உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி

This entry is part 13 of 13 in the series உருதுக்கவிதை உலகு

கவியரங்கங்கள் செவியரங்கங்கள். இதைப் புரிந்துகொண்டு தான் கலந்துகொள்ளும் கவியரங்கங்களைச் செவியரங்கங்களாக்கியவர் கவிஞர் ராஹத் இந்தூரி. உருது மொழியில் பேராசிரியராக இருப்பினும், இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருப்பினும், அவர் கவியரங்கக் கவிஞராகவே மக்கள் நடுவில் அறியப்படுகிறார்.

உருதுவில் கவியரங்கங்கள் இலக்கியத்தின் ஒரு முகமாகச் செயல்படுகின்றன. தமிழிலும் கவியரங்கங்கள் விழாக்களை அலங்கரித்த காலமும் இருந்தது. கவிதைகளை மன்றத்தில் அரங்கேற்றும் மரபு சங்க காலத்திலேயே தொடங்கியிருக்கலாம். கவிஞர்கள் நூல்களை அரங்கேற்றியதும், பரிசில் பெற்றதும், அரசவைக் கவிஞர்களாக இருந்ததும், பொதுவெளியில் புலவர்கள் வாதம் செய்ததும் இலக்கிய வரலாற்றில் காணக் கிடைக்கின்றன. இக்காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுவில் தமிழ்க் கவிதைகள் சாமானிய மக்களையும் சென்றடையும் விதமாகக் கவிஞர்கள் மேடையில் வாசிக்கத் தொடங்கினர்.

பாரதியின் வழி, பாரதிதாசனின் வழி, முற்போக்குச் சிந்தனை, திராவிடச் சிந்தனை, தனித்தமிழ், ஆன்மீகம் என எந்தக் கொள்கையின் வழியில் தமிழ்க் கவிதையில் இயங்கினாலும் கவிஞர்கள் கவியரங்கங்களுக்குக் கருத்துகளை எடுத்துச் சென்றனர். 1970களில் கலைஞர் ஆட்சியில் கவியரங்கங்கள் அதன் உச்சத்துக்குச் சென்றன. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் கவியரங்கங்கள் இலக்கிய மேடைகளை அலங்கரித்தன. கவியரங்கத் தலைவர், அவருடைய தலைமையில் கவிஞர்கள் ஒவ்வொருவராகக் கவிதை வாசிக்கும் மரபு அது.

ஆனந்த விகடன் கலைஞர் தலைமையில் பிரம்மாண்டமான கவியரங்கத்தை நடத்தியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவியரங்கங்கள் தொடர்ந்தன. அதன் பின்னர் கவியரங்க மரபு மெல்ல மறைந்தது. ஒளிப்பதிவாகியிருக்கும் கவியரங்கக் கவிதைகள், அன்றைக்கு நூல் வடிவில் அச்சேறிய கவியரங்கக் கவிதைகள், செய்திக் குறிப்புகள் தவிர்த்துத் தமிழ்க் கவியரங்க மரபினை இன்றைய தமிழ் இளைஞர்கள் அறிய வாய்ப்பில்லை.

உருதுவில் கவியரங்கங்கள் இன்றும் இலக்கிய மேடைகளை அலங்கரிக்கின்றன. அதன் வழியாகக் கவிஞர் ராஹத் இந்தூரியும் கவிதைகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்.

ஊக்கமூட்டும் சொற்றொடராக, பாரதியின் ‘வீழ்வெனென்று நினைத்தாயா’ கவிதை வரிகள் எத்தகைய வழிபாட்டு நிலையைத் தமிழ்ச் சூழலில் பெற்றதோ, அப்படியான வழிபாட்டுச் சூழலைச் சமீப நாட்களில் ஒருமைப்பாட்டுக்காக ராஹத் இந்தூரியின் வரிகள் பெற்றன.

