Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.

by Iyappan Krishnan
0 comments
This entry is part 46 of 46 in the series அசுரவதம்

அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன் என்பதால் உண்டான துயரமா என கண்டறிய இயலாதவாறு உணர்ச்சிகள் பின்னிக் கிடந்தன.

அசோகவனத்தின் அடர்ந்த மரங்களுக்குள் இருந்து வெளியேறிய இராவணனின் கால்கள், தன் வாழ்நாளில் முதல் முறையாகத் தள்ளாடுவதை அவள் காண்கிறாள். மூவுலகையும் தன் ஒற்றைப் பார்வையில் அடக்கி, திசையெங்கும் தன் வெற்றியின் கொடியைப் பறக்கவிட்ட அந்த மாபெரும் சக்கரவர்த்தி, இன்று ஒரு சிறு காய்ந்த புல் துரும்பைத் தாண்டிச் செல்ல முடியாமல் தோற்றுத் திரும்பிக் கொண்டிருந்தான்.

அவனுக்குப் பின்னால் எக்காளமிடும் படைகள் இல்லை; துதி பாடும் பரிவாரங்கள் இல்லை, மங்கள வாத்தியங்களின் முழக்கம் இல்லை. காலத்தின் கரங்களால் அள்ளியெறியப்பட்ட ஒரு அனாதையைப் போல, யாரும் காணா வனாந்தரத்தின் நடுவே வீழ்ந்த ஒற்றை மழைத்துளியைப் போல, விண்ணிலிருந்து பள்ளத்தாக்கில் வீழும் எரிகல்லைப் போல அந்த மாவீரன் இன்று முற்றிலும் தனித்து விடப்பட்டிருந்தான்.

அந்தப் பெரு வனத்தின் மரக்கிளைகளில் உரசிச் செல்லும் காற்றின் ஓசைகூட, அவனது மாபெரும் வீழ்ச்சியைப் பார்த்து எள்ளி நகையாடிச் சிரிப்பதைப் போலத் தோன்றியது அவளுக்கு. அவள் அந்த இடத்தை விட்டு யாரும் அறியாவண்ணம் அமைதியாக நகர்ந்தாள்.

ஆனால், இராவணனுக்கு அவனது உடல் சோர்வை விட, அவனது அகத்தின் சோர்வு இலங்கையின் மாபெரும் திரிகூட மலையை, உலகத்தின் பெருமலையான மேருவை விடவும் கனத்துப் பாரமாகி இருந்தது.

மனித மனம் என்பது ஒரு விசித்திரமான போர்க்களம். இராவணன் என்ற மாபெரும் நாயகனின் பத்துத் தலைகள் ஒரு மனிதனுக்குள் இருக்கும் பன்முகப்பட்ட உணர்ச்சிகளின், சிந்தனை ஓட்டங்களின், முரண்பாடுகளின் மாபெரும் பகுப்பு. அவனுடைய உள்ளம் பத்துத் தலைகளாகப் பிரிந்து, அவனைப் பத்து விதமான உணர்வுகளில் பிய்த்துப் பிய்த்து எறிந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு தலையும் அவனது மனதின் ஒவ்வொரு இருண்ட பக்கத்தை அவனுக்குத் திரையிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

சீதை அவனை ஏறெடுத்தும் பார்க்காமல், தங்களுக்கு இடையில் ஒரு காய்ந்த துரும்பைப் போட்டு, அந்தத் துரும்பிடம் பேசியபோது, அவனது முதல் முகம் சொல்லொணா வெட்கத்தால் குறுகிக் கவிழ்ந்தது. மூவுலகும் போற்றும் ஒரு மாமன்னனை, ஒற்றைப் பார்வைகூடப் பார்க்கத் தகுதியற்றவன் என்று அந்தச் சிறைப்பட்ட பெண் நிராகரித்த விதம், அவனது ஆண்மையின் வேரையே அசைத்துப் பார்த்தது. அவளின் அந்த அவமதிப்பைத் தாங்க முடியாமல் உள்ளம் கோபத்தால் சிவந்து தகித்தது.

கைலாய மலையையே வேரோடு அசைத்த தன் மாபெரும் கரங்கள், இன்று ஒரு பெண்ணின் மௌனத்தின் முன் செயலிழந்து நிற்பதை எண்ணி அது கொதித்தது. தனது வாளை உருவி அக்கணமே அவளை வீழ்த்திவிட வேண்டும் என்று தன்னுள் எழும் உணர்வு கர்ஜித்தது.

