நல்லாச்சி – 46

This entry is part 46 of 46 in the series நல்லாச்சி

ஒரு பொன்வண்டைப்போல் மின்னும்
அந்தச் சிறு கார்பொம்மையை
கண்கொட்டாமல் பார்க்கிறார் தாத்தா
பால்யத்தின் விளையாட்டுத்தோழனான பொன்வண்டொன்று
நிகழ்காலத்தின் மேசைமேலமர்ந்தாற்போல்
முன்னும்பின்னும் அசைந்தசைந்து ரீங்கரிக்கும்
அப்பொம்மையை
தனது கனவு வாகனத்தை
கையிலெடுத்து ரசித்த பேத்தியின் முகத்தில்
தன்னையே கண்டவர்
திருப்தியாய் பெருமையுடன் தலையசைக்கிறார்
நல்லாச்சியிடமும் பேத்தியிடமும்

உண்ணும்போதும் உறங்கும்போதும்
இன்னோரன்ன வேலைகளின்போதும்
அதைக் கை விடாமல்
உள்ளங்கையில் பொத்திக்காக்கும் பேத்திக்கு
அதன் வகையறியும் ஆவல்
உள்ளத்திலிருந்து சிறகு முளைத்துப் பறக்கிறது
துளைத்தெடுக்கிறாள் தாத்தாவை
வளர்ந்தபின் வாங்கப்போகும் வண்டியிதுவென
அடையாளமும் காட்டுகிறாள்
மகிழ்வின் உச்சத்தில் மதிமயங்கிய தாத்தா
பழங்காலப் பாரம்பரியமெனக் கூற வந்து
பழைய வண்டியெனக் கூறி நிற்கிறார்
நாத்தடுமாறி

நாவிற் பிறந்தசொல்லை நன்குணருமுன்பே
நாலாயிரம் வண்டுகள் முரலுவதுபோல்
கத்திக்கதறுகிறாள் பேத்தி
பழைய வண்டியைக்கொடுத்து ஏமாற்றி விட்டதாக
தேய்ந்த இசைத்தட்டாய் இசைக்கிறாள்
தெளிவுபடுத்த முயலும் தாத்தா
சரணடைகிறார் நல்லாச்சியிடம்
அழகான வண்டென அள்ளிக்கொள்கிறாள் நல்லாச்சி
இனியவள் பாடென நழுவுகிறார் தாத்தா
எரிபொருள் தீருமட்டும் ஓடும் வண்டியென
அழுது தீர்வாள் பேத்தி
அமைதி காப்பாள் நல்லாச்சி
அவளுமோர் பழங்காலத்துப் பொன்வண்டுதானே.

நல்லாச்சி

நல்லாச்சி – 44

Author

Related posts

மருத்துவர் பக்கம் – 47: இதய நோய்களும் குளிர்காலப் பாதுகாப்பும்

இளையவன் சிவா கவிதைகள்

ஞான நூல்கள் – 37 & 38