// இம்மண்ணில் அனைவரின் குருதியும் கலந்துள்ளது
இந்துஸ்தானம் யாருடைய அப்பனின் சொத்தும் அல்ல
//

// சபிகா கூன் ஷாமில்ஹை யஹான்கி மிட்டிமேன்
கிசிகே பாப்கா ஹிந்துஸ்தான் தோடிஹை
//

சாமானிய மக்களிடையே இலக்கியத்தை எடுத்துச் செல்பவர் யாராக இருப்பினும், அவருக்கும் தீவிர இலக்கியத்துக்கும் இடையில் ஒரு கோடு கிழிக்கப்படுவது வழக்கம். இது வெகுஜன இலக்கியம் – இது தீவிர இலக்கியம் என இரண்டு எல்லைகளில் நிற்கும் அணுகுமுறை எல்லா மொழிகளிலும் உண்டு. கவியரங்கங்களால் மக்களைக் கவர்ந்த இவர் மீதும் உருதுக் கவிதைகளை எளிமைப்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது. விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு அவர் தன்னுடைய பாணியில் மக்களுடன் கவியரங்கங்களில் உரையாடிக்கொண்டிருந்தார்.

ராஹத் இந்தூரியின் கவிதைகளில் காணக் கிடைக்கும் அரசியல் பார்வைகளும், அவரது கவிதைகளின் இலக்கிய மதிப்பும் ஒன்று அல்ல. அரசியலும் இருந்ததால் அவரது கவிதைகள் மக்களைச் சென்றடைந்தன என்பது உண்மை; மக்களுக்குத் தேவையான நேரத்தில் கவியரங்க மேடைகளில் தயங்காமல் அரசியலைப் பாடினார் என்பதும் உண்மை. அவருடைய கவிதைகளில் இருந்த எளிமையை அவரது எதிர்ப்பாளர்கள் நீர்த்துப்போனதாகக் கருதினர்; இன்னொரு புறத்தில் அவரது ஆதரவாளர்கள் அதே எளிமையைத்தான் அவரது பலமாகக் கருதினர். எளிமையான சொற்களில் அவர் அரசியலைப் பாடிய சொற்கள், போராட்டப் பதாகைகளில் இடம்பெற்றன என்பது வரலாறு. இந்த முரண் ராஹத் இந்தூரியைப் புரிந்துகொள்ள உதவும்.

// காகித உடல் காற்றில் பறக்காமல் இருக்கட்டும்
நண்பர்களே! என் மீது கனமான கல்லை வையுங்கள்
//

// ஏ ஹவாயேன் உடுனா ஜாயேன் லேக்கே காகஸ்கா பதன்
தோஸ்த்தோ முஜ்பர் கோயி பத்தர் ஸரா பாரி ரக்கோ
//

கவிஞன் தாள்களைப் பற்றிப் பாடினால் அது தாள்களைக் குறிப்பிடுவதல்ல; இலக்கியப் படைப்பைக் குறிப்பதாகும். தன் மீது கல்லை வைக்க விடுக்கும் கோரிக்கையும் கல் அல்ல; ஆழ்ந்த வாசிப்பு அல்லது எதிர்நிலைப்பாட்டின் குறியீடு. அவருடைய இந்தக் கவிதை தாள், கல் எனப் பேசுவது குறியீடுகளால் கவிதைகளையும் ஆழ்ந்த வாசிப்பையும் பேசுவதாகப் பொருள்படும்.

வெகுஜன ரசனை என்னும் ஒற்றை வரியில் கவியரங்கங்களில் புகழ்பெற்ற ராஹத் இந்தூரியின் கவிதைகளைக் குறிப்பிடுவது தவறு. கவிதைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் கருவியாக அவர் கவியரங்கப் புகழைத் தகவமைத்தார் என்பதுதான் சரியான பார்வை. பிரபலங்கள் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘கபில் ஷர்மா ஷோ’. இதில் பங்கேற்கும் பிரபலங்கள் அனைவரும் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள். இது முழுவதும் வணிகமயமான வெகுஜன நிகழ்ச்சி எனத் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அவ்வளவு பிரபலமான நிகழ்ச்சிக்கு ராஹத் இந்தூரி இரண்டு முறைகள் அழைக்கப்பட்டார். இந்த இரண்டு முறைகளும் அரங்கம் கவிதை வரிகளால் அதிர்ந்தது.

சுமந்து செல்லும் ஊடகம் வெகுஜன ஊடகம் என்பதாலேயே அது சுமந்து வரும் கவிதைகளின் இலக்கியத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கும் அணுகுமுறையை ஏற்பதற்கில்லை.

// இருளிலிருந்து என்னை நான் காப்பாற்றி வெளியே வந்தேன்
துயரம் என்னவெனில் ஒளி என்னைப் பின்தொடர்ந்தது
//

// மைன் அந்தேரோன்சே பச்சா லாயா தா அப்னே ஆப்கோ
மேரா துக் ஏ ஹை மேரே பீச்சே உஜாலே படுகயே
//

ராஹத்தின் இக்கவிதையும் வாசிப்பவரின் பார்வைக்கு ஏற்ப மாறும் பொருள் கொண்டது. இது ஒரு கஜலில் இடம்பெற்ற இரண்டடி, அதனால் கஜலின் மற்ற அடிகளுடன் இணைந்து ஒலிக்கையில் இதன் பொருள் கஜலின் கருப்பொருளுடன் இணையும்; தனியாக ஒலிக்கையில் வாசகரின் கோணத்துக்கு ஏற்ப பொருள்தரும். இது கஜலிலும் இடம்பெற்றுத் தனியாகவும் சுட்டப்படும் அனைத்துக் கவிதை வரிகளுக்கும் பொருந்தும்.

மேலே சொல்லப்பட்ட கவிதை ஒரு பார்வையில் நேரான பொருளாக, இருளிலிருந்து தப்பித்ததைச் சொல்லும். தப்பித்துச் செல்லும்போது ஒளி பின்தொடர்ந்ததும் முந்தைய அடியின் தொடர்ச்சியாகப் பொருள் கொள்ளும். இருளிலிருந்து விடுபட்டு, வெளிச்சத்துக்கு வந்ததைக் குறிப்பிடுவதாகத் தோன்றும். ஆனால், கஜலின் மற்ற அடிகளுடன் இணையும்போது ஒன்றிலிருந்து தப்பினாலும் இன்னொன்றில் சிக்கிய பொருளைத் தரும். இப்போது மீண்டும் ஒருமுறை மேலே உள்ள கவிதையைப் படித்தால், இந்தப் பொருளும் அதற்குப் பொருந்துவதைக் காணலாம்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உருதுக் கவியரங்கச் சுவைஞர்களின் ரசனையில் மாற்றம் இல்லை. அன்றைக்கும் ‘முஷாய்ரா‘ என்னும் உருதுக் கவியரங்கிற்குச் செல்வது தகுதியின், அறிவின் அடையாளமாகக் காணப்பட்டது; இன்றும் அப்படியே காணப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ‘ரேக்தா‘ அமைப்பின் கவியரங்கிலும், அரசு சார்பில் நடக்கும் கவி சம்மேளன்களிலும் இதை உணரலாம். கவிதையென்றால் அது கவிதைக்கான மேடையாக மட்டும் இருப்பதைக் காணலாம். இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ரேக்தா அமைப்பு கவியரங்கங்களை நடத்துகிறது.

இந்தியர்கள் வசிக்கும் அயல்நாடுகளில் நடக்கும் ‘முஷாய்ரா’க்களும் மேற்சொன்ன தகுதியின், அறிவின் அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன. அயல்நாட்டு உருதுக் கவியரங்கத்தின் பார்வையாளராகக் கலந்துகொள்ள அனுமதிச்சீட்டு கிடைப்பதே பெரும்பாடாகும் நிலையும், சீட்டு கிடைக்காத ரசிகர்கள் அரங்க வாசலில் அலைமோதுவதும் இன்றும் நடக்கும் காட்சிகள்.

இன்னமும் ரசிகர்கூட்டமும் புகழும் குறையாமல் இருக்கும் கவியரங்கங்களில் கலந்துகொள்வதற்காக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டவர் ராஹத் இந்தூரி. தான் வாழும் காலத்தில் உருதுக் கவியரங்கங்கள் நடந்த அனைத்து நாடுகளுக்கும், பாகிஸ்தான் உட்பட, இந்தூரி சென்று வந்தார். ஆனால், இரண்டாயிரத்துப் பதினேழாம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வந்த அழைப்பினை அவரால் மற்ற பணிகளின் காரணமாக ஏற்க இயலவில்லை.

இழுத்துவைத்துச் சொல்வதெனில், தமிழ்த் திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.-ஸுக்கும் ராஹத் இந்தூரிக்கும் தொடர்பு உள்ளது. அதன் மூலப் பதிப்பான முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.-ஸின் பாடல்களை அவர்தான் எழுதினார். மிஷன் காஷ்மீர் திரைப்படத்தில் இடம்பெற்றுப் பிரபலமான ‘பும்புரோ’ பாடல் காஷ்மீர நாட்டுப்புறப் பாடலின் சாயலில் அமைந்தது. அதை எழுதியவர் ராஹத் இந்தூரி. அவருடைய பாடல்கள் வெற்றிப் பாடல்களாக அமைந்தும், அவரை ரசிகர்கள் பாடலாசிரியராக அடையாளம் காணவில்லை. ராஹத் இந்தூரி மேடைக்கானவர்; கவியரங்கங்களில் அவர் ஆட்சி செய்தார்.