ஆனால், அவளைக் கொல்வதற்குப் பதிலாக அவளது காலடியில் வீழ்ந்து யாசித்த அகௌரவத்தை எண்ணி அசிங்கப்பட்டு நின்றது அவனது இன்னொரு முகம்.

மூவுலகையும் ஆண்டவன், தன் பத்து மகுடங்களும் தரையில் உரச, ஒரு பெண்ணின் காலடியில் வீழ்ந்து பிச்சை கேட்ட இழிநிலை அவனைச் சவுக்கால் அடித்தது. அவன் செல்லும் வழியின் ஓரத்தில் தேங்கிய நீரில் அவன் முகம் பிரதிபலித்தது.

காமம் ஒரு வீரனை எத்தகைய சிறு புழுவாக மாற்றித் தரையில் நெளியச் செய்யும் என்பதை அந்த முகம் வேதனையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவனுள் திரும்பத் திரும்ப எழுந்த அந்தக் கேள்வி அவனை அரித்துக் கொண்டே இருந்தது.

ஏன் நான் அவள் காலில் விழுந்தேன்? என்னைக் காலில் விழத் தூண்டிய காரணி எது?

விடை மட்டும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

சீதையின் கண்களில் இருந்த இராமனின் மீதான அந்த அசைக்க முடியாத காதலைக் கண்ட அவனுக்கு இப்போது தீவிரமான குற்ற உணர்ச்சி உண்டாகி மனம் இருண்டு கிடந்தது.

ஒருவன் காகத்தின் வடிவம் கொண்டு துன்புறுத்தியபோது, சிறு தர்ப்பைப் புல்லை அஸ்திரமாக்கி அவனைக் காத்த இராமனின் வீரத்தை அவளது உதடுகள் உரைத்தபோது, தன் செயல் எவ்வளவு பெரிய கோழைத்தனம் என்று அவனது மனசாட்சி அவனைச் சாடியது.

காகமாக வந்த அவனுக்குண்டான தைரியம்கூடவா எனக்கில்லாமல் போனது? என அவன் மனம் அவனை அலைக்கழித்தது. தனித்திருந்த ஒரு பெண்ணை, மாயமானை அனுப்பி அவளது கணவனைப் பிரித்து, வஞ்சகமாகக் குடிலோடு தூக்கி வந்தது ஒரு வீரனுக்கு அழகல்ல என்பதை அவனது மனம் கூர்மையான முள் போலக் குத்திக் காட்டியது.

தன்னிடம் துளியும் விருப்பமில்லாத, வேறொருவனைத் தன் மூச்சாகக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை வற்புறுத்தித் தொடுவது தன் வீரத்திற்கும், படைக்கலப் பயிற்சிக்கும், தான் கொண்ட தெய்வீக அஸ்திரங்களுக்கும் மாபெரும் இழுக்கு என்று அது வாதிட்டது.

ஒரு பெண்ணை அவளது சம்மதமின்றித் தீண்டினால் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறும் என்று ரம்பை இட்ட சாபம், உண்மையில் அது ஒரு மாவீரனின் மனசாட்சி தனக்குத்தானே விதித்துக்கொண்ட உன்னதத் தளை என்பதை அவனுள்ளம் ஆழமாக அறிந்திருந்தது. உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து எழுந்த எண்ணம் ஒன்று, முக்கண்ணனுக்கே சாம கானம் பாடி, தன் நரம்புகளையே மீட்டிய மாபெரும் சிவபக்தன், வேதங்களையும் உபநிடதங்களையும் கரைத்துக் குடித்த அந்தப் பேரறிஞன், இன்று வெறும் சதை இச்சைக்காகத் தன் அத்தனை ஞானத்தையும் இழந்து நிற்பதை எண்ணிக் கண்ணீர் வடித்தது.

அவனுள் எழும் பலவித எண்ணங்கள் பத்துத் தலை நாகம் போல அவனைக் கொத்தித் தீர்த்தன.

சீதையின் கற்பையும், அவளது காதலையும் கண்டுகொண்ட அவனது ஞானம், அவளை இராமனிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று மனதின் இன்னொரு மூலை லேசாக எச்சரித்தது. இராமனிடம் அவளை ஒப்படைத்துவிட்டு, நேருக்கு நேர் போர்க்களத்தில் நின்று இராமனை வெல்வதுதானே உண்மையான வீரம் என்று அவனது நியாயம் அவனைக் குடைந்தது.

ஆனால், அவனது கர்வமும், அகங்காரமும் விஸ்வரூபம் எடுத்து விழித்துக்கொண்டன. இராவணன் ஒரு மானிடனுக்குப் பயந்து, தான் கவர்ந்து வந்த பெண்ணைத் திருப்பிக் கொடுத்துவிட்டான் என்று அஷ்டதிக்குப் பாலகர்களும், தேவர்களும் எள்ளி நகையாடுவார்களே! என் மானம் என்ன ஆவது? தன் சொந்தத் தவறிலிருந்து பின்வாங்குவதை விட, அந்தத் தவறுக்காகப் போரிட்டு அழிவதே வீரமென்று அவனது பிடிவாதமான அகங்காரம் அவனுக்குப் போதித்தது.

தன்னுடைய ஒற்றைக் காமத்திற்காக, தன் உடன் பிறந்தவர்களையும், மாபெரும் அரக்கர் குலத்தையும், இந்த இலங்கை மண்ணையும் அழிவுக்கு இழுத்துச் செல்கிறோமே என்ற பதைபதைப்பு அவன் முகத்தில் லேசாக நிலைகொண்டிருந்தது.

அவன் நடந்துகொண்டே அரண்மனை நந்தவன மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். தடாகத்தின் அருகில் அமர்ந்து அந்த நீரில் தன் முகத்தை மீண்டும் பார்த்தான். அவன் அத்தனை எண்ணங்களும் ஒவ்வொன்றாக எழுந்து அவனுக்கு ஒவ்வொரு தலையாக நின்று போதிப்பதைப் போல உணர்ந்தான்.

அந்தத் தடாகத்தின் குளிர்ந்த நீரை இரு கைகளால் அள்ளித் தன் முகத்தில் வேகமாகப் பலமுறை அறைந்தான். நீரின் குளுமை அவன் மன வெப்பத்தைக் குறைப்பது போலத் தோன்றியது. அந்த எண்ணங்கள் அடங்கி ஒருமுகமாவதை உணர்ந்தான்.

தன்னுள் நடக்கும் உணர்ச்சிகளின் போராட்டத்தையும், அலைக்கழிப்பையும் எதுவும் செய்ய முடியாமல், வெறும் சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு அத்துவான மனநிலைக்கு அவன் சென்றுவிட்டிருந்தான்.

நீதியும் அறமும் தன்னுள் தோற்று, உலகத்தின் பார்வைக்கான போலி கௌரவம் அங்கு வெல்வதை அவனின் உணர்ச்சிகள் தணிந்த உள்ளத்தின் ஒரு பகுதி மௌனமாக வேடிக்கை பார்த்தது.

அரண்மனையின் பிரம்மாண்டமான வாயிலைக் கடந்து அவன் உள்ளே நுழைந்தான். ரத்தினங்களும் மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட அந்த மாபெரும் மண்டபத்தின் தூண்கள் அவனது பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டு நின்றன.

இத்தனை புகழும், இத்தனை பெருமையும் செல்வங்களையும் மதிப்பையும் தேவர்களே தாள் பணியும் ஆண்மையும் கொண்ட நான் இனி அவளைத் திருப்பி அனுப்பினால் உலகம் பழிக்கும். இனி என்ன நடந்தாலும் சரி, ஒன்று அவள் பணிய வேண்டும், அல்லது அவளைத் தேடி வந்தால் அந்த இராமனுடன் போர் ஒன்றே உறுதி எனத் தன் மனதை இறுக்கிக் கொண்டான்.

அவன் லேசான தள்ளாட்டத்துடன் உள்ளே நுழைகையில், அச்சத்துடன் அவனது வரவுக்காக அங்கே காத்திருந்தாள் மண்டோதரி.

எத்தனையோ போர்களில் பெருவெற்றி பெற்றுத் திரும்பிய அந்த மாவீரனின் மிடுக்கான நடையை அவள் அறிவாள்.

