Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

by Iyappan Krishnan
0 comments
This entry is part 45 of 45 in the series அசுரவதம்

“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது.

ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின் இயல்பு மட்டுமல்ல, மனதின் இயல்பும்தான்.

ஆயிரம் சிந்தனைகள், பல்லாயிரம் உணர்ச்சிகள், தவிப்புகள், கோபங்கள், ஆசைகள் என சதா சலனப்பட்டுக்கொண்டே இருக்கும் மனம்தான் ஒரு மனிதனை, அல்லது ஒரு உயிரை, பூமியோடு அழுத்திப் பிணைத்து வைத்திருக்கும் மாபெரும் சங்கிலி.

இந்தப் பேரண்டம் அணுத்துகள்களால் ஆனது. அண்டத்தில் விரிந்திருக்கும் அதே சக்தி தன்னுள்ளும் ஓடுவதை அவன் உணர்ந்தான். உடலும் வெளியும் வேறல்ல; இரண்டும் ஒரே பேரியக்கத்தின் வடிவங்கள். மேலும் எண்ணங்களின் சுமையே உயிரை பூமிக்குள் அழுத்தும் உண்மையான சுமை. ஆனால், அந்தத் தருணத்தில் அவனது மனம் அத்தனைச் சுமைகளையும் உதறித் தள்ளியிருந்ததை அனுமன் உணர்ந்தான்.

அவன் மனம் ராம நாமம் ஒன்றை மட்டுமே மிழற்றிக்கொண்டிருந்தது. இவை அத்தனையும் சாத்தியமானது இராம நாமம் ஒன்றால் மட்டுமே. அது மனதை ஒருங்கிணைத்தது. மனம் முழுமையாக ஒருமுகப்படும்போது, ஒருவன் தன் உடலின் இருப்பையே மறந்துவிடுகிறான். எடை என்பது பொருளுக்குத்தான், ஒளியைப் போன்ற தூய சிந்தனைக்குக் கிடையாது என்பதை அவன் அறிந்தான்.

அகங்காரமும், காமத்தின் பாரமும் ஒரு மாவீரனை மண்ணில் புதைக்கும். அதே நேரம், அந்தப் பாரமற்ற மனம் ஒரு வானரனை வானில் தாங்கிக்கொண்டிருந்தது.

அவன் மேகங்களைக் கிழித்துக்கொண்டு வானத்தின் உச்சியை நோக்கிப் பாய்ந்தான். அவனது கண்கள் நேராக ஆகாயத்தின் உச்சியில் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்த சூரியனைச் சந்தித்தன.

அந்த மாபெரும் நெருப்புக் கோளத்தைப் பார்த்ததும், அவனுள் ஒரு கணம் பழைய நினைவுகள் மின்னி மறைந்தன.

தான் பழமெனச் சூரியனை நோக்கிப் பாய்ந்ததும், பின் சூரியனே அவனுக்கு வேதங்களையும், கலைகளையும், பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும் கற்பித்த மாபெரும் குருவாக மாறியதும் அவன் நினைவுகூர்ந்தான்.

அன்று, தன் குருவுக்கு இணையாக, வானில் பின்னோக்கி நடந்தபடியே அவன் கல்வி கற்றான். இன்று, தன் முழு ஆற்றலையும் திரட்டி முன்னோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தான். அவனது வேகம், சூரியனின் ஒளிக்கதிர்களைக் காட்டிலும் வேகமாக இருந்தது.

பார்த்த வானவர்கள் ஒரு கணம் திகைத்தனர். சூரியனின் தேரையா அனுமன் முந்துகிறான்? அல்லது சூரியனே போட்டியிட்டு அனுமனின் வேகத்தை ரசித்து அவனோடு பயணிக்கிறானா என்று அறிய முடியவில்லை.

அவன் சூரியனின் பாதையை நெருங்க நெருங்க, ஆகாயத்தில் ஒரு மாபெரும் மாயம் நிகழத் தொடங்கியது. அவனது பேருருவின் நிழல், வான வீதியில் பல லட்சம் யோசனைகளுக்கு விரிந்து கிடந்தது.

பாய்ந்து செல்லும் அவனது நிழல், விண்வெளியில் மிதந்துகொண்டிருந்த நவக்கிரகங்களின் மீது கருமேகமாய்ப் படிந்து விலகியது.

அந்த வேகத்தைத் தடை செய்வது போலத் திடீரென ஒரு குரல் எழுந்தது.

“மகனே, நில்.. நில்… சற்று நில்… ” என்ற அந்த ஓசை அனுமனின் சிந்தனையைக் கலைத்தது.

அனுமன் வேகத்தைக் குறைத்து நிதானித்தான். கவனித்தான்.

அது ஒரு மேருவைப் போன்ற பல சிகரங்களைக் கொண்ட மலை. கடல் நீரைக் கிழித்துக்கொண்டு அது மேலெழுந்து அவன் வழியில் நின்றது.

