Home நாவல்அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்

by Iyappan Krishnan
0 comments
This entry is part 41 of 41 in the series அசுரவதம்

“வணக்கம் தாயே” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் சீதை.

பாலைவனத்தின் அனல் காற்றில் திடீரென வீசிய வசந்தகாலத் தென்றலைப் போல ஒலித்தது அந்தக் குரல். சீதையின் முன் ஓர் அரக்கி வினோதமாக வணங்கியபடி தலைதாழ்த்தி நின்றிருந்தாள். அவளின் வளைந்த முதுகின் பின்னால், கார்மேகத்தைப் பிடித்துத் திரித்தது போன்ற மூன்று அடர்த்தியான சடைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

கொடிய விகார முகங்களையே பார்த்துப் பழகியிருந்த சீதையின் கண்களுக்கு, அந்தப் புதிய அரக்கியின் முகம் திகைப்பை அளித்தது. அவளது முகத்தில் அரக்கர்களுக்கே உரித்தான எந்த வஞ்சகமும் இல்லை. மாறாக, பல வருடங்கள் தவமிருந்த ஒரு தவசியின் முகத்தில் தோன்றும் சாந்தமும், உலகத்துத் துயரங்களையெல்லாம் தன் மடியில் தாங்கத் துடிக்கும் ஒரு மாபெரும் தாயின் கனிவும் அதில் குடிகொண்டிருந்தன.

“அஞ்ச வேண்டாம் தாயே. நான் திரிசடை. இராவணனின் தம்பி விபீஷணனின் மகள்,” என்றாள் அவள். அவளது குரலில் இருந்த பணிவு, சீதையின் மீதான அளவற்ற மரியாதையைக் காட்டியது.

சுற்றியிருந்த மற்ற அரக்கியர்கள் திரிசடையைக் கண்டதும் சற்று விலகி நின்றார்கள்.

இராவணனின் தம்பி மகள் என்ற அதிகாரப் பின்னணி ஒருபுறம் இருந்தாலும், திரிசடையின் கண்களில் இருந்த கண்டிப்பான பார்வை அந்த அரக்கியர்களுக்குப் பயத்தை ஊட்டியது.

சீதையை நெருங்க முற்பட்ட அரக்கியர்களைத் தன் ஒற்றைப் பார்வையாலேயே மிரட்டிப் பின்வாங்கச் செய்தாள் திரிசடை.

“தாயே, பல மாதங்களாக நீங்கள் பசியில் வாடுகிறீர்கள். உங்கள் உடல் ஒரு மெல்லிய கொடியைப் போல இளைத்துவிட்டது,” என்றாள் திரிசடை.

“யாருக்காக நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நீயும் அரக்கிகளில் ஒருத்திதானே, ஏன் மெலிந்த உடலென்றால் பசிக்கு ஆகாதா? இன்னும் பூரித்த உடல் இருந்தால்தான் உன் பசி தீருமா?” என்ற சீதையின் கொடிய சொற்களைக் கேட்டு, ‘இறைவா’ என்று தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள் திரிசடை.

“நான் இருந்தாலும், இறந்தாலும் என் கணவர் வருவார். இந்த இலங்கையும் இலங்கை மன்னனும் நிச்சயம் அழிவார்கள்,” என்றாள் சீதை.

திரிசடையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. சீதையைத் தொட முயன்ற கைகள் மெல்லப் பின்வாங்கின. அவள் திகைப்பும் அழுகையுமாகச் சீதையைப் பார்த்தாள்.

இந்தச் சூழலில் எந்தப் பெண்ணுக்கும் உண்டாகும் ஐயம் அது. ஐயம் யாரையும் எளிதில் விடாது. அதுவும் அடிபட்ட மனதில் குடிகொண்ட வலி, அந்த அச்சத்தையும் ஐயத்தையும் ஊதிப் பெருக்கும்.

திரிசடை உணர்ந்தாள்.

மெல்ல அவள் அருகில் சென்று மண்டியிட்டு வணங்கினாள்.

“அன்னையே, நான் அரக்கர் குலத்தைச் சார்ந்தவள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நான் கந்தர்வப் பெண்ணும் கூட” என்று நிறுத்திய திரிசடையை அதே சந்தேகக் கண்களுடன் பார்த்தாள் சீதை.

“அன்னையே, என் தந்தை வழியாக நான் அரக்கர் குலப் பெண்தான். ஆனால், என் தந்தையின் நல்ல குணங்களைக் கண்டு கந்தர்வ குலத்தின் அரசனான சலூஷன் (ஷலூஷன்), தன் மகளான சரமையைக் என் தந்தைக்குத் திருமணம் செய்து வைத்தார்.”

சீதை வியப்பாகப் பார்த்தாள். இந்த இலங்கையில் அவளுக்குச் சரமை மட்டுமே உயிர்த்தோழி. தன்னை அரக்கிகளின் கொடூரக் கைகள் தீண்டாவண்ணம் காத்துக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் சரமை மட்டுமே. ‘இராமன் வருவான்’ என்று அடிக்கடி நம்பிக்கை ஊட்டும் நல் தோழி.

“நீ… நீ.. சரமையின் மகளா?” என்றாள் சீதை ஆச்சரியத்துடன்.

“ஆம் அன்னையே, உலகமே இலங்கையின் நல்லரக்கி என்று கூறும் சரமையின் ஒரே மகள், இந்தத் திரிசடை” என்று சிரம் தரையில் பட வணங்கினாள்.

சீதை அவளை அள்ளி அணைத்தாள். கண்கள் ஆறாகப் பெருக விம்மினாள்.

“மன்னித்துவிடு திரிசடை.. நான்.. நான்…” என்று ஏதோ சொல்ல வந்தவளைத் தடுத்து நிறுத்தினாள் திரிசடை.

“உபசார மொழிகளுக்கு நேரம் இல்லை அன்னையே, உங்களைக் கூடவிருந்து பாதுகாக்க என் பெற்றோரின் கட்டளையின்படி இங்கே வந்திருக்கிறேன்.”

“ம்ம்.. ” என்ற சீதையின் கண்களை உற்று நோக்கிய திரிசடை சொன்னாள்:

“உங்கள் உடலின் சக்தியும் சரி, உள்ளத்தின் சக்தியும் சரி, வலுவாக இருந்தால் மட்டுமே இராமனுக்கு அது நன்மை பயக்கும்” என்றாள்.

“உங்கள் கண்கள் பசியைக் காட்டுகின்றன அன்னையே. நாளை இராமன் வந்து உங்களை மீட்டு அணைக்கும் அந்த நன்னாளில், இத்தனை மெலிந்த உங்கள் உடலைக் கண்டால் அவர் மனம் என்ன பாடுபடும்? உங்களின் இந்தத் துயரக் கோலத்தைக் கண்டு அவர் கண்கள் கலங்காதா? அவரை வேதனைப்படுத்தக் கூடாதென்றாவது நீங்கள் இந்த உணவை ஏற்க வேண்டும்” என்ற அந்தச் சொற்கள் நன்றாகவே வேலை செய்தன.

சீதை கடலிலிருந்து ஓசை வரும் பகுதியை நோக்கி வணங்கினாள்.

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? இந்த அரச போகத்தின் உணவுகளைத் தின்று செரிக்கவா திரிசடை? என் உடல் அதை ஏற்குமா சொல்” என்றாள் விரக்தியாக.

திரிசடை, தன் மடியில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த சில அபூர்வமான மலைக் கிழங்குகளையும், கானகத்துப் பழங்களையும் சீதையின் முன் வைத்தாள்.

“பசி என்பது உடலின் மொழி மட்டுமல்ல தாயே, அது உயிரின் தவிப்பு. இது இராவணனின் அரண்மனைச் சமையலறையிலிருந்து வந்ததல்ல. இந்தக் கானகத்தின் ஆழத்தில், எந்த மனிதனின் அகங்காரமும் தீண்டாத இயற்கையின் மடியில் விளைந்த தூய்மையான கிழங்குகள் இவை. அன்னை சரமை உங்களுக்காகத் தேடிக் கொணர்ந்தவை.”

சீதையின் கண்கள் நன்றியுணர்வில் கலங்கின.

“அன்னையே, அரக்கர் குலம் வன்முறையைத் தின்றே பழகியதுதான். ஆனால், தாய்மை என்பது குலங்களைக் கடந்தது. உங்களின் தோழி, உங்களை என்னைப் போல ஒரு மகளாகத்தான் கருதுகிறார். இது அவர் அனுப்பியது. இந்த வனத்தை விட்டு இவை இலங்கை அரண்மனை எல்லையை அறியாதவை. இதை ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று கெஞ்சினாள்.

சீதை மனம் கனிந்தது.