// நான் ஆயிரம் உரைப்பேன்
விண்ணும் நானே மண்ணும் நானே
அவை உரைக்கும் செய்தி:
நான் எதுவும் அல்லேன்
//

// மைன் லாக் கஹ்தூன் கி ஆகாஷ் ஹூன் ஸமீன் ஹூன் மைன்
மகர் உசே தோ கபர் ஹை கி மைன் குச் நஹீன் ஹூன்
//

தன்னை ‘ஒன்றுமில்லை’ எனச் சொல்லித் தொடங்கும் இந்த கஜலின் அனைத்து அடிகளும் தத்துவம் பேசித் தன்னைத் தானே குறைத்துக்கொள்ளும் வரிகள். கவிஞருக்குத் தன் புகழும் உயரமும் தெரியாதது அல்ல; இருப்பினும் இப்படிக் கவிதைகளால் தன்னைச் செதுக்கிக்கொள்வதும் கவிஞர்களின் இயல்பு. ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என ஒரு பாடலில் தன்னை அளவிட்டு இன்னொரு பாடலில் ‘என் நிழலில்கூட அனுபவத்தில் சோகம் உண்டு’ எனக் கவிஞர் பாடிய பாடலைத் திரைக்கு எழுதப்பட்டவை எனக் கடந்து செல்ல முடியாது. அதைப்போலவே ராஹத் இந்தூரியின் இந்த வரிகளையும் அது ஒரு கஜல் என்ற அளவில் கடந்து செல்ல முடியாது; அது அவர் தன்னை அடையாளம் காண முயற்சி செய்த கவிதை.

// நிலைக்கண்ணாடிகளால்
ஏமாற்றமடைந்துத் திரும்பினேன்
யாரோ சொன்னார்கள்
என்னை அழகனென்று
//

// மைன் ஆயினோன்சே தோ மாயூஸ் லௌட் ஆயா தா
மகர் கிசினே பத்தாயா பஹூத் ஹசீன் ஹூன் மைன்
//

கவியரங்கங்களில் அவர் வாசித்த கவிதைகள், எழுதப்பட்ட கவிதைகளை விடவும் அதிகப் புகழைப் பெற்றன. மேடையில் அவரது குரலில் கோபம் வந்தால் அது கோபமாகவே கேட்கும்; நகைச்சுவை வந்தால் அரங்கமே அதிரும்.

ராஹத்துல்லா குரைஷி 1950 ஜனவரி 1 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தவர். முதுகலை உருதுவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர். உருதுக் கவியரங்கங்களில் புகழ்பெற்ற அவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வும் ‘உருதுக் கவியரங்கங்கள்’ என்பது சிறப்பு. இந்தூரிலிருக்கும் இஸ்லாமியா கறீமா கல்லூரியில் உருது இலக்கியம் கற்பித்தார். பின்னர், தேவி அஹல்யா விஷ்வவித்யாலயா என்னும் இந்தூர் பல்கலைக்கழகத்தில் உருது இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கிய மாணவர்களை உருவாக்கிய பேராசிரியரைக் கவியரங்க மேடை தன் கதாநாயகனாக அழைத்துக்கொண்டது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இவ்வுலகிலிருந்து ராஹத் இந்தூரி விடைபெற்றார்.

// இம்மண்ணில் அனைவரின் குருதியும் கலந்துள்ளது
இந்துஸ்தானம் யாருடைய அப்பனின் சொத்தும் அல்ல
//

இந்த வரிகள் என்றும் மக்களின் மனங்களில் எதிரொலிக்கும்; ராஹத் இந்தூரியின் நினைவும்.

உருதுக்கவிதை உலகு

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

Author

Related posts

கதைகள் நெய்யும் கதை.

மருத்துவர் பக்கம் – 43: சமையல் எண்ணெய்கள் & நெய் ஒரு ஒப்பீடு 

உயிர்ப்பு