Home இலக்கியம்தமிழே அமிழ்தே – 20
This entry is part 20 of 20 in the series தமிழே அமிழ்தே

வெண்பாக்களில் தனிச் சிறப்பாக உதடு ஒட்டாத வெண்பாக்கள் உள்ளன (இதழகல் வெண்பாக்கள் என்பர்). திருக்குறளில் இவ்வாறான இதழகலிகள் நான்கு உள்ளன. அவை:

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (திருக்குறள் 310)

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.
(திருக்குறள் 489)

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
(திருக்குறள் 1082)

யாதனின் யாதனின் நீங்கியா னோதல்
அதனி னதனி னிலன்.
(திருக்குறள் 341)

இத்தகைய உதடு ஒட்டாத பாக்களைப் பாட, இதழ்கள் குவியவோ ஒட்டவோ வைக்கும் அட்சரங்கள் என்று தொல்காப்பியப் பிறப்பியல் நூற்பா சுட்டும் உ, ஊ, ஒ, ஓ, ஔ, ப், ம், வ் ஆகிய எழுத்துகள் மற்றும் அவற்றின் உயிர்மெய் எழுத்துகள் வரலாகாது என்பது இதன் அடிப்படை விதி. அவ்வகையில் வரக்கூடாதவை 119 எழுத்துகளாம்.

சிலர் வகரம் முழுமையாக உதடு ஒட்டாமல் அரை உதடு ஒட்டலே என்பதால் அதற்கு விலக்களித்து 28 திருக்குறள்களை இப்படி இதழகல் குறள்களாகச் சுட்டுவதும் உண்டு. எனினும் முழுமையான இதழகல் குறள்கள் திருக்குறளில் மேற்கண்ட நான்கு என்பதே பல்லோரின் கருத்து. வடமொழியில் இதனை நிரோஷ்டகம் என்கிறார்கள்.

பாவலர்தம் மொழியாளுமையை மெய்ப்பிக்கும் விதமாகவும் ஓர் அறைகூவலாகவும் இத்தகைய பாக்கள் அமையும். மேலும் மேற்கண்ட எழுத்துகளல்லாது புணர்ச்சியில் ஏற்படும் உடம்படுமெய் வரும் இடங்களையும் கருத்தில் கொண்டு அவற்றையும் நீக்க வேண்டும். சான்றாக: சென்ற+இடத்தில் என்பது சென்றவிடத்தில் என்று வரும்போது ‘வி’ – விலக்க வேண்டும்.

என் சில இதழகலிகள்:

1). இணையிலா ஏகனே என்னிறையே எங்கட்(கு)
அணையா அருளை அளி.

2). நன்னெறி தந்தே நலத்தினைக் காத்திருந்(து)
அந்நெறியில் நல்ல அரண்செய்தாய் – என்னிறையே
நின்னெறி இங்கே நிலைத்துச் செழித்திட
நின்னருள் கேட்கின்றேன் நான்.

இது என்ன பிரமாதம்!

திரைப்படப் பாடலாசிரியர் வாலி, வில்லுப்பாட்டுக்காரன் என்னும் திரைப்படத்தில் ‘தந்தேன் தந்தேன் இசை’ என்னும் முழுப்பாடலையும் இதழ் ஒட்டா இதழகல் சொற்களால் ஆக்கியுள்ளார். அதன் களிநயமான வரிகளில் ஓரிடத்தில் கலைவாணர் என்று வரக்கண்டு ‘வா’ வந்து, மாற்றித் தர இளையராஜா கேட்டதன் பேரில், அந்த இடத்தை என்னெஸ்கே என்று மாற்றினாராம்.

மேலும் (ஒற்றில்லா) புள்ளியில்லா வெண்பாக்களும் ஒரு வியப்பான களிநயம் தருபவை. அப்படி முயன்றவை கீழே.

அழகிய மானோ அரிய குயிலோ
விழிபடு வான விருதோ – பழகிய
கோல மயிலதுவோ கோடை மழைதானோ
காலமதி லாடி டுக.

அரசிய லாடு மெவரு மதிலே
உரசலு மாக உணர – புரியாது
நாணமிலா ஆளு நதியிலா ஊரென
ஆணவ மேகி னழிவு.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 19

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

Leave a Comment