“சிறிது நேரம் என் சிகரங்களில் இளைப்பாறிச் செல். இங்குள்ள சுவையான கனிகளை உண்டு, குளிர்ந்த தென்றலில் உன் களைப்பைப் போக்கிக்கொண்டு உன் பயணத்தைத் தொடரலாம்,” என்ற ஓசை மலையிலிருந்து வந்தது. அனுமன் எச்சரிக்கையானான். இது அரக்கர்களின் மாய வேலையாக இருக்குமோ எனத் துணுக்குற்றான்.

“மகனே, சந்தேகப்பட வேண்டாம். என் பெயர் மைநாகம். உன் தந்தை வாயுதேவனின் நண்பன்.”

அனுமன் ஏதும் பேசாமல் உற்றுக் கவனித்தான். இலக்கை நோக்கிய பயணத்தில், ஆபத்துகளை விட மிகவும் கொடியவை இத்தகைய அன்பான இளைப்பாறுதல்கள்தான். வழியில் வரும் எதிரிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கும் நேரத்தில், அன்போடும் கனிவோடும் நீட்டப்படும் வசதிகள் இலக்கைச் சென்றடைய விடாது தடுத்துவிடும்.

மைநாகம் தொடர்ந்தது.

“மைந்தா, பல யுகங்களுக்கு முன்பு, இந்திரனின் வஜ்ராயுதத்திலிருந்து என்னைக் காப்பாற்றி, கடலடியில் பத்திரமாக ஒளித்து வைத்தவர் வாயுதேவன். உன் தந்தையார்.”

“தந்தையின் பெயர் புகழடைவதாகட்டும். மைநாக மலையே, வழிவிடுவீராக. என் பயணத்தைத் தடை செய்யாதீர்.”

“என் நன்றிக்கடன் தீர்க்க, உனக்கு உதவவே வந்தேன் மகனே.”

அனுமன் அந்த மலையின் அன்பான அழைப்பைப் புரிந்துகொண்டான். தன் கரங்களால் அதன் பொன் முடிகளை மிக மென்மையாகத் தொட்டு வணங்கினான்.

“தந்தைக்கு இணையானவர் தாங்கள். ஆனால் தங்களின் ஆணையை ஏற்க இயலாத நிலை, இராம காரியம். மன்னித்தருளுங்கள்” என்று தன் பயணத்தின் நோக்கத்தைச் சொல்லிக் கடந்து சென்றான் அனுமன். மைநாகம் கடலில் மீண்டும் ஆழ்ந்தது.

காற்றைக் கிழித்துச் செல்லும் வேகத்திலும் சூரியனின் தகிப்பு, உள்ளே சுடர்விட்டு எரியும் கடமையின் தீவிரம் என அனைத்தும் ஒன்றிணைய, அனுமனின் நெற்றியிலிருந்து ஒரு தனித்த வியர்வைத்துளி பிரிந்தது.

அது கடலில் வீழ்ந்தது. அந்தத் துளி கடலில் விழுந்த மறுகணம், கடலின் அடிவாரத்தில் வாய் பிளந்து காத்துக்கொண்டிருந்த ஒரு மாபெரும் மகர மீன் அதை விழுங்கியது.

தன் கடமையின் உக்கிரத்தில் அவன் சிந்திய அந்த ஒற்றை வியர்வைத்துளியிலிருந்துதான், அந்த மகர மீனின் வயிற்றில், பிற்காலத்தில் அவனுக்கே நிகரான பலம் பொருந்திய மகரத்துவசன் என்னும் மச்சவல்லபனாக வீர வாரிசு உருவாகப் போகிறான் என்பதை அந்தத் தருணத்தில் அவன் சிறிதும் அறியவில்லை.

பிரம்மச்சரியத்தின் உச்சத்தில் இருந்த அந்த மகாவீரனுக்கே தெரியாமல், விதி ஒரு வினோதமான ரகசியத்தை உருவாக்கிக்கொண்டிருந்தது. ஆம், சர்வ பிரம்மச்சாரியின் மகன் அங்கே உருவாகிக்கொண்டிருந்த வேளையில் அது பற்றி ஏதும் அறியாத அனுமன் தொடர்ந்து இலங்கை நோக்கிச் செல்கையில் அந்த விபரீதம் நடந்தது.

திடீரென, அவன் பாய்ந்து சென்ற பாதையில் காற்றின் சீற்றம் முற்றிலும் அடங்கியது. பிரபஞ்சமே ஒரு கணம் மூச்சைப் பிடித்துக்கொண்டது போன்ற அமானுஷ்யமான அமைதி சூழ்ந்தது. அடுத்த கணம், கீழே பெருங்கடலின் மையத்தில் ஒரு விசித்திரமான சலனம் உருவானது.

நீரில் ஆழ்ந்த கீழ் உலகமே விழித்துக்கொண்டதைப் போலக் கடல் நீர் பயங்கரமான ஓசையோடு உள்வாங்கத் தொடங்கியது.

