நல்லாச்சி – 45

This entry is part 44 of 44 in the series நல்லாச்சி

வெகு அமைதியாய் இருக்கிறது வீடு
கிலேசமடைகிறாள் நல்லாச்சி
ஏதோ சரியில்லையென
உள்மனசு எச்சரிக்கிறது அவளை
நிசப்தமாய் இருக்கும் குழந்தைகள்
விஷமங்களின் ஊற்றுக்கண் என்றறிவாள் அவள்
அடுக்களையின்
மூலைமுடுக்கெல்லாம் சோதிக்கிறாள்
சேதமில்லையென்பதறிந்து நிம்மதியாகிறாள்
அஞ்சறைப்பெட்டி கலவரபூமியாகியிருந்ததை
இன்னும் மறக்கவில்லை அவள்

அடுத்த கட்டமாய்
தோட்டத்திற்குப் பாய்கிறாள்
விவசாயி விளையாட்டில்
கத்தரி,தக்காளிச் செடிகளின் கதியை
இன்னும்
புலம்பித்தீரவில்லை அவள்
திக்திக்கென்ற நெஞ்சோடு
திண்ணையிலமர்ந்தவளை எழுப்பி
உள்ளே விரட்டுகிறது
பூஜைமணிச்சத்தம்

கண்டகாட்சியில் கதிகலங்குகிறாள்
பாவம்போல் கிண்ணத்து நீரில்
தப்பு.. தப்பு.. பாத்டப்பில்
குளித்துக்கிடக்கிறான் குட்டிக்கிருஷ்ணன்
உடல்துடைத்து பவுடர் பூசி
உடுப்பிட்டு முகமெங்கும் மையிழுகி
ஆபரணங்களும் திருஷ்டிப் பொட்டுமிட்டுக் கிடப்பவன்
தன்னை
ஒப்புக்கொடுத்திருக்கிறானா?
அல்லது
என்னைக் காப்பாற்றேனென்று கெஞ்சுகிறானா?
புரியாத மோனநிலையிலிருக்கிறது முகபாவம்
நல்லாச்சியின் நிலையும் அவ்வாறே.

நல்லாச்சி

நல்லாச்சி – 43

Author

Related posts

மொட்டவிழ்வு..

ஞான நூல்கள் – 35 & 36

பாகோஸ் என்கிற நபும்சகன் – 15