*
மூலம்: 1. Victory; 2. Oh Yes; 3. No help for that
By Charles Bukowski
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994):

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.
**