முதல்முறையாக அந்த வனத்திலிருந்து வந்த சில பழங்களை உண்டு தன் பசியைச் சற்று ஆற்றிக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தன. பசி அடங்கினாலும் சீதையின் மனதைக் காரிருள் கவ்வத் தொடங்கியது. இராவணனின் காலக்கெடு நெருங்க நெருங்க, சுற்றியிருந்த அரக்கியர்களின் மிரட்டல்களும் கூச்சல்களும் அதிகரித்தன. தனிமையும் பயமும் சீதையின் மனநிலையைச் சிதைக்கத் தொடங்கின.

எத்தனைப் பெரிய வீரனாக இருந்தாலும் தனிமை அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று அழித்துவிடும். வனத்தில் தன்னுடன் சீதை இல்லாத நிலையில் இலக்குவனும் கூட இல்லாமல் போயிருந்தால் இராமனே அந்த நிலைக்கு வந்திருக்கக்கூடும். அப்படி இருக்கச் சீதையின் நிலையைச் சொல்லித்தான் விளக்க வேண்டுமா?

இதைப் புரிந்துகொண்ட திரிசடை, சீதையின் மனதை ஆற்றுப்படுத்த ஒரு புதிய வழியைக் கண்டறிந்தாள். ஒருநாள் சில மூங்கில் நார்களையும், மெல்லிய புற்களையும் சீதையின் முன் கொண்டுவந்து வைத்தாள்.

“அன்னையே, சும்மா இருக்கும் மனதைப் பலவித எண்ணங்கள் எளிதில் ஆக்கிரமித்துவிடும். உங்கள் விரல்களுக்கு ஒரு வேலையைக் கொடுங்கள். அது உங்கள் துயரங்களை மறக்கடிக்கும். துயரத்தை ஒரு புள்ளியில் குவித்தால் அது கலையாக மாறும்” என்று கூறி, மூங்கில் நார்களைக் கொண்டு அழகிய கூடைகளையும், சிறு கைவினைப் பொருட்களையும் பின்னும் கலையைச் சீதைக்குக் கற்றுக் கொடுத்தாள்.

கலை என்பது ஒரு மாபெரும் தியானம். அது காயம்பட்ட மனதிற்கான அருமருந்து. சிலை வடிப்பவன் முன் கருநாகமே வந்தாலும் அவன் கவனம் சிலையில்தான் இருக்கும். விற்பயிற்சியின் போது இராமனின் கவனம் சற்றும் சிதறாமல் அவன் அத்தனை கர்மசிரத்தையாகப் பயில்வதை அவள் கண்டிருக்கிறாள்.

சீதையின் தாமரை போன்ற மெல்லிய விரல்கள் அந்த முரட்டு மூங்கில் நார்களைப் பின்னத் தொடங்கின. ஆரம்பத்தில் புற்களின் கூர்மை பட்டு விரல்களில் இரத்தம் கசிந்தது.

“இவை இராம இலக்குவரின் நலனுக்காகட்டும்” என்று சொல்லித் தன் வேலையைத் தொடர்ந்தாள். கால நேரம் செல்லச் செல்ல அந்த நார்கள் அவளுக்கு வசப்பட்டன. சீதையின் விரல்கள் அந்த நார்களைப் பின்னும்போது, அவளது கவனம் இராமனைப் பிரிந்த துயரத்திலிருந்து சற்று விலகி, அந்த நெசவின் நுட்பத்தில் குவிந்தது. ஒவ்வொரு நாரையும் இழைக்கும்போதும், இராமன் வந்து தன்னை மீட்டுச் செல்வான் என்ற நம்பிக்கையையும் சேர்த்தே அவள் நெசவு செய்தாள்.

திரிசடையின் இந்தச் செயல் சீதைக்கு அந்த வனச் சிறையில் ஒரு பெரும் ஆசுவாசத்தைத் தந்தது.

“திரிசடை, இந்தத் தூரத்து அலைமுழக்கம் கொஞ்ச நாளாகவே வித்தியாசமான ஓசையை எழுப்புகிறது” என்றாள்.

திரிசடை புன்முறுவல் செய்தாள். “ஆம் அன்னையே, எங்கோ ஒரு மாபெரும் நற்பிரளய மாற்றம் உண்டாவதற்கான அறிகுறி. அலைகள் சற்று ஆவேசம் அடைந்திருப்பதும், அது வேகமாகக்கரை மோதும் ஓசையும் கடலின் அந்தப்பகுதியில் உண்டாகிக் கொண்டிருக்கும் நற்செய்திக்கான அறிகுறி” என்றாள் திரிசடை.