அனுமனின் வேகம் சற்றே குறைந்தது. கீழே அவன் கண்ட காட்சி, அவனையே ஒரு கணம் திகைக்க வைத்தது.

உள்வாங்கிய கடல், திடீரென மேலெழுந்து அலைகள் ஒன்றோடொன்று மோதிச் சிதறி, வானை முட்டும் அளவுக்கு நீர்ச்சுழல்களாகச் சீறி எழுந்தன.

அந்த மாபெரும் சுழலின் மையம், முடிவற்ற இருளின் வாயிற்படியைப் போல, உலகையே தன்னுள் இழுக்கும் கருந்துளையின் பயங்கரத்தோடு விரிவடைந்துகொண்டே போனது.

அந்தச் சுழலுகின்ற நீர்ப்பரப்பு ஒரு சாதாரண இயற்கையின் சீற்றமல்ல என்பதை அனுமனின் நுட்பமான உள்ளுணர்வு உடனே கண்டுகொண்டது.

வானத்தில் வெகு உயரத்தில் பறக்கும் அவனைக் கூடத் தன்னுள் ஈர்த்து விழுங்கிவிடும் இழுத்துவிடும் ஆவேசத்தோடு, அந்த நீர்ச்சுழலின் மையமான மரண இருள், ஒரு மாபெரும் அசுர வாயைப் போலத் திறந்துகொண்டு அவனுக்காகக் காத்திருந்தது.

அந்தக் கருந்துளையைத் தாண்டி எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அதன் உள்ளிருந்து யுகங்களைத் தாண்டிய மர்மம் கொண்ட ஒரு மாபெரும் சக்தி தன்னையே வெறித்துப் பார்ப்பதை அனுமன் உணர்ந்தான்.

அனுமன் சற்றே அயர்ந்தான்.

பின் குறிப்பு:

வட இந்திய ராமாயணமான துளசிதாசரின் ராமசரிதமானாஸ் நூலில், அனுமன் இலங்கை நோக்கிப் பறக்கும் வேகத்தை வர்ணிக்கும்போது, அவனது வேகம் சூரியனின் தேரை விடவும், காற்றின் வேகத்தை விடவும் அதிகமாக இருந்தது என்று உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கதைகளில், முக்கியமாகக் கர்நாடக யக்ஷகான நாடகங்களில் இந்த உவமையே, “சூரியனுக்கும் அனுமனுக்கும் நடந்த வேகப் போட்டி” என்ற சுவாரசியக் கதையாக உருமாறியது.

மேலும் ராமகியான் என்னும் தாய்லாந்து நாட்டுப்புறப் பதிப்பில், அனுமனின் வேகம் மற்றும் வீரம் அதீதமாக வர்ணிக்கப்படும். அனுமன் லங்காபுரிக்குச் செல்லும்போது அவனது வேகம் மற்றும் நிழலின் அளவு, சூரிய தேவனான பிரா ஆதித்தியனின் (சூரியன்) தேரையே வழிமறிப்பது போலவும், இருவருக்கும் இடையே ஒரு போட்டி நிகழ்வது போலவும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாய்லாந்து நாட்டுப்புறக் கதை வடிவம், அங்குள்ள நிழற்பாவைக் கூத்து வழி மக்களிடம் பரவியது.

ஆனந்த ராமாயணத்தில் பல விசித்திரமான நாட்டுப்புறக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் அனுமன் வானில் பறக்கும்போது பிரபஞ்ச சக்திகளான சூரியன் மற்றும் நவக்கிரகங்கள் அவனது வேகத்தைக் கண்டு வியந்ததாகவும், சில தருணங்களில் அவரது நிழல் கோள்களை மறைத்ததாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

பராசர சம்ஹிதையில் அனுமனைப் பற்றிய முழுமையான வரலாற்றுத் தொகுப்பான இதில், சூரியனுக்கும் அனுமனுக்கும் உள்ள குரு-சீடன் உறவு ஆழமாகப் பேசப்படுகிறது. அனுமன் வானில் பறக்கும் ஆற்றல் பெற்றபோது, அவனது நிழலின் பிரம்மாண்டம் சூரிய மண்டலத்தையே வியப்பில் ஆழ்த்தியது என்ற குறிப்புகள் உள்ளன.

அனுமனின் வியர்வையும் மகர மீனும்: கடலின் மேல் பறக்கும்போது அனுமனின் உடலிலிருந்து சிந்திய வியர்வைத்துளி, கடலில் விழுந்து ஒரு மகர மீனால் உண்ணப்படுகிறது. அந்த வியர்வையிலிருந்து அனுமனுக்கும் அந்த மீனுக்கும் ஒரு மகன் பிறக்கிறான் என்ற இந்தக் கதை தமிழில் மயில் ராவணன் கதையில் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்வு, தாய்லாந்து மற்றும் கம்போடிய நாட்டுப்புற ராமாயணக் கதைகளில் மிகவும் பிரசித்தம்.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்

Author

You may also like

Leave a Comment