தேவர்களையே சிறைப்பிடித்து வந்தபோது அவன் முகத்தில் இருந்த அந்த வெற்றியின் களிப்பை அவள் கண்டிருக்கிறாள். ஆனால், இன்று அவன் நடந்து வரும் தோரணையை அவளது நுண்ணறிவு மிகக் கூர்மையாகக் கவனித்தது.

அவன் தோல்வியுற்றிருக்கிறான்.

அவனது தோள்கள் சரிந்திருந்தன. அவனது ஒவ்வொரு காலடியிலும் ஒரு தயக்கம் இருந்தது. எதற்கும் தலைவணங்காத அவனது மகுடங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரும் பாரத்தால் அழுந்திக் கிடந்தன. அவனது கண்களில் ஒரு சக்கரவர்த்திக்குரிய தீர்க்கம் இல்லை; மாறாக, எதையோ தொலைத்துவிட்டுத் தவிக்கும் ஒரு யாசகனின் மருட்சி இருந்தது.

எந்த ஆயுதமும் இன்றி, எந்தப் படையுமின்றி, எந்தப் போர்க்களமுமின்றி தனித்து விடப்பட்ட ஒரு பெண் அவனை வீழ்த்திவிட்டாள். சீதையின் கற்பின் திண்மையும், அவளது வார்த்தைகளின் நெருப்பும், இராமன் மீதான அவளது அசைக்க முடியாத காதலும் இவனது அகங்காரத்தை வேரறுத்துவிட்டன என்பதை அந்த மாதரசியின் நுண்ணறிவு அவளுக்கு உணர்த்திவிட்டது.

ஒரு மாவீரன் புறப்போரில் தோற்பதை விட, அகப்போரில் தோற்பதுதான் அவனது உண்மையான வீழ்ச்சியின் தொடக்கம்.

இராவணனின் இந்த வீழ்ச்சி அவனோடு நிற்கப்போவதில்லை. இவனை நம்பியிருக்கும் இந்த இலங்கை மண்ணுக்கே மாபெரும் பேரழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணி அவளது மனம் உள்ளுக்குள் விக்கித்துப் புழுங்கித் தவித்தது.

அவளால் அவனருகில் சென்று ஆறுதல் சொல்லவும் முடியவில்லை; ஒரு மாபெரும் சக்கரவர்த்தி தன் அகங்காரத்தின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாவதை வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை.

அந்தப் பிரம்மாண்டமான அரண்மனை மண்டபத்தில், அத்தனை விளக்குகளும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தாலும், மண்டோதரியின் கண்களுக்கு அந்த இடம் ஒரு மாபெரும் இருண்ட கல்லறையாகவே காட்சியளித்தது. விதி தன் கணக்கை எழுதத் தொடங்கிவிட்டது என்பதை அவளது மனம் உறுதியாக நம்பியது.

திடீரென அவள் தோளைப் பின்னிருந்து ஒரு கரம் பற்றியது. “இது உனது கணவனின் வீழ்ச்சியின் ஆரம்பம் இல்லை… இல்லை இலங்கையின் வீழ்ச்சியின் ஆரம்பமே தொடங்கி விட்டது..”

என்றது அக்குரல். மண்டோதரி அந்தக் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு வேதனையுடன் தூரத்தில் நிற்கும் இராவணனைப் பார்த்தாள்.

பின்குறிப்பு:

கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விமலசூரியின் பவுமசரியம் என்ற ஜைன ராமாயண நூல், இராவணனை ஒரு அரக்கனாகக் காட்டாமல், மிகச்சிறந்த குணங்கள் கொண்ட ஒரு மனிதனாகச் சித்தரிக்கிறது. அதன்படி அவன் தன் தவறை உணர்ந்து சீதையை அனுப்ப நினைக்கிறான். பின் அது தன் வீரத்துக்கு இழுக்கு என மனம் மாறிப் போரையே தேர்ந்தெடுக்கிறான் என்பது ஆழமான தத்துவப் பதிவாகும்.

கம்ப ராமாயணத்திலும் யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் இராவணனின் தவறைச் சுட்டிக் காட்டும்போது, அதை ஏற்பது போலப் பேசி, காலம் கடந்துவிட்டது இனி போர் ஒன்றே சரியான முடிவு என்று சொல்லும் நிலைப்பாட்டைத் தெளிவாகக் காண முடிகிறது.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

Author

You may also like

Leave a Comment