“அப்படியானால்?”

“ஆம் அன்னையே, உங்களுக்கு ஏதோ நற்செய்தி வருமென்று என் உள்ளுணர்வு சொல்கிறது.”

என்ற திரிசடையின் சொற்களை ‘உண்மை உண்மை’ என்று ஆமோதிப்பது போலக் கடலலைகள் கரையை மோதி ஓசை எழுப்பின. இருந்தும், தூரத்தில் இதுவரை உலகம் கண்டிராத மாபெரும் ஆச்சரியம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்ததை சீதை எப்படி அறிவாள்?

பி.கு:

  1. அசாமின் பழங்குடி மரபுகளில் பாடப்படும் ‘கர்பி ராமாயணம்’ (சாபின் அல்யூன்) என்னும் நூலில் திரிசடையின் பாத்திரம் மிகவும் நெகிழ்ச்சியானது. சீதைக்குத் திரிசடை அசோக வனத்தில் உள்ளூர் அஸ்ஸாமிய உணவுகளைப் (பழங்குடியினரின் கிழங்குகள் மற்றும் பழங்கள்) ரகசியமாகத் தந்து பசியாற்றியதாக இந்த நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. அரக்கர் குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், சீதையைத் தனது சொந்த சகோதரியைப் போலப் பாதுகாக்கும் திரிசடையின் குணம் இதில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  2. மணிப்பூரின் பாரம்பரியத்தில் நெசவுக் கலைக்கு மாபெரும் இடமுண்டு. மணிப்புரி வாய்மொழிக் கதைகளின்படி, அசோக வனத்தில் சீதைக்கு மன அமைதி தருவதற்காகத் திரிசடை அவளுக்கு மணிப்புரி பாணி நெசவு மற்றும் கைவினைத் தொழில்களைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிறைவாசியின் மன அழுத்தத்தைப் போக்கக் கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் இந்தப் பழங்குடி உளவியல் மிகவும் முற்போக்கான ஒரு சிந்தனையாகும். இதன் மூலமே சீதை தன் சிறைத்துயரைச் சற்று மறந்திருந்தாள் என்று நாட்டார் மரபுகள் கூறுகின்றன.
  3. மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்னும் மத்வாச்சாரியாரின் படைப்பில் திரிசடைதான் சுபத்திரையாகப் பிறந்தாள் என்ற கதை சொல்லப்படுகிறது. ஆனந்த ராமாயணத்தில், சரமை தியாகப் பெண்மணியாகவும், சீதையின் உற்ற தோழியாகவும், சீதை தந்த வரத்தின்படி சரமை சுபத்திரையாகப் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
  4. இந்தியாவைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் நாட்டுப்புறக் கலைகளிலும் இவர்களின் கதை உண்டு. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தோனேசியாவின் ஜாவானிய நாட்டுப்புறக் காவியமான ‘ராமாயண ககாவினில்’ (Ramayana Kakawin) சரமையின் கதாபாத்திரம் மிகவும் போற்றப்படுகிறது. சீதையை அரக்கிகளிடமிருந்து காக்கும் முதன்மைப் பாத்திரமாக இவர் இதில் சித்தரிக்கப்படுகிறார்.
  5. வங்காளத்தில் கிருத்திவாசர் எழுதிய இராமாயணம் மற்றும் அங்குள்ள கிராமிய நாட்டார் பாடல்களில் சரமை ஒரு “நல்லரக்கி” அல்லது தேவதையாகவே வழிபடப்படுகிறார். இராவணனின் அரண்மனை இரகசியங்களைச் சீதைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு தூதுவராகவும், ஒற்றராகவும் சரமை செயல்பட்ட கதைகள் இந்த நாட்டுப்புறப் பாடல்களில் அதிகம் பாடப்படுகின்றன.
  6. கேரளாவின் கதகளி மற்றும் கர்நாடகாவின் யக்ஷகானம் போன்ற பாரம்பரியக் கலை வடிவங்களுக்கான ஆட்டக் கதைகளில், சீதை-சரமை நட்பு மிக உருக்கமாகக் காட்டப்படுகிறது. இராவணன் காட்டிய மாயா-சிரசைக் (ராமரின் பொய் தலை) கண்டு சீதை மயங்கி விழும்போதும், அவருக்குத் தாயாக இருந்து சரமை ஆறுதல் கூறித் தேற்றும் காட்சிகள் இக்கலைகளில் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன.
Series Navigation<< அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்

Author

You may also like

Leave a Comment