Home கவிதைதிருவை மு.இரா. கவிதைகள் – 7

திருவை மு.இரா. கவிதைகள் – 7

0 comments
This entry is part 7 of 12 in the series திருவை மு.இரா. கவிதைகள்

பெருங்கோடு கிழிக்க சிறுகோடொன்று
மறைந்த கதையாக
மெல்லிய கோட்டில் உலவும் உண்மை
தன்னிலைத் தவறா நெறிநின்று பிறழா
நியாயக் கதிராய் ஒளி வீசும்
கைரேகையென ஆயிரம் கோடுகள்
சூழ்ந்த உலகில்
பெருங்கோடு சிறுகோடென்ற ஓராயிர பேதம்
ஊரென்று நாடென்று தனக்கென்று வகுத்த
கோடுகளில்
ஆயிரமாயிர மோதல்

இனங்காட்டும் ஊர்ப்பெயர் காட்டும்
இக்கோடுகளுக்குள்
சரித்திர சோகங்கள் சாகசங்கள் பல
வளமில்லா இக்கோடுகள் இரத்தம் புசிப்பவை
உயிர்ச்சுவை கேட்பவை
இக்கோடுகள் மாறியவை
நிலைத்தவை ஆயினும் மாறக் கூடியவை
நம்மை வரவேற்பவை
வழியனுப்புபவை
அச்சுறுத்துபவை
என இக்கோடுகள் பலவிதம்

படிதாண்டக் கூடாதென அருவக்கோடு
நுழையக் கூடாதென தீட்டுக்கோடு
மனதிற்கு வேலியிட்ட வரம்புக்கோடு
சீதைக்கு இலக்குவன் இட்ட கோடென
இக்கோடுகள் பலவகை
நம்மை ஆட்டுவிக்கும் இக்கோடுகளின் பெயரால்
ஆளவும் படுகிறோம்
அடிமுடி தேடியும் கிடைக்கப்பெறாது
ஆதி அந்தம் இல்லாது இக்கோடுகள் இருக்கட்டுமே.

Series Navigation<< திருவை மு.இரா. கவிதைகள் – 6திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2 >>

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment