தமிழரின் விருந்தோம்பல்
அண்மையில் ஒரு நண்பரின் பதிவு இக்காலத்தில் உணவகங்கள் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்தாலும் மக்களின் உடல்நலம் குறித்து எந்த நல்லுணர்வும் இன்றி, எப்படியேனும் பொருள் ஆதாயம் என்ற போக்கில் செயற்படுவதைச் சுட்டிப் பேசியது. உண்மை தான். இக்காலம் பொருளே முதன்மை என்றாகி அறம் பின்னால் சென்றுவிட்டது.
ஆனால், தமிழர்தம் பண்பாட்டில் முற்காலத்தில் வறியவர்க்கும் வழிப்போக்கர்க்கும் உணவு படைத்தல் தமிழர்களின் இயல்பான குணமாகவே இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
வீட்டுத் தலைமைக்கு உரிய மாண்புகளாகவும் இல்லறத்தின் உயர்ந்த அறமாகவும் விருந்தோம்பலும் சுற்றம் ஓம்பலும் இருக்கிறது என்கிறது தொல்காப்பியம்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள் (கற்பியல்,11).
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே என்ற பொருள் தரும் திருக்குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81)
நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு இருந்தது.
இதனை அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்கிறது நற்றிணை (142).
மட்டுமின்றி, குறுந்தொகை பாடலில் பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் என்ற 118 ஆம் பாடலில் வரும் வரிகள், சங்க காலத் தமிழர்கள் தம் வீட்டுக் கதவை இரவில் அடைப்பதற்கு முன்பும் கூட, பசியோடு வரும் புதிய விருந்தினர்களை வரவேற்கக் காத்திருந்த நற்பண்பைப் பறைசாற்றுகின்றன.
இன்றைக்கும் வரலாற்றின் எச்சங்களாய் சில ஊர்களில் வழிப்போக்கர் தங்கிச் செல்லும் சத்திரங்கள் இருக்கக் கூடும். அக்காலம் விருந்து என்பது அறியாதவர்க்கு அளித்தலாக இருந்தது.
இரந்து நிற்பவருக்கு உணவிடுவதும் விருந்தினருக்கு விருந்தளிப்பதும் வேறுபடுவது உபசரிப்பில் தான். அதனாற்றான் விருந்தினரை முகம் மாறா மகிழ்வுடன் பேண வேண்டும்; முகர்ந்தவுடன் வாடிவிடும் அனிச்சத்தைப் போல விருந்தளிப்பவர் முகம் திரிதலில் விருந்தினர் மனம் வாடிவிடும் என்கிற நுணுக்கத்தையும் தமிழின் தன்னிகரற்ற திருக்குறள் (90) சுட்டுகிறது
இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
இனிதெனத் தமியர் உண்டலும் இலரே
எனப் புறநானூறு(182) காட்டும் சித்திரம், கிடைப்பதற்கு அரிதான அமிழ்தமே கிடைத்தாலும் விருந்து இன்றி தனித்து உண்ணலாகா என்கிறது.
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
என்கிறது ஒளவை மூதாட்டியின் அறிவுரை.
இக்காலத்தில், தம் செல்வச் செழிப்பைக் ‘காட்டி’க் கொள்ளவும், ஏதேனும் பலனை எதிர்பார்க்கும் நோக்கிலும் தான் தம்மின் வலியோருக்கு விருந்துகள் ஏற்பாடாகின்றன என்றால் மிகையில்லை.
(தொடர்வோம்)