Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 18

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 18

0 comments
This entry is part 23 of 23 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா

வலசைப் பிணம்

எதிர்பாராக் கஷ்டம் ஏதோ
ஊர் தாண்டிவிட உசுப்பியது
தாங்க முடியாத வலி எதுவோ
வாழ்க்கையை மூட்டை கட்டி
சொந்த பந்தங்களுக்குத் தூரமாக்கியது

என்ன நடந்ததோ? ஆனால் அவன்
நில உள்ளங்கையில் கண்ணீர்த் துளிகளைச் சிந்தி
பிறந்த மண்ணை இமை கொட்டாமல்
பார்த்துக்கொண்டே சென்றுவிட்டான்

இதயத்தை வீட்டிற்கு விளக்காகத் தொங்கவிட்டு
ஆத்மாவை ஊர் எல்லையில் நிலைநிறுத்திவிட்டு
தேகமாய் நாட்டு எல்லையோடு சேர்த்து
கண்ணீராய்க் கண் தடுப்பையும் ஒரே தடவையில் தாண்டிவிட்டான்

சக தொழிலாளர்களோடு கஷ்டத்தைப் பகிர்ந்துகொண்டு
நினைவுகளைக் கண்ணீரில் தாங்கிக்கொண்டு
பகற்கத்தியால் சிதறிய கனவுகளை ஒன்றுசேர்த்து
இரவின் வண்ணமேறி ஒட்டிக்கொண்டிருப்பான்

முதலாளியிடம் திட்டுகளை வாங்கித் தின்று
கண்ணீரைப் பருகி வயிற்றை நிரப்பிக்கொள்வான்
அதனாலேயோ என்னவோ
எப்போது கேட்டாலும் பசியில்லை என்பான்

ஆடி ஆடி களைத்துப்போனானோ
தோற்கிற ஆட்டத்தை ஆடமாட்டேன் என்று நினைத்தானோ
ஆட்டத்தை நிறுத்திக்கொண்டான்

கடைசியில்
உலோகப் பறவையாய்ப் பறந்தவன்
இரும்புப் பெட்டியில் வீட்டுமுன் சரிந்தான்

வலசைப் பிணங்களை ஒருநாளும் சந்திக்காத
பகல் வேஷக்காரர்கள் திடீரெனத் தோன்றி
கபட நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்—
“திருவிழா வருவது போல் உள்ளது”

விந்தைகள் எத்தனையோ செய்கிறார்கள்
ஆனால் அதென்னவோ அப்பவும்?
அவர்கள் சட்டையிலுள்ள வெண்மை
கொஞ்சம் கூட மனதில் ஒட்டவில்லை.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 17

Author

  • திருவை மு.இரா, Thiruvai M.R.

    மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment