Home கவிதைதமிழே அமிழ்தே – 25
This entry is part 25 of 25 in the series தமிழே அமிழ்தே

புலவர்கள் உயர்வுநவிற்சியாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர்கள். அக்காலத்தில் அரசர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிப் பரிசில்களைப் பெற்று வந்தனர். இக்காலம் போலவே இடித்துரைக்கும் புலவர்களும் இல்லாமலில்லை எனினும், தம் வறுமையைப் போக்கும் வள்ளல்களைப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் மிகுதியும் இருந்தனர். அப்படி ஓர் இணையர் பாணனும் பாடினியுமாக அன்றைக்கு வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பற்றிய ஒரு சுவையான செய்தி தனிப்பாடல் திரட்டு ஒன்றில் காணக் கிடைக்கிறது.

தனிப்பாடல் திரட்டு என்பது ஆங்காங்கே கிடைக்கப்பெற்ற, தொகுக்கப்படாத, தனிப்பாடல்களின் தொகுப்பாகும்.

அந்தப் பாணன் ஒரு வள்ளலைப் பாடிப் பரிசு பெறச் சென்று வந்தான். ஆனால் வள்ளல் அன்றைக்கு ஏனோ ‘வள்’ என்று கடித்துக் குதறிவிட்டார். அவரிடமிருந்து ஒன்றும் பெற இயலவில்லை (பெயரவில்லை). இத்தனைக்கும் அவர் பெயர் இராமன்.

வீடு திரும்பிய பாணனிடம் பாடினி “என்ன பரிசில் பெற்று வந்தாய்?” என்று வினவுகிறாள். தனக்கேயுரிய நகைச்சுவையுடன் “பெரிய யானை கொடுத்தார் போ” என்று சொல்லும் வகையில் “களபகம்” என்கிறான் பாணன்.

அதாவது, யானை என்று நேரடியாகச் சொல்லாமல் இரட்டுற மொழிதலாகச் சொல்கிறான்.

களபகம் என்பதற்கு கலவைச் சந்தனம் என்ற பொருளைக் கொள்கிறாள் பாடினி. “நீயே பூசிக்கொள்” என்கிறாள்.

பாணனோ அவளுக்கு மீண்டும் உணர்த்தும் வகையில், “மாதங்கம்” என்கிறான். அதையும் பெரிய பொன் என்று புரிந்தாற்போல் ‘அடடே, நமது வறுமை தீருமே’ என்கிறாள் பாடினி.

இன்னும் தெளிவாகச் சொல்வோம் என்று ‘வேழம்’ என்கிறான். அதற்கு அவள் கரும்பு என்கிற பொருளை எடுத்துக்கொண்டு “தின்னும்” என்கிறாள்.

அதனினும் விளக்கமாக ‘பகடு’ என்று சொல்கிறான். அதற்கும் ‘எருமை’ என்று விளங்கி ‘உழுவதற்கு ஆகும்’ என்கிறாள். அதுவுமில்லை என்று சொல்லும் விதமாக ‘கம்பமா’ என்கிறான் பாணன். அதையும் கம்பு தானியத்தின் மாவு என்று களி செய்து உண்ணலாம் என்கிறாள் பாடினி.

சரி, இனியும் குழப்ப வேண்டாம் என்று ‘கைம்மா’ (துதிக்கை உடைய விலங்கு) என்னும் பொருளில் சொல்ல, ‘அப்படியானால் உங்கள் மொழியில் ‘ஒன்றுமில்லை’ என்றல்லவா பொருள்’ என்று அவள் கலங்குவதாக அப்பாடல் அமைகிறது.

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் நீயென்றாள் பாடினி
வம்பதாம் களபகம் என்றேன்
பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன்
யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன்
தின்னும் என்றாள்
பகடு என்றேன்
உழும் என்றாள் பழனந் தன்னைக்
கம்பமா என்றேன்
நற்களியாம் என்றாள்
கைம்மா என்றேன்
சும்மா கலங்கினாளே

என்கிற இப்பாடலிலிருந்து யானைக்குத் தமிழில் வழங்கும் பல்வேறு சொற்களையும், இரட்டுற மொழிதலின் இனிமைச் சிறப்பையும், புலமை மிக்கோரின் சொல் விளையாட்டையும் அறிந்து துய்க்க முடிகிறதல்லவா?

(தொடரும்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 24

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

2 comments

ஊர் நேசன் August 9, 2026 - 5:42 pm

புலவர்களின் சொல் விளையாட்டும், பாடினியின் நகைச்சுவையான புரிதலும் வாசிக்க வாசிக்க சிரிக்க வைக்கிறது.

தமிழின் சொல்வளம் எவ்வளவு செழுமையானது என்பதற்கு அழகான சான்று இந்த பதிவு!

Reply
கருணை பிரியன் August 9, 2026 - 5:45 pm

சொல்லாடலின் நயத்தையும் புலவர்களின் நகைச்சுவைத் திறனையும் ஒரே பாடலில் ரசிக்க வைத்த பதிவு.

களபகம்,மாதங்கம், வேழம்,பகடு,கம்பமா,கைம்மா என யானைக்கான தமிழ்ச் சொற்களின் செழுமையையும் இரட்டுற மொழிதலின் இனிமையையும் அறியச் செய்தது இன்னும் அருமை

Reply

Leave a Comment